தாழ்வுணர்ச்சியின் வரலாற்றுச் சரித்திரம் – பதில்

திரு.ஜெயமோகன்,

தமிழரைப் பற்றியும், தமிழரின் வரலாற்றைப் பற்றியும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் எனும் நிலையில் சில ஆர்வக்கோளாறுகள் மீம் என்ற பெயரில் பல பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். அதிலும், ‘நீங்கள் உண்மைத் தமிழனாக இருந்தால் இதைப் பகிரவும்’ என்ற தகவல்களை பார்த்து பல முறை நான் சிரித்திருக்கிறேன். இவை பப்ளிசிட்டி டிரண்ட். இதே போன்று தான் தங்களது ‘தாழ்வுணர்ச்சியின் வரலாற்றுச் சரித்திரம்’ எனும் பதிவைப் பார்த்த பிறகும் எனக்கு சிரிக்க வேண்டும் என்று தோன்றியது. அவர்கள் தமிழரின் மீதுள்ள அதீத பற்றில் பொய்யுரைகளைப் பரப்புகின்றனர். நீங்கள் அதீத வெறுப்பில் தங்களது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். இருவரின் கருத்தும் பப்ளிசிட்டி டிரண்ட் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. அதிலும் தங்களது கருத்து வெறுப்பின் உச்சம். நீங்கள் எது எழுதினாலும் படித்து உச்சா கொட்ட ஒரு கூட்டம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் கூறுவீர்களா ஜெ?

எனக்கொரு சந்தேகேம். எழுதுவது தமிழில். உங்களை வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள் தமிழர்கள். ஆனால், தமிழர்களை ஏளனம் செய்வதிலும், தரம் தாழ்த்திப் பேசுவதிலும் தங்களுக்கு அப்படியென்ன சுகானுபவம் ஏற்படுகிறது என்று தெரியவில்லை. கொரியாவில் தமிழ் இளவரசி, எகிப்து தமிழ் மொழி, உலகிலேயே மிகப்பெரிய கோயில் தஞ்சைபெரியகோயில், நான்குலட்சம் வருடங்களுக்கு முந்தைய தமிழ்ப்பண்பாடு கண்டெடுப்பு போன்ற தகவல்கள் எப்படிப்பட்ட கேனத்தனமோ அப்படிப்பட்ட கேனத்தனமான பதிவு தான் தங்களது பதிவும். நீங்கள் எது கூறினாலும் ஆமாம் என்று தலையாட்டும் ஒரு கூட்டம் இருக்கிறது என்பதற்காக எதுவேண்டுமானாலும் கூறிவிட இயலாது.

தற்போதைய பாக்கிஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட மாபெரும் அனுமனின் எலும்புக்கூடு, இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மாபெரும் கதாயுதம் போன்ற ‘அதீத தேச பாக்தர்களின்’ விஞ்ஞானப் படங்களும், அவற்றின் பதிவுகளும் தங்களின் பார்வைக்கு படவில்லையா அல்லது பார்வையில் படாததைப் போன்று இருக்கிறீர்களா? அவற்றைப் பற்றி பேச தங்களால் இயலுமா? அது இயலாதே!

‘சங்ககாலம் எனச் சொல்லப்படும் நிலையற்ற அரசியல்குழப்பங்கள், உட்போர்கள் முடிவுற்றதும், தமிழகம் களப்பிரர் ஆட்சிக்குள் வந்துவிட்டது’ என்று கூறுகிறீர்கள். தமிழகம் களப்பிரர்களின் கரங்களில் விழும் முன் அதே சங்க காலத்தின் தொடக்கத்தில் கரிகாலனைப் பற்றியோ அல்லது சேரன் செங்குட்டுவனைப் பற்றியோ தாங்கள் அறியாதது எனக்கு வியப்பளிக்கிறது. சரி இதை விடுங்கள். மௌரியர் தென்னாட்டின் மீது படையெடுத்த தகவல்கள் வரும் சங்கப் பாடல்களாக அகநானூறு 251, 281, 69; புறநானூறு 175 பாடல்களை படிக்க நேரும்போது தங்களது விழிகள் தானாக மூடிக்கொண்டு விட்டதா? இதே கால கட்டத்தில் காரவேலனின் யானைக்குகைக் கல்வெட்டு மற்றும் மாமூலனாரின் அகநானூறு 31லும் மூவேந்தரும் மொழி பெயர் தேயத்தில் பெரும் படையை நிலை நிறுத்திக் காவல் காத்ததைப் பற்றி குறிப்பிடுகிறது. அகம் 251, 281, 69 மற்றும் புறம் 175 ஆகியவை மோரியரின் தென்னாட்டுப் படையெடுப்பைக் குறிப்பிடுகிறது. பிறகு அசோகன் தனது கல்வெட்டு ஆணையில் சோழர், பாண்டியர், சேரர், சத்யபுத்திரர் ஆகியவர்களை தனியரசுகளாகவே குறிப்பிடுகிறான். இந்தத் கூட்டுத் தகவல் போதாதா மோரியர் படை தென்னகத்தில் தோற்கடிப்பட்டிருக்கிறது என்பதற்கு? இவற்றை ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கு அப்படி என்ன பிரச்சனை இருக்கிறது?

களப்பிரர்கள் சாதவாகனரின் சிற்றரசர்கள் என்கிறீர்கள்? ஏதன் அடிப்படையில் இக்கருத்தை முன்வைக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ள நான் ஆவலாக இருக்கிறேன்.

‘ஏழாம் நூற்றாண்டில் சாளுக்கியர்கள் தமிழகத்தை தோற்கடித்தனர். கிபி 620 வாக்கில் இரண்டாம் புலிகேசியும், பின்னர் 740 வாக்கில் இரண்டாம் விக்ரமாதித்யனும் பல்லவர்களை தோற்கடித்து தமிழகத்தை கைப்பற்றினர். அதன்பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில் ஹொய்ச்சாளர்கள் மதுரைவரை கைப்பற்றி சிலகாலம் ஆண்டனர்’ என்று குறிப்பிடும் தாங்கள் பல்லவர்கள் வாதாபியை அழித்து தீக்கிரையாக்கியத்தைப் பற்றியோ அல்லது சோழர்கள் மேலைச் சாளுக்கியர்களை வீழ்த்தியத்தைப் பற்றியோ ஏன் குறிப்பிட மறந்தீர்கள். அதிலும் ராஜராஜனின் மான்யகேட வெற்றி, ராஜேந்திரனின் கங்கை மற்றும் கடார வெற்றி ஆகியவற்றை வாயைக் கூடத் திறக்காதது எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. தமிழர்கள் தன் மீது படையெடுத்த எவரையும் வீழ்த்தி தோற்கடிக்கவில்லை என்று கூறுகிறீர்கள். விக்ரமாதித்ய சாளுக்கியனின் படைகள் உறையூருக்கு அருகில் வீழ்த்தப்பட்டதை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

சோழர்கள் மற்றும் பாண்டியரின் (சகோதர யுத்தம்) வீழ்ச்சிக்குப் பிறகே தமிழர்கள் வீழ்த்தப்பட்டார்கள். அதன்பிறகு இன்றுவரை எழ முடியாதவர்களாகத் தான் இருக்கிறார்கள். அதற்காக தமிழர்கள் எவரையுமே வீழ்த்தவில்லை என்று கூறுவது தங்களது காழ்ப்புணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது.

சங்க காலத்தில் தமிழகத்தில் போதிய படை வலிமை இல்லை என்று கூறும் தங்களுக்கு மெகஸ்தனிஸின் பதிவில் பாண்டிய படைகளைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் உங்களுக்காக: 1,50,000 காலாட் படைவீரர்களும், 4000 குதிரைப் படைகளும், 500 யானைகளும் கொண்ட பாண்டிய அரசு 300 நகரங்களை ஆண்டு வருகின்றனர்.’ இது பாண்டிய அரசின் படை வலிமை மட்டுமே. இது இல்லாமல் சேர, சோழ மற்றும் மற்ற சிற்றசர்களின் படைகளையும் எண்ணிப் பார்த்துக் கொள்வீர்களா.

தமிழர்கள் போதிய வளம் கொண்டிருக்கவில்லை என்று கூறும் தங்களுக்கு ‘The periplus of Eritrean sea’ எனும் நூலைத் தங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். தமிழர்களின் கடலோரப் பட்டினங்களையும், அவர்கள் தமிழருடன் வாணிபம் செய்ததை பற்றியும், அவர்கள் தமிழத்தில் தங்கி வாணிபம் செய்த விபரத்தையும் கூறுகிறது.

1 COMMENT

  1. முதலில் தமிழர் யார் திராவிடரும் தமிழரும் ஒன்றா என்பதற்கு விடையில்லை. இந்திய வரலாறே ஒரு புரட்டு. டரையஸ் 1 ன் கல்வெட்டு மஹாவம்சத்தை அசோகர் கல்வெட்டுகளோடு இணைத்து கர்நாடகத்தில் கிபி ஐந்தாம் நூற்றாண்டில் புலகேசி 1கல்வெட்டையும் ஆரியபட்டரின் கணிதநூலையும் வைத்து ஐந்தாம் நூற்றாண்டில் துளு பார்ப்பனர்களால் தொகுக்கப்பட்ட புராணம் இதிஹாஸங்களை மஹாவம்சத்தோடும் புத்த ஜைன இலக்கியங்களோடு முன்னுக்குத்தள்ளியதுதான் இந்திய வரலாறு. அபத்த்திலும் அபத்தம். டரையஸ் வந்தபோது பதிறனாறு ஜனபதங்களாக இருந்த வட இந்தியா எவ்வாறு ஐந்தாம் நூற்றாண்டில் எழுந்த இதிஹாஸபுராணங்களின்படி நூற்றுக்கணக்கான அரசுகளாக மாறின. புராதன ஜைனம் க்ஷத்திரிய வைஸ்ய சூத்ர வர்ணங்களைத்தான் ஒப்புக்கொண்டது. பிறகு எவ்வாறு அது பிராமண எதிர்ப்பாக இருக்க முடியும். தென்னிந்திய மன்னர்கள்தான் அயல் நாட்டைக்கொள்ளையடித்து நகரங்களை எரியூட்டி பெண்டிரைக்கவர்ந்து நிலங்களை கழுதையைவிட்டு மேயவைத்து அதற்குப்பரிகாரமாக மறக்கள வேள்வி செய்து தம்பட்டம் அடித்தார்கள். இந்தோ பாக்ரியன் அரசு வரும் வரை வட இந்தியாவில் அரசர்களே கிடையாது. மஹாவம்சம் மூலம்தான் தென்னிந்திய சிசுநாக வம்சம் அறியப்பட்டது. அரசரே இல்லாதபோது யார் அஸ்வமேதம் ராஜசூய யாகம் செய்து தம்பட்டம் அடித்தார்கள். சங்க கால இலக்கியங்களில்தான் வேள்வி சடங்குகள் பற்றிய வர்ணனை வருகிறது. கிபி ஒன்றாம்நூற்றாண்டு வரை வடமொழியில் இலக்கியம் கிடையாது. பாசர் பாரவி தண்டி அனைவரும் தென்னிந்தியர்கள். அபபிரம்ஸம் ஸ்ருங்கார கவிதைகளைத்தான் உள்ளடக்கியதே தவிர தமிழ் போல் மன்னர்கள் செய்த வேள்வி போர் பாடவில்லை. ஏதோ ஒருகாரணத்திற்காக ஆரியர்கள் மறைந்திருந்து தமிழைத்தோற்றுவித்து சடங்குகள் சம்பிரதாயங்களைப்பதினென்மேற் கணக்கு நூல்களாக்கியுள்ளனர். அபபிரம்ஸம் போரை என்றுமே வலியுறுத்தியது கிடையாது. இப்பொழுதிருக்கும் வட இந்தியர்கள் திராவிட சித்தாதந்தத்தில் இணைகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here