காட்டு அழகர் கோயில் பயணம்

சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ

ல வண்ணங்களைக்கொண்ட வண்ணத்துப் பூச்சிகள், தங்களுடைய சிறகுகளிலிருக்கும் வண்ணங்களைத் தூவியபடி பறந்து திகழும் திருமாலிருஞ்சோலையில் திகழும் இறைவன், மந்தார மலை கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தம் போன்ற திருமகளைக் கொண்டவர், அழகிய தோள்களையுடைய அழகர். அவர் மீதான காதலில் அகப்பட்டுவிட்டேன். அதிலிருந்து எப்படி மீள்வேன்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

இப்படி, ஆண்டாள் பாடிச் சிறப்பித்த திருமாலிருஞ் சோலை இறைவன் கள்ளழகரின் மகிமையை எல்லோரும் அறிவோம். இவரைப் போன்றே, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் செண்பகத்தோப்பு எனும் பகுதியில் மலை மீது கோயில் கொண்டிருக்கும் காட்டழகரைப் பற்றி அறிவீர்களா?

ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது செண்பகத்தோப்பு; மலையடிவாரப் பகுதி. அங்கிருந்து சுமார் 7 கி.மீ. தூரம் மலைப் பாதையில் பயணித் தால் காட்டழகர் கோயிலை அடையலாம். அப்படிப் பயணிக்கும்போது,  திருமாலிருஞ்சோலைக்கு எவ்விதத்திலும் இளைத்ததல்ல என்று, தனது வனப்பாலும் இயற்கை எழிலாலும் நிரூபிக்கிறது செண்பகத்தோப்பு மலைப்பகுதி.

பல வண்ணக் கலவையோடு சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள், கிளைக்குக் கிளை தாவி குதியாட்டம் போடும் குரங்குகள், கம்பீரமான காட்டு மாடுகள், வானுயர்ந்து நிற்கும் மரங்கள், குளிர்ந்த நீரோடைகள், சுனைகள் ஆகியவற்றை ரசித்தபடியே நாம் மலையேறிக்கொண்டிருக்க, உடன் வந்த அன்பர் ஒருவர், காட்டழகர் கோயிலின் திருக்கதையைக் கூறத் தொடங்கினார்.

முற்காலத்தில், மதுரை அழகர் மலையில் தங்கியிருந்த சுதபா முனிவரைப் பார்ப்பதற்காக துர்வாசர் முனிவர் வந்திருந்தார். அவரின் வருகையைக் கவனிக்காமல், நீருக்குள் மூழ்கி பெருமாளைக் குறித்த தியானத்தில் ஆழ்ந்திருந்தார் சுதபா முனிவர். வெகுநேரம் காத்திருந்து பொறுமை இழந்த துர்வாசர், ‘‘என்னைக் கவனிக்காமல் நீருக்குள் அமிழ்ந்துகிடக்கும் நீர், மண்டூகமாக மாறக்கடவது’’ என்று சபித்துவிட்டார். மண்டூகம் என்றால் தவளை என்று பொருள்.

பின்னர், சுதபா முனிவர் தமது நிலையை விளக்கி விமோசனம் வேண்டினார். அவரிடம், “தர்மாத்ரி பர்வதம் வராக க்ஷேத்திரத்தில் பாயும் நூபுர கங்கையில் நீராடினால் சாபவிமோசனம் பெறுவீர்” என்று கூறினார் துர்வாசர்.

ஆனால்  சுதபா முனிவரோ,  “அழகர் மலையின் அருவியில் நீராடி பெருமாளை வழிபடுவதை எனது ஆயுள் விரதமாகக் கொண்டிருக்கிறேன். அப்படியிருக்க, நான் எப்படி நூபுர கங்கைக்குச் செல்வது?’’ என்று வருந்தினார். இந்த நிலையில், அழகர் மலையில் வசித்த வசிஷ்டர், பரத்வாஜர், ஆர்ட்டிசேனர் முதலிய ரிஷிகள் அவருக்கு ஒரு வழி சொன்னார்கள்.

“அழகர் மலையில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த அருவி, நூபுர கங்கையுடன் இணையப்போகிறது. அந்த இடத்துக்குச் சென்று நீராட லாம். அதனால், உனது விரதத்துக்கும் பங்கம் ஏற்படாது; அழகரின் திருவருளையும் பரிபூரணமாகப் பெறலாம்’’ என்றார்கள்.

அதன்படியே, சுதபா முனிவர் வான்வழியாகவே வந்துசேர்ந்தார், வராக க்ஷேத்திரம் எனப்படும் இந்தக் காட்டு அழகர் மலைக்கு. இங்கே நூபுர கங்கையில் நீராடி சாபமும் நீங்கப்பெற்றார். அவருக்குக் காட்சி யளித்த அழகரும் இங்கேயே கோயில்கொண்டு, காட்டு அழகர் என்று திருப்பெயர் பெற்றார். இப்போதும் கோயிலில், பெருமாளை வழிபட்ட நிலையில் காட்சி தருகிறார் சுதபா முனிவர். அவரின் சாபத்தைப் போக்கிய நூபுர கங்கை தீர்த்தமாக விழுந்துகொண்டிருக்கிறது.

இந்த அருவி எங்கு தொடங்குகிறது என்பதை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். ஆங்கிலேயர்களும் இந்த முயற்சியில் தோல்வியையே சந்தித்தார்களாம். இந்த நூபுர கங்கையைப் பற்றி நாம் விசாரித்தபோது, சிலிர்ப்பான தகவலொன்று கிடைத்தது. ஆம்! காட்டு அழகர் கோயிலுக்கும் மேலே மலையின் உச்சியில் சப்த கன்னியர் கோயில் ஒன்று இருப்பதாகவும், அங்கிருக்கும் கன்னியர்கள் இந்த நூபுர கங்கையில்தான் தினமும் நீராடுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள். மழைக்காலமோ, கோடைக்காலமோ இந்த நூபுர கங்கையில் விழும் தண்ணீரின் அளவு  மாறுபடுவதே இல்லை என்றும் சிலாகித்துச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

இந்த நூபுர கங்கைக்கு மற்றொரு பெயர் சிலம்பாறு. நூபுரம் என்றால் சிலம்பு. பெருமாளின் வாமன அவதாரத்தில், அவர் திரிவிக்கிரமாக வளர்ந்து விண்ணளந்தபோது, அவரின் தூக்கிய திருவடியை பிரம்மன் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகித்தார். அந்தத் தீர்த்தம் பகவானின் சிலம்பில் பட்டுத் தெறித்து விழ, அதுவே இந்த மலையில் நூபுர கங்கையாகப் பாய்வ தாக ஐதீகம். இதையொட்டியே சிலம்பாறு எனும் பெயர் வந்ததாம். மட்டுமின்றி  ஆகாச கங்கை, மஞ்சுர நதி ஆகிய பெயர்களும் வழங்கப் படுகின்றன.

காட்டு அழகரை தரிசிக்க வரும் பக்தர்கள், இந்த நூபுர கங்கையில் நீராடிவிட்டே அழகரை தரிசிக்க மேலும் படியேறுகிறார்கள். அதாவது, நூபுர கங்கை இருக்கும் இடத்திலிருந்து மேலும் 247 படிகள் ஏறிச் செல்லவேண்டும். தமிழ் எழுத்துக்களைக் குறிக்கும் வகையில் 247 எனும் எண்ணிக்கையில் இந்தப் படிகள் அமைக்கப்பட்டனவாம். நூபுர கங்கையில் நீராடிவிட்டு, ஈர உடையுடன் இந்தப் படிக்கட்டுகளில் ஏறி மேலே சென்றால், `தர்மாத்ரி பர்வதம் – வராக க்ஷேத்திரம்’ எனச் சிறப்பிக்கப்படும் காட்டு அழகரின் திருக்கோயில் அமைந்துள்ளது.

உயர்ந்து திகழும் சிகரத்தின் அடிப்பாகத்தை யொட்டி அமைந்துள்ளது,  ஸ்ரீசுந்தரவல்லி- ஸ்ரீசௌந்தரவல்லி சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோயில். இந்தப் பெருமாளையே காட்டு அழகர் என்று பக்தியோடு அழைத்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். பெரியாழ்வார் தம் பாசுரங்களில் குறிப்பிடும் ‘தென் திருமாலிருஞ்சோலை’ எனும் இடம் இதுதான் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here