‘வானவல்லி’ நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்!

வணக்கம் வலைத்தள வாசகர்களே!
‘வானவல்லி’ நமது வலைத்தள நண்பர் சாளையக்குறிச்சி சி.வெற்றிவேல் அவர்களின் எண்ணத்தில் கருவாகி கைவண்ணத்தில் உயிராகி வெளிவந்திருக்கும் வரலாற்றுப் புதினம். ‘வானவல்லி’க்காக ஒரு நேர்காணல் வேண்டும் என நண்பர் வெற்றியிடம் கேட்டேன். ‘ஆகட்டும்’ என உடன் ஒப்புக் கொண்டவர் பதில்களை ‘வானவல்லி’ வெளியானதும் தருகிறேன் என்று கூறினார்.
அத்துடன் ‘நண்பா, நான் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் மாணவப் பத்திரிக்கையாளராக பணியாற்றியபோது ஒரு விடயத்தை அறிந்து கொண்டேன். அதாவது நமது கேள்விகள் மட்டுமே நேர்காணல் கொடுப்பவரை மட்டும் அல்லாமல் நம்மையும் வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தும் என்று. ஆதலால் வழக்கமாக தொடுக்கப்படும் கேள்விகள் மட்டும் அல்லாமல் வாசிப்பவரையும் தூண்டும் விதத்தில் கேள்விகள் அமைவது சிறப்பு.’ என்று ஆலோசனையும் கொடுத்தார்.

தற்போது ‘வானவல்லி’ வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. நான் ‘வானவல்லி’யை நம்மபுக்ஸ் என்னும் இணையத்தளத்தின் மூலம் கொள்வனவு செய்தேன். ஆனால் நூலை இலங்கைக்கு தருவிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதோ இப்போது ‘வானவல்லி’ என் வாசிப்பில்… எனது நேர்காணலுக்கு நண்பர் வெற்றி பதில் அனுப்பி மின்னஞ்சலில் காத்துக் கிடந்தது. தற்போது உங்கள் பார்வைக்கு… நண்பர் வெற்றிக்கு மிக்க நன்றி!
* “வானவல்லி” எந்தக்காலகட்டம் முதல் எந்தக் காலகட்டம் வரை கூறுகிறது?
—> வானவல்லி கி.மு இரண்டாம் நூற்றாண்டில் நடைபெறும் கதை. சரியாகக் கூற வேண்டும் என்றால் கி.மு 175 ல் கரிகாலன் எதிரிகளால் சிறைவைக்கப்பட்ட பிறகு கதை தொடங்கும். அதன் பிறகு கரிகாலன் எதிரிகளின் சிறையிலிருந்து எப்படி மீள்கிறான். வெண்ணிப் போரில் அனைவரையும் தோற்கடித்து அவனது அரியாசனத்தை மீட்ட பிறகு, இமயம் வரை படையெடுத்துச் செல்லும் சுமார் பத்து வருட காலமே வானவல்லியின் கால கட்டம்.
* புதினத்தில் குறிப்பிடப்படும் நிகழ்வுகள் அனைத்தும் உண்மையானவையா?
—> புதினம் என்றாலே புனைவு என்று தான் பொருள். அப்படியிருக்கையில் வரலாற்றுப் புதினத்தில் வரும் அனைத்து நிகழ்வுகளும் எப்படி உண்மையாக இருக்கும். கரிகாலனைப் பற்றிய சரித்திரத் தகவல்கள் அனைத்தும் உண்மை. ஆனால், அந்த நிகழ்வுகள் எப்படி நடந்திருக்கும் என்பதில் எனது கற்பனையைப் புகுத்தி நாவலை புனைந்திருக்கிறேன். ஆனாலும், புதினத்தை வாசித்தவர்களிடம் கற்பனைப் பாத்திரங்கள் யார் யார் என்று கூறினால் நம்ப மறுக்கிறார்கள்.
உதாரணத்திற்கு சோழ இளவரசன் வளவனை அவனது எதிரிகள் சிறை பிடித்து மாளிகையில் எரித்து உயிரோடு எரிக்க முயன்றார்கள். அப்போது அவனது கால்கள் தீயில் வெந்து கருகியது. ஆதலால் தான் அவன் கரிகாலன் என்று அழைக்கப்பட்டான். இது வரலாற்று நிகழ்வு. இந்த சிறைபிடித்து, அவன் தப்பித்த முறை என நான் எழுதியவை அனைத்தும் எனது கற்பனையே.
* வரலாற்றுப் புதினம் எழுத வேண்டும் என்னும் எண்ணம் எப்படி வந்தது?
—> இந்தக் கேள்வி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நண்பா. ஆனால், எனக்குத் தான் சரியான பதிலை எப்படி அளிப்பது என்று தெரியவில்லை. எனக்கு சரித்திரம் என்றால் மிகவும் பிடிக்கும். அதற்குக் காரணம் சிறு வயதில் என்னைத் தோளில் போட்டுக்கொண்டு எனது தாத்தா கூறிய ராசா கதைகள் கூட காரணமாக இருக்கலாம். சோழர்களின் வீரம் எனக்கு மிகவும் பிடிக்கும். சோழ நாட்டான் நான் என்பது கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.
* “வானவல்லி” பொன்னியின் செல்வன் போன்ற ஏதேனும் ஒரு வரலாற்றுப் புதினத்தின் தொடர்ச்சியா?
—> நிச்சயமாக இல்லை. தமிழ் வரலாற்றுப் புதினங்கள் வரிசையில் பிற்கால சோழர்களைப் பற்றி பல புதினங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இராஜ ராஜன் மற்றும் இராஜேந்திரன். ஆனால், முற்கால சோழர்களான கரிகாலன், இளஞ்சேட் சென்னி, கிள்ளி வளவன், செம்பியன் எனும் சிபிச் சோழன் போன்ற முற்கால மன்னர்களைப் பற்றிய வரலாற்றுப் புதினங்கள் மிகவும் சொற்பம். அந்த சொற்பத்தில் ஒன்று வானவல்லி. வானவல்லிக்கு முந்தைய கதையை இப்போது நான் தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன். பெயர் வென்வேல்  சென்னி. கரிகாலனின் தந்தையின் வரலாறு. எதிர்காலத்தில் கூறப்படலாம் வென்வேல் சென்னியின் தொடர்ச்சி வானவல்லி என்று.
* “வானவல்லி”யின் காலகட்டத்தை குறிப்பிடும் வரலாற்றுப் புதினங்கள் ஏதேனும் உள்ளனவா?
—> ஒரே ஒரு புதினம் மட்டும் இருக்கிறது. சாண்டில்யன் அவர்களின் யவன ராணி. அதுவும் கரிகாலனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இரண்டும் கரிகாலன் எனும் ஒரே தளத்தை அடிப்படையாகக் கொண்டது. யவனராணி கரிகாலனின் வெண்ணிப்போர் வரை முடிந்துவிடும். வானவல்லி கரிகாலனின் இலங்கைப் போர், காவேரிக்கு அணை எடுத்தது, அவனது இமய போர் வரைத் தொடரும்.
* இது உங்கள் வயதுக்கு மீறிய முயற்சி என்று சொன்னால்?
—> வயதுக்கு மீறிய முயற்சி என்று எதுவுமே இல்லை நண்பா. அனைத்துமே நமது முயற்சியில் தான் இருக்கிறது. என்னைக் கேட்டால் இதுவே தாமதம் என்றுதான் கூறுவேன்.
* கள ஆய்வு செய்திருக்கிறீர்களா?
—> செய்திருக்கிறேன். உறைந்தை (உறையூர்), புகார், கல்லணை என்று திரிந்திருக்கிறேன். 2200 வருட கால மாற்றத்தால் அனைத்தும் மாறிக் கிடக்கிறது. முக்கொம்பிலிருந்து கல்லணை வரை நடந்தே சென்றிருக்கிறேன். பட்டினப்பாலை கூறும் புகாரின் வளத்தைக் கேட்டு எதுவுமே இல்லாத புகார் கடற்கரையில் நின்று கண்ணீர் வடித்திருக்கிறேன்.
* இதில் உங்களுக்கு உதவி செய்தவர்களைப் பற்றி?
—> தொடக்கத்தில் நிறைய நண்பர்கள் உற்சாகப்படுத்தினார்கள். உதவியவர்கள் என்று எடுத்துக் கொண்டாள் நண்பர் திரு.சுந்தர் கிருஷ்ணன் மற்றும் சோழகங்கம் ஆசிரியர் சக்தி ஸ்ரீ  அவர்களின் உதவி அளப்பரியது. சுந்தர் அண்ணன்தான் பிழை திருத்தம் செய்ததில் இருந்து பதிப்பாளரிடம் பேசி புத்தகம் வெளியாகும் வரை உதவி செய்தவர். வரலாற்றுத் தகவல்களில் சந்தேகம் ஏற்படும்போதெல்லாம் தெளிவு படுத்தியவர் சக்தி ஸ்ரீ. இந்த இருவரும் நிறைய உதவி செய்திருக்கிறார்கள். இருவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
* யார் இந்த “வானவல்லி”? – உண்மையை சொல்லுங்க.
—> வானவல்லி என்பவள் சோழப் படைத் தலைவனின் காதலி. வேளக்காரப் படைத் தலைவனின் தங்கை. கரிகாலருக்கு அக்கா. மாற்றத்தை வானவல்லி படிக்கும்போது தெரிந்துகொள்ளவுங்கள்.
* புத்தக வெளியீட்டில் இலாபமீட்ட முடியுமா?
—> இது பதிப்பகத்தாரிடம் கேட்க வேண்டிய கேள்வி.
* புதிதாக நூல் வெளியிட விரும்பும் நண்பர்களுக்கு உங்கள் அறிவுரை?
—> முடிந்த வரை பதிப்பகம் வழியாக வெளியிடுவது சிறந்தது. அவர்களால் மட்டுமே வாசகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பிக்க இயலும்.
* “வானவல்லி”க்கு உங்கள் வீட்டாரின் பிரதிபலிப்பு என்ன?
—> வானவல்லி எழுதத் தொடங்கிய காலத்தில் வீட்டில் கடுமையான எதிர்ப்பு. வேலைக்குச் செல்லாமல் மணிக் கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து உணவில்லாமல் எழுதிக் கொண்டிருந்தால் யார் தான் ஏற்றுக்கொள்வார்கள்? போகப் போக எனது உணர்வுகளை வீட்டில் புரிந்துகொண்டார்கள். வானவல்லி வெளியான போது என்னை விட வீட்டில் தான் அதிக மகிழ்ச்சி. இப்போது எழுதுகிறேன் என்று கூறினாலே அவர்கள் என்னை தொந்தரவு செய்வதில்லை.
* வலைத்தளத்தில் “வானவல்லி” இடை நிறுத்தப்படக் காரணம்?
—> நான் எழுதியதை பலர் அவர்களின் தளத்தில் வெளியிட்டு அவர்களின் பெயரைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். புத்தகம் வெளியாகும் நேரத்தில் அவர்களால் எந்த இடையூறும் நேர்ந்துவிடக் கூடாது என்பதால் பாதியில் நிறுத்தி விட்டேன்.
* “வானவல்லி”க்காக நீங்கள்   சந்தித்த சவால்கள் என்ன?
—-> இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய கதைக் களம் என்பதால் அக்காலம் எப்படி இருக்கும்? மக்களின் வாழ்க்கை முறை, அரசியல், போர், போரியல் கருவிகள் ஆகியவற்றை அறிவதில் பெருத்த சவால்களை சந்தித்தேன். வானவல்லி கதைக்களங்களை நேரில் பார்க்க புகார், கல்லணை, உறையூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்தேன். ஆனால், கால மாற்றத்தில் பல மாற்றங்களை சந்தித்து வரலாற்றுக்கும் அதற்கும் தொடர்பில்லை எனும் ரீதியில் நின்றுகொண்டிருந்தன. அப்பகுதிகளைக் காணும்போது நானாகவே  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பயணித்து இந்தப் பகுதிகள் இப்படித்தான் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து கொண்டேன். தினமும் தொடர்ந்து எழுதியதால் எப்படி இரண்டாயிரம் பக்கங்களைக் கடந்தேன் என்று தெரியவில்லை. தகவல்களை திரட்டுவது தான் பெருத்த சவால்களாக இருந்தது. தகவல்கள் கிடைத்ததும், அதை கதையுடன் இணைப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.
                                                          **********
நண்பர் வெற்றிவேல் தற்போது மற்றுமொரு புதினத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். விரைவில் அது தொடர்பான நேர்காணலும் நமது தளத்தில் வெளியாகும். காத்திருங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here