வானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்

ங்க காலத் தமிழகத்தில் திருமணம் என்பது பெரும்பாலும் காந்தர்வத் திருமணம் தான். அதாவது சம்பந்தப்பட்ட தலைவன் மற்றும் தலைவி என இருவரும் தத்தம் ஒப்புக்கொண்டு இணைந்துவிடுவார்கள். அப்படி இணைந்து தலைவி தலைவனோடு சென்றுவிட்டால் அதனை உடன்போக்கு என்றே கௌரவமாக அழைப்பார்கள். இவ்விவகாரத்தில் பெற்றோர்கள் பெரும்பாலும் தலையிடுவதில்லை. திருமணத்திற்கு முன்னர்க் காதலர்கள் இருவரும் இணைந்து வாழும் வாழ்க்கை முறைக்குக் களவி என்றும் ஊரறியத் திருமணம் செய்த பிறகு காதலர்கள் வாழும் வாழ்க்கை முறைக்குக் கற்பு என்றும் நெறிப்படுத்தி வாழ்ந்திருந்தனர்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

கற்பு

மரகதவல்லியின் தந்தையைத் தான் இராக்காவலர்கள் தவறுதலாகப் புரிந்துகொண்டு செல்கிறார்கள் என நினைத்தே வானவல்லி கதவைத் தட்டினாள். மேலும் தனது தோழியைப் பற்றியும் அவள் நன்கு புரிந்துகொண்டு பெரும் நம்பிக்கை கொண்டிருந்தாள். இருப்பினும் எங்கே தன் தோழியும் காந்தர்வத் திருமணம் செய்திருப்பாளோ? என்ற சந்தேகம் கூட மனதின் ஓரமாகத் தோன்றியது. “ச்சீ… ச்சீ…” இது என்ன விபரீத நினைப்பு. அவள் அப்படியெல்லாம் செய்பவள் அல்ல என்ற பெரும் நம்பிக்கையோடுதான் கதவைத் தட்டிவிட்டு வெளியே நின்றாள்! ஆனால், நின்றுகொண்டிருந்த விறல்வேலைக் கண்டதும் மரகதவல்லியின் மீது வைத்திருந்த நம்பிக்கை அனைத்தும் கணப் பொழுதில் மறைந்து விட்டது! ஆதலால் தான் இருவரையும் பார்த்தபிறகு ஏதும் சொல்ல இயலாமல் துக்கத்தில், அதிர்ச்சியுடன் திரும்பிச் சென்றாள்.

மரகதவல்லி, “அக்கா, உபதலைவர் அடிபட்ட ஒருவரைத் தூக்கி வந்துள்ளார்!” எனக் கூற வந்தவளை நிறுத்திய வானவல்லி ‘உப தலைவர்’ என்ற பெயரைக் கேட்டதுமே திரும்பிச் செல்லலானாள்.

அவள் பின்னாலேயே ஓடிவந்த மரகதவல்லி அவளது கையைப்பற்றி உள்ளே அழைத்து வந்து, “அக்கா, வைக்கோல் மெத்தையைப் பாருங்கள்!” என்றவாறே கதவைத் தாழிட்டாள்.

அதற்கு வானவல்லி, “கெட்ட கேட்டிற்கு நான் வேறு அதனைப் பார்க்க வேண்டுமா?” என எரிச்சலுடன் கேட்டாள்.

“அக்கா, ஏனக்கா உங்கள் மனம் இப்படியெல்லாம் போகிறது! உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவரை நம் தலைவர் தூக்கிவந்துள்ளார்! நன்றாகப் பாருங்கள்” என்றாள் மரகதவல்லி.

மரகதவல்லி கூறியதைக் கேட்டபின் வைக்கோல் மெத்தையை நோக்கினாள் வானவல்லி. அங்கு இளவல் மயங்கிக் கிடந்தார். அதனைக் கண்ட பின்னர்த் தான் வானவல்லிக்கு உண்மை நிலைமை புரிந்தது. அவர்கள் இருவரையும் தலை நிமிர்ந்து பார்க்கவே வெட்கப்பட்டாள். தனது தவறினை உணர்ந்தவள் வருந்தவும் செய்தாள். அங்கு நின்று கொண்டிருந்த விறல்வேல்தான் துடிதுடித்துப் போனான்.

ஆனால் மரகதவல்லி எதையும் மனதினில் வைத்துக்கொள்ளாமல் வானவல்லியின் அருகினில் வந்து அவளது கையைப் பற்றியபடி, “அக்கா, மார்பில் வேல் பாய்ந்துள்ளது. காலும் தீயில் வெந்துபோயுள்ளது. மருத்துவரை உடனே அழைத்து வந்து இவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கவேண்டும். இல்லையேல் இவரைக் காப்பது கடினம்” எனப் பதறினாள்.

இளவலின் அருகினில் சென்ற வானவல்லி தீவர்த்தியை ஏற்றி அவரது முகத்தினைப் பார்த்தாள். அவளுக்கு இளவலை அடையாளம் காண இயலவில்லை. ஆனாலும் அம்முகத்தை எங்கோ கண்டிருக்கிறோமே? என்ற நினைவு தோன்றியது. ஞாபகப் படுத்திப் பார்த்தாள். இயலவில்லை. பின்னர் இளவலின் கழுத்து மற்றும் நெற்றியின் மீது கைவைத்துப் பார்த்தாள். பிறகு நாடியைப் பிடித்துப் பார்த்தாள்! எதையோ அறிந்துகொண்டவளைப் போல இளவலின் வயிற்றினை அழுத்தித் தடவிப் பார்த்தாள். “மரகதவல்லி, வீட்டில் உண்பதற்கு என்ன வைத்திருக்கிறாய்! உடனே கொண்டு வா!” என உத்தரவிட்டாள்.

“வடித்த நெல் சோறுதான் இருக்கிறது அக்கா! இதோ!” எனக் கூறியபடியே அவசரமாக ஓடியவளை நிறுத்திய வானவல்லி, “இவருக்குப் பசி மயக்கம் தான் மரகதவல்லி! அச்சப்படத் தேவையில்லை. கண் விழித்த பிறகே சிகிச்சையைத் தொடங்கினால் போதும்! மயக்கத்தில் இருப்பதனால் சோறு இவருக்குப் பயன்படாது. திரவ உணவு ஏதேனும் இருக்கிறதா?” என வினவினாள் வானவல்லி.

“திரவ உணவா?” ஆச்சர்யத்தோடு கேட்டாள் மரகதவல்லி.

“ஆமாம்! வெதுவெதுப்பான சூட்டில் சோற்றுக் கஞ்சி இருந்தால் கொண்டு வா?” எனக் கட்டளையிட்டாள்.

“மாலை வடித்தது அக்கா. ஆறிப்போய்விட்டது! வருத்தத்துடன் கூறினாள் மரகதவல்லி .

“தேன், சுட வைத்த பால் என ஏதேனும் இருந்தால் உடனே கொண்டு வா” என்றாள்.

“பால் இல்லை அக்கா. ஆனால், தேன் இருக்கிறது!”

“விரைந்து கொண்டு வா!”

ஓடிச் சென்று உரியில் தொங்கப்போட்டிருந்த தேன் குடுவையைக் கொண்டு வந்தவள் நேராக மயங்கிக் கிடந்த இளவலுக்கு ஊட்டச் சென்றாள்.

அவளது செய்கையைப் பார்த்த வானவல்லி, “அடியே! தேனைக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்!” என்றாள்.

“இவருக்கு ஊட்டப்போகிறேன்!”

“நீயே அவரைக் கொன்றுவிடுவாய் போலிருக்கிறது!” சிரித்தபடியே கேட்டாள் வானவல்லி.

“அக்கா……..!” துடிதுடித்துப் போனாள் மரகதவல்லி.

“அப்புறம் என்னடி! தேனை அப்படியே ஊட்டினால் அவர் திகட்டி புரையேறியே மடிந்துவிடுவார். தேனை எதிலாவது கலந்துதான் கொடுக்க வேண்டும்!” என்றாள் வானவல்லி. பிறகு மரகதவல்லி பதற்றத்தோடு இருப்பதைக் கண்ட வானவல்லி, “நீ பதறும் அளவிற்கு அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவசரம் வேண்டாம். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை” எனவும் மரகதவல்லிக்கு ஆறுதல் கூறுபவளைப் போன்று துயரத்தோடு நின்றுகொண்டிருந்த விறல்வேலிடம் தெரிவித்தாள்.

தேனைப் பார்த்தபடியே சிந்தித்தவள் பின் ஒரு வெற்றுப் பானையை எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறக் கதவைத் திறந்து வெளியே சென்றாள்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here