வானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்

அவளது பேச்சும், செயலும் இருவருக்குமே திகைப்பளித்தன. ஏனெனில், வானவல்லிக்கு மருத்துவம் பார்க்கத் தெரியும் என இருவருக்குமே தெரியாது! மார்பில் விழுப் புண்களோடு வரும் திவ்யனுக்கும், விறல்வேலிற்கும் வானவல்லிதான் பச்சிலை வைத்து மருந்து போடுவாள். அவையெல்லாம் சிறுசிறு காயங்கள். அவற்றை வானவல்லி தன் தாயிடமிருந்துதான் கற்றிருப்பாள் என விறல்வேல் எண்ணிக்கொள்வான்.

வானவல்லி வெளியே சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அருகிலிருந்த பட்டியிலிருந்து ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இருவரும் புரிந்துகொண்டார்கள். வானவல்லி ஆட்டிலிருந்து பால் கறந்துகொண்டிருக்கிறாள் என்று.

சுட வைக்காமல் மாட்டுப் பாலைக் குடித்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும். ஆனால், ஆட்டுப் பாலைக் குடித்தால் அந்தப் பிரச்சனை இருக்காது! அவளது சமயோசித புத்தியை இருவரும் தங்களுக்குள் வியந்து பாராட்டிக்கொண்டனர். வெளியே சென்ற வானவல்லி திரும்பி வரும்போது ஒரு கையில் ஆட்டுப்பால் பானையையும் இன்னொரு கையில் சில மூலிகைச் செடி மற்றும் வேர்களையும் பறித்துக் கொண்டு வந்தாள்.

மூலிகைகளை மரகதவல்லியிடம் “மண் இல்லாமல் அலசிக் கொண்டு வா!” எனக் கொடுத்துவிட்டுத் தேனை எடுத்து பாலுடன் கலந்து நன்கு கலக்கினாள். பிறகு படுத்திருந்த இளவலைத் தூக்கி சுவற்றில் சாய்ந்தபடி அமரவைத்தவள், தேன் கலந்த பாலினை அவருக்குச் சிறிது சிறிதாக உதட்டுப் பிளவின் வழியே ஊட்டினாள். பால் அவரது வயிற்றினுள் சென்று இறங்க இறங்க அவரது பசி மயக்கமும் சிறிது சிறிதாகக் கலைந்தது. அவரது அரைவயிறு நிரம்பியதுமே இளவல் தெளிவு பெற்று மீதி இருக்கும் பாலை வாங்கி அவரே பருகினார்.

மரகதவல்லியும் அந்த நேரம் மூலிகைகளுடன் வந்துவிட அவள் அலசி வந்த வெற்றிலையை அவளிடம் கொடுத்து “நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துப் பானையில் போட்டுக் கொண்டு வா!” எனக் கொடுத்து அனுப்பியவள், காளனுக்குப் பத்திரை மருந்திட்டுக் கட்டியதைப் போலவே வானவல்லியும் தான் கொண்டு வந்த நாயுருவிப் பச்சிலையை எண்ணையில் போட்டு விளக்கில் காட்டி வதக்கி இளவரசனுக்குச் சுடச்சுட கட்டினாள்.

அதே நேரம் மரகதவல்லியும் வெற்றிலையை நன்கு அரைத்து அதனுடன் சில கற்றாழைச் செடிகளையும் பிடுங்கிக்கொண்டு வந்திருந்தாள்.

அதைக்கண்ட வானவல்லி, “கற்றாழை எதற்கு?” என வினவினாள்.

“இவரது தீப்புண்ணிற்குத் தடவத்தான்” எனப் பதிலளித்தாள்.

“அடியே! கற்றாழை, தேன் தடவுவதெல்லாம் சிறு சிறு புண்ணிற்குத் தான் சரிவரும். அதெல்லாம் அரைகுறை மருத்துவர்கள் செய்யும் வேலை! இவரது காலில் தோலே இல்லை. சற்று நேரம் அமைதியாக இரு!” எனக் கூறிவிட்டு அரைத்த வெற்றிலையைக் கையால் பிடித்துப் பதம் பார்த்தாள். திருப்தி கொண்டவள், தான் கொண்டுவந்த குங்கிலியம், மரவல்லை இரண்டையும் கல்லில் பட்டு மாவாக நசுக்கி, இடித்தாள். நல்லெண்ணெயையும் கொண்டு வந்து வைத்துக்கொண்டாள்.

சுத்தமான மண் பானையை எடுத்துக்கொண்ட வானவல்லி முதலில் அரைத்த வெற்றிலையை அதில் போட்டாள். பின்னர் நல்லெண்ணையை ஊற்றி நன்கு கலக்கினாள். பானையில் பாதியளவு நீர் ஊற்றிப் பிறகு அதில் நசுக்கிய குங்கிலியம் மற்றும் மரவல்லையைப் போட்டு நன்கு கலக்கினாள். சிறிது நேரம் அவள் கலக்க, சோர்வடைந்தாள். அதனைக் கண்ட விறல்வேல் அவளருகில் வந்தான். அவன் அருகில் வந்ததும் வானவல்லி எழுந்து சென்று மரகதவல்லியோடு நின்றுகொண்டாள்.

அரை நாழிகைப் பொழுதிற்கு மேல் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பதைப் போலவே விறல்வேல் நன்கு கலக்கிக்கொண்டிருந்தான்! அப்போது தயிரிலிருந்து வெண்ணெய் பிரிந்து மிதப்பதைப் போலவே அந்த மூலிகைகளையும் கலக்கும்போது அதில் மருந்து உருவாகி மிதக்கத் தொடங்கியது. விறல்வேல் கலக்கும்போது பானையிலிருந்து உருவான சத்தத்தைக் கொண்டே வானவல்லி, “கலக்கியது போதும் மரகதவல்லி!” என்றாள்.

வானவல்லி மரகதவல்லியிடம் கூறியதைக் கேட்ட விறல்வேல் எழுந்துவிட்டான். பானைக்கருகில் சென்ற வானவல்லி பானையில் வெண்ணெய்யைப் போலவே மிதந்த மருந்தினை மட்டும் கையால் பிரித்து எடுத்துத் தனிப் பாத்திரத்தில் வைத்துக்கொண்டிருந்த போது திடீரென மரகதவல்லி, “அண்ணா! குருதி!” என்றவாறே அலறினாள்.

மரகதவல்லி கத்தியதைக் கேட்ட இளவலும், வானவல்லியும் அதிர்ச்சியடைந்தார்கள். விறல்வேலிடம் ஓடிவந்த மரகதவல்லி “அண்ணா! உங்கள் மார்புக் காயத்திலிருந்து குருதி வழிகிறது பாருங்கள்” எனக் கலங்கியவள் தனது முந்தானைத் துணியை எடுத்து அக்குருதியை துடைக்கவும் செய்தாள்!

“மரகதவல்லி, அச்சப்படத் தேவையில்லை. இது சாதாரணக் காயம் தான். வலி இல்லை” என அவன் கூறியதையும் கேட்காமல் துணியைக் கிழித்து அவனது காயத்திற்குக் கட்டு போடவும் செய்தாள்.

மனமே ரணமாக உயிரை வாங்கிக் கொண்டிருக்கும்போது உடலில் ஏற்பட்டிருக்கும் காயங்களால் வலி எப்படி ஏற்படும்! அதே நிலை தான் உபதலைவன் விறல்வேலிற்கும் ஏற்பட்டிருந்தது. யாரைக் கண்டால் தன் மனக்குறை விலகும், யாருடைய அருகாமைத் தனது மனக்காயங்களுக்கு அருமருந்தாக அமையும் என எண்ணினானோ? அவளுடைய அருகாமையே அவனை அப்போது வதைத்துக் கொண்டிருந்தது. அவ்வதையானது உடலில் உருவான காயங்களை விட வலியைக் கொடுத்து அவனை நிர்மூலமாக்கிக் கொண்டிருந்தது.

காதல் என்பது மனதில் பூவாகப் பூத்து பிறகு முள்ளாய் வளரும் செடி என்பதை அப்போது உணர்ந்தான் விறல்வேல். உயிரோடு உடலில் வளர்ந்திருக்கும் அந்த செடியைப் பிடுங்க முயன்று முள்ளில் சிக்கிக்கொண்ட மனம் ரணமாகத் தொடங்கியது. தன் காதலி அருகில் இல்லாதபோது எப்படியெல்லாம் வருந்தித் துடித்தானோ? அவள் தனக்கு வெகு அருகில் இருக்கும்போதும் மனம் அதனை விடப் பலமடங்கு துடிப்பதை உணர்ந்தான்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here