அதிபுனைவு சிறுகதை : 1 – இ அ பி – 275

செயற்கை மரங்கள் சூழ்ந்து, கால்கள் விரைத்துப்போகும்படி கருமை நிறத்தில் பனிக்கட்டிகள் நிறைந்த கடற்கரையில் நின்றுகொண்டிருந்த துரைராஜ் ஆவேசமாக பனிக்கட்டிகளையும், கருப்பு நிறத்தில் நுரையையும் வாரிக் கரையில் இறைத்துக்கொண்டிருந்த அலைகளையே வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். கடற்கரை மணல் துகளும், கடல் நீரும் கருமை நிறத்தில் காணப்பட்டதால் சூரிய ஒளியை கடலே உறிஞ்சிக் கொண்டதனால் நிலத்தின் வெப்பம் குறைந்தே காணப்பட்டது. அவர்களுக்குப் பின்னால் நிலத்தில் நெடுந்தொலைவில் நின்றுகொண்டிருந்த தொழிற்சாலை ஒன்று கரும்புகையையும், SO2 வாயுவையும் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

கடற்பரப்பில் கடலலைகளுக்கு மேல் அதிவேகமாக வந்த ஆர்த்தி துரைராஜைக் கண்டதும் தனது வாகனத்தை கடற்கரைக்குத் திருப்பினாள். அதுவரை Sea modeல் வந்த வாகனத்தை land modeற்கு மாற்றி அவள் தனது குரலினால் கட்டளையிட நீண்டிருந்த நான்கு Propellerகளும் மேலும் வேகமாக சுழல அவள் அமர்ந்திருந்த வாகனமானது நீரிலிருந்து மேலெழுந்து துரைராஜை நோக்கிக் காற்றில் பறக்கத்தொடங்கியது.

தன்னை நோக்கி ஆர்த்தி வருவதைப் பார்த்ததுமே குதூகலமடைந்த துரைராஜ் அதிவேகமாகப் பறந்துவந்த அந்த வாகனத்தை எதிர்நோக்கி நடக்கத் தொடங்கினான். விரைந்து வந்த வாகனம் துரைராஜை ஒருமுறை சுற்றி அவனுக்கு முன்பு நிற்க அதிலிருந்து குதித்தாள் ஆர்த்தி.

கடும் குளிரைக் கட்டுப்படுத்த துரைராஜ் சிந்தெடிக் கம்பளி மூலம் செய்யப்பட்ட ஆடையை உடுத்திக்கொண்டு தடித்த சிந்தெடிக் ரப்பர் காலணியை அணிந்துகொண்டு நின்றுகொண்டிருந்தான். அந்தக் குளிரிலும் அவன் அணிந்திருந்த ஆடையினால் உடலில் வியர்வைத் துளிகள் துளிர்க்கத் தொடங்கியிருந்தது. அவனது முகத்தில் துளித்துளியாய் துளிர்த்திருந்த வியர்தைத் துளிகளை ஆச்சர்யத்துடன் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் ஆர்த்தி.

துரைராஜின் உடைக்கு நேர் மாறான மெல்லிய சிந்தெடிக் பட்டினால் ஆன ஸ்லீவ்லெஸ் பேன்ட், அவளது உடலின் வனப்புகளை நன்கு எடுத்துக்காட்டும்படியான இறுக்கமான மெல்லிய ஆடை ஒன்றை அணிந்துகொண்டு நின்றுகொண்டிருந்தாள் ஆர்த்தி.

ஆர்த்தியை கண நேரம் ஆச்சர்யத்துடன் பார்த்தபடி துரைராஜ் நின்றுகொண்டிருந்த போதே அவனை நட்புடன் தழுவிய ஆர்த்தி, “இந்தக் குளிரில் எதற்கு சிரமப்படுகிறாய்?” எனக் கூறியபடி இடையில் வைத்திருந்த நானோ ஆர்டிபிசியல் செல்களால் (Nano artificial cell) நிரப்பட்ட கடிகாரம் போன்ற பட்டையை எடுத்து அவனது கைகளில் கட்டுவதற்கு வெளியே எடுத்தாள்.

அதைப் பார்த்த துரைராஜ், “எனக்கு இந்த NACலாம் வேண்டாம் ஆர்த்தி” எனக் கூறிய துரைராஜ் மீண்டும் அந்த கடற்பரப்பையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“துரைராஜ், உனது அகழ்வாராய்ச்சியில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டதா?” என துரைராஜை பின்னாலிலிருந்து அணைத்தபடியே வினவினாள் ஆர்த்தி.

“இல்லை ஆர்த்தி. இந்த கடலுக்குள் மறைந்து கிடக்கும் அந்தப் பழங்கால பட்டினத்தைப் பற்றி அறிந்துகொள்ள நானும் எப்படியெல்லாமோ முயற்சி செய்துவிட்டேன். கிடைக்கின்ற அனைத்து தகவல்களும் Bitesகளாக மட்டுமே கிடைக்கின்றன. அதுவும் குப்பைகளோடு குப்பைகளாகவே கிடைக்கின்றன. Phisical evidence ஒன்று கிடைத்தாலும் போதும் எனது ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பித்து விடுவேன். நமக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்களின் நகரத்தின் பெயரை அறிந்துகொள்ள வேண்டும் என எண்ணி எப்படியெல்லாமோ முயற்சி செய்துபார்த்துவிட்டேன். ஆனால்…” என விரக்தியுடனே பதிலளித்தான் துரைராஜ்.

“கடலுக்குள் மூழ்கிப் பார்த்துவிட வேண்டியதுதானே…”

“அதையும் செய்து பார்த்துவிட்டேன் ஆர்த்தி. பிளாஸ்டிக் மற்றும் இரும்புக் கழிவுகளால் கருப்பு நிறத்தில் காணப்படும் இந்தக் கடல் நீருக்குள் மூழ்கிய பிறகு  என்னால் பார்க்கக் கூட முடியவில்லை. எவ்வளவு மீச்செறிவு ஒளிக் கற்றையை உமிழும் torch lightஐக் கொண்டு சென்றாலும் இந்தக் கரிய நீர் உறிஞ்சிக்கொள்கிறது. என்னால் நீண்ட நேரம் கடலுக்குள் மூழ்கியிருக்க முடியவில்லை. ஒளியினை உள்வாங்கிக்கொள்ளும் இந்த நீர் எனது ஆற்றலையும் மொத்தமாக உறிஞ்சிவிடுகிறது” என வருத்தத்துடன் கூறியபடியே நீரில் காலினை எடுத்து வைத்தான். கடல் நீரில் செறிந்திருந்த அமிலத்தன்மையினால் அவனது காலணி அரிக்கத் தொடங்கியது. அதை ஆர்த்தியிடம் சுட்டிக் காட்டிய துரைராஜ், “என்னதான் உடலில் சிந்தெடிக் சேர்மங்களைப் பூசிக்கொண்டு கடலுக்குள் குதித்தாலும் சில நிமிடங்களுக்குள் அவை கரைந்துபோய் விடுகின்றன” எனக் கண் கலங்கியபடி தெரிவித்தான் துரைராஜ்.

“கடலுக்குள் அழிந்து போன அந்த நகரத்தை நீ எப்படியும் கண்டுபிடித்து உலகிற்கு தெரியப்படுத்துவாய் துரைராஜ்…” என ஆறுதல் கூறிய ஆர்த்தி அவனது நெற்றியைத் தனது இதழ்களால் ஒற்றி எடுத்தாள்.

“அந்த நம்பிக்கை எனக்குக் குறைந்துகொண்டே வருகிறது ஆர்த்தி” எனத் துரைராஜ் கூறிக்கொண்டிருந்த போதே ஆர்த்தியின் கையில் கட்டப்பட்டிருந்த NAC பட்டை சிவப்பு நிறத்திலும் ஊதா நிறத்திலும் ஒளிரத் தொடங்கியது. கையை சற்றே உயர்த்திப் பிடித்த ஆர்த்தி அதில் இருந்த ஊதா ஒளிப் பட்டையை அழுத்தினாள். அடுத்த கணம், அவளுக்கு முன்பு ஒரு ஒளித் திரை தோன்றியது. அதில் இரண்டு ஊதாப் புள்ளிகள் அவர்களை நோக்கி வந்துகொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டியது.

அதைப் பார்த்த துரைராஜ், “யார் அவர்கள்? அவர்கள் எதற்காக உனது இருப்பிடத்தை அறிய முயற்சிக்கிறார்கள்?” என வினவினான்.

“அவர்கள் எனது இருப்பிடத்தை அறிய முயலவில்லை துரைராஜ்…” எனச் சற்றே குழைந்தபடி தெரிவித்தாள் ஆர்த்தி.

“பிறகு?”

“நமது இருப்பிடத்தை…” எனக் கூறியவள் ஒளித் திரையில் தெரிந்த ஊதாப் புள்ளிகளைத் தட்டி, “Location identification granted” எனத் தெரிவித்தாள்.

அவள் கட்டளையிட்ட அடுத்த கணம் ஊதாப் புள்ளிகள் இரண்டும் பச்சை நிறத்திற்கு மாறின. அதற்குக் கீழே, ‘478 miles/ 182 seconds) எனச் சிவப்பு நிறத்தில் காட்டத் தொடங்கியது. நொடிகள் கடக்கக் கடக்க தூரமும், நொடியும் குறைந்துகொண்டே வந்தது. ஒளித் திரையில் அந்த பச்சை நிறப் புள்ளிகள் இரண்டும் அருகில் நெருங்கியதும் கடலை நோக்கினாள் ஆர்த்தி. அடுத்தகணம் தொடுவானில் இரண்டு விமானங்கள் அதிவேகத்தில் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தன.

அவளது பார்வையில் தெரிந்த அந்த விமானங்கள் இரண்டும் அடுத்த கணம் அவள் நின்ற கடற்பரப்பில் தரையிறங்கின. இரண்டிலிருந்து மூவர் தரையிறங்கி ஆர்த்தியை நோக்கி மெல்ல நடந்துவந்தனர்.

மூவரைக் கண்டதும், “இவர்கள் யார்?” என வினவினான் துரைராஜ்.

“கூறுகிறேன். பொறு துரைராஜ்…” எனக் கூறிய ஆர்த்தி மூவரையும் வரவேற்று துரைராஜை அறிமுகப்படுத்தினாள்.

“இவர்கள் மூவரும்தான் நீ கடலுக்குள் மூழ்கியிருப்பதாக நினைக்கும் அந்த நகரத்தைக் கண்டறிய உனக்கு உதவப் போகிறார்கள்!” எனத் தெரிவித்தாள்.

மூவரையும் துரைராஜ் ஆச்சர்யமாகப் பார்த்தபடி நிற்க, “NAC உபயோகிக்காமல் இருக்கும் மனிதரை அபூர்வமாக இப்போதுதான் பார்க்கிறேன்” என ஆர்த்தியிடம் கூறியபடி துரைராஜை வேற்றுக்கிரகவாசியைப் போன்று பார்த்த நீல், “ஆர்த்தி, நீ கூறியவன் இவன் தானா?” என வினவினான்.

பெயருக்கு ஏற்பவே நீண்டு உயரமாக வளர்ந்திருந்த நீலினைச் சுட்டிக்காட்டிய ஆர்த்தி, “துரைராஜ்.. இவன் பெயர் நீல். Internet குப்பைகளைக் கிளறி தகவல்களை தெரிந்துகொள்வதில் படு கில்லாடி. நீ தேடிக்கொண்டிருக்கும் அந்தப் நகரத்தைப் பற்றியும், அது சார்ந்த தகவல்கள் பற்றியும் இவன் உனக்கு தேடிக் கொடுப்பான்” என அவள் கூறிக்கொண்டிருந்த போதே குறுக்கிட்ட நீல், “தேடிக் கொடுப்பேன் என்று கூறுவதை விடவும் திருடிக் கொடுப்பேன் என்று அறிமுகப்படுத்தினால் பொருத்தமாக இருக்கும்” எனத் தெரிவித்தான்.

சுற்றி நின்றவர்கள் அனைவரும் சிரிக்க துரைராஜ், “உலகில் இருந்த கடைசி மரமும் அழிந்த பிறகு 275ம் ஆண்டில் (இயற்கை அழிந்த பிறகு 275) இருக்கிறோம் நாம். இ அ காலக் கணக்கீட்டிற்கு முன் எப்படியும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்த நகரத்தைப் பற்றிய தகவல்களை எப்படி அறிந்துகொள்ள முடியும்?” என வினவினான்.

“கோடிக்கணக்கான டேரா பைட்டுகள் நிறைந்த எலெக்ட்ரானிக் டேட்டா குப்பையில் பைட் அளவு உள்ள தகவலைத் தேடுவது கடினம் தான். ஆனால், GPS அதிசிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நம்மால் அறிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன்.”

“நமது காலத்தில் இப்போது வழங்கும் GPS தொழில் நுட்பமும், அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த GPS முறையும் ஒரே மாதிரி அல்லவே?”

“இரண்டும் வேறு வேறுதான். ஆனால், அடிப்படை ஒன்றுதான். அதாவது இருப்பிடத்தை குறிப்பிடுவது” எனக் கூறியவன் கையில் கட்டியிருந்த NAC பட்டையை அழுத்தினான். முதுகுப் பையில் வைத்திருந்த மூன்று உருளை வடிவ பொருட்களை அவனைச் சுற்றி தூக்கிப் போட்டான். அடுத்த கணம் அவன் தூக்கி எறிந்த உருண்டைகளிலிருந்து ஒளிக் கற்றைகள் வெளிப்பட்டு ஒன்றோடு ஒன்று இணைந்தன. அவனுக்கு முன்பு பெரும் ஒளித்திரை ஒன்று தோன்றியது. “அக்காலத்தில் டேட்டாவாகப் பரிமாறப்பட்ட தகவல்களில் நிச்சயம் நாம் நின்றுகொண்டிருக்கும் இடத்தைக் குறிப்பிட்டிருப்பார்கள். அந்தத் தகவல்களை குப்பையிலிருந்து கிளற முயற்சிக்கிறேன்” எனக் கூறியவன் அந்த ஒளித் திரையில் பல டிஜிட்டல் கோடிங்கை உள்செலுத்தத் தொடங்கினான். “ஆர்த்தி, எனக்கு சிறிது நேரம் வேண்டும். எனது மற்ற நண்பர்கள் இருவரையும் உனது நண்பனுக்கு அறிமுகப்படுத்து” எனக் கூறிக்கொண்டு அவனுக்கு முன்பு விரிந்திருந்த ஒளித் திரையில் மூழ்கத் தொடங்கினான் நீல்.

நீலுக்கு இடப்புறமாக நின்ற இரண்டு பெண்களையும் சுட்டிக்காட்டிய ஆர்த்தி, “இவர்கள் இருவரும்தான் இன்று உன்னுடன் நீருக்குள் மூழ்கப் போகிறார்கள். உன்னைப் போலவே அழிந்துபோன நகரங்களைப் பற்றியும், அவர்கள் பேசிய மொழிகளைப் பற்றியும் இவர்களும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்” என அறிமுகப்படுத்தினாள்.

இருபெண்களும் கையை நீட்ட இருவரின் கரத்தையும் பற்றி குலுக்கிக் கொண்டான் துரைராஜ்.

நீல் திரையைப் பார்த்தபடியே, “டூட், எனக்குத் தகவல் கிடைக்கத் தொடங்கிவிட்டது!” என உற்சாகத்துடன் கூறிக்கொண்டே இடையில் வைத்திருந்த கருமை நிறக் கண்ணாடி ஒன்றை எடுத்து அணிந்து கொண்டான்.

மற்ற நால்வரும் நீல் கூறப்போகும் தகவல்களைக் கேட்க அவனைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள். அப்போது அதிர்ச்சியுடன், “டூட்ஸ், நாம தெரிஞ்சிக்கக்கூடாதுன்னு ரகசியமா பாதுகாத்து வச்சிருக்கற தகவல் குப்பைக்குள்ள ஊடுருவ ஆரம்பிச்சிருக்கேன். இதோ டிகோடிங்கும் செய்ய ஆரம்பிச்சிட்டேன்” எனக் கூறிக்கொண்டே உற்சாகத்துடன் ஒளித் திரையில் உள்ளீட்டினை செலுத்திக்கொண்டிருந்தான்.

முதுகில் சுமந்திருந்த பையில் வைத்திருந்த இன்னொரு கண்ணாடியை எடுத்த நீல் துரைராஜிடம் கொடுத்து அணிந்துகொள்ளச் செய்தவன், “நாம நிற்கும் இந்தக் கடல் ஒரு காலத்தில் நீல நிறத்தில் இருந்திருக்கிறது. இந்த மணல் துகள் எல்லாம் தங்கத் துகள் போன்று மின்னியபடி இருந்திருக்கின்றன.”

“தங்கம்???”

“அது… மஞ்சள் நிறத்தில் இருந்த ஏதோ ஒரு உலோகம்.”

“சரி… சரி… வேறு என்ன தெரிகிறது?” ஆர்வத்துடன் வினவினாள் ஆர்த்தி.

“இங்கு பகல் பொழுதில் சூரியன் உதிக்கும். இரவில் வெள்ளை வெளேரென்று நிலவு வருமாம். வானம் முழுக்க நட்சத்திரங்கள் நிறைந்து கிடைக்குமாம். இங்கு இருந்த பகுதிகளை மன்னர்கள் ஒரு காலத்துல ஆட்சி செய்திருக்கிறார்கள்….”

“மன்னர்கள்?” என வியப்புடன் வினவினாள் ஆர்த்தி.

“மன்னர்கள் என்பவர்கள்தான் மக்களுக்கு தலைவர்கள். வழி வழியாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் மக்களுக்குத் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். அதிகாரம் அனைத்தும் மன்னரிடமே கொட்டிக் கிடக்கும். அவர்கள் கூறுவதுதான் சட்டம்” என விளக்கமளித்த துரைராஜ், “இன்னும் ஏதாவது அறிந்துகொள்ள முடிகிறதா?” என வினவினான்.

“பொறு துரைராஜ்…. 782 TBல் கிரிப்டில் கோடிங் செய்து பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கும் ஆவணத்தை டிகிரிப்ட் செய்துகொண்டு இருக்கிறேன். அவசரப்படாதே…” எனக் கூறியவன், “மன்னர்களுக்குப் பிறகு இம்மக்கள் வெளிதேசத்திலிருந்து வணிகம் செய்ய வந்த யாருக்கோ சில நூற்றாண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்திருக்கிறார்கள்.”

“அடிமைப்பட்டா?”

“ஆம்!”

“யாருக்கு?”

“அது தெரியவில்லை. இதில் இப்படித்தான் இருக்கிறது!” என நீல் கூற அருகில் நின்ற ஆர்த்தி துரைராஜ் அணிந்திருந்த கண்ணாடியை வாங்கி அணிந்தாள். அதை அணிந்தவள், “இதில் ஒரே டிஜிட்டல் சமிக்கைகளாக அல்லவா இருக்கின்றன. எப்படி நீல் இதை வாசிக்கிறாய்?” என வினவினாள்.

“என்னால் இதை வாசிக்க முடியாது ஆர்த்தி. NAC மூலம் இந்த கோடிங்கை எனது மூளை உணரும்படி program செய்திருக்கிறேன்” எனக் கூறியவன் பிறகு, “அந்த வெளிதேசத்தவரை விரட்டிவிட்டு இவர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ளும் முறையில் ஒரு அரசினை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.”

சுற்றி நின்றவர்கள் நீலையே வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“அதற்கு அவர்கள் ‘மக்களாட்சி’ என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள்.”

“மக்களாட்சி… அப்படி என்றால்?”

“பொறு, அதைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன்.” எனக் கூறிக்கொண்டு ஒளித்திரையையே பார்த்துக்கொண்டிருந்தவன், “அவர்கள் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மக்கள் மீது யார் அதிகாரம் செலுத்த வேண்டும் என்று அவர்களே தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள்.”

“எவ்வளவு காலம் அது நீடித்தது?”

“அது… அது… அதுபற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால், பல வேடிக்கையான காரியங்கள் அரங்கேறியிருக்கின்றன.”

“மக்கள் தங்களது தலைவரை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதில் என்ன வேடிக்கை இருந்துவிடப் போகிறது?”

“ஊழல் மலிந்துபோய் நீதி மற்றும் காவல் துறைகள் இரண்டுமே மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து, மக்களிடம் சகிப்புத்தன்மையையும் அறவே அகற்றியிருக்கிறது.”

“……”

“ஏதோ Facebook மற்றும் Twitterல் இதைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள்.”

“என்ன என்று?”

“இந்த ஆட்சி முறையில் பல வேடிக்கைகள் அரங்கேறியிருக்கின்றன. மதுவை விற்று கிடைத்த வருமானத்தில் தான் அரசே இயங்கிக்கொண்டிருந்திருக்கிறது. மக்கள் மதுவுக்கு எதிராக போராடியபோது காவலர்கள் மதுக்கடைகளுக்கு காவல் இருந்திருக்கிறார்கள்” எனச் சிரித்தபடியே தெரிவித்தான் நீல்.

சுற்றி நின்றவர்கள் அனைவரும் சிரிக்கலானார்கள்.

“இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. நீதியின் மீதிருந்த நம்பிக்கை குறைவுக்கு இன்னொரு உதாரணம், ‘ஒரு நீதிபதி குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார். ஆனால், இன்னொரு நீதிபதியோ கூட்டுவதில் தவறு செய்து அவரை நிரபராதி என்று விடுவித்திருக்கிறார். அதையும் எதிர்த்து மேல் முறையீடு செய்திருக்கிறார்கள்.”

“என்ன தீர்ப்பு வந்தது?”

“பொறு…”

“…….”

“தீர்ப்பு வந்ததா என்று தெரியவில்லை? எனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை” எனக் கூறிக்கொண்டே இருந்தவன், “இதோ… யாரோ ஒருலட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்திருக்கிறார்கள்.”

“என்ன தண்டனை விதித்தார்கள் என்று பார்?”

“கடைசியில் நிரபராதி என்று விடுதலை செய்து விட்டார்கள்.”

“வேறு ஏதாவது கிடைத்ததா?”

“பிறகு… பிறகு…. நம்மைப் போன்றே அவர்களும் அறிவியல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்.”

“எப்படி?”

“சாலையில் ஒரே நேரத்தில் வாகனங்களும், படகுகளும் செல்லும் அளவிற்கு அவர்கள் சாலையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்” எனக் கூறியவன் ஒரு புகைப்படத்தை ஒளித்திரையில் காட்டினான். அந்தப் புகைப் படத்தில் சாலையில் நீர் நிறைந்து ஓடிக்கொண்டிருக்க அதில் படகு மற்றும் வாகனங்கள் ஒரே இடத்தில் பயணித்துக்கொண்டிருந்தன.

“இந்தக் கருமை நிறக் கடல் நீல நிறத்தில் காட்சியளித்துக்கொண்டிருக்க கிழக்கே சூரியன் அதி அற்புதமாக எழும் காட்சி எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும்” எனக் கூறிக்கொண்டே அணிந்திருந்த கண்ணாடியைக் கழட்டி கிழக்கே கடலை நோக்கினான் நீல்.

அங்கே வானம் முழுக்க கரும்புகை சூழ்ந்து சூரிய ஒளி சிறிதளவே ஊடறுவி வந்துகொண்டிருந்தது. மீண்டும் கண்ணாடியை அணிந்த நீல், “துரைராஜ்… கடலுக்குள் குதிக்கத் தயாரா?” என வினவினான்.

“பல நாட்கள் முயன்றுவிட்டேன். இந்தக் கருப்புக் கடலின் சக்தியை என்னால் மிஞ்ச முடியவில்லை.”

துரைராஜிற்கு இரண்டு புறத்திலும் நின்ற தனது தோழிகளை நோக்கினான் நீல். அவர்கள் இருவரும் கையில் NAC பட்டை ஒன்றைக் கையில் எடுத்து அணிந்துகொண்டார்கள். இன்னொரு பட்டை ஒன்றையும் எடுத்து துரைராஜிடம் நீட்டினார்கள். “எனக்கு இதை அணிந்து பழக்கம் இல்லையே! எனக்கு ஏனோ இதில் விருப்பம் இல்லை” எனத் தெரிவித்தான்.

“வேறு வழியில்லை துரைராஜ்…. இதை நீ அணிந்துகொண்டால் தான் உன்னால் நெடு நேரம் நீருக்குள் மூழ்கியிருக்க முடியும். இந்தப் பட்டையில் program செய்திருக்கும் நானோ செல்கள் உனக்கு வேண்டிய ஆற்றலை அளித்து பாதுகாப்பினை அளிக்கும். இந்தப் பனி படர்ந்த கடற்கரையில் எங்களால் எப்படி சாதாரண உடையில் நிற்க முடிகிறது? NAC எனது உடலின் செல்களை இந்த சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி விடுகிறது!” எனத் தெரிவித்தபடியே துரைராஜின் கையில் NAC பட்டையை அழுத்தினான் நீல்.

அவன் அழுத்திய அடுத்த கணம் அந்தப் பட்டையின் வழியே Program செய்யப்பட நானோ செல்கள் அவனது உடலுக்குள் சென்று அவனது உடலின் அணுக்களுடன் இரண்டறக் கலக்கத் தொடங்கின. உடனே நீல் அவனுக்கு முன்புத் தோன்றியிருந்த ஒளித் திரையில் உள்ளீடுகளைச் செலுத்தி துரைராஜின் உடலுக்குள் பயணித்துக்கொண்டிருந்த நானோ செல்களுக்கு கட்டளையைப் பிறப்பித்தான்.

நானோ செல்கள் வேலை செய்யத் தொடங்கிய அடுத்த கணம் துரைராஜ் வலியால் துடித்தபடி கருப்பு நிறத்தில் காணப்பட்ட அந்தக் கடற்பரப்பில் விழுந்து புரண்டான்.

“நீல்… சீக்கிரம்…” என துரைராஜைப் பார்த்து துடித்த ஆர்த்தி நீலை அவசரப்படுத்தினாள்.

“இதோ…” எனக் கூறிய நீல் வேலையை விரைந்து முடித்தான்.

அடுத்தகணம் துரைராஜ் எழுந்து நின்றான். அவனைப் பார்த்து புன்னகைத்த ஆர்த்தி, “இனி இந்த பாரமான சிந்தெடிக் கம்பளி உனக்குத் தேவையிருக்காது…” எனக் கூறிக்கொண்டு அவனது ஆடைகளைக் களைந்து எறிந்தாள்.

அப்போது நீல், “இதை நாக்கிற்கு அடியில் அடக்கிக்கொள்” எனக் கூறிக்கொண்டு உருண்டை வடிவ நானோ செல்களால் ஆனா மாத்திரை ஒன்றை அவனது வாயில் திணித்தான்.

வெள்ளை நிறக் கண்ணாடி ஒன்றை துரைராஜிற்கு அணிவித்த ஆர்த்தி, ‘நானும், நீலும் உங்கள் மூவரையும் கரையிலிருந்து கவனித்துக் கொண்டிருப்போம். உனக்கு அணிவித்திருக்கும் கண்ணாடி ஒரே நேரத்தில் அகச்சிவப்பு, புற ஊதா மற்றும் அல்ட்ரா சோனிக் அலைகளை உற்பத்தி செய்து காட்சிகளைத் தோற்றுவிக்கும். இந்த மூன்று அலைகளும் சேர்ந்துத் தோற்றுவிக்கும் முப்பரிமான ஓவியத்தை கரையில் நின்று உங்களைக் கண்காணிக்கும் எங்களாலும் காண இயலும். அடுத்த இரண்டு நாள் உன்னால் கடலுக்கு உள்ளேயே இருக்க முடியும். அவ்வளவு நேரம் தேவையிருக்காது என்று நினைக்கிறேன்” எனக் கூறிக்கொண்டே மூவரையும் கடலுக்கு அழைத்துச்சென்றாள் ஆர்த்தி.

மூவரும் கடலுக்குள் குதித்து தேடத் தொடங்கினார்கள். மூவரும் பார்த்தவை அனைத்தையும் ஆர்த்தியும், நீலும் பதிவு செய்தபடி கடற்கரையிலேயே அமர்ந்திருந்தார்கள்.

இரண்டாவது நாளின் மதியப் பொழுதில் மூவரும் தேடலை முடித்துவிட்டு நீரிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது ஆர்த்தி, “துரைராஜ்… என்ன நீரில் மூழ்கிய கட்டிடங்களைத் தவிர்த்து உபயோகமாக ஏதாவது கிடைத்ததா?” என வினவினாள்.

“கிடைத்திருக்கிறது…” எனக் கூறிக்கொண்டே பையில் சுருட்டி வைத்திருந்ததை வெளியே எடுத்தான். உள்ளே காகிதத்தில் ஏதோதோ எழுதப்பட்டிருந்தன. எழுதப்பட்டிருந்த காகிதத்தை பாலிதீன் கவர் நீர் உள்ளே நுழையாத வண்ணம் சுற்றிவைக்கப்பட்டிருந்தது. அதைப் பத்திரமாக எடுத்து நீலிடம் நீட்டினான் துரைராஜ்.

அதைப் பெரும் கவனத்துடன் வாங்கிய நீல் அந்த எழுத்துகளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்ன அது?” என வினவினான் துரைராஜ்.

அதைப் பார்த்த நீல், “இது அக்காலத்தில் பேசப்பட்ட மொழியின் எழுத்து வடிவமாகக் கூட இருக்கலாம்” எனக் கூறிக்கொண்டே அந்த எழுத்துகளை scan செய்து அவனது கணினியில் தேடத் தொடங்கினான்.

“என்ன எழுத்து என்று தெரிந்ததா?” பதைபதைப்புடன் வினவினான் துரைராஜ்.

“இது நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் மொழிதான்….”

“பெயர்?”

“தமிழ்…”

“இபோதுதான் முதன்முதலில் எழுத்தைக் காண்கிறேன்!” எனக் கூறிக்கொண்டு அந்த காகிதத்தையே பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் துரைராஜ்.

“முழுவதும் வாசிக்க முடிந்ததா…”

“முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்….”

“ம்ம்ம்!”

அப்போது நீல், “இந்தக் கடலில் மூழ்கியிருக்கும் நகரத்தின் பெயர் சென்னை!” எனத் தெரிவித்தான்.

“சென்னை???”

“ஆம்!”

“மொத்தமாகப் படி, அந்தக் காகிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று!”

“சென்னை, தமிழ்நாடு” என ஒவ்வொரு எழுத்துகளாக வாசித்தான் நீல்.

சி.வெற்றிவேல்…
சாலைக்குறிச்சி…

Leave a Comment