புதினங்களை திரு.கல்கி/ திரு.சாண்டில்யனின் படைப்புகளுடன் ஒப்பிடுவது சரியா? – 3

0

திரு. வெற்றிவேல் அவர்களுக்கு,

வணக்கம்.  உங்கள் நீண்ட மடலுக்கு நன்றி.

நீங்கள் உங்களுடைய கதாபாத்திரங்கள் தனித்துவம் பெற்றவை என்றும் வேறு பாத்திரங்களுடன் ஒப்பிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள்.  நன்கு சொன்னீர்கள்!  இதைத்தான் நான் என்னுடைய முதல் பின்னூட்டத்தில் தெரிவிக்க முயன்றேன், ஆனால் தெளிவாகக் கூறவில்லை.  உங்கள் புதினங்களை வேறு புதினங்களோடு ஒப்பிடுவதை விரும்பவில்லை என்றும் எழுதியுள்ளீர்கள்.  ஆனால் என்னுடைய பின்னூட்டத்திற்கான பதிலில் அப்படி ஒப்பிடுவதை ஆதரித்துள்ளீர்கள்.  உங்களுடைய கருத்துக்களே எதிர்மறையாக இருக்கின்றன.

உங்கள் புதினத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றை ஒரு மாயை என்றும் வலிந்து கட்டியிருக்கும் பிம்பம் என்றும் சொல்லலாமா?   அல்லது உங்கள் புதினத்தின் மீது உங்களுக்கு உள்ள பிடிப்பு பிற்காலத்தில் மாறுமா?  அல்லது உங்கள் புதினம்தான் சிறந்தது என்று நீங்களே வலிந்து கருத்துகளைத் தேடி சமாதானம் செய்து கொள்கிறீர்களா?  நீங்கள் உங்கள் படைப்புகளின் மீது எவ்வளவு பற்றுதல் கொண்டிருக்கிறீர்களோ அவ்விதமே மற்றவர்களும் வேறு படைப்புகளின் மீது பற்றுதல் கொண்டிருக்கலாம் அல்லவா!

உங்கள் புதினத்தைப் பற்றிய என்னுடைய எதிர்மறை விமர்சனங்கள் பின்வருமாறு.

உங்கள் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் மிகைப்படுத்தியே எழுதப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. திரைப்படங்களில் வரும் கதாநாயகர்களைப் போல் எல்லாவற்றிலும் வல்லவர்களாக அவர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது என் கருத்து.   Larger-than-life hero or heroine என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பல இடங்களில் அவர்கள் யதார்த்தமாக வாழ்ந்தவர்களா என்ற சந்தேகம் உதிக்கிறது.  மேலும் உங்கள் புதினத்தில் வேறு புத்தகங்களின் தாக்கம் மட்டுமல்ல சில ஆங்கில திரைப்படங்களின் தாக்கமும் இருப்பதாக (முக்கியமாக நான்காம் பாகத்தில் இடம் பெற்றுள்ள போர் காட்சிகள்) நான் நினைக்கிறேன்.

எதையும் எதிர்த்து வெல்லக் கூடிய வலிமைப் படைத்த கற்பனைக் கதாபாத்திரமான செங்குவீரன் பல இடங்களில் சரித்திரத்தின் உண்மை நாயகரான கரிகால் வளவரை பின்னுக்குத் தள்ளுகிறான்.  எல்லாம் இருக்கட்டும், இமயமலையில் புலிக் கொடியைப் பறக்கச் செய்த பெருமை கரிகாலரை அல்லவா சேர வேண்டும், நீங்கள் அதையும் கூட செங்குவீரனின் வெற்றியாக கையாண்டுள்ளீர்கள்.  மேலும் அனைத்தும் அறிந்த வானவல்லி அனைத்து சந்தர்பங்களிலும் எல்லா முடிவுகளையும் எடுப்பதாக எழுதியுள்ளீர்கள்.  வேறு யாரும் அறிந்திருக்க முடியாத முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மொழி வானவல்லிக்கு தெரிந்திருக்கிறது, அத்தோடு நாக விஷத்திற்கு செய்ய வேண்டிய மாற்று மருத்துவமும் தெரிந்திருக்கிறது, வானவல்லிக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லையா?

நீங்கள் ஆண்களுக்கு நிகராகப் பெண்களை எழுதியிருப்பது பற்றி பெண்ணாகிய நான் நியாயப்படி உவகைக் கொண்டிருக்க வேண்டும்.  ஆனால் தாங்கள் வானவல்லியை சித்தரித்த விதம் உண்மையில் அப்படி ஒரு பெண் இருந்திருக்க என்ன சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்ற கேள்வியை எழுப்புகிறது.  சங்க காலத்தில் இருந்து தமிழகப் பெண்கள் வெகுவாக மதிக்கப்பட்டார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  இந்த நூற்றாண்டில் கூட கற்புக்கரசிக்கு சிலை வைக்கும் பண்பாடு நம் தமிழர் பண்பாடு.  அந்த காலத்தில் பெண்கள் எவ்வளவுதான் நெஞ்சுரம் படைத்தவர்களாய் இருந்தாலும் ஓரளவு போர் பயிற்சியும் பெற்றிருந்தாலும் பல படைத்தலைவர்கள் இருக்கும் சமயத்தில் ஒரு படைத்தலைவியாக அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அளவிற்கு பெண்கள் வாழ்ந்தார்களா?  நம் சங்க இலக்கியங்களில் அத்தகைய பெண்கள் வாழ்ந்ததற்கான குறிப்புகள் ஏதாவது இருக்கின்றனவா?

இதுவே உங்கள் புதினம் சரித்திரப் புதினமாக இல்லாது இருந்தால் மேற்கூறிய குறைகள் எதுவும் எழுவதற்கு வாய்ப்பில்லை.  என்னைப் பொறுத்த வரையில் ஒரு சரித்திரப் புதினத்தைப் படிக்கும் போது நான் பெரும்பாலும் யதார்த்தமாக என்ன நடந்து இருக்கக் கூடும் என்பதைத்தான் எதிர்பார்ப்பேன்.  சரித்திரக் கதையாக இருந்தாலும் கற்பனைக் கலக்காமல் எழுதுவது சாத்தியமில்லை என்பதை நான் அறிவேன்.  இருப்பினும் கற்பனை என்ற பெயரில் சரித்திரத்தை திரித்தோ மாற்றியோ கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

தாங்கள் எதிர்மறை விமர்சனங்களைப் பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டதால் என் கருத்துக்களை தெரிவித்தேன்.  நீங்கள் சொல்லியிருப்பது போல் இது உங்களின் வருங்கால எழுத்திற்கு பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி.  இரு குழந்தைகளுக்குத் தாயான நான் முழு நேரப் பணியிலும் இருப்பதால் முன் போல் புத்தகங்கள் வாசிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.

எல்லோராலும் இத்தகைய ஒரு பெரிய புதினத்தை எழுத முடியாது.  நீங்கள் இப்படிப்பட்ட முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள்.  நீங்கள் மென்மேலும் பல புதினங்கள் எழுதுவதற்கு என் வாழ்த்துக்கள்!

நன்றி,

பூர்ணிமா

——————————————-

வணக்கம்,

திருமதி.பூர்ணிமா அவர்களுக்கு,

தங்களை செல்வி என்று அழைப்பதா அல்லது திருமதி என்று அழைப்பதா என்ற குழப்பத்தினால் தான் திரு என்று மட்டும் மரியாதையுடன் அழைத்தேன். தங்களது இரண்டு குழந்தைகளும் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். இரு செல்வங்களும் என்ன படித்துக்  கொண்டிருக்கிறார்கள்? தங்களை போன்றே புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை அவர்களுக்கும் கொண்டு சேர்த்திருப்பீர்கள் என்று கருதுகிறேன். கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கணவு, சிவகாமியின் சபதம், சாண்டில்யனின் புதினங்கள் அனைத்தையும் வாசித்துக் காட்டுங்கள்.

சரி, நான் தங்களது கடிதத்திற்கு வருகிறேன்.

தாங்கள் தங்களது முதல் கடிதத்திலேயே தெளிவாகக் குறிப்பிட்டிருந்தால் நமது கடிதப் போக்குவரத்து இந்த அளவிற்கு நீண்டிருக்காது என்று கருதுகிறேன். எனது கதாபாத்திரங்களை மற்றவற்றுடன் ஒப்பிடுவதை நான் ஏற்கவில்லை. ஆனால், அதை வாசகர்கள் தெரிவிக்கும்போது என்னால் புறந்தள்ள இயலவில்லை. ஏனெனில், அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒப்பீடு அதற்கு முன் அவர்கள் படித்த புதினங்கள் மட்டுமே . எனது கருத்தை தெரிவிக்கும் சுதந்தரம் எப்படி எனக்கு இருக்கிறதோ அப்படியே அதே போன்ற சுதந்திரம் அனைவருக்கும் இருக்கிறது. தங்களுக்கும், மற்ற வாசகர்களுக்கும் சேர்த்து தான். அதை மதித்து பதில் அளிப்பது எனது கடமை. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here