வானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்

கரிகாலன் தான் சோழ இளவரசன் திருமாவளவன் என்பதை அறியாத மரகதவல்லி வானவல்லியை கரிகாலன் அக்கா என அழைத்ததால் தான் அவள் துயரத்துடன் பேசுகிறாள் என எண்ணிக் கொண்டாள். அந்நேரம் மரகதவல்லி மருந்தினை எடுத்துக்கொண்டு விறல்வேலிடம் வந்தவள் “அண்ணா, விளக்கருகில் வந்து அமருங்கள்!” என்றாள்.

“எனக்கு மருந்து தேவையில்லை மரகதவல்லி! பூசினாலும் பயன் இருப்பது ஐயமே!” என்றான் உபதலைவன்.

“இப்போது அமரப் போகிறீர்களா? இல்லையா?” எனக் கோபத்துடன் கேட்டாள் மரகதவல்லி.

மரகதவல்லியின் பிடிவாதத்தை அறிந்த விறல்வேல் அவளது பேச்சைத் தட்ட இயலாமல் விளக்கிற்கு அருகில் வந்து அமர அவனது காயங்கள் அனைத்திற்கும் மருந்து பூசி ஒத்தடம் கொடுத்தாள். அவளது அன்பிலும், நம்பிக்கையிலும் விறல்வேல் நெகிழ்ந்து போனான். ஆனாலும் அவனது புறக் காயங்களுக்கு மட்டுமே அவளால் மருந்து பூச முடிந்தது! அவனது அகக்காயங்களுக்கு மருந்திட வேண்டியவள் தரையைப் பார்த்தே நின்றுகொண்டிருந்தாள்.

வானவல்லியின் முன் இருக்க இயலாத விறல்வேல் எழுந்து “நான் புறப்படுகிறேன். இனி இவருக்கு எந்த ஆபத்தும் வராது! பார்த்துக்கொள்ளுங்கள்” என்றபடியே நடையைக் கட்டினான்.

அதைக்கண்ட கரிகாலன், “உப தலைவரே இப்போது தான் நீங்கள் இருக்கும் வரை என் அருகில் எமன் கூட வருவதற்கு அஞ்சுவான் எனக் கூறினேன். அதற்குள் புறப்படுகிறீர்களே! இங்கேயே இருங்கள்!” எனக் கட்டளையிட்டார். சிறிது நேரம் கழித்துக் கரிகாலன், “பிரதிபலன் பாராது அன்பு செலுத்தும் இந்த இரு பெண்களிடம் என்னை மட்டும் தனியாக விட்டுவிட்டுத் தாங்கள் மட்டும் செல்கிறேன் என்கிறீர்களே? இது சரியா?” எனவும் வினவினார்.

கரிகாலனுக்குப் பதில் சொல்ல இயலாத விறல்வேல் அங்கேயே அமர்ந்தான்! உள்ளே சென்ற மரகதவல்லி அனைவருக்கும் உணவினை எடுத்துக்கொண்டு வந்து உப தலைவனுக்குப் பரிமாறினாள். பிறகு மரகதவல்லி மற்றும் வானவல்லியும் நள்ளிரவு கடந்த முதல் சாமத்தில் இரவு உணவினை உண்டு முடித்தனர்.

அனைவரும் உண்டபிறகு அடுத்து என்ன ஆபத்து எங்கிருந்து வரப்போகிறதோ? என்ற கவலையில் உறங்காமல் அமர்ந்திருக்கக் கரிகாலன் மட்டும், “உறக்கம் வருகிறது உறங்க வேண்டும்?” என்றார்.

“உறக்கம் வந்தால் உறங்க வேண்டியது தானே! வீரருக்குச் சாமரம் வீசினால் தான் உறக்கம் வருமோ?” எனக் கேட்டாள் மரகதவல்லி.

“சாமரம் வீச வேண்டும் என்பதில்லை. கதை கூறினால் போதும். எனக்கு உறக்கம் வந்துவிடும்!” என்றார் கரிகாலன்.

அவர் கூறியதைக் கேட்ட மரகதவல்லி, விறல்வேல் என இருவரும் சொல்லி வைத்தாற்போலவே வானவல்லியை நோக்கினார்கள்.

“அக்கா, மூவரில் தாங்கள் தான் கதை கூறுவதில் வல்லவர் போல! நீங்களே எனக்கு ஒரு கதையைக் கூறுங்கள்!”

இளவரசன் கதை கூறு எனக் கேட்டபின் மறுக்க முடியாத வானவல்லி எந்தக் கதையைக் கூறலாம் எனச் சிந்தித்த படியே அவரை நோக்கினாள்.

அவளது மனக் குழப்பத்தை உணர்ந்த கரிகாலன், “அக்கா! கோப்பெருஞ்சோழன், புலவர் பிசிராந்தையார், அமைச்சர் பொத்தியார் பற்றிய கதையைக் கூறுங்கள்” எனக் கட்டளையிட்டார்.

“அவர் கதை இப்போது எதற்குத் தம்பி? உனக்கு நான் வீரம் செறியும் கதைகளைக் கூறலாம் என்றிருந்தேன்” என்றாள்.

“அக்கா, எப்படியும் இன்னும் சில தினங்கள் இங்குதான் இருக்கப்போகிறேன். அப்போது அந்தக் கதைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன். இப்போது பிரதிபலன் பாராத அந்த மூன்று நண்பர்களின் கதையை எனக்குக் கூறுங்கள்!” என்றார்.

எந்த உள்நோக்கத்தைக் கொண்டு கரிகாலன் அந்தக் குறிப்பிட்டக் கதையைக் கூறச் சொல்கிறார் என அறியாத வானவல்லி, இளவரசன் கரிகாற் திருமாவளவனுக்குத் தான் கதை கூறும் பேறு பெற்ற தனது பாக்கியத்தை எண்ணிப் பெருமை கொண்டு கதையைக் கூறத் தொடங்கினாள்.

அடிக்குறிப்பு :

வென்வேல்,

உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்,

முருகன் சீற்றத்து உருகெழு குருசில்,

தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி. – பொருநராற்றுப்படை வரி: 129 – 132.

வெற்றிவேல், உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னியின் மகன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே தனக்கு வேண்டிய அரசுரிமையைப் பெற்றான் என முடத்தாமக் கண்ணியார் கூறுகிறார். ஆதலால் இளவல் தாயின் வயிற்றில் இருந்தபோதே தந்தை இளஞ்சேட்சென்னியை இழந்தவர் என்பதை அறிந்துகொள்ளலாம்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here