மதுவன மாது – 1

01. மிர்துலா

‘மிர்துலா’

இந்தப் பெயரைத்தான் எனது மனம் சமீப காலங்களாக ஓயாமல் உச்சரித்துக்கொண்டிருக்கிறது. இருவரும் பல வருட நண்பர்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் பிரிந்து விட்டோம். எப்போது பிரிந்தோமோ அப்போதிலிருந்து என் மனம் மிர்துலா’வை நினைத்தே ஏங்கிக்கொண்டிருக்கிறது. இருவரும் பேசி சிரித்து மகிழ்ந்த அக்காலம் மீண்டும் துளிர்க்காதா என நினைக்காத நாளில்லை. கடந்த இரண்டு வருடத்தில் பல பெண்களைக் கடந்து வந்திருக்கிறேன். ஆனால், என் ‘மிர்துலா’வைப் போன்று என்னை யாரும் இதுவரை வசீகரித்ததில்லை. கடந்த வருடம் இருவரும் எதிர்பாராமல் போரூர் நான்கு சாலைகளின் சந்திப்பில் சந்திக்க நேர்ந்தும் அவள் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. முகத்தை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டாள். அப்போதுதான் எனக்குப் புரிந்தது அவளுக்கு என் மீது எவ்வளவு கோபம் என்று. எத்தனையோ முறை பேச முயற்சித்துவிட்டேன். பலன் இல்லை. நேரடியாகவும் கூறி விட்டாள். ‘இனி என்னை தொந்தரவு செய்யாதே’ என்று. நானும் ‘சரி’ என்று கூறிவிட்டேன்.

ஆனால், நினைக்காமல்தான் இருக்க இயலவில்லை.

நேற்று நான் அவளது போனிற்கு அழைத்ததும் அவள் என்னிடம் பேசியது ஆச்சர்யம் என்றால் ‘உன்னை நான் சந்திக்க வேண்டும்; உன்னிடம் பேசவேண்டும்’ எனக் கூறியதும், ‘எங்கே சந்திக்கலாம்?’ எனக் கேட்டதுதான் பெருத்த ஆச்சர்யம். இந்தக் கணம் வரை என்னால் அதை நம்ப முடியவில்லை.

அவள் குறிப்பிட்டதைப் போன்றே கிண்டி ஹோட்டலில் குறித்த நேரத்திற்கு முன்னரே வந்து சேர்ந்து அவளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். உற்சாகம் கரைபுரண்டு ஓடும் என்பார்களே, அப்படித்தான் எனது நிலையும். இதுவரை என்னை சோகப்படுத்தி வருத்திக்கொண்டிருந்த என் உடலின் ஹார்மோன்கள் அனைத்தும் இப்போது என்னை அசுர கதியில் இன்பப்படுத்தத் தொடங்கின. ஒரு மணி நேரத்திற்கு முன்பு காணப்பட்ட எனக்கும் தற்பொழுது  காணப்படும் எனக்கும் ஏகப்பட்ட மாறுபாடுகள். எனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை நம்புவதற்கு இயலவில்லை. ஒரு பெண்ணின் அருகாமையை நினைக்கையில் மனம் எப்படியெல்லாம் மாறிவிடும் என்பதற்கு அடையாளமாக நான் இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இந்த மகிழ்ச்சி, உற்சாகம் என அனைத்திற்கும் காரணம் ‘என் மிர்துலா’ தான். மிர்துலா என அழைப்பதற்குக்கூட என் மனம் விரும்பவில்லை. ‘என் மிர்துலா’ என அழைப்பதிலேயே மனம் திருப்தியும், உற்சாகமும் அடைகிறது.

இருக்கையில் அமர்ந்து மிர்துலா’வின் வருகையையே எதிர்நோக்கி நுழைவாயிலையே பார்த்துக்கொண்டிருந்த போது ‘கண்ணாலே என்னைக் கொல்லாதடி, சூரியன் உள்ளங்கையில் விழுந்திடுச்சே…’ பாடல் அருகில் ஒலிக்கத்தொடங்கியது. சில வினாடிகள் கழிந்த பிறகுதான் உணர்ந்தேன், இப்பாடல் எனது போனின் ரிங்டோன் என்று. அழைப்பது என் மிர்துலா’வாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்தபடியே பேண்ட் பையிலிருந்து போனை அவசர அவசரமாக வெளியே எடுத்துப்பார்க்க ‘அம்மா’வின் மிஸ்டு கால். நான் திரும்பவும் போனை எடுத்தேன். உடனே அம்மா, “தம்பி” என அழைத்தார்.

“ம்ம்ம்… சொல்லும்மா.”

“எப்படிப்பா இருக்க?”

“நேத்து தானம்மா ஊர்லேருந்து சென்னைக்கு வந்தேன். அதுக்குள்ள தேடுதா?”

“நீ ஊட்ல இல்லாததும் வெறிச்சோடுன்னு இருக்கு?”

“எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ள திரும்ப வந்துடுவேன். நீ ஏம்மா வருத்தப்படுற?”

“நீ அவசரமால்லாம் திரும்பி வர வேண்டாம். போன காரியம் நல்ல படியா முடிஞ்சதும் வா, போதும்.”

“சரிம்மா.”

“பருத்திக் கொல்லைக்கு திரும்பவும் கொரங்கு வந்துடுச்சு.”

“நீ என்ன பண்ற?”

“நான் பருத்தி எடுக்கப் போறேன்?”

“அப்பா?”

“அவரு மரம் வெட்டப் போறாரு.”

“தம்பி பள்ளிக்கூடத்துக்கு போறான். அதனால என்ன கொரங்குக்கு காவல் இருக்க கூப்டற?”

“ஆமாம் வெற்றி.”

“சரிம்மா, இன்னைக்கும் நாளைக்கும் பாத்துக்க. நான் இன்னும் ரெண்டு நாள்ள வந்துடறேன்.”

“சரிப்பா. சீக்கிரம் வந்துடு. நீ வந்துதான் நான் வேலைக்குப் போகணும்.”

“சரிம்மா, நான் வந்துடறேன்.”

“தம்பி….” திடீரென்று அம்மாவின் குரல் உற்சாகமானது.

“சொல்லும்மா?”

“உன் வேலை விஷயமா அபுதாபி’லேருந்து இன்னைக்கு பேசுறேன்னு சொன்னாரே? பேசுனாரா?”

“இன்னும் இல்லம்மா.”

“சீக்கிரம் வேலைக்கு போ தம்பி. ஊர்ல எல்லாரும் தம்பி ஏன் பெரிய படிப்பா படிச்சிட்டு வீட்லயே உக்காந்துருக்குன்னு கேக்கறாங்க? என்னால பதில் சொல்ல முடியல. எனக்கும் ஒடம்பு முடியலடா. உன்ன நம்பித்தான் எல்லாம் இருக்கோம்.”

“சரிம்மா… எனக்குத் தெரியாதா? நீ எதப்பதியும் கவலப் படாத; அண்ணன் சொன்ன மாதிரியே வேலைக்கு எடுத்துகுவாறு, எல்லாம் நல்ல படியா நடக்கும்.”

“நானும் அந்த நம்பிக்கைலதான் இருக்கேன் வெற்றி. சரி நீ போன காரியம் நல்ல படியா முடிஞ்சதும் சீக்கிரம் வந்துடு.”

“சரிம்மா” என நான் கூறிய அடுத்த கணமே அம்மாவின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அம்மாவின் அழைப்பு என்னுள் திரண்டிருந்த உற்சாக மாயைகள் அனைத்தையும் ஓரளவிற்கு நீக்கி நான் யார் என்ற உண்மையை உணர்த்திவிட்டுச் சென்றிருந்தது. ‘சென்னையில் வேலை என்று அம்மாவிடம் சொன்னது பொய்; நூறு நூறு ரூபாயா அம்மா பருத்தி எடுத்துச் சேர்த்து வைத்திருந்த ஐநூறு ரூபாயை எடுத்துகிட்டுத்தான் என் மிர்துலா’வைப் பார்க்க சென்னை வந்துருக்கேன்’ என்பதை நினைக்கையில் என் கண்களின் ஓரம் கசிந்திருந்த சிறு துளியைத் துடைத்துவிட்டு வாசலைப் பார்த்தேன். அங்கே என் மிர்துலா வந்துகொண்டிருந்தாள். மரகதப் பச்சை சுடிதார். லூஸ் ஹேர், அளவான ஒப்பனை என அழகின் மொத்த சொரூபமாக நடந்துவந்தவள் எனக்கு முன் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள். அவளது தலை முழுக்கச் சூடியிருந்த மல்லிகையின் மணம் என் நாசித் துவாரத்திற்குள் நுழைந்து என்னைக் கிறங்கடிக்கத் தொடங்கியது. அவளது முகத்தையே பார்த்துக்கொண்டு பேச சக்தியற்று அமர்ந்திருந்த வேளையில் என் மிர்துலா, “ஹாய்… வெற்றி” எனக் கூறிய பிறகுதான் என் மனம் கனவுலகத்திலிருந்து நனவுலகம் வந்தது.

தடுமாற்றத்துடன் நான், “ஹல்லோ…” என்றேன்.

“எப்படி இருக்க?”

“நல்லாருக்கேன் மிர்துலா, நீ?”

“நானும் நல்லாருக்கேன்.”

அடுத்து எங்களின் உரையாடலை எப்படித் தொடங்குவது என அறியாமல் இருவருமே சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தோம். பிறகு நான், “தாங்க்யூ மிர்துலா” என்றேன்.

“எதற்கு?”

“ரெண்டு வருஷம் கழிச்சி என்ட்ட நீ பேசியிருக்க; நான் பேசணும்னு சொன்னதும் என்ன மீட் பண்ண ஒத்துகிட்டதுக்கும்தான் அந்த தாங்க்யூ.”

“சரி, அத விடு, என்ன எதுக்கு மீட் பண்ணனும்னு சொன்ன?”

“ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி, அதுக்குதான்.”

“மகிழ்ச்சி உனக்கா? இல்ல எனக்கா?”

“ரெண்டு பேருக்கும் தான்”

“தெளிவா சொல்லு?”

“அவசரமா எங்காவது போகனுமா?”

“இல்ல.”

“அப்புறம் எதுக்கு வேக வேகமா கேள்வி கேட்டுகிட்டு இருக்க. கொஞ்சம் பொறுமையா பேசலாம்ல.”

இந்தக் கேள்விக்கு எந்த பதிலையையும் கூறாமல் கீழே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். நான் உடனே சற்றுத் தொலைவில் நின்ற பேரரை அழைக்க அவர், “என்ன சார் ஆர்டர் பண்றீங்க?” என வினவினார்.

நான் மிர்துலாவைப் பார்த்து, “மிர்துலா, நீ என்ன சாப்டற?” என்றேன்.

“நான் அக்கா வீட்ல சாப்டுதான் வந்தேன்” சட்டென பதில் வந்தது அவளிடமிருந்து.

நான் பேரரிடம், “ரெண்டு மாதுளை ஜூஸ் மட்டும்” என்க அவர் அங்கிருந்து நகர்ந்தார்.

“உனக்கு வேணும்னா நீ சாப்பாடு சாப்டு வெற்றி?”

“எனக்குப் பசிக்கல.”

வார்த்தைகள் இருவருக்குள்ளும் மீண்டும் முடமாகிவிட இருவரும் அமைதியானோம். எங்கள் இருவரின் அமைதியைக் குலைத்து, “சார், உங்கள் ஆர்டர்” என்ற பேரர் மாதுளை பழச்சாறு நிரம்பிய இரு பெரிய கோப்பைகளை நீட்டினார். இரண்டையும் வாங்கிய நான் ஒன்றை மிர்துலாவிடம் நகர்த்திவிட்டு மற்றொன்றை நான் வைத்துக்கொண்டேன். பழச்சாறை  இருவருமே உறிஞ்சி ருசி பார்த்துக்கொண்டோம்.

அமைதியை விரும்பாத நான், “உனக்கு ‘என் இனிய எந்திரா’ புக் தான ரொம்ப புடிச்ச நாவல்?” என்றேன் நான்.

“ஆமாம். எப்பவோ அதை உண்ட சொன்னேன். அத நீ இன்னும் மறக்கலையா?”

“மறக்கல மிர்துலா. நானும் அதை படிச்சேன்.”

“ம்ம்ம். எப்படி இருந்துது?”

“ம்ம்ம்… நல்ல நாவல். ஆனா, அவரு சொல்லிருக்கற நிலை 2022ம் வருசத்துல வருமாங்கறது சந்தேகம் தான்.”

“பட், வாசிக்கும்போது எப்படி இருந்துது?”

“ம்ம்ம்… நல்ல நாவல். அழகா கதை சொல்லிருப்பாரு. ஜீனோ ரொம்ப பிரில்லியன்ட்.”

“சுஜாதா நாவலாயிற்றே.”

“ஆமாம். சுஜாதா ரங்கராஜன் நாவல் தான்.

“சுஜாதா ரங்கராஜன்?” ஆச்சர்யத்துடன் வினவினாள் மிர்துலா.

“ஆமாம் மிர்துலா. அவரோட பேரு ரங்கராஜன். அவரு எழுத ஆரம்பிச்ச காலத்துல நெறைய ரங்கராஜன் இருந்தாங்களாம். கவிஞர் வாலி’யோட இயற்பெயரும் ரங்கராஜன் தானாம். அதனால வேற பேரு வைங்கன்னு சொல்லிட்டாங்க. அவரும் கடைசில அவரோட வீட்டுக்கார அம்மாவோட பேரையே வச்சிகிட்டாரு.”

“லக்கி கேர்ல்.”

“யாரு?”

“அவரோட வீட்டுக்கார அம்மாதான்.”

“சுஜாதா மட்டும் இல்ல மிர்துலா, வைரமுத்து’வ எல்லோரும் கவிப்பேரரசு வைரமுத்து’ன்னு சொன்னாலும் அவரு தன்னோட புத்தகத்துல பொன்மணி.டாக்டர் வைரமுத்து’னு தான் போடுறாரு.”

“பொன்மணி?”

“ஆமாம் மிர்துலா?”

“யாரு அவுங்க?”

“அவுரோட காதல் மனைவி.”

“ஓ, ஸ்வீட்…  எனக்கு இது புது தகவல் வெற்றி. தாங்க்யூ…”

பதிலுக்கு ஒரு வெற்றுப் புன்னகையை மட்டுமே உதிர்த்துவிட்டு எதையும் பேசாமல் அமைதியாகி விட்டேன் நான். இருவருக்குள்ளும் மீண்டும் உரையாடல் நின்றதால் பழச்சாறு வேகமாக தீர்ந்துகொண்டிருந்தது.

“சரி, நான் இங்க சும்மா உன்கூட உக்காந்துருக்க வரல, எதுக்கு என்ன பார்க்கனும்னு சொன்ன. சீக்கிரம் சொல்லு?” என அவசரப்படுத்தினாள் மிர்துலா.

“என்னோட புத்தகம் ரெண்டு வெளியாகப்போகுது. அத சொல்லத்தான் உன்ன பார்க்கணும்னு கூப்டேன்.”

வியப்பு கலந்த பார்வையில் என்னை நோக்கினாள்.

“ஆமாம் மிர்துலா” என்றேன் நான்.

“புத்தகம் எப்போ கிடைக்கும்?”

“வர ஜனவரி.”

“சென்னை புத்தகக் கண்காட்சிக்கா?”

“ம்ம்ம், அப்படித்தான் நம்பறேன்.”

“கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு வெற்றி! வாழ்த்துக்கள்.”

“நன்றி மிர்துலா” எனக் கூறிக்கொண்டே நான் மேசைக்குக் கீழே என் பையிலிருந்த இரண்டு புத்தகங்களை எடுத்து மிர்துலாவிடம் கொடுத்தேன்.

அதை வாங்கிய மிர்துலா, “என்ன புத்தகம் இது?” ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

“தொறந்து பாரு.”

“ம்ம்ம்” என்றவாறே அந்த இரண்டு புத்தகங்களையும் சுற்றியிருந்த வண்ணக் கவரை அவசர அவசரவமாகக் கிழித்தாள்.

உள்ளே திறந்தவள் அதிர்ச்சியுடன், “வானவல்லி” என்றாள்.

நான், “ம்ம்ம். வரலாற்றுப் புதினம்” எனத் தெரிவித்தேன்.

புத்தகத்தைத் திறந்து பார்த்தவள், “வெற்றி… உன்னோட பேரு…?” என ஆச்சர்யத்துடன் வினவினாள்.

“ஆமாம், என்னோட புத்தகம் தான்” எனப் பெருமையுடன் அவளது முகத்தில் விரிந்திருந்த ஆச்சர்யத்தைப் பார்த்தபடியே தெரிவித்தேன்.

“ஜனவரி தான கிடைக்கும்னு சொன்ன…”

“இது சாம்பிள் காப்பி. ரைட்டர் காப்பினு பதிப்பகத்துல எனக்குக் கொடுத்த முதல் புத்தகம் இதுதான்.”

“ஓ! முதல் புத்தகம் எனக்கா?”

“ம்ம்ம்ம்.”

“வாவ். நான் இத உண்டேருந்து நிச்சயமா எதிர்பார்க்கல வெற்றி. எனக்கு ரொம்ப சந்தோமாவும், பெருமையாவும் இருக்கு” எனச் சிரித்தபடியே கூறியவள் ஆர்வமுடன் அப்புத்தகத்தைப் புரட்டத்தொடங்கினாள். நீண்ட இரண்டு வருடங்கள் கழித்து எனக்கு முன்னால் அவள் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தாள். யாருடைய சிரிப்பினைப் பார்த்து எஞ்சிய காலம் முழுவதையும் கழித்துவிட வேண்டும் என நினைத்தேனோ, அவள் எனக்கு முன் தனது மந்தகாசப் புன்னகையை உதிர்த்துக்கொண்டு எனது புத்தகத்தைப்  புரட்டிக்கொண்டிருந்தாள். வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் என்றால் இந்தத் தருணத்தைத்தான் குறிப்பிடுவேன் நான். இதுவரை இப்படி ஒரு இன்பத்தை என் வாழ்வில் நான் அனுபவித்தது இல்லை; அப்படியொரு இன்பம் எனக்கு. எனது புத்தகத்தில் நான் எழுதிய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் அவள் படித்து அவற்றிற்கு உயிர் கொடுத்துக்கொண்டிருந்தாள். இரண்டு வருடங்களாக எந்த தருணத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தேனோ, அந்த தருணம்தான் இது என்பதை உணர்ந்த நான் தாமதிக்க விரும்பவில்லை.

உடனே பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தேன்.

“மிர்துலா…” என் புத்தகத்தில் ஊர்ந்துகொண்டிருந்த அவளது விழிகளைப் பார்த்தபடியே அழைத்தேன் நான்.

“சொல்லு வெற்றி” புத்தகத்தையே ஒவ்வொரு பக்கங்களாகப் புரட்டிக்கொண்டு பதிலளித்தாள்.

“இது என்னோட முதல் புத்தகம்.”

“ஆமாம் வெற்றி. வானவல்லி பாகம் 1 அப்புறம் பாகம் 2’னு போட்ருக்கு. இன்னும் எத்தனை பாகம் எழுதப் போற?”

“இன்னும் ரெண்டு வரும்னு எதிர்பார்க்கறேன்.”

“ஓ, அப்ப, பெரிய புத்தகமா இருக்கப் போகுதுன்னு சொல்லு.”

“ஆமாம் மிர்துலா.”

“கிரேட் வெற்றி… நீ இன்னும் நிறைய எழுதணும்.”

“நிச்சயமா.”

“ம்ம்ம்.”

“இனி நான் எழுதுற எல்லா புத்தகங்களையும் நீதான் முதல்ல வாசிக்கணும்.”

“ம்ம்ம், கண்டிப்பா வெற்றி.” என்றபடியே இரண்டாவது புத்தகத்தை எடுத்து புரட்டத் தொடங்கினாள்.

“மிர்துலா…” மீண்டும் அழைத்தேன் நான்.

“சொல்லு வெற்றி…”

“சுஜாதா, வைரமுத்து மாதிரி இனி நான் எழுதப் போற எல்லா புத்தகமும் நான் மனைவியோட பேர்ல  எழுத ஆசைப்படறேன்.”

“இது செம வெற்றி.”

“உன்னோட அனுமதி வேணும்.”

புத்தகத்தில் மூழ்கியிருந்தவள் சுய நினைவில்லாமல், “எழுதிக்கோ வெற்றி” என்றாள். அடுத்த கணம் சுய நினைவடைந்தவள் “என்ன சொன்ன? என்ன சொன்ன?” எனப் பதற்றத்துடன் கேட்கலானாள்.

“உன்னோட பேர்ல நான் எழுதணும்?”

“நீ…?”

“ஆமாம், மிர்துலா. ரங்கராஜன், வைரமுத்து மாதிரி.”

“டூ யூ மீன்?”

“நான் உன்ன கல்யாணம் செய்துக்கணும்னு ஆசைப்படறேன்.”

“வெற்றி…?”

“ஆமாம் மிர்துலா.”

அவள் மெளனமாக அமர்ந்திருந்தாள்.

“மிர்துலா, என் வாழ்க்கைல நடக்கற நல்லது கேட்டது எல்லாத்துக்கும் நீ என்கூட இருக்கணும்னு ஆசைப்படறேன். சந்தோசம்னா சேர்ந்து கொண்டாடனும், சோகம்னா உன் மடில படுத்து அழனும். எப்போதும் உன் சிரிப்பையே பார்த்துகிட்டு இருக்கணும்.”

அவளது முகம் அதிர்ச்சியில் வெளிறிப் யிருந்தது. கண நேரங்கள் எதையும் கூறாமல் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். “நான் இத எதிர்பார்க்கல வெற்றி…” என்றாள்.

“மிர்துலா, நான்…”

“எதையும் பேசாத. நீ என்னோட நல்ல பிரன்ட் வெற்றி. பட்?”

“நான்…”

“எதையும் பேசாதன்னு சொன்னேன்.”

“—–”

“நீ என்ன ஏமாத்திட்ட. நீ நல்ல பையன், அறிவாளி, இன்னும் நிறைய சொல்லலாம். பட் அதுக்காக உன்ன…?”

“மிர்துலா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியும் இதேதான் சொன்ன. ‘You may be a good guy intelligent and ect. but here after I won’t talk to you.’  நல்லபையன், நல்ல பிரண்ட், அறிவாளி இந்தத் தகுதிலாம் போதாதா? வேற என்னதான் எதிர்பார்க்கற?”

“ரெண்டு வருஷம் மட்டும் இல்ல. இன்னும் இருபது வருஷம் கழிச்சி நீ வந்தாலும், இதே பதில்தான் உனக்குக் கிடைக்கும்.”

“மிர்துலா… நான் சொல்றத கேளு. அவசரப்பட்டு கோபப்படாத” என நான் கூறிக்கொண்டிருந்த வேளையில் அவள் என்னைக் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன அப்படிப் பாக்காத மிர்துலா. என்னால முடியல. நான் உன்ன எவ்ளோ லவ் பண்றேன்னு தெரியுமா? ஐ லவ் யூ சோ மச். ப்ளீஸ்…” காதல், நம்பிக்கை இந்த ரெண்டும் ஒருவரிடம் கெஞ்சுவதால் வருவதில்லை என்று தெரிந்தும், என் மிர்துலாவிடம் நான் அப்போது கெஞ்சவே செய்தேன். என் கண்களும் கலங்கத்தான் செய்தது.

“வெற்றி, டோன்ட் வேஸ்ட் யுவர் டைம் பார் மி.”

“மிர்துலா???”

“எனக்கு உன்ன புடிக்கல?”

“ஐ பெக் யூ?”

“ஐ ஆம் நாட் இண்டரஸ்டேட் ஆன் யூ” என்றவள் நான் கொடுத்த எனது இரண்டு புத்தகங்களையும் என் முன்னால் எறிந்துவிட்டு எழுந்துச் சென்றாள்.

அவள் சென்ற திசையையே அதிர்ச்சியில் பார்த்துக்கொண்டிருந்தேன்.

வேகமாக சென்றவள் ஒரு முறையாவது என்னைத் திரும்பிப் பார்ப்பாள் என்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன் நான். ஒரு ‘சாரி’ என்ற சொல்லையாவது அவளிடமிருந்து எதிர்பார்த்தேன். யாரைப் பெரியதாக நினைத்து யாருக்காக நான் ஏங்கிக்கொண்டிருந்தேனோ, அவள் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றது பெரும் ஏமாற்றமாக இருந்தது எனக்கு. அழுகை அழுகையாக வந்தது எனக்கு. அழக்கூடாது என்று கடும் வைராக்கியத்துடன் அமர்ந்திருந்தேன்.

மீண்டும் செல்போன் ஒலிக்க, எடுத்துப் பார்த்தேன். அபுதாபி’யிலிருந்து வரும் போன்.

எடுத்து, “ஹ…” எனப் பேச முயற்சித்தேன். வார்த்தைகள் வரவில்லை. கடுமையாகத் திக்கியது. பிறகு கடும் சிரமப்பட்டு, “ஹல்லோ… அண்ணா” என்றேன்.

“தம்பி நலமா?”

கண்களின் ஓரத்தில் கசிந்திருந்த கண்ணீர்த் துளிகளைத் துடைத்துக்கொண்டே, “நல்லாருக்கேன் அண்ணா… நீங்க எப்படி இருக்கீங்க?” சிரித்துக்கொண்டே பதிலளித்தேன் நான்.

“நல்லாருக்கேன் தம்பி.”

“என்னோட வேலை பத்தி ஆமர் சார்ட்ட பேசுனீங்களா அண்ணா?”

“பேசுனேன் தம்பி. இன்னும் கொஞ்ச நாள் உன்ன வெய்ட் பண்ண சொல்றாங்க. கவலைப் படாதீங்க தம்பி, உங்களுக்கு நிச்சம் எங்க கம்பனில வேலை உண்டு. கவலைப் பட வேணாம்.”

“சரி அண்ணா…”

“உடம்ப பார்த்துக்கோ, நான் அப்றமா கூப்டறேன்.”

“ம்ம்ம்…”

தொடர்பு துண்டிக்கப்பட்டது. மிர்துலா எறிந்துவிட்டுச் சென்ற என் இரண்டு புத்தகங்களையும், வேலை தாமதமாகும் எனக் கூறிய என் போனையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தேன். வாழ்வே நிர்கதியாகிவிட்ட உணர்வு. இந்த வேலைக்காக ஒன்றரை வருடமாகக் காத்திருக்கிறேன். அந்த வேளையில் எழுதியதுதான் இந்த புதினம். வேலை கிடைக்கும் ஆனால், தாமதமாகும் என்ற பதில். ஆனால், என் மிர்துலாவுக்காக யுகம் யுகமாக காத்திருந்ததைப் போன்ற உணர்வு. ஆனால், இனி அவளுடன் சேர வாய்ப்பே இல்லை.

அவள் புரட்டிப் பார்த்த என் புத்தகப் பக்கங்களை நானும் புரட்டத் தொடங்கினேன். அவள் வாசித்துவிட்டு உயிரளித்த வார்த்தைகளை மட்டும் என்னால் நன்கு அடையாளம் காண முடிந்தது.

மனதினில் கொட்டிக்கிடக்கும் காதலுக்குப் போக்கிடம் கிடைக்காமல் ஏமாற்றமான பிறகு ‘கண்ணீர்’ மட்டுமே தீர்வாக அமையும். நானும் அப்படித்தான் அங்கேயே அமர்ந்து அழுதுகொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் அழுதுகொண்டிருந்தேன் என்று எனக்குத் தெரியாது. ஒரு கணத்திற்கு மேல் அழுகை நின்று தேம்பத் தொடங்கிவிட்டேன். நீண்ட நாள் கழித்து நான் அழுதது அப்போதுதான். என்னைத் துளியளவும் மதிக்காதப் பெண்ணிற்காக நான் அழுதுகொண்டிருந்தது எனக்கு ஆச்சர்யமாகவும், கோபமாகவும் இருந்தது. ஆனால், அழுகையை மட்டும் என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. வாழ்க்கை இத்தோடு முடிந்துவிட்டால் என்ன எனும் விரக்தி மனத்தை முற்றிலும் கவ்வியிருந்தது.

தலையைக் குனிந்து மேசையில் முகத்தைப் புதைத்துக்கொண்டே நெடுநேரம் அமர்ந்திருந்தேன்.

“ஹல்லோ” என்ற குரல் சற்றுத் தயக்கத்துடன் கேட்டதும் முகத்தைத் துடைத்துக்கொண்டே நிமிர்ந்து பார்த்தேன். எனக்கு முன்னால் என் வயதையொத்த பெண் ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள். அவளை நான் வியப்புடன் பார்க்க, “உன் அருகில் நான் அமரலாமா?” எனவும் வினவினாள்.

நான் “ம்ம்ம்” என்று தலையாட்ட எனக்கு எதிர்புற இருக்கையில் அமர்ந்துகொண்டவள், எனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த ஹோட்டலில் அவள் தனியாக அமர்வதற்குப் பல இருக்கைகள் இருக்க, எனக்கு முன் வந்து அமர்ந்துகொண்டது எனக்கு ஆத்திரத்தை வரவழைத்தது. கோபத்துடன் நான் பார்க்க, அவளது முகம் அமைதியுடனும், அழகுடனும் காணப்பட்டது.

“நாளை கொல்லி மலைக்கு போறேன். நீங்களும் வரீங்களா?” என வினவினாள் அப்பெண்.

நான் எந்தப் பதிலையும் கூறாமல் அவளது முகத்தையே குழப்பத்துடன் பார்க்க, “முன்பின் தெரியாதவளோட எப்படிப் வரது எனக் குழம்ப வேண்டாம். கொல்லி மலைக்கு என்னுடன் வாங்க, கரிகாலனின் துயரத்தை விரட்டி அவனைக் காத்த கொல்லியம் பாவை உங்களோட துயரத்தையும் நிச்சயம் போக்குவா. நீங்க இங்கு வந்தப்போ உங்க முகத்துல இருந்த உற்சாகத்தைக் கவனிக்கவே செய்தேன். இப்போதிருக்கும் உங்க நிலையும் எனக்குத் தெரியும். உங்கள நான் கட்டாயப்படுத்தல. நாளைக்கு காலைல பத்து மணிக்கு இதே இடத்திற்கு வரேன், விருப்பம் இருந்தா என்னோட வாங்க. என் காரிலேயே உங்களையும் அழைச்சிட்டு போறேன்” என்றவள் எனது பதிலை எதிர்பார்க்காமல் அவள் பாட்டிற்கு திரும்பிச் சென்றாள்.

அவள் கூறிய ‘கரிகாலன்’ என்ற சொல் என்னை சிந்திக்க வைத்திருந்தது. ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களாக கரிகாலனைப் பற்றித்தான் நூலகம் நூலகமாக தேடிக்கொண்டிருக்கிறேன். பூம்புகார், உறையூர், கல்லணை, வெண்ணி என்று போகாத இடமில்லை. ஆனால், கொல்லி மலையுடன் கரிகாலனைத் தொடர்புபடுத்தி தற்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.

அந்தப் பெண்ணை நான் முன்பின் கண்டது கிடையாது. இருப்பினும், கரிகாலனைப் பற்றி அறிந்துகொள்ள நாளை அந்தப் பெண்ணுடன் செல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தேன்…

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here