கரிகாலரின் இமயப் படையெடுப்பும், அவரது இமயப் படையெடுப்புக் காலமும் : ஓர் ஆய்வுக் கட்டுரை

கரிகாலர் :

கரிகாலரைப் பற்றியும் அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றியும் நாம் அறிவதற்கு மயிலை சீனி. வேங்கடசாமி, கா. அப்பாத்துரையார், நீலகண்ட சாஸ்திரி, புலவர் கா. கோவிந்தனார் ஆகிய தமிழ் வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களைப் படித்தால் ஒவ்வொருவருடமிருந்தும் ஒவ்வொரு விதமான முரண்பட்ட ஆய்வுத் தகவல்களே கிடைக்கின்றன. சிலர் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் கரிகாலன் வேறு, பட்டினப்பாலையில் குறிப்பிடும் திருமாவளன் வேறு, பொருநராற்றுப் படையில் குறிப்பிடப்படும் வளவன் வேறு என்று ஆதரங்களை அடுக்கி கரிகாலன் – 1, கரிகாலன் – 2 என வகைப்படுத்துகின்றனர். அவர்கள் வெண்ணிப் போரில் வெற்றி பெற்ற கரிகாலன் வேறு; காவேரிக்கு அணை கட்டிய திருமாவவளன் என்பவன் வேறு; இமயத்திற்கு படையெடுத்த கரிகாலன் என்பவன் வேறு என்று கூறுகிறார்கள். சிலர் அதே ஆதாரங்களை மறுத்து கரிகாலன் என்பது ஒருவர் தான் என்றும் மறுக்கிறார்கள்.

சிறு வயதில் மாளிகையில் எரியூட்டப்பட்டு கால் வெந்து கரிய கால்களைக் கொண்ட கரிகால் வளவன் தான்  வெண்ணிப் போரில் தன்னை எதிர்த்த சேரன் பெருஞ்சேரலாதன், பாண்டிய மன்னன் மற்றும் பதினோரு வேளிர்களை எதிர்த்து வெற்றிபெற்றான்.  வாகைப் பெருந்தலையில் ஒன்பது வேளிர்களை வீழ்த்தினான். அதே கரிகாலன் தான் சிங்களர்களைக்1 கொண்டு காவேரிக்கு அணையக் கட்டினான். இதே கரிகாற் பெருவளத்தான் தான் இமயம் வரைப் படையெடுத்தான் என்று சிலர் கூறுகிறார்கள். பெருவளத்தான், கரிகாற் பெருவளத்தான், கரிகாற் வளவன், வளவன், பெருவளக் கரிகால், பெரும்பெயர்க் கரிகால், திருமாவளவன், இயல்தேர் வளவன் என புறநானூறு, அகநானூறு, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை மற்றும் சிலப்பதிகாரத்தில் பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுவது சோழப் பேரரசன் கரிகாலன் ஒருவனே. என்பது எனது கருத்து.

ஏனெனில் கரிகாலன் என்ற பெயரே காரணப் பெயர். கால் சுடப்பட்டதனால் கரிகாலன் என்ற பெயரைப் பெற்றான் என்று கரிகாலனின் காலத்திற்குப் பிந்தைய இலக்கியமான பழமொழி நானூறு (239) குறிப்பிடுகிறது.

சுடப்பட் டுயியர்ந்த சோழன் மகனும்

பிடர்த்தலைப் பேராணைப் பெற்று கடைக்கால்

செயிரறு செங்கோல் செவிஇயினா ளில்லை

யுயிருடையா ரெய்தா வினை         பழமொழி நானூறு 239.

கரிகாலன் 1, 2 எனக் கூறுகிறவர்கள் அனைவரும் முதல் கரிகாலனை விடவும் பிந்தைய கரிகாலனே சிறப்பு மிக்கவன் என்று கூறவும் செய்கிறார்கள். முதல் கரிகாலன் சிறப்பு மிக்கவனாக இல்லாமல் புகார் மற்றும் உறைந்தைக்குள்  அடங்கியவனாக இருக்கையில்; அதுவும் கால் சுடப்பட்டதனால் ஏற்பட்ட காரணப் பெயரை இமயம் வரை சென்று வெற்றி பெற்ற புகழ் பெற்ற கரிகாலன் ஏன் சூட வேண்டும்? என்ற கேள்வியும் எழச் செய்கிறது.

கரிகாலன் என்பவர்கள் இருவராக (பலர்?!) இருந்தால் அதைப் பற்றி ஏன் சோழர்களின் பிற்கால இலக்கியங்கள் குறிப்பிடப்படவில்லை???

கரிகாலரை வெண்ணிப் போரில் எதிர்த்த சேரர், பாண்டியர்:

வெண்ணிப் போரில் கரிகாலன் எதிர்த்த சேர மன்னன் பெருஞ்சேரலாதன் என்பதை கழாஅத் தலையார் (புறம் 65) மற்றும் வெண்ணிக் குயத்தியார்  (புறம் 66) ஆகியோரின் பாடல்களிலிருந்து அறிந்துகொள்ளலாம். ஆனால், வெண்ணிப் போரில் பங்குபெற்ற பாண்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி எந்தத் தகவலும் நேரடியாகக் கிடைக்கவில்லை. ஆனால், அப்பாண்டிய மன்னன் யாராக இருக்கலாம் என்பதற்கு இலக்கியத்தில் ஒரு குறிப்பு மறைமுகமாகக் காணப்படுகிறது.

பழமொழி நானூறு நூலில் 239வது பாடல் கரிகாலனின் பெயர்க் காரணத்தைக் குறிப்பிடுகிறது. பட்டினப்பாலை வெண்பாவும் இதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதே பழமொழி நானூறு நூல் இரும்பிடர்த்தலையன்2 எனும் பிடர்த்தலைப் பேராணைப் பற்றியும் குறிப்பிடுகிறது. பழமொழியின் கொலுக்குறிப்பில் இப்பிடர்த்தலையன் கரிகாலரின் தாய்மாமன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இரும்பிடர்த்தலையன் அழுந்தூர் இளவரசன்.

இதே இரும்பிடர்த்தலையனின் பாடல் ஒன்று புறநானூறு 3ல் வருகிறது. இரும்பிடர்த்தலையர்  ‘பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி’ என்பவனுக்கு ‘உன் ஆட்சியை இழக்க நேர்ந்தாலும் நீ சொன்ன சொல் தவறாதே’ என்று அறிவுரை வழங்குகிறார். பழமொழிக் கூற்றின் மூலம் இரும்பிடர்த்தலையன் கரிகாலரின் மாமன் எனக் கொண்டால் பிடர்த்தலையர் அறிவுரை கூறிய ‘பெரும்பெயர் வழுதி’யே கரிகாலன் காலத்திய பாண்டிய மன்னனாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

கரிகாலரின் வடசெலவு:

உறுதியான கல்வெட்டு ஆதாரம் இல்லாமல் இலக்கிய ஆதாரம் மட்டுமே கொண்டிருப்பதால் கரிகாலரின் வடநாட்டுப் படையெடுப்பை வெறும் கட்டுக்கதை என்றும், அது பிற்காலத்தில் பெருமைக்காக சேர்க்கப்பட்டது என்றும் கூறி ஆராய்ச்சியாளர்கள் பலர் குறிப்பாக வடநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கரிகாலரின் இமயப் பெரும் வெற்றியை ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள். இதே நிலைதான் சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்புக்கும். பிற்காலச் சோழப் பேரரசர் கோப்பரகேசரி மதுராந்தக இராஜேந்திரரின் கங்கைப் படையெடுப்பைத் தவிர மற்ற முற்கால தமிழக மன்னர்களான சோழப் பேரரசன் கரிகாற் பெருவளத்தான் மற்றும் சேரன் செங்குட்டுவன் ஆகியோரின் வடநாட்டுப் படையெடுப்பு என எதற்கும் நேரடியான கல்வெட்டு ஆதாரங்கள் இல்லை.

கரிகாலரின் காலத்திற்குப் பிறகு இயற்றப்பட்ட சிலம்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் கரிகாலரின் இமயப் படையெடுப்பு பற்றிய தகவல் கரிகாலரின் சமகாலத்திய இலக்கியமான பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை, அகநானூறு மற்றும் புறநானூறு பாடல்களில் குறிப்பிடப்படவில்லை என்ற காரணத்தினால் கரிகாலரின் வடநாட்டுப் படையெடுப்பு ‘இல்லை’ என்று ஆகிவிடாது. கரிகாலரின் காலத்தில் இயற்றப்பட்ட பாடல்கள் அவரது படையெடுப்பு நிகழ்வதற்கு முன் கூட இயற்றப்பட்டிருக்கலாம் அல்லது அதற்கு போதிய  முக்கியத்துவம் அக்காலத்தில் கொடுக்கப்படாமல் கூட இருந்திருக்கலாம். கரிகாலரின் இமயப் படையெடுப்பை உள்ளடக்கிய பாடல்கள் நமக்குக் கிடைக்காமலும் போயிருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here