காதலியே…!

காதலியே

உன்னை நினைத்து,
உன்னிடம் யாசித்து
உன்னுடனே
என் காலம் கழிய வேண்டும்…

கன்னிக் காதலியிதழ்ச் சுவையே,
கூந்தல் மணத்தவளே,
அகவை யுகம் கடந்தும்,
அழகு குறையாத கன்னியழகே…

உன்னை நினைத்துப் பார்க்கையில்
என் மனம் நிறைய வேண்டும்…
உன்னைத் தீண்டிப் பார்க்கையில்
என் உடல் சிலிர்க்க வேண்டும்…

ஊரார் உன்னைத்
தாயாய் போற்ற,
நான் உன்னை – என்
காதலியாய் தரிக்கின்றேன்.

உன்னை என்னவளாக்கி மகிழ
ஆசைதான்…
அந்தயிடம் எப்பொழுதோ நிரம்பிவிட்டதால்
அவளுக்கு அருகில் உன்னை
வைக்கிறேன்…

துணைவியான நீயாவது என்னோடு
ஐக்கியமாகிவிடு…
அழகுக் கவிதையியற்றி
மாலை சூட்டுகிறேன் உனக்கு.
புதினங்கள் பல எழுதி
மங்காத புகழ் சேர்க்கிறேன்…

நான் நினைக்கையில்
என்னோடு சங்கமித்துவிடு…
என் உறக்கத்தைக் களவாடி
எனையாட்கொண்டு விடு.

தமிழே…
என் காதலியே…
மங்காத புகழொளியே…
முழுமையாக எனை ஆட்கொண்டுவிடு.
சரணடைகிறேன்
நின் மார்புகளுக்கிடையில்…

சி.வெற்றிவேல்,
சாலைக்குறிச்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here