வெற்றிக்குக் கடிதம் – 1

0
11

பேரன்புள்ள வெற்றிவேல்…

‘நலமா?’ என்ற கேள்வியைக் கேட்டு என் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. ஏனெனில், யார் உன்னிடம் இந்தக் கேள்வியை எழுப்பினாலும் போலியான புன்னகை ஒன்றை வெளிப்படுத்தி ‘நல்லாருக்கேன்’ என்ற பதிலைத் தெரிவித்துவிட்டுச் செல்கிறாய். உன்னைப் பற்றி மற்றவர்கள் வேண்டுமானால் அறியாமல் இருக்கலாம். உன்னுடனே காலத்தைக் கழிக்கும் நான் உன்னைப் பற்றி அனைத்தையும் அறிவேன் என்பதை மறந்துவிடாதே.

உன் முகத்தைக் காண சகிக்கவில்லை. நீ வேண்டுமானால் அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால், சவரம் செய்து சில மாதங்கள் ஆகிறது வெற்றி. உன் முகத்தில் வளர்ந்திருக்கும் பிடரி மயிர் உனக்கு நன்றாகவே இல்லை. உன் எதிரில் வருபவர்களின் நிலையை நினைத்துப் பார். பாவம் அவர்கள்.

உன் செயல்பாடுகள் வர வர மோசமாகிக் கொண்டிருக்கின்றன. கவலையளிக்கிறது வெற்றிவேல். சரியான நேரத்திற்கு உறங்குவதில்லை. சரியான நேரத்திற்கு எழுவதில்லை. உறங்க வேண்டும் என்று விரைவில் படுக்கைக்குச் சென்று படுத்தாலும் இரவு முழுவதும் உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருக்கிறாய். சரி, உறக்கம் வராத பொழுதுகளை நன்முறையில் பயன்படுத்திக்கொண்டாலும் மகிழ்வேன். அதையும் செய்வதில்லை நீ. புத்தகங்களைப் படித்து நெடுநாட்கள் ஆகின்றன. எழுதுவதும் இல்லை. என்ன ஆனது உனக்கு வெற்றிவேல்?

சங்க காலத்திலேயே கோவலன் – கண்ணகியோடு வழக்கொழிந்து போன சொற்களுக்கு அர்த்தத்தைத் தேடி நீ உன்னை நீயே துன்புறுத்திக் கொண்டிருக்கிறாய். மனம் என்பது எப்பொழுதும் இப்படித்தான். குரங்கினைப் போன்று மாறிக் கொண்டே இருக்கும். எது நம்மிடம் இல்லையோ அதைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டே இருக்கும். இது மனித மனதின் இயல்பு. அதைப் பற்றி நன்கு தெரிந்த பிறகும் நீ இப்படி கவலையில் உழன்றுகொண்டு இருப்பதை நான் வெறுக்கிறேன் வெற்றிவேல்.

இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழும் கலையை அறிந்தவன் நீ. நீயே இப்படி கடமையை மறந்து கடந்த காலத்தை எண்ணி உழன்றுகொண்டிருந்தால் எப்படி? காலம் என்பது ஒருவழிப் பாதை வெற்றி. காலத்தின் எஞ்சிய சுவடுகள் தான் நினைவுகளும், ஞாபகங்களும். காலப் பெருவெளிப் பயணத்தில் சிலரை எதற்காகச் சந்தித்தோம், எதற்காகப் பழகினோம் என்று காரணமே இருக்காது. காலப்போக்கில் நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கும். அந்த நினைவுகளைக் கொண்டு வாழ்வதற்குப் பழகி விடு. கவலையில் உழன்று நீயும் காணாமல் போய் விடாதே.

உனக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. எழுதுவது மட்டுமே உனக்கான பணி. உன் தேடலும் அதைச் சார்ந்தே இருக்க வேண்டும். நினைவு வரும் நாளிலிருந்து எத்தனைப் பேரை நீ கடந்திருப்பாய். இப்பொழுது உன்னுடன் இருப்பது யார் யார் என்று நினைத்துப் பார்? உன்னைத் சூழ்ந்திருக்கும் மாயை உன்னை விட்டு விலகிவிடும். இன்னும் எத்தனை வருடங்கள் நீ இருக்கப் போகிறாய் என்பதை நீ அறிவாயா? இருக்கும் வரை மகிழ்ச்சியுடன் வாழப் பழகு வெற்றி. உனக்கான கடமையை நோக்கி தொடர்ந்து நகர்ந்துகொண்டிரு. உன்னுடன் இருப்பவர்களை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு வாழப் பழகு. அதுதான் நல்லதும் கூட…

உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன் கேள். அதைக் கேட்ட பிறகு நீ எப்படி இருக்க வேண்டும் என்று நீயே முடிவெடுத்துக் கொள்.

1971 – ம் ஆண்டு மொராக்கோ மன்னர் இரண்டாம் ஹசன் தனது 42 -வது பிறந்த நாளைத் தனது குடும்பத்தினர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சூழ வெகு விமர்சையாகக் கொண்டாடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சில ராணுவ வாகனங்கள் வந்தன. அதில் வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் அணிவகுத்து நின்றார்கள்.

அப்பொழுது ராணுவத் தளபதி அவ்வீரர்களுக்குக் கட்டளையிட்டான், “மன்னர், அவரது குடும்பத்தினர், விருந்தினர்கள், அதிகாரிகள் என அனைவரையும் சுட்டுக் கொல்லுங்கள்” என்று.

கண நேரம் சிப்பாய்களுக்கு எதுவும் புரியவில்லை. மன்னருக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறிதான் வீரர்களைத் தளபதி அழைத்து வந்திருந்தான். ‘மன்னரைச் சுடுவதா?’ என்று வீரர்கள் தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்தார்கள்.

ராணுவத் தளபதி மீண்டும் கட்டளையிட்டான்.

மன்னரை விடவும் ராணுவத் தளபதியின் கட்டளையே உயர்ந்தது என்று நினைத்த வீரர்கள் உடனே தளபதியின் கட்டளையை ஏற்று கண்மூடித்தனமாகச் சுடலானார்கள். பிறந்த நாள் விழாவில் கூடியிருந்தவர்கள் அனைவரும் அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடினார்கள். ராணுவப் புரட்சி என்பதைப் புரிந்துகொள்ள அனைவருக்கும் சற்று நேரம் பிடித்தது. அதை உணர்வதற்குள் மன்னரின் நூற்றுக்கும் மேற்பட்ட விருந்தினர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று பலபேர் இறந்திருந்தார்கள்.

ராணுவ வீரர்கள் தனக்குத் துரோகம் செய்து கலகம் ஏற்படுத்தினாலும் மன்னர் தனது அந்தரங்க மெய்க்காவல் வீரர்களின் துணையுடன் அவர்களை ஒடுக்கினார்.

அப்போது அவரது உணர்ச்சிக் கொந்தளிப்பு எப்படி இருந்திருக்கும்? ‘தனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியவர்களே தனக்கு எதிரானவர்களாகத் திரும்பி தன்னை அழிக்க முடிவு செய்துவிட்டார்கள். இவர்களைக் கொல்வதுதான் தண்டனையா? கண நேரத்தில் இவர்களைக் கொல்வது இவர்களுக்கு அளிக்கப்படும் பரிசாகத் தானே இருக்கும்?’ இவர்களை எப்படித் தண்டிக்கலாம்? என்று சிந்தித்தார்.

அப்பொழுதுதான் அந்தக் கொடூரமான சிந்தனை அவருக்குத் தோன்றியது. உலகத்தில் எங்கும் பின்பற்றிக் கேட்டிராத முறையில் சிறை ஒன்றை உருவாக்கி கலகத்தில் சிறைப்பட்ட ராணுவ வீர்களை அடைத்தார்.

பூமிக்கு அடியில் பத்து அடி நீளம், ஐந்து அடி உயரம் கொண்ட குழி ஒன்றைக் கற்பனை செய்துகொள் வெற்றி. அதுதான் அவர்களின் சிறை. மொராக்கர்கள் ஆறு அடிக்கும் உயரமானவர்கள் என்பதால் அவர்களால் எழுந்து நிற்கவும் முடியாது. கால்களை நீட்டி அமரவும் முடியாது. நீண்டு படுக்கவும் முடியாது. அந்தச் சிறிய அறைக்குள் சிறு குழி ஒன்று இருக்கும். அங்குதான் அவர்கள் காலைக் கடன்களைக் கழிக்க வேண்டும். அந்தச் சிறை முழுவதும் நாற்றம். தலைக்கு மேலே காணப்பட்டு சிறு துளை வழியே பட்டினியுடன் உயிர் வாழும் அளவிற்கு வேண்டிய ரொட்டித் துண்டுகளும், தண்ணீரும் தினமும் அளிக்கப்படும். காற்று வீசாது. எப்பொழுதும் புழுக்கம் மட்டுமே நிறைந்திருக்கும்.

சிறைச் சாலையின் சிறப்பு இது மட்டும் இல்லை. மன்னர் ஹசனின் மனதில் தோன்றியதோ இதைவிடவும் கொடூரமான எண்ணம். ஒரு மனிதன் இறக்கும் வரை வெளிச்சத்தைப் பார்க்காமலே சிறையில் இருந்தால் எப்படி இருக்கும் அவனது மனநிலை?’

அதனைச் செய்தார் ஹசன். அறைக்குள் துளியளவு வெளிச்சம் கூட நுழையாத அளவிற்கு அதனை வடிவமைத்தார். இருள் மட்டுமே அந்த அறையைச் சூழ்ந்திருந்தது.

இப்படி அமைக்கப்பட்டது ஒரு சிறை மட்டுமல்ல. மொத்தம் 58. 58 சிறை அறைகளில் 58 பேர் அடைக்கப்பட்டார்கள். கலகத்தில் கொல்லப்பட்டவர்கள் தவிர எஞ்சிய 58 பேரில் அனைவரும் குற்றவாளிகள் இல்லை. அவர்கள் தளபதியின் உத்தரவைக் கேட்டு நடந்தவர்கள். மேலும் பல வீரர்கள் அதிகாரிகளின் கட்டளையை நிறைவேற்றாமல் வெறுமனே நின்றவர்கள். மன்னர் அவர்களைப் பற்றி எந்தவிதத்திலும் கவலைப்படவில்லை. தன்னை எதிர்க்க நினைத்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவருக்கு மேலோங்கியிருந்தது. ஏனெனில், பழி வாங்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் வந்துவிட்டால் மனம் கொடூரமாக நினைக்கும் வெற்றி.

சிறை என்ற பெயரில் காணப்பட்ட அந்த இருள் சூழ்ந்த பொந்திற்குள் ஏகப்பட்ட பூச்சிகள், தேள், பூரான், பாம்புகள் எப்போதும் ஊர்ந்துகொண்டிருக்கும். இருள் மட்டுமே நிரம்பியிருந்த அந்த அறைக்குள் அவற்றைத் தொட்டுப்பார்த்தால் தான் அடையாளம் காண இயலும். பைத்தியம் பிடிக்க வைக்கும் அந்த இருளினால் பலருக்குப் பைத்தியம் பிடித்தது. அமரக் கூட முடியாத அறையில் சிறு நீரைக் கழித்து, காலைக் கடனைக் கழித்து, அதே அறையில் இருந்து சாப்பாட்டை உண்டு வெளிச்சம் என்பதைப் பார்க்காமலேயே உயிர் வாழ வேண்டும். எப்படி அவர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்று நினைத்துப் பார் வெற்றி. கற்பனை செய்து பார்.

பைத்தியம் முற்றி சிலர் இறந்தார்கள். பூச்சிகள் கடித்து சிலர் இறந்தார்கள். காற்று வீசாத அறையில் புழுக்கத்தில் உடல் வெந்து, சொறி வந்து வேதனையுடன் சிலர் இறந்தார்கள்.

‘சாகும் வரை இருள்’ என்ற தண்டனை வழங்கப்பட்டாலும் சிறைக்குள் எவராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு நடத்தப்படும் இறுதிச் சடங்குகளில் உயிருடன் இருப்பவர்கள் பங்கு பெறலாம். தன் நண்பர்களின் இறுதிச் சடங்கில் தான் அவர்களால் வெளிச்சத்தைக் காண முடியும். அதிலும் பல நாள்கள் இருளில் கிடந்து திடீரென்று வெளிச்சத்தைக் கண்டதால் பலர் பார்க்கும் தன்மையை இழந்திருந்தார்கள்.

இருளில் உழன்றே இறக்கப் போகும் கைதிகளுக்கு பார்வைதான் ஒரு கேடா என்று மன்னர் நினைத்திருக்கலாம்.

இறுதிச் சடங்கில் பங்கு கொண்ட வேளையில் அந்தக் கைதிகளின் அவல நிலையைக் கண்டவன் ஒருவன் இந்த இரகசியத்தை வெளியே கசியவிட்டான். ஐரோப்பிய நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்தன. பல ஐரோப்பிய நாடுகள் மன்னர் ஹசனோடு பேசி கடைசியில் அந்தச் சிறையை மூடவைத்தது மட்டுமல்லாமல் கைதிகளையும் விடுத்தன.

58 பேர் அடக்கப்பட்ட சூழலில் கடைசியாக எத்தனைப் பேர் உயிர் பிழைத்தனர் என்று தெரியுமா வெற்றி? வெறும் 5 பேர் மட்டுமே.

இந்த 5 அந்தக் கொடிய இருளுக்குள் எப்படி உயிர் பிழைத்திருந்தார்கள் என்பதை அறிவாயா நீ?

சொல்கிறேன். கேள்…

ஐந்து பேரில் ஒருவன் சலீம். கடவுள் நம்பிக்கை அறவே அற்றவன். இருள் சூழ்ந்த குழிக்குள் அடைக்கப்பட்டவன் தனது சக நண்பர்களின் இறப்பையும், வேதனையையும் கண்டவன் கடவுளை வேண்டத் தொடங்கினான். ஒரு நாளைக்கு ஒரு வேளை கூட தொழாதவன், அங்கு எப்பொழுதும் தொழுதபடி குரானையே ஓதிக் கொண்டிருந்தான். அவன் ஓதி அடங்கியதும் மற்றொருவன் ஓதத் தொடங்குவான். இப்படி அவர்கள் நம்பிக்கையுடன் ஓதியது எத்தனை வருடங்கள் தெரியுமா?

13 ஆண்டுகள்.

13 ஆண்டுகளை இருளுக்குள்ளேயே கழித்தவர்கள் கண் மூடித்தனமாகக் கொண்ட இறை நம்பிக்கையின் பயனால் அவர்கள் உயிர் பிழைத்து வெளியே வந்தார்கள். வாழவே இயலாத நிலை, வெளியே செல்வோம் என்ற உறுதி இல்லை. ஆனாலும், அவர்கள் நம்பிக்கையுடன் வாழ்ந்தார்கள்.

உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணம் அவர்களைக் காக்கவில்லை. இந்த நரகத்திலிருந்து கடவுள் நிச்சயம் காப்பார் என்ற நம்பிக்கை அவர்களைக் காத்தது. வாழ்க்கையில் கண்மூடித்தனமான நம்பிக்கை சிலவற்றின் மீது இருக்க வேண்டும் வெற்றி.

உன் நம்பிக்கை உன் வாசிப்பிலும், உன் எழுத்திலும் இருக்க வேண்டும் வெற்றி… வாழ்க்கை என்பது கடந்த காலத்தை நினைத்து வருந்துவது இல்லை. எதிர்காலத்தை எதிர்பார்ப்பில்லாமல் வாழக் கற்றுக் கொள்வது. வாழ்க்கையில் உனக்கு எது கிடைத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளப் பழகு. அது மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி இல்லை துயரமாக இருந்தாலும் சரி…

வாழ்க்கையில் வாழ்தல் ஒரு கலை வெற்றி. அதைக் கற்றுக்கொள்வாய் என்று நம்புகிறேன் நான்…

அடுத்த முறை உன்னைச் சந்திக்கையில் புதிய வெற்றியாகச சந்திப்பேன் என்று நம்புகிறேன்…

பேரன்புடன்,
சி.வெற்றிவேல்,
சாலைக்குறிச்சி.
www.writervetrivel.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here