வானவல்லி முதல் பாகம்: 13 மன்னன் இளஞ்சேட்சென்னி #Karikalan

Vaanavalli
Vaanavalli

ளி பொருந்திய அழகிய முகத்தையும், கூர்மையான பார்வையும் நேர்த்தியாகச் செய்யப்பட்ட அணிகலன்களையும் அணிந்த புகார் நகரப் பெண்கள், அகன்ற வீட்டின் பரந்த முற்றத்தில் உலர்த்தியிருக்கும் தானியங்களையும், உணவுப் பொருள்களையும் உண்ண வரும் கோழிகளை விரட்ட தன் காதுகளில் அணிந்துள்ள முத்துகள் பொறிக்கப்பட்ட கனத்த அடிப்பாகத்தை உடைய தங்கக் குழையினை (காதணி) எறிவர். இக்குழையானது, பொன்னாலான அணிகலன்களை அணிந்திருக்கும் குழந்தைகள் நடை பயில்வதற்காகப் புரவியின்றிக் கையால் உருட்டும் மூன்று கால்களை உடைய சிறு தேரின் சக்கரத்தில் அகப்பட்டு, அச்சிறு தேர் முன்னே செல்ல அனுமதிக்காமல் தடுத்துக்கொண்டிருக்கும். இப்படித் தடைகளாக வரும் பகையே அன்றி வேறு கலக்கமுறுவதற்குக் காரணமான எதிரிகளால் வரும் பகையை அறியாத பட்டினம் தான், பூம்புகார். #Vaanavalli #Karikalan

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

Karikalan
Karikalan

இப்படி, விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா பொன்னையும் பொருளையும், மண்ணையும் பெருமையாகக் கொள்ளாத சோழ தேச மக்களுக்குச் சமீப காலமாகவே பெரும் இடையூறு அவர்கள் அறியாத வண்ணம் சூழ்ந்துகொள்ள ஆரம்பித்திருந்தது.

1உறைந்தையில் வாழ்ந்து வந்த சோழ மன்னன் இளஞ்சேட்சென்னி இறந்து பல காலம் ஆகியிருந்த நிலையில் முடிசூடாத அவரது புதல்வன் இளவரசன் வளவன் காணாமல் போயிருந்தான். இளவரசனின் மெய்க்காப்பாளரும், மாமனுமாகிய இரும்பிடர்த்தலையரும், உப தலைவன் செங்குவீரனும் சேர்ந்து இந்த மாபெரும் அதிர்ச்சிகரமான செய்தி குடிமக்களுக்குத் தெரிய விடாமல் தடுத்துக்கொண்டிருந்தனர்

இளஞ்சேட்சென்னி காலத்தில் வடக்கே தேவனாம்பியாச அசோகப் பியதசி* எனும் அசோகனது மௌரியப் பேரரசும், கலிங்கப் பேரரசும் சம வலிமை பெற்று விளங்கியது. கலிங்கம் வளர்ந்து கொண்டிருந்ததைக் கண்ட அசோகன் முதலில் கலிங்கத்தின் மீது கலிங்க மன்னன் எதிர்பார்க்காத நேரத்தில் போர் தொடுத்தான். இரு படைகளுக்கும் கடுமையான உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது. ஆனால் அசோகனது படை பலம் அதிகம் என்பதால் கலிங்கப் படை முடிவில் தோற்கடிக்கப் பட்டு அசோகன் பெரும் வெற்றிப் பெற்றான். அசோகப் பியதசி முதலில் முந்திக்கொண்டு கலிங்க பேரரசனை அழிக்காமல் விட்டிருந்தால், கலிங்க மன்னனே முதலில் போர்தொடுத்து மௌரியப் பேரரசை நிர்மூலமாக்கியிருப்பான், அந்த அளவிற்கு வலிமையுடன் திகழ்ந்தனர் கலிங்கர்கள். கலிங்கத்தில் அசோகன் பெற்ற வெற்றியும், அவன் சூறையாடிய தங்கம் மற்றும் பொன் முதலிய பொருள்களும் அவனது பார்வையைத் தென்னகத்தின் மீது திரும்ப வைத்தது. முத்து பாண்டிய நாட்டிலும், பவளம் சோழ நாட்டிலும், முத்து, மணி, மிளகு போன்றவை சேர நாட்டிலும் மிகுதியாய்க் கிடைத்தன. அக்காலத்தில் பொன், முத்து, பவளம் முதலிய விலை மதிக்க இயலாத செல்வங்கள் தென்னகத்திலிருந்தே வட நாட்டிற்குத் தக்காணத்தின் வழியாகச் சென்றதனால், தென்னகத்தின் இயற்கை வளமும், பொருள் வளமும் அசோகனது பார்வையைத் தென்னகத்தின் மீது கவர்ந்து இழுக்கச் செய்தது. மேலும் வட பாரதம், ஆப்கானிஸ்தானம் முழுவதும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியிருந்த அசோகன் தென்னகத்தின் மீதும் விரிவுபடுத்தி நாவலந்தீவு முழுமைக்கும் மாபெரும் சக்ரவர்த்தியாகத் திட்டமிட்டுத் தமிழகத்தின் மீதும் போர் தொடுத்தான்.

தென்னகச் சோழப் பேரரசின் வலிமையைக் குறைவாக மதிப்பிட்ட அசோகப் பியதசி சொன்ன சொல் தவறாதவர்கள் என்றும் வாய்மொழிக் கோசர்கள் எனவும் அக்காலங்களில் பெரிதும் புகழப்பட்ட வீரர்களான கோசர்களின் துணைக்கொண்டு தனது முழுப் படையையும் அனுப்பாமல் எல்லைப்புற படையை மட்டுமே கொண்டு முழு தமிழகத்தையும் வென்று விடலாம் என்று மௌரிய எல்லைப்புற மற்றும் கோசர் படைகளை அனுப்பினான். அசோகன் நினைத்தது போலவே தனித்தனி அரசுகளாகச் சிதறியிருந்த சிறு நாடுகளை வெற்றிகொண்டபடியே மௌரிய மற்றும் கோசர் படையினர் தமிழகத்தின் எல்லைக்குள் முன்னேறிக் கொண்டிருந்தனர்.

முதலில் துளுவ நாட்டை ஆண்டு கொண்டிருந்த நன்னன் என்பவனோடு போரிட்டு துளுவ தேசத்தை வென்றதோடு மட்டுமல்லாமல் அவனை நாட்டை விட்டு காட்டுக்குள் விரட்டி, அவனது முக்கிய நகரான பாழிக் கோட்டையை வலிமை படுத்திக்கொண்டு தென்னகத்தில் மௌரியர்கள் தங்களுக்குத் திடமானத் தளம் அமைத்துக் கொண்டனர்.

மௌரிய மற்றும் கோசர் படையினர் துளுவ நாட்டின் எல்லையைக் கடந்து சேரனையும், அதிய மரபினது எழினியின் நாட்டையும், சோழ நாட்டிலுள்ள அழுந்தூர் வேளையும், பாண்டிய நாட்டின் எல்லையிலுள்ள மோகூர்த் தலைவனையும் தாக்கினர்.

சேரர் படைத்தலைவன் குதிரை மலைக் கோமானாகிய பிட்டங்குற்றன் மௌரியரை சேரர்களின் எல்லையில் எதிர்த்தான். தொடர்ந்து நடைபெற்ற இப்போரில் மௌரியர்களின் கை வலுத்திருந்தது. செல்லூர்க் கீழ்த்திசைப் போரில் அதிய மரபினன் எழினியின் மார்பில் வேல் பாய்ந்து உயிர் துறந்தான். யாராலும் தடுக்கப்படாமல் வெற்றி பெற்றபடியே முன்னேறி வந்த மௌரிய மற்றும் கோசர் படையினர் அழுந்தூர் வேள் திதியன் தனது படையினரின் தீரத்தினால் செல்லூரில் தடுத்து நிறுத்தினான். பாண்டிய எல்லை வட்டாற்றில் அவர்களைத் தடுத்துக் கொண்டிருந்த மோகூர்த் தலைவனிடமும் மௌரியர்களின் கைவரிசை பலிக்கவில்லை.  முதலில் அவர்களைத் தடுத்து நிறுத்திய அழுந்தூர் வேள் திதியன் அவர்களை நையப்புடைத்து கடும் சேதத்தை விளைவித்து விரட்டவும் ஆரம்பித்தான்.

அக்காலத்தில் வட தேசத்திற்கும், தென்னகத்திற்கும் இடையே அமைந்திருந்த வடுகவழி என்ற கீழ்க்கடற்கரைப் பகுதியில் பெரும் காடு மண்டிக் கிடந்தது. காடுகளுக்கு அப்பால், மௌரியப் பேரரசின் எல்லையில் நிலை கொண்டிருந்த அசோகன் வடுகவழிக் காடுகளை அழித்துச் சாலை அமைத்துச் சென்று மோகூர்த் தலைவன் மற்றும் அழுந்தூர் வேளிடம் திணறிக் கொண்டிருந்த தனது எல்லைப் படைகளுக்கு உதவுமாறு தனது முழுப் படையையும் ஏவினான்.

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here