தாவணி

வழக்கமாகப் புலரும் பொழுதைப் போன்று அன்று இல்லை. காலையில் எழும்போதே பெரும் உற்சாகமாக எழுந்தேன். காலையிலேயே உறக்கம் களைந்து எழுந்துவிட்ட என்னை என் தம்பியும், அம்மாவும் விசித்திரமாகப் பார்த்தார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. விடுமுறையில் எப்போது வீட்டிற்கு வந்தாலும் அப்போதெல்லாம் ஒன்பது மணிக்கு எழுந்தே பழக்கப்பட்டவன் நான். என்னை எழுப்ப முயற்சித்துவிட்டு தம்பி தோற்று பள்ளிக்கூடம் சென்றுவிடுவான். அம்மா பருத்திக்காட்டுக்கு சென்றுவிடுவார். அவர்கள் சென்ற பிறகே விழிப்பேன். கல்லூரியில் சேர்ந்த மூன்று வருடங்களாக நடந்துகொண்டிருப்பது இதுதான். நேற்று தீபாவளி. நேற்று கூட எட்டு மணிக்குத்தான் எழுந்தேன். அப்படிப்பட்ட சோம்பேறி நான். ஆனால், இன்று காலையில் ஆறு மணிக்கு முன்னரே கண் விழித்துக்கொண்டேன். மீண்டும் உறக்கத்தில் மூழ்க போர்வையை இழுத்துப் போர்த்தினேன். ஏனோ உறக்கமே வரவில்லை. படுக்கை பிடிக்காமல் எழுந்து அமர்ந்தேன். அப்போது தான் என்னை தம்பியும், அம்மாவும் விசித்திரமாகப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்கள்.

அவர்களிடம், “அம்மா.. சுடுதண்ணி போடு…” எனக் கூறிவிட்டு கட்டிலிலிருந்து எழுந்தேன்.

“வெளியே எங்கியாவது போறியா என்ன?”

“ம்ம்ம்…”

“……….”

“பொன்பரப்பி வரைக்கும் போறேன்…”

“ஏதாவது வேலையா?”

“எதுவும் இல்லம்மா… ப்ரண்ட பார்க்கப் போறேன்…”

“நீ மட்டும் பொங்கல் தீபாவளின்னு எப்ப வந்தாலும் கெளம்பி போயிடு. உன்னப் பார்க்க யாராவது இதுவரைக்கும் வந்துருக்காங்களா?” என அம்மா சற்றே கோபத்துடன் திருப்பிக்கேட்டார்.

‘ப்ரண்ட், பையனா இருந்தா கூப்டதும் வந்துடுவான். பொண்ண எப்டிம்மா அவ்ளோ தூரம் கெளம்பி வர சொல்லுவேன்’ என மனதிற்குள் நினைத்துக்கொண்டே, “நான் போனா எல்லாத்தையும் பார்த்துட்டு வந்துடுவேன்ல. என் ஓரத்தன பார்க்க அத்தனைப் பெரும் கெளம்பி வரணுமா…” என அவசர அவசரமாகப் பதிலளித்துவிட்டு அதற்கு மேல் அங்கு நிற்காமல் உடனே ஓடையை நோக்கிக் கிளம்பிச்சென்றுவிட்டேன்.

மணி ஒன்பது இருக்கும். மருவத்தூர் கடந்து பொன்பரப்பியை நோக்கி எனது ஹோண்டா பறந்துகொண்டிருந்தது. வேகம் கிட்டத்தட்ட என்பதை நெருங்கியிருந்தது. எப்போதும் இந்த வேகத்தில் நான் வண்டி ஓட்டுவதில்லை. ஆனால், மனதில் தோன்றியிருந்த அதீத கிளர்ச்சியினாலும், உற்சாகத்தினாலும் வண்டியின் ஆக்சிலேட்டரை முறுக்க முறுக்க வண்டி பறந்துகொண்டிருந்தது. அதே வேகத்தில் செல்ல அடுத்த சில நிமிடங்களில் பொன்குடிக்காடு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியை அடைந்திருந்தேன்.

வண்டியை நிறுத்தி விடுதியை நோக்கினேன். தீபாவளி முடிந்த அடுத்த நாள் என்பதால் விடுதி பூட்டப்பட்டிருந்தது. விடுதிக்கு இடப்புறத்தில் காணப்பட்ட ஏரி முழுவதும் நீர் நிரம்பியிருந்தது. மீன் வளர்க்க எரி குத்தகைக்கு விடப்பட்டிருந்ததால் கோழிக் கழிவுகளையும், மேலும் பல சாக்குகளில் மருந்துப் பொருட்களையும் ஏரியின் தென் கரையில் யாரோ ஒருவர் கொட்டிக்கொண்டிருந்தார். செம்மண் காடாகையால் அந்த ஏரியானது நல்ல நாளிலே சிவந்து போய்தான் காணப்படும். கோழிக் கழிவுகள் வேறு தொடந்து கொட்டப்படுவதால் ஏரியின் நீர்ப்பரப்பு முழுவதுமே பாசி பிடித்துப்போய் ஒருவித சாம்பல் வண்ணத்திலும், நீல நிறத்திலும் மிதந்துகொண்டிருந்தது. நீரில் மிதந்துகொண்டிருந்த பாசிகளையும், கழிவுகளையும் தள்ளிவிட்டு தாத்தா ஒருவர் நீரில் மூழ்கினார். தொலைவில் சிறுவர்கள் சிலர் ஏரியில் தொப்பென்று விழ ஓடி வந்துகொண்டிருந்தார்கள்.

அந்தக் காட்சியைக் கண்ட நான் ஒரு கணம் வண்டியை நிறுத்திவிட்டு வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன். அதே விடுதியில்தான் மூன்று வருடத்திற்கு முன் நான்கு வருடங்கள் தங்கி பள்ளிப் படிப்பை முடித்தேன். நான்கு வருடங்கள் எப்படி ஓடியது என்று சிந்தித்தபடி நின்றுகொண்டிருந்தேன்.

எங்கள் கிராமம் சாளையக்குறிச்சியில் அப்போது எட்டாவது வரை தான் இருந்தது. உள்ளூரிலேயே அப்போது அகதி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்ததால் உள்ளூர் பள்ளிக்கூடம் முடிந்ததுமே ஊரிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ள பொய்யாதநல்லூரில் படி அல்லது சென்னை ஹோட்டலுக்கு வேலைக்கு செல் எனப் பல நிர்பந்தங்களுக்கும், மோசமான வாழ்க்கைச் சூழலுக்கும் மத்தியில், ‘இந்தப் பள்ளியில்தான் படிப்பேன்’ என்று அடம்பிடித்து சேர்ந்திருந்தேன்.

பொன்பரப்பியில்தான் படிக்க வேண்டும் என நான் முடிவு செய்ததற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். ‘இந்தப் பள்ளியில் சேர்ந்தால் பென்சில், பேனா, நோட்டு, புத்தகம் என சகட்டு மேனிக்கு கப்சா (திருட்டு) அடிக்கலாம்’ என்ற ஒரே காரணம்தான் என்னை இந்தப் பள்ளியை நோக்கி இழுத்து சேர வைத்திருந்தது. அப்போது எனக்கு திருடுவது என்பது விருப்பப்பட்ட பழக்கம்.

ஆனால், பள்ளியில் சேர்ந்தபிறகு ஒரு பென்சிலைக் கூட நான் களவாண்டதில்லை என்பதுதான் உண்மை. அதற்குக் காரணம் இந்தப் பள்ளியில் எனக்குக் கிடைத்த சில அரிய நண்பர்கள் தான். சில நல்ல நண்பர்களால் தான்  அன்று எப்படியோ செல்ல இருந்த என் பாதை தடம் மாறாமல் நேராகச் சென்றது. இந்த மண் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். எனக்கு மிகவும் பிடித்த மண் இந்தப் பொன்பரப்பி. அதன்பிறகு இந்த விடுதியில் தங்கிப் படித்து பத்தாவது வகுப்பில் பள்ளிக்கே முதல் மதிப்பெண் பெற்றது. பன்னிரெண்டாவது படித்தபோது அரும்பு விட்ட முதல் காதல் என அனைத்தும் மனதில் நிழலாடி ஆட்டோகிராப் சேரன் அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நின்றுகொண்டிருந்த வேளையில் ஓடிவந்த சிறுவர்கள் ஏரியில் குதித்ததால் நீர் தெறித்து எழுந்த சத்தத்தில் எனது கடந்தகால சிந்தனைகள் களைந்து நிஜ உலகிற்கு வந்தவன் உடனே அங்கிருந்து கிளம்பினேன்.

‘கடவுளே… பொன்பரப்பி பஸ் ஸ்டேண்டுல எனக்குத் தெரிஞ்ச யாரும் என்ன பார்த்துடக் கூடாது. குறிப்பாக என்னோட அருமை பிரண்ட்ஸ்’ என ஏரிக்கு அந்தப் புறமாக இருந்த அய்யனாரிடம் வேண்டிக்கொண்டே வண்டியை மித வேகத்தில் செலுத்திக்கொண்டிருதேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here