பிரபல ஊடகங்களும் அவற்றின் கருத்துக்கணிப்புகளும்…

தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால் ஒவ்வொரு செய்தி ஊடகங்களும் பிரமாண்ட கருத்துக்கணிப்பு என்று கூறி தங்களுக்கு ஆதரவான கட்சிக்கு கொடி  பிடித்து தம்மட்டம் அடித்துக்கொண்டிருக்கின்றன. மக்களின் நாடித்துடிப்பு, மக்களின் மன நிலையைப் பிரதிபலிக்கும் பிரமாண்ட கருத்துக்கணிப்பு, நடுநிலையான கருத்துக்கணிப்பு என்றெல்லாம் கூறிக்கொள்கிறார்கள். அரசியல் கட்சிகளும், தங்களைச் சார்ந்த ஊடகங்களைப் பயன்படுத்தி தங்களுக்குப் பெரும் செல்வாக்கு இருப்பதாக ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. ஒன்று முதல் மூன்று லட்சம் மக்கள் தொகை உள்ள ஒரு சட்ட மன்ற தொகுதியில் மாவட்டத் தலைநகருக்கு வந்து செல்லும் நூறு பேரிடம் மட்டும் கருத்துக் கேட்டு ‘பிரமாண்ட கருத்துக்கணிப்பு’ என்று கூறினால் அது மக்களின் மன நிலையை எப்படி பிரதிபலிக்கும் என்று தெரியவில்லை.

தமிழகத்தின் பிரபலமான பத்திரிக்கை ஒன்றில் நிருபராக பணிபுரிந்துகொண்டிருந்த போது நானும் 2011 தேர்தலுக்கு அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு கருத்துக் கணிப்பு கேட்க சென்றிருந்தேன். பிரமாண்ட கருத்துக்கணிப்பு என்றாலே அன்று நடந்த நிகழ்வுகள் தான் ஏனோ வந்து செல்கிறது.

அரியலூர் சட்ட மன்ற தொகுதிக்கு கருத்துக்கணிப்பு கேட்பதற்கு அரியலூர் மாவட்ட செய்திகளை சேகரிக்கும் எனது சீனியர் என்னை அழைத்து நூறு கருத்துக் கணிப்புப் படிவங்களை  என்னிடம் கொடுத்து மக்களிடம் கருத்துக் கேட்டுவரச் சொல்லி அனுப்பினார். நானும் அரியலூர் பேருந்து நிலையம், கல்லூரி சாலை, சந்தை என்று திரிந்து சுமார் இரண்டு மணி நேரம் மக்களிடம் கேட்டு நிரப்பினேன். எண்ணிப் பார்த்தேன் முப்பதைத் தாண்டவில்லை. பெரும்பாலான மக்களுக்கு வாசிக்கத் தெரிந்திருக்காத காரணத்தால் நானே படித்து பதிலைக் கேட்டு, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்துவிட்டு நிரப்பிய காரணத்தால் இரண்டு மணி நேரத்தில் இருபது படிவங்களையே என்னால் முடிக்க முடிந்திருந்தது. போன் செய்து எனது சீனியருக்குத் தகவல் தெரிவித்தேன். “மீதியிருக்கும் படிவங்களை எடுத்துகொண்டு ரூமுக்கு வா” என்று கூறி கட் செய்தார்.
எப்படியும், சீனியரிடம் இன்று வாங்கிக் கட்டிகொள்ளப் போகிறேன் என்று சிறு அச்சத்துடனே அவரிடம் சென்று நடந்ததைக் கூறினேன். அவர் சிரித்தபடியே, “எதுக்குடா இவ்ளோ கஷ்டம்???” எனக் கூறியவர் என்னிடம் இருந்த படிவத்தில் பாதியை வாங்கி அவரே நிரப்பத் தொடங்கினார். மீதியை என்னை நிரப்பச் சொன்னார். அனைத்துக் கேள்விகளுமே டிக் அடிக்கும் ரகம் தான். அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் அரியலூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கருத்துக் கணிப்பை இருவர் மட்டுமே முடித்திருந்தோம். முடித்து மார்க் போட்டு படிவங்களை கட்டி வைத்துவிட்டு, இன்னொரு நூறு படிவங்களைக் கொண்டு வந்து அதில் பாதியை என்னிடம் கொடுத்து மீதியை அவர் நிரப்பத் தொடங்கினார். என்னிடம் கொடுத்த படிவத்தைப் பார்த்தேன். அதில் மாவட்டம் அரியலூர், சட்டமன்ற தொகுதி ஜெயங்கொண்டம் என்றிருந்தது. புரிந்து கொண்டு டிக் அடிக்க ஆரம்பித்தேன். அப்போது அவர், “தம்பி,ஜெயங்கொண்டம் ஏரியாவுல பா.ம.க தானே செல்வாக்கு?” எனக கேட்டார். நானும், “ஆமாம்…” எனக் கூறிக்கொண்டு மாம்பழத்தில் டிக் அடிக்க ஆரம்பித்தேன். அடுத்த இருபதாவது நிமிடத்தில்  ஜெயங்கொண்டம் தொகுதிக்கும் கருத்துக் கணிப்பை வெற்றிகரமாக முடித்திருந்தோம்.
அரியலூர் மாவட்டத்துக்கான கருத்துக் கணிப்பை முடித்த அரை மணி நேரத்தில் கேமரா மேன் வந்திருந்தார். வெளியே சென்றுகொண்டிருந்த இரு கல்லூரிப் பெண்களை நிற்கவைத்து அவர்களிடம் ஒரு படித்ததைக் கொடுத்து மாறி மாறி போட்டோ எடுத்து போட்டோக்களையும், கருத்துக் கணிப்புப் படிவங்களையும் அவற்றின் முடிவுகளையும் சென்னைக்கு அனுப்பி வைத்தோம்.
இன்று ஆதரவு தொலைக்காட்சிகளும், ஆதரவு பத்திரிக்கைகளும் வெளியிட்டிருக்கும் பிரமாண்ட கருத்துக் கணிப்புகளை வைத்துக்கொண்டு உ.பிக்களும், ர.ரக்களும் ‘நரி கூவி விட்டது, வடக்குப்பட்டி ராமசாமியிடம் இன்று எப்படியும் வசூலித்துவிடலாம்’ எனக் கூறிக்கொண்டு கிளம்பிய கவுண்ட மணி கணக்காக திரிந்துகொண்டிருக்கிறார்கள்.
சி.வெற்றிவேல்…
சாளையக்குறிச்சி…

One thought on “பிரபல ஊடகங்களும் அவற்றின் கருத்துக்கணிப்புகளும்…

  1. அருமை. நெத்தியடி கொடுத்திருக்கிறீர்கள். புதிய இணையத் தளத்திற்கு வாழ்த்துக்கள்.

Leave a Comment