தமிழகத்தின் குருஷேத்திரம் #Manimangalam

குருஷேத்திரம்

அனைத்துக் கடமைகளையும் கைவிட்டு,
என்னை  மட்டுமே ஒரே புகலிடமாகக் கொண்டு சரணடைவாயாக,
பாவங்கள் அனைத்திலுமிருந்தும் உன்னை விடுவிக்கிறேன்…  (#Manimangalam)

–  பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (பகவத் கீதை)

குருஷேத்திரப் போரில் அர்ச்சுனனுக்குச் சாரதியாக விளங்கியவர் கிருஷ்ணர். ஆயுதம் தரிக்காமல் தனது ‘பாஞ்சஜன்யம்’ என்ற சங்கை மட்டுமே பயன்படுத்தினார். ஆயுதம் தரித்திருக்காவிட்டாலும், பாஞ்சஜன்ய சங்கின் முழக்கத்தைக் கேட்டே கௌரவப் படையினர் நடுநடுங்கலானார்கள். கிருஷ்ணர் வலது கையில் தனது பாஞ்சஜன்யத்தைத் தாங்கியிருந்தது குருஷேத்திரப் போரில் மட்டுமே. அதே கோலத்தில் தான் அர்ச்சுனனுக்கு பகவத் கீதையையும் உபதேசம் செய்து சரணாகதி அளித்தார்.

ஓர் எச்சரிக்கை அலர்ட் : மோமோவிலிருந்து தப்பிப்பது எப்படி? #MOMO #மோமோ

அர்ச்சுனனுக்குச் சரணாகதி அளித்த கோலத்தில் கிருஷ்ணர் வலது கையில் சங்குடன் ‘துவாரபுரித் தேவர்’ எனும் பெயரில் மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலில் மட்டும் அருள்புரிகிறார். வேறு எங்கும் காணக்கிடைக்காத குருஷேத்திர கிருஷ்ணரின் அற்புதக் கோலம் இது.

Manimangalam Temple
மணிமங்கலம் கோயில்

இங்கு மட்டும் குருஷேத்திரக் கிருஷ்ணராக அவதரித்திருப்பதற்குக் காரணம் இருக்கிறது…

மணிமங்கலமும் ஒரு காலத்தில் குருஷேத்திரத்தைப் போன்றே பெரும்போர் நடைபெற்ற குருதி படிந்த மண். கி.பி 640 வாக்கில் சாளுக்கியப் பேரரசன் இரண்டாம் புலிகேசி பல்லவர்கள் மீது போர் தொடுத்தான். பல்லவர்களின் படை நரசிம்மவர்மனின் தலைமையில் சாளுக்கியரை எதிர்கொண்ட இடம் மணிமங்கலம். மணிமங்கலத்தில் பெரும் போர் நடைபெற்றது. போர் முடிவில் நரசிம்மவர்மன் வெற்றிபெற்றான், சாளுக்கியப் படையுடன் இரண்டாம் புலிகேசி பின்வாங்கினான். வெற்றி உத்வேகத்தில் நரசிம்மவர்மன் இரண்டாம் புலிகேசியை விரட்டிச் சென்று சாளுக்கியர் தலைநகர் வாதாபியைத் தாக்கி தீக்கிரையாக்கினான். இரண்டாம் புலிகேசியும் போரில் கொல்லப்பட்ட, நரசிம்மவர்மன் பெருவெற்றி பெற்றான். ‘வாதாபி கொண்டான்’ எனும் பெரும்பேருடன் திரும்பினான் நரசிம்மவர்ம பல்லவன். கூரம் செப்பேடு மணிமங்கலத்தைப் பற்றித் தெரிவித்திருக்கும் தகவல்கள் இவை.

“பல்லவ நாடு திரும்பிய நரசிம்ம வர்மன் பெரும்போர் நடைபெற்ற மணிமங்கலத்தைக் குருஷேத்திரமாகக் கருதி, போரில் இறந்தவர்கள் அனைவருக்கும் சொர்க்கத்தில் சரணாகதி கிடைக்க வேண்டும் என்று கிருஷ்ணனுக்குக் கோயில் எடுத்தான்” என்று கூறுகிறார்கள் உள்ளூர்க்காரர்கள். அதனால் தான் குருஷேத்திரப் போரில் பார்த்தனுக்குக் கிருஷ்ணன் அருள்புரிந்ததைப் போன்றே இங்கும் ‘துவாரபுரித் தேவர்’ எனும் பெயரில் வலக்கை சங்குடன் கிருஷ்ணர் அருள்புரிகிறாராம்.

கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டது என்று கூறப்பட்டாலும், செவி வழி செய்தியைத் தவிர உறுதியான ஆதாரம் எதுவும் காணப்படவில்லை. தற்போதிருக்கும் கற்றளி சோழர்களால் எழுப்பப்பட்டது. கோயிலில் அடையாளம் காணப்பட்ட கல்வெட்டுகளில் பழைமையானது ராஜாதிராஜனுடையது. ராஜகேசரிவர்மன் எனும் மன்னன் பெயர் குறிப்பிடப்படாத கல்வெட்டு ராஜேந்திரனுடையதாக இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. இதன் மூலம் நோக்குகையில் ராஜகோபால சுவாமி கோயில் ராஜேந்திரனாலோ அல்லது அவனது மகனாலோ கற்றளியாக எழுப்பப்பட்டிருக்கலாம் என்று கருதலாம்.

பழம்பெருமை கொண்டது இந்த ஊர் மணிமங்கலம். மணிமங்கலம் என்றால் கிராமங்களில் மணி போன்றது என்று பொருள். பல்லவர்கள் காலத்தில் வடமொழியில் இதனை ரத்தினகிருஹம், கிராம சிகாமணி என்று பெருமையுடன் கூறப்பட்டுள்ளன. சோழர்களால் லோகமாதேவி சதுர்வேதி மங்கலம், ராஜ சூளாமணி சதுர்வேதி மங்கலம், பாண்டியனை இருமடி வென்கண்ட சோழச்சதுர்வேதி மங்கலம், கிராம சிகாமணி சதுர்வேதி மங்கலம் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்ட ஊர் இது.

எம்பெருமான், துவாரபுரித் தேவா், வண்டு வராபதி எம்பெருமான், காமகோடி விண்ணகர ஆழ்வார், பரவுாி விண்ணகராழ்வாா், வண்டு வராபதித் திருவாய்க் குலத்தாழ்வாா், மன்னனார் கோயில் சிங்கபெருமாள், வண்டு வராபதி கோயில் இறைவன் என்று பல்வேறு பெயர்களில் கிருஷ்ணர்  வணங்கப்பட்டிருக்கிறார். கிருஷ்ணாவதாரத்தில் இடையனாக மாடு மேய்த்ததால் எம்பெருமானுக்கு ‘ராஜகோபாலன்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.  ஆடு மேய்த்த கிருஷ்ணரின் பெயரால் இத்தல துவாரபுரித் தேவர் ‘ராஜகோபால சுவாமி’ என்று அழைக்கப்படுகிறார். ஶ்ரீமத் ராமானுஜா் ஶ்ரீபெரும்புதூா் தலத்திலிருந்து இத்தலத்திற்கு எழுந்தருளி எம்பெருமானுக்கு கைங்கா்யங்கள் செய்து மகிழ்ந்துள்ளார்.

கோயில் அமைப்பு :

கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம், கருட மண்டபம், கொடி மரம், பலிபீடம், தீப ஸ்தம்பம் என்று திட்டமிடப்பட்டு மிக நேர்த்தியாகக் கோயில் கட்டப்பட்டுள்ளது. கருவறைக்குப் பின்புறத்தில் இரண்டு பக்கங்களிலும் தாயார் செங்கமலவல்லி, ஆண்டாள் நாச்சியாருக்கும் தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன. தாயார் சந்நிதிக்கு முன் ஊஞ்சல் மண்டபம் ஒன்றும் காணப்படுகிறது.

கருட மண்டபத்தில் அருள்புரியும் கருடாழ்வாரையும், கோபுரத்தில் காணப்படும் வராகரையும் தரிசித்துவிட்டு கோயிலுக்குள் சென்றால் உள் பிரகாரத்தில் சேனை முதலியார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருக்கச்சி நம்பி, எம்பெருமானார், மணவாள மாமுனிகள் ஆகியோர் அருள்தருகிறார்கள். அவர்களைத் தொழுதுவிட்டு கர்ப்பகிரகத்துக்குச் சென்றால் கருவறையில் பத்ம பீடத்தின் மீது நான்கு திருக்கரத்துடன் கிழக்கு நோக்கிய திருமுகமாகக் காட்சியளிக்கிறார் ஸ்ரீ ராஜகோபால சுவாமி. பேரழகின் மறு உருவமமாதத் திகழ்கிறார் ராஜகோபால சுவாமி. வித்தியாசமாக வலதுகரத்தில் சங்கு, இடதுகரத்தில் சுதர்சன சக்கரம், கீழ் இடது கரத்தில் அதர்மத்தை அழிக்கும் கதாயுதம், கீழ் வலக்கரத்தில் அபய முத்திரையுடன் எழுந்தருளியிருக்கிறார் ராஜகோபால சுவாமி. பெருமானின் வலது புறத்தில் திருமகளான ஶ்ரீதேவியும், இடது புறத்தில் நிலமகளான ஶ்ரீபூமி தேவியும் திருக்காட்சி அளிக்கிறார்கள்.

Manimangalam Rajakobalaswami
மணிமங்கலம் கோபாலசுவாமி

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here