பேரன்புள்ள காதலிகளுக்கு…

காதலியே

பேரன்புள்ள காதலிகளுக்கு,

வெற்றிவேல், அந்தக் கடிதத்தை நீ அப்படித் தொடங்கியிருக்கக் கூடாது. அதை வன்மையாக ஆட்சேபனை செய்கிறேன் நான். நீ இப்போதிருக்கும் தருணத்தில்

“உச்சி வானில்

மேகங்களுக்கிடையில் நீந்திக்கொண்டிருக்கும் நிலா

கீழே விழப்போகிறது…

மேற்கு வானம் எரிந்துகொண்டிருக்கிறது.

இதே போன்றதொரு மாலைப் பொழுதில்

இருவரும் உரையாடிக் கொண்டிருந்தோம்…

ஆனால்,

கடிதம்

அவள் இப்போது என்னுடன் இல்லை” என்பன போன்ற துயர் மிகு வரிகளை எழுதுவாய் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், நீயோ இந்த முன்னிரவில் உனது காதலிக்கு மன்னிக்கவும் உனது காதலிகளுக்கு கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறாய். வர வர உனது போக்கினை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. துயரத்துடன் இருக்க வேண்டிய சமயத்தில் “உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்” என்று கவிதை எழுதுகிறாய்.

அதையாவது ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ‘மோகப் புயல்’ என்று ஒரு கவிதையை எழுதினாயே அதை எந்த விதத்தில் சேர்த்துக் கொள்வது என்று எனக்கு இதுவரைத் தெரியவில்லை. அந்தக் கவிதையை எதற்காக எழுதினாய் என்று பல முறை நான் காரணங்களைக் கேட்டும் நீ பலவற்றைக் கூறி மழுப்பிக் கொண்டிருக்கிறாய்.

“அஸ்தமனத் தொடுவானில் மறைந்து போகும்

வெளிச்சத்தைப் போல

நானும் கரைந்துவிடுகிறேன்

உனது மார்புகளுக்கிடையில்” என்று எழுதினாயே, இதற்கான அர்த்தத்தைத் தெரிந்துதான் எழுதினாயா அல்லது காதல் மிதப்பில் (மன்னிக்கவும்) கவிதை மிதப்பில் உளறுபவனைப் போன்று நீயும் உளறிவிட்டாயா? காதல் மிதப்போ அல்லது கவிதை மிதப்போ இனி எது எழுதினாலும் சிந்தித்து, அர்த்தம் தெரிந்து எழுதுவாயாக. ஏனெனிநீ எழுதுபவற்றை யார் வாசித்தாலும் அது உன்னைப் பற்றியதாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. கவனமாக எழுதுவாக. இந்த லட்சணத்தில் அடுத்த புதினத்திற்கு நீ உனது பெயரையே வைத்திருக்கிறாய். இது எங்கு போய் முடியப் போகிறதோ…

பிறக்கும்போது மதுரை மீனாட்சிக்கு மூன்று மார்பகங்கள் இருந்ததாகவும், அவள் மதுரையிலிருந்து படையெடுத்து இமயம் வரைச் சென்று வென்று திரும்பினாள். மீனாட்சியின் அழகைப் பார்த்த சொக்கன் அவளது பின்னாலே ஓடி வந்திருக்கிறான். மதுரையில் சொக்கனை மீனாட்சி சந்தித்ததும் அவளது மூன்றாவது மார்பு மறைந்து  அவள் இயல்பான பெண்ணாக உருமாறியிருக்கிறாள். இந்த விஷயத்தில் மீனாட்சி கொடுத்து வைத்தவள் தான். அவளுக்கு மட்டும் அப்படியொரு தகவமைப்பு இருந்திருக்கவில்லை என்றால் பார்க்கும் ஆடவர்கள் அனைவரையும் ‘இவன் எனக்கானவனாக இருப்பானோ’ என எண்ணியே அவள் ஏமாற்றங்களையும், வருத்தங்களையும் அடைந்து மனம் நொந்துப் போயிருப்பாள். அவளைப் போன்றதொரு பாக்கியம் அனைவருக்கும் இருந்தால் உலகம் எப்படி இருந்திருக்கும்? இருந்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும். மதிக்காத கன்னிகளை நினைத்து வருந்தியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. தேவையில்லாத பிரேக் அப், மன உளைச்சல் என எதுவும் இருந்திருக்காது. மனிதன் எதற்காகப் பிறந்தானோ அந்தப் பலனை அனுபவித்துவிட்டு நிம்மதியாக சென்று சேர்ந்திருப்பான். ஒருவேளை மீனாட்சி கடவுள் என்பதாலோ என்னமோ அவளுக்கு சாதாராண மனிதர்களைப் படுத்தும் பசலை நோய் பீடிக்க வேண்டாம் என்று கடவுள் நினைத்திருக்கலாம். அது மீனாட்சி வாங்கி வந்த வரம்.

love_letter

காதலர் தினம் படத்தை சன் டிவியில் பார்த்தபோது கூட உனக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். காதலர் தினம் என்ற ஒன்றைத் தனியாகக் கொண்டாடுவார்கள் என்று. எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. காதலர் தினத்திற்கான காரணத்தை அறியாமலே நீ முதன் முதலில் காதலர் தின வாழ்த்தைத் தெரிவித்தது. அதிலும் நீ காதலர் தினத்தை ‘அன்பர்கள் தினம்’ என்று தமிழில் வாழ்த்து தெரிவித்தாயே? இப்போது நினைத்தாலும் பெரும் சிரிப்புதான் எனக்கு வருகிறது.

சரி, அதை விடு.

சுற்றிலும் நண்பர்கள் சிரித்துக்கொண்டிருக்க, போனை அவளது அப்பாவோ அல்லது மற்றவர்களோ எடுக்கக் கூடாது என்ற வேண்டுதலுடனனும், படபடப்புடனும் நீ கபோன் செய்தாயே? அது உனக்கு இன்னும் நினைவில் இருக்கிறதா? அல்லது கால ஓட்டத்தில் மறைந்து போன பல தருணங்களுக்கு இடையில் அதுவும் மறைந்து போய்விட்டதா?

தொடர்ந்து அந்த ஒரு ரூபாய் போனில் எட்டு முறை அழைத்த கால்கள் அனைத்தும் மிஸ்சுடு கால் ஆகி ஒன்பதாவது முறை அழைத்த போது பிக்கப் செய்யப்பட போனின் மறுமுனையில் அவள் கூறிய ‘ஹல்லோ’ என்ற வார்த்தை எப்படிப்பட்ட நிம்மதியை உனக்கு அளித்தது? அதற்கு இணையான வார்த்தைதான் உலகத்தில் இருக்கிறதா? அந்த ஒத்த வார்த்தை கொடுத்த மகிழ்ச்சியை அவ்வளது எளிதில்தான் உன்னால் மறந்துவிட முடியுமா? எத்தனை உற்சாகம், எத்தனை பூரிப்பு. அந்தத் தருணத்தை இப்போது நினைத்தாலும் உனது மனதில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்பதை அறிவேன் நான். இப்போதும் அந்தப் பெண்ணைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் உனக்கு நினைவில் வருவது அந்த நிகழ்வுதான் என்றால் உன்னால் மறக்க முடியுமா? காதல் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாத காலத்தில் பன்னிரெண்டாவது படிக்கும் போது உனது முதல் (???) புரபோசலை உன்னால் மறக்கத்தான் முடியுமா?”

ஆனால், வெற்றிவேல். காதல் வேண்டாம் என்று கூறிய அந்தப் பெண்ணை இப்போது காணும்போது ஒரு வகையில் நீ கொடுத்து வைத்தவன் என்றே நினைக்கிறேன். முதல் காதலுக்காக நீ சிந்திய அந்தக் கண்ணீர்த் துளிக்கான மதிப்பு அவள் இல்லை என்றே நினைக்கறேன் நான். வீணாக சில துளி கண்ணீர்த் துளிகளை அப்பெண்ணுக்காக விரையம் செய்திருக்கக் கூடாது என்பது எனது அபிப்பிராயம். அந்தந்த வயதில் அதற்குரிய படிப்பினைகளைப் பெற்றுவிட வேண்டியது தான் நல்லது. காதல் தோல்வி என்பதை நிச்சயம் ஒருமுறையாவது அனுபவித்துவிட வேண்டும். ஏனெனில், பத்து வருடங்களில் உலகம் உனக்கு கற்றுக்கொடுக்க வேண்டியதை ஒரு பெண் உனக்குக் கற்றுக்கொடுத்துவிடுவாள். அந்த விதத்தில் நீ கொடுத்து வைத்தவன் தான். ஆனால், அந்த அனுபவத்தை நீ இன்னும் எத்தனை முறைதான் பெறுவாய் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவிதத்தில் உன்னை நினைத்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here