இலக்கியப் பாடல்: என் மகளைக் கண்டீர்களா?

4

இன்று ஆடவர்களும், பெண்களும் காதல் கொண்டால் ஜாதி, பணம், அந்தஸ்து எனப் பல காரணங்களைக் கூறி காதலித்த இருவரையும் பிரித்துவிடுகிறார்கள். காதலித்த இருவரும் மணம் செய்து கொண்டாலும் அவர்களை கொன்றாவது தமது ஜாதிப் பெருமையை நிலை நிறுத்திக்கொள்ளவே அபலரும் முயல்கிறார்கள். ஆனால் காதலித்தவர்களின் மன நிலை, அவர்களின் ஆசை, தேடல், விருப்பம் என யாவற்றையும் கவனத்தில் கொள்ள மறுக்கிறார்கள். இப்படித்தான் காதல் கொண்ட இருவரது நிலை ஊருக்குத் தெரிந்துவிட்டது. உடனே காதலன் காதலியை அழைத்து சென்று உடன்போக்கு (நம்ம மொழில ஓடிப்போயட்டான்). பெண்ணைப் பெற்றத் தாயும் அவளைத் தேடி அலைகிறாள். வழியில் சில அந்தணர்களைக் (அந்தணர்கள் என்பவர்கள் பிராமணர்கள் கிடையாது. இது பற்றி தனிப் பதிவில் ஒரு நாள் விளக்குகிறேன்) கண்டு தனது மகளின் அடையாளங்களைக் கூறி கண்டீர்களா? என கேட்கிறாள். அவர்களும் கண்டோம் எனக்கூறி அவளுக்கு சில அறிவுரைகளை வழங்குகிறார். அறிவு தெளிந்த தாய், தனது கவலையை மறந்து வீடு திரும்புகிறாள். அந்த அந்தணர்கள் அந்தத் தாய்க்கு அப்படி என்ன ஆறுதல் சொன்னார் என அறிய கீழே தொடருங்கள்.

உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்

நெறிப்படச் சுவல் அசைஇ, வேறுஓரா நெஞ்சத்துக்

குறிப்பு ஏவல் செயல்மாலைக் கொளை நடை அந்தணீர்!


வெவ்விடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை

என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,

தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்,

அன்னாரிருவரைக் காணிரோ? பெரும!’

‘காணேம் அல்லேம், கண்டனம் கடத்திடை,


ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய

மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறீர்.

பல வுறு நறும் சாந்தம் படுப்பவருக்கு அல்லதை

மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?

நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;


சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை

நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என் செய்யும்?

தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;

ஏழ்புனர் இன்னிசை முஅர்ல்பவர்க்கு அல்லதை

யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?


சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;

என ஆங்கு,

இறந்த கற்பினாள்கு எவ்வம் படரன்மின்,

சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்,

அறம் தலைப் பிரியா ஆறும் மற்று அதுவே!

நூல்: கலித்தொகை (#8)

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ

சூழல்: பாலைத்திணை, காதலனும் காதலியும் திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டை விட்டுக் கிளம்புகிறார்கள். காதலியின் தாய் அவர்களைத் தேடிச் செல்கிறாள், வழியில் சந்தித்த சிலரிடம் விசாரிக்கிறாள்

பாடலின் பொருள்:

அந்தணர்களே, பெருமைக்குரியவர்களே!

இந்தப் பாலைவனப் பாதையில், வெப்பத்தை உமிழ்கின்ற சூரியனின் கதிர்களை உங்களுடைய குடைகள் ஏந்திக்கொள்கின்றன. அத்தகைய குடைகளில் நிழலில் நீங்கள் நடக்கிறீர்கள்.

உங்களிடம் உள்ள தண்ணீர்க் கமண்டலம் உறியில் தொங்குகிறது, முக்கோலைத் தோளில் சுமந்திருக்கிறீர்கள்.

நீங்கள் எப்போதும் நல்லதையே நினைக்கிறவர்கள், தீயவற்றை மனத்தில் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் உடனே மறக்கிறவர்கள். ஆகவே, ஐம்பொறிகளும் உங்களுடைய கட்டளைகளைக் கேட்டு நடக்கின்றன, நீங்கள் ஒழுக்கசீலர்களாக வாழ்கிறீர்கள்.

ஆகவே, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். தெரிந்த பதிலைச் சொல்லுங்கள்.

என்னுடைய மகள் ஒருத்தியும், இன்னொருத்தியின் மகனான ஒருவனும் காதல் கொண்டார்கள். இன்றைக்கு அந்தக் காதல் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. ஆகவே, ஊரை விட்டுக் கிளம்பி இந்தக் காட்டுப் பாதையில் சென்றுவிட்டார்கள்.

அப்படிப்பட்ட யாரையும் நீங்கள் பார்த்தீர்களா? சொல்லுங்கள்!

அம்மா, கடந்து செல்வதற்குச் சிரமமான பாதை இது. ஆனாலும், ஓர் ஆண் அழகனின் பின்னே உன் மகள் இந்தப் பாதையில் நடக்கத் துணிந்தாள். மடப்பத்தை உடைய அந்த இளம்பெண்ணைப் பெற்ற பெருமைக்கு உரிய தாயே, நாங்கள் அந்த இருவரையும் பார்க்கவே இல்லை என்று பொய் சொல்லமாட்டோம். பார்த்தோம்.

ஆனால், அவர்களுடைய காதலுக்குத் தடை சொல்லிப் பிரிக்க நாங்கள் எண்ணவில்லை. ஏன் தெரியுமா?

சந்தன மரம், மலைமீது பிறக்கிறது. ஆனால் அங்கே வாழ்கிறவர்கள் அதைப் பயன்படுத்தமுடியாது. கீழே தரையில் உள்ள யாரோதான் அந்தச் சந்தனக் கட்டையை அரைத்து உடலில் பூசிக்கொள்வார்கள்.

யோசித்துப்பார்த்தால், உனக்கும் உன் மகளுக்கும் உள்ள உறவும் அப்படிப்பட்டதுதான். இல்லையா?

சிறந்த முத்துகள் கடல் நீரில் பிறக்கின்றன. ஆனால் கடலில் வாழ்கிற யாரும் அவற்றைப் பயன்படுத்தமுடியாது. தரையில் உள்ள யாரோதான் அவற்றைக் கோத்து மாலையாக்கிக் கழுத்தில் அணிந்துகொள்வார்கள்.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here