வானவல்லி வாசகர் கடிதம் : 3

காதலியே

வானவல்லி ஆசிரியர் வெற்றிவேல் அவர்களுக்கு,

தாங்கள் எழுதிய வானவல்லி புதினத்தை முழுவதுமாக படித்துவிட்ட பிறகே எனது கருத்தை கூற வேண்டும் என்று எண்ணியிருந்தேன். தற்பொழுது படித்தும் முடித்துவிட்டேன். நான் பல்வேறு ஆசிரியர்களின் பல்வேறு புதினங்களை வாசித்திருக்கிறேன், அவற்றில் வானவல்லி புதினத்திற்கு நிகர் எதுவுமே இல்லை என்று தங்களது புதினம் நினைக்க வைத்துவிட்டது. இனியும் இருக்குமா என்பதும் சந்தேகமே. இக்கதையைப் படிக்கும்போது கதை நடந்த காலத்தில் வாழ்ந்த அனுபவம் கிடைத்தது. பல்வேறு இலக்கியங்களை ஆதாரமாக மேற்கோள் காட்டியிருப்பது மிகவும் சிறப்பு. கதை மாந்தர்களின் தேர்வு நன்று. சங்க காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் போர் மற்றும் அரசியலில் பங்கு பெற்றதை எழுதியிருப்பது மிகவும் சிறப்பு. பழங்கால தமிழக வரைபடத்தை  ஆங்காங்கே கொடுத்திருப்பதால் கதை நடந்த இடத்தை தெளிவாக அறிய முடிகிறது. கள்வன் காளன் வீர மரணம் மற்றும் சில அத்தியாயங்களில் மட்டுமே வந்திருந்தாலும் நடன மங்கை பூங்கோதையின் பெருந்தினைக் காதல் மற்றும் அவளது மறைவு நெஞ்சத்தை நெகிழச் செய்தது. பட்டி, சேனாமுகம், குல்மா, கணம், வாகினி, பிரிதனா, சம்மு, அணிகினி, அக்குரோணி போன்ற அக்கால படைப் பிரிவுகளை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

நூறு வந்தியத் தேவன் சேர்ந்தாலும் ஒரு செங்குவீரனுக்கோ அல்லது நூறு குந்தவை சேர்ந்தாலும் ஒரு வானவல்லிக்கோ ஈடாகாது. சாதாரண படைத்தலைவரின் மகளும் நாட்டை ஆளும் மகாராணியாக ஆகலாம் என்று மரகத வல்லியின் மூலம் அறிய முடிந்தது. நட்புக்கு இலக்கணமாக திவ்யனும், செங்குவீரனும் வாழ்ந்து பெருமை சேர்க்கிறார்கள். போர் தர்மம், இதுவரைக் கேள்விப்பட்டிராத போர்க்கருவிகள், போர் முறை ஆகியவை அனைத்தும் சங்க காலத்திற்கே உகந்தது. அனைத்து உப தலைவர்களும் படைத்தலைவர்களைப் போன்று படையை வழிநடத்தும் திறமை பெற்றிருந்தது செங்குவீரனின் தலைமைக்கு ஒரு அதிசிறந்த எடுத்துக்காட்டு. கரிகாலனை அவனது எதிரிகள் சிறைவைத்து தீவைத்து கொன்று விட முயற்சித்ததை செங்குவீரன் முறியடித்து இளவலைக் காப்பாற்றியது நெஞ்சை விட்டு அகலாமல் இன்னும் அப்படியே நிகழ்காலம் போன்றே இருக்கிறது. சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஒரு கால் எரிந்துகொண்டிருந்த போதும் வீரத்துடன் எதிரிகளை வீழ்த்திய கரிகாலரின் வீரத்திற்கு ஒப்பு யாரும் இல்லை. ஒவ்வொரு முறையும் இளவலுக்கு துன்பம் நேரும்போதெல்லாம் செங்குவீரன் வந்துவிட மாட்டானா என்று மனம் ஏங்குகிறது. பொலந்தேர் மிசைத் தேரில் புகாரில் பவனி வந்து போட்டியில் வெற்றிபெற்று எதிரியிடம் வெஞ்சினம் உரைத்தவிதம் அனைத்தும் அருமை. அதிலும் செங்குவீரன் தனது வெஞ்சினத்திற்கு ஏற்ப வாழ்ந்து காட்டியது இன்னும் அருமை. வயதில் இளையவனான இளவல் கரிகாலன் மாபெரும் வேந்தர்களான சேரன், பாண்டியன் மற்றும் வேளிர்கள் அனைவரையும் வெண்ணிப் பறந்தலைப் போரில் முறியடித்த விதம் கண்முன் நிழலாடுகிறது. பரதவன் குமரனின் கடற்போர் மயிர்கூச்செரியச் செய்தது.

புதினத்தில் வரும் அத்தனைப் பெண்களின் கதாபாத்திரங்களையும் ஆண்களுக்கு நிகராக படைத்தது அருமை. இமயம் வரைச் சென்று படையெடுத்து வெற்றி பெற்ற கரிகாலனின் பயணத்தில் நானும் கூடவே பயணித்ததை போன்ற உணர்வு. கரிகாலன் இலங்கை வீரர்களைக் கொண்டு கல்லணையைக் கட்டியதை வாசிக்கும்போது நானும் கல்லணை கட்ட கல் சுமந்த மனநிறைவைத் தருகிறது. கரிகாலனின் பட்டமேற்பு விழாவை இன்னும் நீட்டிருக்கலாமோ எனத் தோன்றியது. நான்கு பாகங்களை படித்து முடித்த பிறகும் புதினம் விரைவில் முடிந்து விட்டதை முடிந்துவிட்டது ஏமாற்றமே! இன்னும் நீண்டிருக்கலாமோ என்று தோன்றியது.

தோழியின் மகளான இளந்திரனையை தனது மகனாக வளர்த்த செங்குவீரன் மற்றும் வானவல்லியின் பண்பு போற்றத்தக்கது.

எரித்திரியன் கடலில் செங்குவீரனின் பயணம், கடற்போர், அடிமைப் போர் ஆகியவற்றை நினைக்கும்போது இப்போதும் மயிர் கூச்செறிதல் ஏற்படுகிறது. யவன அடிமைகளை நினைத்தால் இப்பொழுதும் மனம் கவலையடைகிறது. அன்பு மற்றும் விசுவாசத்தின் மொத்த உருவம் இம்ஹோடேப்.

மொத்தத்தில் வானவல்லி என்பது புதினம் அல்ல. காலத்தால் அழிக்க முடியாத சரித்திர பயணம். ஆசிரியர் வெற்றியின் இந்தப் பெரும் முயற்சிக்கு எனது  பாராட்டுக்கள். தங்களது பயணம் தொடரட்டும்.

அன்புடன்…
பவானி,
ஆசிரியை.

2 COMMENTS

 1. பொன்னியின் செல்வன் கதாபத்திரங்களுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட வரிகளை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். எப்படி அமரர் கல்கியின் எழுத்து நடையையும் திரு. வெற்றிவேல் அவர்களின் எழுத்து நடையையும் ஒப்பிடுவது சாத்தியமில்லையோ, அப்படியே அவர்களின் கதாபாத்திரங்களை ஒப்பிடுவதும் சரியல்ல.

 2. திரு.பூர்ணிமா அவர்களுக்கு,

  வணக்கம்.

  தங்களது பின்னூட்டத்தைக் கண்டேன்.

  காலம் முழுக்க நம் வாசகர்களும் சரி, நாமும் சரி ஒன்றை பிறவற்றுடன் ஒப்பிட்டே அதன் தரத்தை நிர்ணயிக்கப் பழகியிருக்கிறோம். வானவல்லி புதினத்தைப் படித்த பலரும் அதை திரு.சாண்டில்யனின் யவன ராணி மற்றும் திரு.கல்கியின் வரலாற்றுப் புதினங்களுடன் ஒப்பிட்டே பேசுகிறார்கள். இது அவர்களின் இயல்பு என்றே நான் கருதுகிறேன்.

  ஏனெனில் வரலாற்றுப் புதினங்களில் இருவருமே மிகப்பெரிய ஆளுமைகள். அவர்களைத் தவிர்த்தும், அவர்களோடு ஒப்பிடாமலும் கருத்து கூற இயலாது என்பது எனது கருத்து. இதற்கு முன் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினங்களும் சரி, இனி எழுதப்படப் போகும் புதினங்களும் சரி நிச்சயம் அவர்களின் புதினங்களைக் கொண்டே ஒப்பிடப் படும். தராசில் ஒரு தட்டில் திரு.கல்கி/திரு.சாண்டில்யனின் புதினங்களையும் மற்றொரு தட்டில் படித்துக் கொண்டிருக்கும் புதினத்தை வைத்ததுமே ஒப்பிடுவார்கள். வரலாற்றுப் புதினங்களை ஒப்பிடும் கருவி திரு.சாண்டில்யன் மற்றும் திரு கல்கியின் படைப்புகளை விட்டால் வாசகர்களுக்கு வேறு இருப்பதாகத் தெரியவில்லை. வாசிக்கும் புதினங்களை கல்கியின் படைப்புடன் ஒப்பிட்டு உயர்வாக நினைப்பதா, சரி சமமாக நினைப்பதா அல்லது தாழ்வாக நினைப்பதா என்பது வாசகரின் எண்ணத்தைப் பொறுத்து மாறுபடும். அப்படி நினைப்பது அவரது உரிமையும் கூட.

  மற்றொரு வாசகர் கூறியதை ஆட்சேபிக்கும் உரிமை உங்களுக்கு எப்படி இருக்கிறதோ அதே போன்றே தான் படித்த புதினங்களையும் பிற புதினங்களுடன் ஒப்பிடும் உரிமையும் அவருக்கு உண்டு என்பது எனது கருத்து.

  வானவல்லி புதினத்தை வாசித்த பிறகு தாங்கள் இந்த விமர்சனத்தை வாசித்தால் தங்களது கருத்து மாறவும் வாய்ப்பிருக்கிறது.

  தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  அன்புடன்.
  சி.வெற்றிவேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here