வானவல்லி – நூல் அறிமுகம்

சில வருடங்களுக்கு முன்பு ‘இரவின் புன்னகை’ என்ற இணையப் பக்கத்தின் வாயிலாகத்தான்  Vaanavalli Part 1

இவனைத் தெரியும், அடுத்தடுத்த பேச்சுக்களில் எனது மண்ணுக்காரன் என்று தெரிந்ததும் கூடுதல் நெருக்கமானது. இப்படித்தான் சி.வெற்றிவேல் சாளையக்குறிச்சி அறிமுகமானான்.அமெச்சூர் கவிதைகளை எழுதி உருகிக் கொண்டிருந்தவனை பல முறை திட்டியிருக்கிறேன், கவிதையின் வலிமையை பற்றியும், சமகால படைப்பாளிகளின் தவறுகளையும் பற்றியும் மணிக்கணக்கில் பேசித் தீர்த்திருக்கிறோம். தற்போது கவிதைகள் எழுதுவதை குறைத்திருக்கிறான் என்பது ஆறுதல். களப்பிரர்கள் பற்றி இவன் எழுதிய பதிவுகள் தரமான படைப்புகள். அதிகம் கவனம் பெறாமல் போனது காலத்தின் சோகம்.

பிறகொரு நாள் ‘வானவல்லி’ என்ற வரலாற்றுப் புதினத்தை இணையத்தில் தொடராக எழுதுவதாக கூறி, எழுதிவிட்டு என்னை வாசிக்கச் சொல்லி கருத்தினைக் கேட்டான். வரலாற்று நூல்களை வாசித்து பழக்கமின்மையால் முதல் இரண்டு தொடரினை வாசித்துவிட்டு கருத்தினை கூறினேன். அதன்பிறகு மின்னல் வேகத்தில் எழுத துவங்கிவிட்டான் நான் தான் அவனைப் பின்தொடர இயலாமல் போய்விட்டது. வாழ்வில் முதன் முறையாக இரண்டாயிரத்து ஐந்நூறுக்கு மேற்பட்ட ஒரு புத்தகத்தை வாசிக்க போகிறேன் என்றால் அது ‘வானவல்லி’ என்ற தம்பியின் நெடிய கனவு நூல் தான்.
Vaanavalli Part 2
இந்த நூலினை எழுத வெற்றிவேல் மேற்கொண்ட ஆய்வும், வாசிப்பும் மிகப் பெரியது. ஒருமுறை எனது அறையில் வந்து தங்கியிருந்தவன் சட சடவென்று எழுதுவதைக் கண்டதும், வெறும் ஐந்து பக்கங்கள் எழுதவே நமக்கு நாக்கு தள்ளுகிறதே, ஆனால் இவனுக்கோ எப்படி சாத்தியமாகிறது என்ற ஆச்சர்யமும் கொஞ்சம் பொறாமையும் எட்டிப் பார்த்தது. அவ்வளவு கடின உழைப்பைக் கொடுத்து இந்நூலினை எழுதியிருக்கிறான்.
 
அவனது ஒருவருடத்திய உழைப்பினை வானதி பதிப்பகம் நான்கு பாகங்கள் கொண்ட புத்தகமாக வானவல்லியை வரும் புத்தக திருவிழாவினில் வெளியிட இருக்கிறது, அவனது எடையை விட புத்தக எடை கூடுதலாக இருக்குமென்று நம்புகிறேன்.
 
எனது ‘இண்ட முள்ளு’ நூல் வெளிவர முதன்மை காரணிகளில் இவனும் ஒருவன். எல்லோரிடமும் நட்பு பாராட்டும் தன்மையே அழகு. இவனின் சிறகு இன்னும் பெரிதாக விரியட்டும்.
 
இந்த ஒல்லிப்பிச்சான் இன்னும் பல நூல்களை எழுதி தனது இருப்பினை மிக அழுத்தமாக பதிவு செய்ய வாழ்த்துகளை கூறிக்கொண்டு, வானவல்லிக்காக காத்திருக்கிறேன்… நீங்களும் வாழ்த்துங்கள் அவன் வளரட்டும்….
நன்றி:

அரசன்

Leave a Comment