வானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்

வேறொரு தருணமாக இருந்திருந்தால் அங்குச் சிறிது நேரம் கூட விறல்வேல் நின்றிருக்கமாட்டான். அவனாலும் நின்றிருக்க இயலாது. இளவரசரை அந்த நிலையில் ஆபத்தாக விட்டுவிட்டு அங்கிருந்துச் செல்லல் அறிவுடைமை ஆகாது என நினைத்து அங்கேயே நின்றுகொண்டிருந்தான்.

பானையில் தயாரித்த மருந்தை எடுத்துக்கொண்டு இளவலின் கால் அருகே சென்று அமர்ந்தாள். மரகதவல்லியும் விளக்கினை எடுத்துகொண்டு அவளருகில் அமர்ந்தாள்.

அப்போது இளவல், “சோழ நாட்டின் அழகிய இரு பெண்கள் எனக்கு மருந்திடுவீர்கள் எனத் தெரிந்திருந்தால் எதிரிகளிடம் இன்னும் காயம்பெற்று வந்திருப்பேன்” எனச் சிரித்துக்கொண்டே கூறினார். அவர் கூறியதை இருவரும் பொருட்படுத்தவில்லை.

வானவல்லி இளவலின் காலில் ஏற்பட்டிருக்கும் தீக்காயத்தை அப்போது தான் அருகினில் பார்த்தாள். முழங்காலிற்குக் கீழே தோல் முழுவதும் வெந்து வெண்தசைகள் வெளிப்பட்டு நிணநீர் வடிந்துகொண்டிருந்ததைக் கண்ட வானவல்லியின் கண்களில் இருந்து சில துளி கண்ணீர் வெளிப்பட்டு அவரது காலில் சிந்தியது!

திடீரெனத் தனது காலில் சுடுநீர் விழுவதை உணர்ந்த இளவல் வானவல்லியிடம், “அக்கா! ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?” என வினவினார்.

“உனது சுடப்பட்ட காலைக் கண்டதும், மரக்கலத்தோடு எரிந்து மாய்ந்த எனது தமையனின் நினைவு வந்துவிட்டது. அவர் நெருப்பில் எப்படியெல்லாம் துடித்திருப்பார்! அதனை எண்ணினேன். எனது கண்களில் நீர் பெருகிவிட்டது!” என வருந்தினாள் வானவல்லி.

“அவருக்கு என்ன அக்கா நேர்ந்தது?”

வானவல்லி உபதலைவனைப் பார்த்தபடியே “கொன்றுவிட்டார்கள்” எனப் பதிலளித்தாள். அவளது பார்வையும், அந்தச் சொல்லும் தனது மார்பில் வேலைக் கொண்டு பாய்ச்சியதைப் போல உணர்ந்தான் விறல்வேல். அவள் விறல்வேலைப் பார்த்தபடியே கூறியதை இளவலும் கவனிக்கத் தான் செய்தார்!

“அக்கா! மறைந்தவர்களை எண்ணி வருத்தப்படுவதால் அவர்கள் மீண்டும் வந்துவிடவா போகிறார்கள். ஆதலால் கடந்த காலத்தை எண்ணி கலங்க வேண்டாம்” எனக் கூறி அமைதியானவர் பிறகு “நீங்கள் உணவூட்டும் போது எனக்கும் எனது தாயின் நினைவு வந்து விட்டது அக்கா. எனக்குச் சகோதரியோ அல்லது என் தாயோ இருந்திருந்தால் தங்களைப் போலத் தானே அவர்களும் என் மீது பாசமுடன் இருந்திருப்பார்கள்!”

“அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்?”

“எனக்கு அப்படி யாரும் இல்லை அக்கா!”

“அவர்களுக்கு என்ன ஆனது?” வருத்தத்துடன் கேட்டாள் வானவல்லி!

தாய் வயிற்றில் கருவாக உதித்த பிறகு தந்தையை இழந்துவிட்டேன். மண்ணில் பிறந்த பிறகு தாயையும் இழந்துவிட்டேன்!” என்றார்.

அவர் கூறியதைக் கேட்டுக் கலங்கிய வானவல்லி, “இனி அப்படி வருந்தாதே! உனக்கு நான் ஒரு சகோதரி இருக்கிறேன் எனக்கொள்!” என ஆறுதல் கூறினாள்.

“நல்லது அக்கா!”

“உன் பெயர் என்ன தம்பி?”

சிறிது யோசித்த இளவல், “கரிகாலன்” என்றார்.

“கரிகாலனா?”

“ஆம் அக்கா. என் கால் குணமடைந்தபின் அது கருப்பாகத் தானே இருக்கும். தாங்கள் எனக்காகச் சிந்திய கண்ணீருக்கு நன்றி கடனாக இந்தப் பெயரையே நான் வைத்துக்கொள்கிறேன்!” என உணர்ச்சி வசப்பட்டுக் கூறலானார்.

இருவரும் உரையாடிக்கொண்டிருந்த போதே மரகதவல்லி இளவலின் காலிற்கு மருந்து பூசிக்கொண்டிருப்பதைக் கண்ட வானவல்லி பெரிதும் அதிர்ச்சியடைந்தாள். ஏனெனில் மரகதவல்லி தனது நீண்ட கருங்குழலின் நுனியைக் கொண்டு கரிகாலனது காலில் மருந்து பூசிக் கொண்டிருந்தாள்! அதுவரை அவளை யாருமே கவனிக்கவில்லை.

அதிர்ச்சியிலிருந்து மீளாதவளாய், “மரகதவல்லி, என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என வானவல்லி வினவினாள்.

“இவருக்கு மருந்திட்டுக் கொண்டிருக்கிறேன் அக்கா!”

“அதற்குத்தான் மயிலிறகு இருக்கிறதே?”

“அதனால் எந்தப் பயனும் இல்லை அக்கா. இவரது காலிலிருந்த தூசிகளை எடுக்க மயிலிறகைத் தான் பயன்படுத்தினேன். மயக்கத்திலிருக்கும் போதே வலியால் துடித்தார். ஆதலால் தான் எனது குழலைப் பயன்படுத்துகிறேன்” எனப் பதிலளித்தாள் மரகதவல்லி. மரகதவல்லியின் செயலைக் கொண்டு கரிகாலனும் திகைக்கவே செய்தார்!

“மரகதவல்லி, எந்தப் பெண்ணும் செய்யத் துணியாத காரியம் இது! இவரை உனக்கு முன்பே தெரியுமா?” எனச் சற்று சந்தேகத்துடன் வினவினாள்.

மருந்திட்டுக் கொண்டே “தெரியாது அக்கா!” என்றாள்

“அப்புறம் எப்படி, எந்த நம்பிக்கையில் இவருக்குப் பணிவிடை செய்கிறாய்?”

“நம் உபதலைவர் மீதிருக்கும் நம்பிக்கையில் தான்!”

“உப தலைவர் மீதா!”

“ஆம் அக்கா!” திடமாகப் பதில் வந்தது மரகதவல்லியிடமிருந்து!

“இருவருக்கும் என்ன தொடர்பு?”

“அக்கா, இவர் யார் என்றே எனக்குத் தெரியாது! இவரைக் கொண்டு வந்தவர் நம் உபதலைவர் தான்! இவர் பயங்கரமான ஆபத்தில் இருக்கிறார். வெளியே வீரர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மயிலிறகால் மருந்திட்டால் இவர் வலியால் துடிப்பது நிச்சயம். இந்த நள்ளிரவு அமைதியில் இவர் வலியால் பிதற்றினால் அது நிச்சயம் எதிரிகளுக்குக் கேட்டு இவரைச் சூழ்ந்துவிடுவார்கள். என் வீட்டிற்கு நம் உபதலைவர் அழைத்து வந்துள்ள விருந்தினர் இவர். இவருக்குப் பணிவிடை செய்வது என் கடமை. இவர் குணமடையும் வரை இவருக்குப் பணிவிடை செய்வது நம் உப தலைவருக்குச் செய்வதைப் போலப் பாக்கியமாகக் கருதுகிறேன் அக்கா! என் தந்தையைப் போலவே நம் தலைவரும் எனது நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரியவர்! தயவுசெய்து இதில் தாங்கள் தலையிட வேண்டாம் அக்கா!”

அவள் அப்படிப் பெரும் நம்பிக்கையுடன் கூறியதைக் கேட்ட விறல்வேலிற்குப் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. எந்தச் சூழ்நிலையிலும் தன் மீது ஒரே மாதிரி அன்பு செலுத்தும் மரகதவல்லியைத் தன் உடன் பிறக்காத தங்கையாகப் பெற்றது தன் பாக்கியம் என்றே கருதினான். ஆனால் வானவல்லிக்கு அவள் கூறியது சுர்ரெனச் சுட்டது. ஒருகணம் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான்தான் இழந்துவிட்டேனோ? எனக் கூட எண்ணினாள்!

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here