வானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்

மரகதவல்லி பேசியதைக் கேட்ட கரிகாலன், “யாருடைய மகள் தாங்கள்?” என அவளிடம் வினவினார்.

அதற்கவள் “செங்கோடன்” என்றாள்.

“சோழரின் தலைமை ஒற்றர் செங்கோடன் மகளா தாங்கள்?” என வினவினார் கரிகாலன்.

“ஒற்றரா? இல்லையே! எம் தந்தை படைத்தலைவர்களுள் ஒருவர்” எனப் பதிலளித்தாள் மரகதவல்லி.

அவள் கூறியதைக் கேட்டதும் தவறு செய்தவரைப் போல உணர்ந்தவர், வருந்தவும் செய்தார். ஏனெனில் ஒற்றறிபவர்கள் பெரும்பாலும் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். அப்படியே செங்கோடனும் படைத் தலைவர் பொறுப்பில் இருந்துகொண்டு சோழ ஒற்றர்களைக் கண்காணித்து ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். அதனை வெளிப்படையாகக் கூறிவிட்டமைக்கே பெரிதும் வருந்தினார்.

சுதாரித்துக்கொண்ட கரிகாலன், “ஆமாம். ஆமாம். படைத்தலைவர் தான்!” எனக் கூறியபடியே விறல்வேலை நோக்கினார். அவனும் ஆமாம் என்பதைப் போன்று தலையாட்டினான்.

“அக்கா, தங்களது பெயர் என்ன அக்கா?” என வானவல்லியிடம் வினவினார் கரிகாலன்.

குறிக்கிட்ட மரகதவல்லி, “இப்பெயரை நம் தலைவரிடம் கேளுங்கள்!” என்றாள்.

“அவரிடம் ஏன் கேட்கவேண்டும்?”

“அப்பெயரைக் கூறுவதில் அவர் தான் பெரும் மகிழ்ச்சியடைவார்” என மரகதவல்லி கூறிக்கொண்டிருந்த போதே குறுக்கிட்ட வானவல்லி, “வானவல்லி எனும் என் பெயரை யாரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை தம்பி.” எனக் கூறினாள்.

“எங்கோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே?” என வினவினார் கரிகாலன்.

“வளவனாரின் மகள் நான்! எங்காவது கேள்விப்பட்டிருப்பாய்!”

படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்த கரிகாலன் பெரும் மரியாதையுடன், “முன்னாள் சோழ சேனாதிபதி பெருமறவர் மகேந்திர வளவனாரின் மகளா தாங்கள்?” என ஆச்சர்யத்துடன் வினவினார்.

“ஆமாம் தம்பி!”

“தங்களை என் சகோதரியாகப் பெற்றிருப்பது என் பாக்கியம்!” எனக் கூறி மகிழ்ந்தார் கரிகாலன்.

இருவரும் பேசிக்கொண்டிருந்த போதே கரிகாலன் காலிற்கு மருந்தினைப் பூசி முடித்திருந்தாள் மரகதவல்லி. தனது கூந்தலைச் சுத்தம் செய்ய வெளியே சென்றுவிட்டாள்.

உள்ளே சென்ற வானவல்லி இன்னும் சில மூலிகைகளை அரைத்து எண்ணெயில் காட்டிக் கொண்டு வந்தாள். அதைக் கண்ட இளவல், “அக்கா! எனக்குப் பிறகு ஒத்தடம் கொடுத்துப் பத்துப் போடலாம்! நம் தலைவருக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு முதலில் மருந்திடுங்கள். அவரது காயங்களுக்கும் தங்களால் தான் தகுந்த மருந்திட இயலும் என எண்ணுகிறேன்!” என இரட்டை அர்த்தத்தில் கூறலானார்.

அதைக்கேட்ட விறல்வேல், “எனது உடலில் ஏற்பட்டிருப்பது சாதாரணக் காயம் தான். மருந்திட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் முதலில் பத்துபோட்டுக் கொள்ளுங்கள். பிறகு காய்ச்சல் வந்துவிடப் போகிறது!” எனக் கூறிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

உப தலைவன் கரிகாலனை ‘நீங்கள், கொள்ளுங்கள்’ எனப் பன்மையில் பெரும் மரியாதையுடன் அழைத்தது அவளுக்குப் பெருத்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் கரிகாலன் விறல்வேலை விடப் பல வயது இளையவன். விறல்வேல் வந்ததிலிருந்து பணிவுடனும், பதற்றத்துடனும் நின்றது அவளுக்குப் பலத்த சந்தேகத்தை உருவாக்கியது. கரிகாலன் யாராக இருப்பார்? எனச் சிந்தித்தவள் இதற்கு முன் இவரது முகத்தை எங்கோ பார்த்திருக்கிறோமே எனவும் சிந்தித்தாள். ஒன்றும் நினைவிற்கு வரவில்லை!

இளவலது கழுத்து, மார்பு என ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது தன்னை ஒரு புலியின் இரு சிவந்த கண்கள் நோக்கிக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தவள் திடுக்கிட்டாள். உற்றுப் பார்த்தாள். கரிகாலனின் இடது பக்க மார்பில் பச்சைக் குத்தப்பட்டிருந்த பாயும் புலியின் இரு சிவந்த கண்களைக் கண்டவளின் கைகள் நடுங்க ஆரம்பித்தது. பதற்றமடைந்தாள்.

மரியாதையுடன் எழுந்து நின்றவள், “இளவரசே!” எனப் பணிந்தாள்.

வானவல்லி தன்னை அடையாளம் கண்டுகொண்டதை எண்ணிய இளவரசர் வாயில் கையை வைத்து “உஷ்ஷ்…” எனச் சத்தமிட்டவர் பிறகு, “நான் தான் இளவரசன் என்பதைக் காட்டிக்கொடுத்து விடாதீர்கள் சகோதரி!” எனக் கூறினார். இதுவரை அன்பாகப் பேசி வந்தவரின் கண்களில் முதன் முறையாக அதிகாரத்தைக் கவனித்தாள் வானவல்லி. அவர் தான்தான் ‘இளவரசர் திருமாவளவன்’ என்பதைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை என்பதை உணர்ந்த வானவல்லி அமைதியானாள்.

பிறகு அவரது காயம்பட்ட இடங்களைச் சுற்றி சுடச்சுட ஒத்தடம் கொடுத்தவள், பிறகு மார்பு, கழுத்து, நெற்றி என அனைத்து இடங்களிலும் மூலிகைப் பத்துப்போட்டாள். அந்த நேரம் மரகதவல்லியும் உள்ளே வந்து சேர்ந்தாள்.

“சீமை பட்டினால் செய்யப்பட்ட பஞ்சு மெத்தையில் படுத்து சிற்றரசுகளின் இளவரசிகள் அனைவரும் சாமரம் வீச, பலர் பணிவிடை செய்தபடி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க வேண்டிய உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியின் மகன் திருமாவளவன் இன்று வரகு வைக்கோல் படுக்கையில் ஆதரவின்றி படுத்திருக்கிறாரே!” என எண்ணிய வானவல்லியின் கண்களில் இருந்து நீர் பெருக்கு ஏற்பட்டு கரிகாலனின் படுக்கையின் மீது விழுந்துகொண்டிருந்தது. அதே நேரம் வெளியே சென்ற விறல்வேலும் தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டு உறங்குவதற்குத் தயாராக வந்தான்.

வானவல்லி கலங்குவதைக் கண்ட கரிகாலன், “சகோதரி! தாங்கள் என்னைப் பார்த்து வருத்தப்பட்டுக் கலங்க வேண்டாம். உப தலைவர் என் அருகில் இருக்கும்போது இருங்கோவேளின் வீரர்களால் என்னை என்ன செய்துவிட முடியும்! உறைந்தை வீரர்கள் என்ன, எமனும் அவர் என்னருகில் இருக்கும் போது வரத் துணிய மாட்டான். உப தலைவர் மட்டும் சரியான நேரத்திற்கு வராமல் இருந்திருந்தால் இந்நேரம் இவ்வுடல் தீக்கிரையாகியிருக்கும். அவரது துணையிருக்கும் வரை எனக்கு எந்தத் தீங்கும் நேராது! தாங்கள் வருந்த வேண்டாம்” என ஆறுதல் கூறினார்.

அதற்கு வானவல்லி, “இதே உபதலைவரை எண்ணித்தான் அன்று என் தமையனை அனுப்பி வைத்தேன். இன்று அவரை இழந்து நான் மட்டும் வாடுகிறேன்!” எனக் கூறினாள். அதைக்கேட்ட விறல்வேல் மற்றும் கரிகாலன் என இருவரும் அதிர்ச்சியானார்கள். ஆனால் விறல்வேலின் நிலை தான் பரிதாபமாகப் போய்விட்டது.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here