புதினங்களை திரு.கல்கி/திரு.சாண்டில்யனின் படைப்புகளுடன் ஒப்பிடுவது சரியா? – 2

0
திரு. வெற்றிவேல் அவர்களுக்கு,
என்னுடைய பின்னூட்டத்திற்கு விரிவான பதில் அளித்தமைக்கு நன்றி.
வரலாற்று புதினங்கள் பொதுவாக அமரர் கல்கியின் படைப்புகளுடனும் திரு. சாண்டில்யன் அவர்களின் புத்தகங்களுடனும் ஒப்பிடும் வாசகர்களின் தன்மையைக் குறித்த உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன்.
இந்த சமயத்தில் நான் கூறிக் கொள்ள விரும்புவது, நான் வானவல்லி புதினத்தை வாசித்த பிறகே என் பின்னூட்டத்தை பதிவு செய்தேன்.  அப்புதினத்தை வாசித்ததினால் என்னுடைய கருத்து மாறவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  வந்தியத்தேவனையும் குந்தவையையும் ஒத்து இதுவரை எந்த கதாபாத்திரமும் உருவாக்கப்படவில்லை, இனி உருவாக்கப்படவும் போவதில்லை.  என்னை பொறுத்தவரையில் அமரர் கல்கியின் கதாபாத்திரங்கள் காலத்தைக் கடந்து நிற்பவை.  தங்கள் கதாபாத்திரங்களை உண்மையாக கல்கியின் கதாபாத்திரங்களோடு ஒப்பிடுவதற்கு குறைந்தது ஐம்பது ஆண்டு காலமாவது காத்திருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.  அந்த நோக்கில்தான் ஒப்பிடுவது சரியல்ல என்று பின்னூட்டத்தில் எழுதி இருந்தேன்.

உங்களுடைய வளைதளத்தில் பெரும்பாலான விமர்சனங்கள் நேர்மறையாகவே இருக்கின்றன.  உங்கள் புதினத்தில் உள்ள சிறப்புக்களை மட்டுமே எடுத்துரைக்கின்றன.  உங்களின் புதினத்தையும் அதற்காக நீங்கள் நல்கிய பெரு உழைப்பையும் நான் எந்தவிதத்திலும் குறைத்துச் சொல்லவில்லை.  உங்கள் ஆழ்ந்த ஆராய்ச்சிகள் அதைச் சார்ந்த குறிப்புகள் அனைத்தும் உங்கள் ஈடுபாட்டையும் அயராத உழைப்பையும் காட்டுகின்றன.  இள வயதில் முதல் முயற்சியிலேயே நீங்கள் இவ்வளவு பெரிய சரித்திர புதினம் படைத்திருப்பது மிகப் பாராட்டுதலுக்கு உரியது.
இருப்பினும் தங்கள் புதினத்தில் குறைபாடுகள் இல்லாமல் இல்லை, அதற்கான எதிர்மறை விமர்சனங்களை தாங்கள் கேட்டுள்ளீர்களா என்பதை நான் அறியேன்.  தாங்கள் கூறியதைப் போல் ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்துக்கள் குறித்து உரிமை இருப்பதால், உங்கள் புதினத்தைக் குறித்து எனக்கு எதிர்மறையான விமர்சனங்கள் உள்ளன என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.  இருப்பினும் அவை உங்களையோ உங்கள் உழைப்பினையோ எந்த ஒரு வகையிலும் குறைவாகக் காட்டி விடக் கூடாது என்பதனால் அவற்றை உங்கள் வளைதளத்தில் நான் பதிவு செய்ய விரும்பவில்லை.
எழுத்துலகில் உங்கள் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!
நன்றி,
பூர்ணிமா
————————————————————————–
திருமதி.பூர்ணிமா அவர்களுக்கு வணக்கம்,

வானவல்லி நான்கு பாகங்களையும் முழுவதுமாக படித்திருக்கும் தங்களது கருத்து எ துவானாவாலும் அதனை ஏற்றுக் கொள்வது எனது தார்மீக கடமை என்பதை நான் இங்கு கூறிக்கொள்ள விழைகிறேன். 2500க்கும் மேற்பட்ட பக்கங்கள் உடைய எனது புதினத்தை தாங்கள் முழுவதும் படித்து முடித்ததே எனக்குப் பெரும் வெற்றி தான். குறை/ எதிர்மறைக் கருத்துக்கள் இல்லாமல் ஒரு நீண்ட நெடிய வரலாற்றுப் புதினத்தை எழுத முடியுமா என்பது கேள்விக்கு குறியே? ஏனெனில் எழுதப்படும் புதினம் ஆசிரியரின் ஒரே மனநிலையில் தான் எழுதப் படுகின்றன. ஆனால், வாசிக்கப்படும்  போது அம்மனநிலை ஒவ்வொரு வாசகருக்கும் மாறுபடுகிறது. ஆதலால், வாசகர்கள் அனைவரையும் திருப்திப் படுத்த முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. என் நிலையில் நான் அனைவரையும் திருப்திப்படுத்த கடுமையாக முயற்சி செய்தேன் என்பதை நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ஒரு படைப்பின் குறைகளையோ அல்லது எதிர்மறைக் கருத்துக்களையோ கூறுவது அந்த ஆசிரியரின் உழைப்பை குறைவுப் படுத்தி விடும் என்ற தங்களது கருத்தினை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. கல்லடி படும் மாமரமும், உளி அடி விழும் கல்லுமே உயர்ந்த நிலையை அடையும். குறைகளைத் தாங்கள் சுட்டிக் காட்ட வானவல்லி வாசகரான தங்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு. அதையும் ஏற்றுக்கொள்ள நான் சித்தமாகவே இருக்கிறேன். குறைகளைத் தெரிவித்தால் எதிர்வரும் புதினத்தில் என்னால் சரிபடுத்திக் கொள்ள முடியும்.

வானவல்லி வாசித்தவர்கள் அனைவரிடமும் நான் எதிர்மறைக் கருத்துக்களையும் கேட்டுப் பெற்றிருக்கிறேன். அந்தத் தவறை மீண்டும் செய்யக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறேன்.எதிர்மறைக் கருத்துக்களே இல்லாத ஒரு புதினத்தை எவராலும் எழுத முடியாது என்பது எண்ணம். நிச்சயமாக என்னால் எழுத இயலாது. ஏனெனில், எனக்கு முன்பு எப்படி எழுதியிருக்கிறார்கள் என்பதை நோக்காமல் நான் எனது ஆராய்ச்சி, எனக்கு கிடைத்த தகவல், எனதுதேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் மாற்றுக் கருத்துக்கள் எழும்.

தங்களது எழுத்து நடை, பதிலளித்த விதம் ஆகியவற்றிலிருந்து தாங்கள் தேர்ந்த புத்தக வாசிப்பாளர் என்று கருதுகிறேன் நான். புதினம் பற்றி தாங்கள் நினைக்கும் எதிர்மறைக் கருத்துக்களுடன் கூடிய விமர்சனத்தை எழுதித் தந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். எனக்குத் தெரியாத குறையை நான் அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஏனெனில், நான் நேர்மறையாக கருதும் நிகழ்வைத் தாங்கள் எதிர்மறையாக கருதவும் வாய்ப்பிருக்கிறது. விரைவில் எதிர்பார்க்கிறேன்.

எனது எழுத்துக்களையும், வானவல்லியின் கதாபாத்திரங்களும் கல்கி மற்றும் அவரது பாத்திரங்களுடன் ஒப்பிட ஐம்பது வருடங்கள் கடந்திருக்க வேண்டும் என்று தாங்கள் தங்களது தாழ்மையான கருத்துக்களை முன்வைக்கிறீர்கள். ஐம்பது வருடங்கள் கடந்த பிறகு தாங்கள் ஒப்புக் கொள்வீர்களா? நான் வானவல்லி பாத்திரங்களை யாருடனும் ஒப்பிடவில்லை. வானவல்லியை வாசித்த வாசகர் ஒருவருடைய கருத்து அது. தங்களுக்கு ஐம்பது வருடங்கள் தேவைப்படும் என எண்ணியது அவருக்கு வாசித்த சமயத்திலேயே புரிந்திருக்கலாம். இது புரிதல் சம்பந்தப்பட்டது. தமிழில் குறிப்பிட்ட புதினங்கள் மட்டுமே உயர்ந்தவை. அதை ஒத்து எந்த புதினங்களும் இனி எழுதப்படாது என்பது நமது மாயை. நாம் வலிந்து கட்டியிருக்கும் ஒரு பிம்பம். அந்த பிம்பத்தைக் கடந்து நாம் முன் செல்ல எப்பொழுதுமே முனைவதில்லை. வலிந்து கருத்துகளைத் தேடி நமக்கு நாமே சமாதானம் அடைந்துகொள்கிறோம் எனது கருத்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here