“உட்கார முடியாத அளவுக்கு நாத்தம் அடிக்கும்; திடீர்னு மல்லிகைப்பூ வாசமும் வீசும்” – கல்லறை ராஜுவின் கதை

ல்லறை… இனம்புரியாத தனிமை, வெறுமை, திகிலூட்டும் அமைதி என விதவிதமான உணர்வுகளைக் கிளர்த்திவிடும் ஓர் இடம். மயானம், கல்லறை, சுடுகாடு என்றாலே சிலருக்கு பயம் தொற்றிக்கொள்ளும். `சுடுகாட்டில் பேயைப் பார்த்தேன்’, `ஆவியைப் பார்த்தேன்’ என்றெல்லாம் பலர் சொல்லக் கேட்டிருப்போம். இதுபோன்ற கதைகள் இப்போது மட்டுமல்ல, பல ஆயிரம் ஆண்டுகளாக நம்மிடையே உலவிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், `அமானுஷ்யங்களின் உறைவிடம்’ எனப் பலர் கருதும் கல்லறையிலேயே குடும்பம் நடத்துகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் ராஜு, கல்லறைத் தோட்டத்தில் வசிப்பவர். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் கிளம்பிவிட்டேன்.

கல்லறை

சென்னை சென்ட்ரலுக்கு அருகிலிருக்கும் வியாகுல மாதா தேவாலயத்துக்குச் (Vyakula matha church) சொந்தமான கல்லறைத் தோட்டம் அது. இறந்தவர்களின் உறவினர்கள் கல்லறைகளுக்கு முன்பாக மண்டியிட்டு, சாம்பிராணி காட்டி, ஜெபம் செய்து, வழிபட்டுக்கொண்டிருந்தார்கள். அதை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது, அருகில் கல்லறை ஒன்றின் மீது படுத்து உறங்கிக்கொண்டிருந்தவர் எழுந்து அமர்ந்தார்.

“தம்பி, கல்லறைக்கு ஜெபம் பண்றதையே ஆச்சர்யமாப் பார்க்குறீங்களே… இறந்து போனவங்களோட ஆவிங்க அவங்களோட கல்லறைக்கே வந்து அஞ்சலி செலுத்துறதை எப்பவாவது பார்த்திருக்கீங்களா?’’ என்று கேட்டு திகிலூட்டினார்.

அப்போதுதான் கல்லறைகள் நிறைந்த மண்ணில் நிற்கிறேன் என்கிற உணர்வே வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன். ஆங்காங்கே புதர் மண்டிக் கிடந்தது. சட்டென்று லேசாக ஒரு பயம் பற்றிக்கொண்டது. “என்னது… ஆவிங்க ஜெபம் பண்ணுமா?’’ என்று அவரிடமே கேட்டேன்.

“ராத்திரி பதினோரு மணிக்கு மேலே வந்து பாரு… தெரியும்’’ என்று சொல்லிவிட்டு, கல்லறைக்குக் கீழே விழுந்து கிடந்த தலையணையை எடுத்தார். மீண்டும் கல்லறையின் மீது வைத்தார். திரும்பப் படுத்துக்கொண்டார். கொஞ்சம் தயக்கத்தோடு, “கல்லறை ராஜுவைப் பார்க்கணும். அவரு எங்கே இருக்காரு?’’ என்று கேட்டேன்.

“இன்னைக்கு அவரோட அப்பாவுக்கு சாமி கும்புடுறாங்க. கொஞ்சம் நேரத்துல வந்துடுவான், வரலேன்னா அவனோட வீட்ல போய்ப் பாரு’’ என்று சொல்லிவிட்டு, கண்களை மூடிக்கொண்டார்.

நான் மறுபடியும் அந்தக் கல்லறைத் தோட்டத்தை நோட்டம்விட்டேன். உட்காருவதற்குத் தோதான இடம் ஒன்றுகூடத் தென்படவில்லை. வேறு வழியில்லாமல், ஒரு கல்லறையின் மீதே உட்கார்ந்தேன். சற்று தூரத்தில் கூவம் ஓடிக்கொண்டிருந்தது. அங்கிருந்து வீசும் துர்நாற்றம் தாங்க முடியாததாக இருந்தது. அந்த துர்நாற்றத்துக்கு நடுவிலேயும் பன்னீர் மணம்!

என் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்டவராகவோ, என்னவோ… “இங்கே இப்படித்தான் தம்பி… உட்கார முடியாத அளவுக்கு நாத்தம் அடிக்கும்; திடீர்னு மல்லிகைப்பூ வாசமும் வீசும். எங்களுக்கு இதெல்லாம் பழகிடுச்சு…’’ படுத்திருந்தவர் உடம்பைக்கூடத் திருப்பாமல் குரல் கொடுத்தார்.

தேவாலயத்துக்கு அருகே இருந்த வீட்டிலிருந்து நாற்பது வயதுடைய ஒருவர் அவரது மனைவியுடன் வெளியே வந்தார். அவர் கைகளில் மலர் மாலைகள், கூடவே சாம்பிராணிப் புகை. அவர்கள் இரண்டு கல்லறைகளை அலங்கரித்தார்கள். அவற்றின் முன்னால் நின்று ஜெபம் செய்தார்கள். சாம்பிராணியை தலைக்கு மேலே தூக்கி கல்லறைகளுக்குக் காட்டினார் அவர். அவர்தான் `கல்லறை’ ராஜுவாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன். அவர்கள் வழிபட்டு முடிக்கும்வரை காத்திருந்தேன். பிறகு அவரிடம் போய் அறிமுகம் செய்துகொண்டேன்.

கல்லறை

“உங்களப் பத்திச் சொல்லுங்க…’’ என்று ஆரம்பித்தேன்.

“என்னைப் பத்திச் சொல்றதுக்கு என்ன இருக்கு தம்பி. இந்த கல்லறைத் தோட்டத்துல கிட்டத்தட்ட 28 வருசமா வேலை பார்த்துகிட்டிருக்கேன்.  எங்களுக்கு மூணு பொண்ணுங்க, ஒரு பையன்…’’

“இந்தக் கல்லறையில் என்ன வேலை செய்றீங்க?’’ 

“கல்லறைக்கு கொண்டுவர்ற பிணங்களை அடக்கம் செய்ய, குழி தோண்டுறதுலருந்து புதைக்கிற வரைக்கும் எல்லா வேலைகளையும் நான்தான் செய்யுறேன். சிலர் என்னை `கல்லறைக்காரன்  ராஜு’னு கூப்பிடுவாங்க; சிலர் `வெட்டியான்’னு கூப்பிடுவாங்க” என்று சிரித்தபடியே கூறியவர், “இங்கே நின்னுக்கிட்டே பேச வேண்டாம். வாங்க… அமைதியான, நிழலான ஒரு இடத்துல உட்கார்ந்து பேசலாம்” என்று அழைத்துச் சென்றார்.

கல்லறைகளுக்கு நடுவே கொஞ்ச தூரம் நடந்து சென்றோம். கிரானைட் கற்கள் பதித்திருந்த ஒரு கல்லறையைக் காட்டி, “இங்கே உட்கார்ந்து பேசுவோம். எந்தத் தொந்தரவும் இருக்காது” என்று எங்களை உட்காரச் சொல்லி, அவரும் அமர்ந்தார்.
அது, 2006-ம் ஆண்டு இறந்த ஒருவருடைய கல்லறை.

“இங்கேயே பிறந்து, வளர்ந்து, 28 வருசமா வேலை பார்க்குறீங்க. உங்களுக்கு பயமா இல்லையா?’’

“ஒரு காலத்துல பயம் இல்லாமத்தான் இருந்துச்சு. ஆனா, இப்பல்லாம் ராத்திரியானாலே வெளிய வர பயமா இருக்கு. எத்தனையோ நாள்கள் வாசல்லயே உட்கார்ந்து ஒண்ணுக்கு போயிருக்கேன்… அவ்ளோ பயம்.”

“எப்போலேருந்து இந்த மாதிரி பயப்பட ஆரம்பிச்சீங்க?” 

“முன்னாடியெல்லாம் இங்கே இயற்கையா இறந்தவங்களை மட்டும்தான் புதைச்சிக்கிட்டு இருந்தோம். அப்போல்லாம் பிரச்னை எதுவும் தெரியலை. ஆனா இப்போ, சின்ன வயசுல தற்கொலை பண்ணிக்கிட்டவங்களையெல்லாம் அடக்கம் செய்யறோம். அதெல்லாம்தான் பயத்தை உண்டாக்குது. ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட கடல்ல விழுந்து செத்துப்போன ரெண்டு பேரை அடக்கம் செஞ்சோம். இந்த மாதிரி சின்ன வயசுல செத்தவங்க ரொம்ப தொல்லை கொடுப்பாங்கனு நான் கேள்விப்பட்டிருக்கேன். அதனாலேயே எத்தனையோ நாள் தூங்க முடியாம தவிச்சிருக்கேன் தம்பி.’’

கல்லறை

“ஆவி, பேய் மாதிரியான அமானுஷ்ய அனுபவங்களெல்லாம் உங்களுக்கு நடந்திருக்கா?’’

“என் முதல் குழந்தை பிறந்து ஒரு மாசம் இருக்கும். அப்போ, தீக்குளிச்சு இறந்துபோன ஒரு சின்னப் பையனை இங்கேதான் அடக்கம் பண்ணினோம். உடம்பு வெந்துபோய், பார்க்கவே முடியாத அளவுக்கு அந்தப் பிரேதம் இருந்துச்சு. ராத்திரி வீட்ல எல்லாரும் தூங்கிக்கிட்டு இருந்தோம். திடீர்னு நடுராத்திரில ஒரு அழுகுரல் கேட்டுச்சு. யாரோ ரொம்ப தொலைவுல தேம்பித் தேம்பி அழுதா எப்படி இருக்கும், அந்த மாதிரி கேட்டுச்சு. அழற சத்தம் கேட்டதுமே நாங்க எல்லோரும் முழிச்சிக்கிட்டோம். கைக்குழந்தை இருந்ததால நாங்க லைட்ட ஆஃப் பண்ண மாட்டோம். அழுகைச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமா எங்க வீட்டை நோக்கி வர்றது மாதிரி இருந்துச்சு. அழுகை சத்தம் கேட்க ஆரம்பிச்சதுலருந்து எங்க வீட்ல இருந்த மூணு நாய்ங்களும் குலைக்க ஆரம்பிச்சுடுச்சுங்க. அழற சத்தம் ஒரே இடத்திலிருந்தே கேட்டுக்கிட்டு இருந்துச்சு. நாய்களும் விடாம குலைச்சுதுங்க. நாய்ங்க  குலைச்சதுனாலயோ என்னவோ யாரும், எதுவும் எங்களை நோக்கி வரலை. வீட்டுக்குள்ள இருந்த நான், என் பொண்டாட்டி, என் மாமியார் மூணு பேரும் உயிரைக் கையில புடிச்சுகிட்டிருந்தோம். அழற சத்தம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு, தூரமாப் போக ஆரம்பிச்சு, மெதுவாக் கேட்டுச்சு. நாய்ங்களும் அந்தச் சத்தம் வந்த திசையில குலைச்சுகிட்டே போச்சுங்க. நான் கதவைத் தொறந்து எட்டிப் பார்த்தேன். பௌர்ணமி வெளிச்சத்துல அன்னிக்கிப் புதைச்சேனே… அந்தப் பையன் உருவம் தூரத்துல நடந்துபோற மாதிரி ஒரு பிரமை. வாழ்க்கையில அந்த ராத்திரியை மட்டும் என்னால மறக்கவே முடியாது தம்பி” இதைச் சொல்லும்போது ராஜுவின் குரலில் சிறிது நடுக்கம்.

1 COMMENT

  1. உங்கள் இந்த எழுத்துக்களை விகடனில் வாசித்து பிரமித்தேன். சிறப்பு. வித்தியாசமான நபரைத் தேர்வு செய்திருக்கிறீர்கள். கவனிக்கப்பட வேண்டியவர்கள். வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here