மதுவன மாது – 2

02. மீண்டும் மிர்துலா

த நா 45 தேசிய நெடுஞ்சாலையில் முன்பின் அறியாத பெண்ணுடன் காரில் மதுராந்தகத்தைக் கடந்து எண்பத்தைந்து கி.மீ வேகத்தில் விரைவாகப் பயணித்துக் கொண்டிருந்தேன். ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. அவள் என்னை அழைக்க வந்தபோது ‘டிரைவர் எங்க?’ என்று நான் கேட்டதற்கு ‘நான் எங்கு சென்றாலும் தனியாகத்தான் செல்வேன். என் காரிற்கு தனியாக டிரைவர் கிடையாது’ எனக் கூறிவிட்டாள். அவளது தைரியம் எனக்குப் பிடித்திருந்தது.

என் மனதினில் விரக்தி முழுவதும் மண்டிக்கிடந்ததால் நான் அவளிடம் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வெளியே வேடிக்கைப் பார்த்தபடியே சென்றுகொண்டிருந்தேன். நெடுநேரம் எங்கள் இருவருக்கும் இடையில் மௌனமே மண்டிக்கிடந்தது. அதைப் போக்க, “உங்க பேரு என்ன?” வினவினேன் நான்.

“ஒரு வழியா பேசிட்டீங்க ” எனக் கூறியவள் பலமாக சிரித்தாள். அவளது தெத்துப்பல் சிரிப்பு அழகாக இருந்தாலும் அதை நான் இரசிக்கும் மன நிலையில் இல்லை.

பதிலுக்கு நான், “நீங்க யாரு?” என்றேன்.

“என் பேரு தெரியனுமா?” என்றாள் அவள்.

நான், “ம்ம்ம்” என மட்டும் பதிலளித்தேன்.

“மிர்துலா.”

“மிர்துலா?” அதிர்ச்சியில் வினவினேன் நான்.

“ஆமாம் வெற்றி. என் பேரு அதுதான். உங்களுக்கு இந்தப் பேருல ஏதாவது பிரச்சனையா?” சிரித்தபடியே வினவினாள் அவள்.

“அப்படில்லாம் எதுவும் இல்ல. நல்ல பெயர்.”

“உங்களுக்கு சந்தேகம் இருந்தால் என் லைசன்ஸ பாருங்க” எனக் கூறியவள் அதை என்னிடம் கொடுக்கவும் செய்தாள். அதை வாங்கிப் பார்த்த நான் அவளது பெயரை உறுதி செய்தும் கொண்டேன்.

“வெற்றி, உங்களோட சந்தேகம் தீர்ந்ததா?” சிரித்துக்கொண்டே வினவினாள் அவள்.

பதிலுக்கு வெற்றுச்  சிரிப்பு ஒன்றை மட்டுமே உதிர்த்தவன் பார்வையை வெளிப்புறமாகத் திருப்பிக் கொண்டேன். அப்போதுதான் எனக்கு நினைவில் தோன்றியது, ‘என் பெயர் வெற்றி என்று இதுவரை நான் இவளிடம் கூறவே இல்லையே. இவள் யாராக இருப்பாள்?’ என்ற திடீர் சந்தேகம் தோன்ற, “வண்டியை நிறுத்து” என்றேன் நான்.

“இப்போ எதுக்கு வண்டிய நிறுத்த சொல்றீங்க?” அவளும் அதிர்ச்சியுடன் வினவினாள்.

“இப்போ நிறுத்தப் போறீங்களா இல்லையா?” கோபத்துடன் கூறினேன் நான்.

வண்டியை ஓரமாக அவள் நிறுத்த வண்டியிலிருந்து இறங்கிவிட்டேன் நான். அவளும் இறங்கி என்னிடம் வந்து, “என்னாச்சி, இப்போ எதுக்கு வண்டிய நிறுத்த சொல்றீங்க?என அதி ர்ச்சியுடன் வினவினாள் அவள்.

“நீங்க யாரு?”

“நான் மிர்துலா.”

“உங்க பேரு மிர்துலாதான். யாரு சொல்லி என்னைய கூட்டிக்கிட்டு போறீங்க?”

“யாரும் எண்ட  எதையும் சொல்லலையே.”

“உண்மையை மறைக்காதீங்க?”

“நானா?”

“ஆம்.”

“எத மறைக்கறேன்.”

“அத நீங்க தான் சொல்லணும். எனக்கு எப்படித் தெரியும்?”

“வெற்றி, உங்களுக்குத் திடீரென்று என்னாச்சி?”

“இதுவரை எதுவும் ஆகல. இனி எதுவும் ஆகக்கூடாதுன்னு கவலைப்படறேன் நான்”

“புரியல வெற்றி.”

“என் பேர நானு இதுவரைக்கும் உங்ககிட்ட சொல்லவே இல்ல. அப்றம் எப்படி உங்களுக்கு என் பேர் தெரியும்?”

“ஓ, இதுதான் உங்கள் பிரச்சனையா?” சிரித்தபடியே கேட்டாள் அவள்.

நான் எந்தப் பதிலையும் கூறாமல் அவளை வெறுப்புடன் பார்த்துவிட்டு என் பார்வையை விலக்கிக் கொண்டேன்.

“வெற்றி, வண்டில ஏறுங்க. எல்லாத்தையும் சொல்றேன்.”

“நீங்க உண்மைய சொல்லாதவரைக்கும் என்னால உங்க கூட வரமுடியாது மிர்துலா” என்றபடியே அங்கிருந்து நடக்கத் தொடங்கினேன். பதறியபடியே எனக்கு முன் ஓடி வந்து பாதையை மறித்து நின்றவள், “இன்னும் ஆறு மைல் நடந்தாதான் பஸ் ஸ்டேண்ட் வரும்” என்றாள்.

நான் திரும்பி நடக்கத் தொடங்கினேன். அங்கும் எனக்கு முன் வந்து நின்றவள், “இந்தப்பக்கம் போகணும்னா ஏழு மைல் நடக்கணும்” என்றாள் சிரித்தபடியே.

“ஏழு மைல் தானே, பரவாயில்லை” என்றபடியே நடக்கத் தொடங்கினேன். எனக்குப்பின்னால் ஓடி வந்தவள் “வெற்றி உங்க பிளாக் ரீடர் நான். வானவல்லி படிச்சிருக்கேன் ” என்றாள் சத்தத்துடன்.

நான் ஆச்சர்யத்துடன் திரும்பிப் பார்க்க, “ஆமாம். நானு சொல்றது உண்மைதான். பிறகு எப்படி முன்ன பின்ன தெரியாத உங்க கூட இவ்ளோ நேரம் வருவேன். யோசிச்சி பாருங்க” என்றாள். அவளது கண்களைப் பார்த்தேன் அதில் பொய் இருப்பதாகத் தெரியவில்லை.

நான் பேச வாயைத் திறக்க அதற்குள் முந்திக்கொண்டவள், “உள்ள வாங்க. மத்தத பிற்பாடு பேசுவோம்.. இங்க நின்னுகிட்டு பேசவேண்டாம். எல்லாரும் நம்மையே பார்க்கறாங்க” எனக் கூறியபடியே கார் கதவைத் திறந்தாள். நான் தயக்கத்துடன் மீண்டும் உள்ளே ஏறி அமர்ந்துகொண்டேன்.

கார் மீண்டும் பயணிக்கத் தொடங்கியது. குழப்பத்துடனே அமர்ந்திருந்தேன் நான். சிறிது நேரம் கழித்து, “உங்க பிளாக் ல உங்க வானவல்லி படிச்சிருக்கேன். நேத்து நீங்க அந்த பொண்ணுகூட பேசிகிட்டு இருந்தத நானும் கேட்டேன். அந்த பொண்ணு கைல வச்சிருந்த வானவல்லி நாவல பாத்ததும் அப்புறம் தான் நீங்க தான் வெற்றின்னு தெரிஞ்சிகிட்டேன்” என அவள் தெரிவிக்க என்ன பதில் பேசுவது எனத் தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“நேற்று நீங்க கிண்டி’ல விட்டுட்டுப் போன வானவல்லி யையும் நான்தான் எடுத்து வச்சிருக்கேன்” எனக் கூறியவள் அந்தப் புத்தகத்தையும் எடுத்து என்னிடம் கொடுத்தாள்.

நேற்று என் மிர்துலா’விடம் கொடுத்த புத்தகத்தை மறந்துவிட்டேன் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன் நான். என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் மிர்துலாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். “உங்க பிளாக்ல இருந்த போட்டவ பாத்துதான் நேத்து உங்கள கண்டுபுடிச்சேன். பிளாக்ல பிரைட்டா இருந்தீங்க, அதனால கொஞ்சம் கன்பியூசன். அப்பறம் கன்பார்ம் பண்ணிட்டேன். உங்களோட பேசலாம்னு வந்தப்போதான் அவுங்க உங்ககூட சேர்ந்துட்டாங்க. அவுங்க கோபமா போனதுக்கு அப்புறம் உங்கள வந்து நான் பார்த்து பேசினேன்” என விளக்கமளித்தாள்.

“சாரி” என்றேன் நான்.

“வெற்றி பசங்க கூட சேந்து சுத்தற பொண்ணுங்க மாதிரி என்னையும் நெனச்சிகிட்டீங்க, அப்படித்தானே?” எனக் கோபத்துடன் கேட்கலானாள்.

அவள் முகத்தைப் பார்க்கவே வெட்கமாக இருந்தது எனக்கு. முகத்தைக் குனிந்துகொண்டே “அப்படிலாம் இல்லீங்க. என்ன மன்னிச்சிடுங்க” என்றேன் நான்.

அதன்பிறகு இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எங்கள் கார் விழுப்புரத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. “உங்கள கொல்லி மலைக்கு கூப்டுருந்தீங்கன்னா நீங்க நிச்சயம் வந்துருக்க மாட்டீங்க. அதனாலதான் கரிகாலன் பேர பயன்படுத்திக் கிட்டேன். நீங்களும் வந்துட்டீங்க. மிக்க நன்றி வெற்றி”

அப்போதும் எதுவும் பேசாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தேன் நான்.

“வெற்றி, நேத்து நைட்டே ரெண்டு பாகத்தையும் படிச்சி முடிச்சிட்டேன். ஆனா, கொல்லி மலைய பத்தி எதுவுமே எழுதலையே ஏன்?” என வினவினாள் அவள்.

“நானும் கொல்லி மலையையும், கரிகாலனையும் சம்பந்தப்படுத்தி உங்ககிட்டத்தான் முதன்முதல்ல கேள்விப்படுகிறேன். எனக்கு நீங்க சொன்ன தகவல் ஆச்சர்யமா இருந்துச்சு அதனாலதான் உங்கள பத்தி அதிகமா யோசிக்காம உங்ககூட வந்துட்டேன்” என்றேன் நான்.

“வெற்றி, நானு கரிகாலரோட பேர இழுக்காட்டி நீங்க வந்துருக்க மாட்டீங்க தானே?”

“நிச்சயமா, அதுல உங்களுக்கு என்ன சந்தேகம்?”

கார் நிதானமாக பயணித்துக்கொண்டிருந்தது. கரிகாலனைப் பற்றிய பேச்சு எழுந்ததால் என்னுள் உற்சாகம் திரள ஆரம்பித்தது. அந்த உற்சாகத்துடனே, “கொல்லியம்பாவைங்கறது யாரு? அவளுக்கும் கரிகாலருக்கும் என்ன சம்பந்தம்? அவ எப்புடி கரிகாலன காப்பாத்துனா?” என்று வினவினேன் நான்.

அதுவரை பேச்சு வழக்கில் என்னிடம் பேசிக்கொண்டு வந்தவள் திடீரென்று உரைநடை வழக்கில் பேசத் தொடங்கினாள் . “கொல்லியம் பாவை என்பது அம்மனின் பெயர். கொல்லி மலை எனும் பெயரே இந்த அம்மனின் பெயரால்தான் வழங்கப்படுகிறது” என அவள் கூறிகொண்டிருந்த போதே இடைமறித்த நான், “அம்மனுக்கு இதுவரை நான் இப்படியொரு பெயரைக் கேள்விப்பட்டது இல்லையே? இந்த பெயரில் வேறு கோயில் இருப்பதாகவும் தெரியவில்லையே” என நானும் அவளைப் போன்றே பேசத் தொடங்கினேன்.

“ஆமாம். இந்தக் கொல்லியம் பாவை கோயில் கொல்லி மலையில் மட்டுமே இருக்கிறது. இதனைத் தமிழ்க் கடவுள் எனவும் கூறுவார்கள். பெருநிலையான தெய்வம். இதற்கு மொத்தம் ஒன்பது கோயில்கள் இருந்தன. அவற்றில் எட்டு குமரிக் கண்டத்தின் கடல் கோளில் அழிந்துவிட்டது, இப்போது எஞ்சியிருப்பது இந்த கொல்லிமலை கோயில் மட்டுமே. சித்தர் பாடல்களில் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த கொல்லியம் பாவை தெய்வத்தின் கோயில் இருப்பதாகச் சில குறிப்புகளும் காணப்படுகின்றன.”

“சரி, இந்தக் கொல்லியம் பாவை எப்படி கரிகாலனைக் காத்தாள்?”

“கரிகாலன் சிறு வயதிலேயே எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்டு மாளிகையோடு எரிக்கப்பட்டான் அல்லவா?”

“ஆம், செயிரறு செங்கோல் செவிஇயினா ளில்லை, யுயிருடையா ரெய்தா வினை என்ற பழமொழியின் மூலமாகச் சமண முனிவர்கள் கூறுகிறார்களே.”

“ஆமாம். கரிகாலன் அந்தத் தாக்குதலிலிருந்து எப்படித் தப்பித்தான் என்று தெரியுமா?”

“தெரியுமே, அதைத்தான் கடியலூர் உருத்திரங்கண்ணனார் யானையின் உவமையுடன் கூறுகிறாரே.”

“என்ன உவமை அது?”

“யானை வேடர்களின் குழிக்குள் அகப்பட்டுக்கொண்டாலும் அந்தக் குழியைத் தூர்த்து அதிலிருந்து தப்பி தன் பெண் யானையுடன் சேர்ந்துகொள்ளும். அதைப்போலவே கரிகாலனும் எதிரிகளிடம் அகப்பட்டு அவர்களின் மாளிகையிலேயே வலிமையானவனாக உருமாறி அங்கிருந்துத் தப்பித் தனக்கு வேண்டிய அரசாட்சியை மீட்டான் என்றிருப்பார்.”

“சரி, எதிரிகளிடமிருந்துத் தப்பியவன் நேராகத் தனக்குரிய ஆசனத்தை அடைந்து விட்டானா?”

“அது எப்படி முடியும். அவனை எதிர்த்தது ஒட்டு மொத்த தென்னகமும் அல்லவா?”

“ஆமாம். ஆமாம். அங்கிருந்துத் தப்பியவன் அவனுக்குரிய ஆசனத்தைக் கைப்பற்றுமுன் நேராகக் கொல்லி மலையில்தான் தஞ்சம் புகுந்தான்.”

“சோழர்களின் நிலை எப்போதெல்லாம் தாழ்கிறதோ, அப்போதெல்லாம் கொல்லி மலையில் தானே அவர்கள் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.”

“அதன்படியே, அப்போதும் கொல்லி மலையே கரிகாலனுக்கு அடைக்கலம் கொடுத்தது. அவனைக் காத்ததும் இந்தக் கொல்லியம் பாவை தான்.”

“அம்மனா?”

“இல்லை. கொல்லியம் பாவைக்கு சிலர் வேறு அர்த்தத்தையும் வழங்குகிறார்கள். அதாவது, கரிகாலன் கொல்லி மலையில் தஞ்சம் அடைந்த பிறகும், எதிரிகளின் ஒற்றர்கள் அவனைத் தேடிக்கொண்டு வந்தார்களாம். அப்போது அவன் சித்தர்களின் உதவியை நாடினானாம். சித்தர்கள் தங்களது மந்திர வலிமையினால் எந்திரம் ஒன்றை அழகியப் பாவையின் உருவில் செய்து வைத்தார்களாம். அந்தப் பெண்ணின் அழகில் யாராவது மயங்கி அவளைத் தீண்ட அருகில் நெருங்கினால் புதரிலிருந்து விசை ஒன்று செயல்பட்டு அவர்களின் உடலை இரண்டாகப் பிளந்துவிடும். அந்தக் கொல்லியம் பாவைதான் எதிரிகளின் ஒற்றர்களிடமிருந்து கரிகாலனைக் காத்தது என்பார்கள். இந்தக் கொல்லியம் பாவையினால் தான் அதற்கு கொல்லி மலை என்றப் பெயரும் வந்தது எனக் கூறுபவர்களும் உண்டு.”

“உங்கள் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.”

“நீங்கள் எழுதியிருக்கும் கதையை விடவா?”

சிரிப்பு ஒன்றையே பதிலாக அளித்தேன் நான்.

“இதை வெறும் கதை என்று மட்டும் எடுத்துக்கொள்ள இயலாது வெற்றி. வரலாறும் நிச்சயம் கலந்திருக்கும். கட்டுக்கதைகள் தோன்றுவதற்கும் அடிப்படை முகாந்திரம் ஒன்று வேண்டுமல்லவா.”

“உண்மையும் இருக்கத்தான் கூடும்” என்றேன் நான்.

இதன் பிறகு எங்களுக்குள் நீடித்த சிறு தயக்கம் அனைத்தும் முற்றிலும் நீங்கி இருவரும் பல நாள் பழகிய நண்பர்களைப் போன்று வேறு கதைகள் பேச ஆரம்பித்தோம். அனைத்தும் கதை, வரலாறு, இலக்கியம், உலக இலக்கியம் என்று எங்களின் உரையாடல்கள் கொல்லி மலையை அடையும் வரை நீண்டுகொண்டே இருந்தது. கொல்லி மலைக்குச் சென்றபிறகு ஆகாய கங்கை அருவி, கொல்லிப்பாவைக் கோயில், அறப்பளீஸ்வரர் கோயில், வேடர் உருவில் எழுந்தருளியிருக்கும் முருகன் கோயில் என அனைத்தையும் இருவரும் கண்டுகளித்து வணங்கினோம்.

கொல்லி மலைக்குள் நுழைந்ததுமே, ‘கொல்லியம் பாவையை வணங்கிய பிறகு உன் மனதில் நீ மாற்றத்தை நிச்சயம் உணர்வாய்’ என்றே கூறி அழைத்து வந்தாள். ஆனால், கொல்லியம் பாவையை தரிசித்தும் என்னுள் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதே கலக்கம்தான் மனதைச் சூழ்ந்திருந்தது. கொல்லி மலையின் வியூ பாயிண்டில் நின்று பார்த்த போது ‘இங்கேருந்து குதிச்சிட்டா என்ன?’ என்ற எண்ணம் கூட மனதின் ஓரத்தில் எழுந்துவிட்டுச் சென்றது. ஆனால், மனதை மாற்றிக்கொண்டேன். மிர்துலா பலமுறை கொல்லி மலைக்கு வந்து சென்றவள் என்பதால் அவள் பல அழகிய இடங்களை அறிந்து வைத்திருந்தாள். மலையின் ஒற்றையடிப் பாதையில் அழைத்துச் சென்று சில மூலிகைகளைக் காண்பித்தவள் அவற்றின் பயன்பாடுகளையும் விளக்கிக் கூறினாள். சில பழங்காலக் குகைகள், சித்தர்கள் அமர்ந்து தியானித்த கல் இருக்கைகள் எனப் பலவற்றை ஆவலுடன் கண்டுகளித்தோம். இந்தப் இடங்கள் அனைத்தும் மலையின் அடர்ந்த காட்டுப் பகுதியில் காணப்பட்டவை.

இருவரும் திரும்பினோம். அவள் முன்னால் செல்ல அவளைப் பின் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன் நான். ஒரு இடத்தில் இரு பாதைகள் பிரிந்தன. இடது புறமாகச் சென்ற ஒற்றையடிப் பாதையில் அவள் சென்றாள். ஒரு கணம் தாமத்தித்தேன் நான். ஏதோ இனம்புரியாத உணர்வு என்னுள் தோன்றி மலைக் காட்டுக்குள்ளிருந்து என்னை இழுத்தது.

இடப்புற ஒற்றையடிப் பாதையில் சென்றால், அதே வறுமை, அதே வெறுமை, அதே கவலை, அதே வேலையின்மை, அதே உலகம், அதே வாழ்க்கை. ஆனால், காட்டிற்குள் சென்றால் புது அனுபவங்கள் நிச்சயம் ஏற்படும். காட்டு விலங்குகளிடம் அகப்பட்டாலும் அகப்படலாம். உயிர் பயம் துளியும் இருக்கவில்லை. மனதில் இருந்த விரக்தியே முழுவதும் என்னை, எனது சிந்தனைகளை ஆக்கிரமித்திருந்தது.

எனக்கு முன் சென்ற மிர்துலா’வைப் பார்த்தேன். நான் பின்னால் வருகிறேன் என்று பேசியபடியே சென்றாள். ஏதோ வல்வில் ஓரியைப்பற்றி பேசிக்கொண்டிருந்தாள். எப்படியும் அவள் பாதுகாப்பாக சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கை எனக்குத் தோன்றியது. அவளது குரலின் சுருதி சிறிது சிறிதாகக் குறைந்து கடைசியில் முற்றிலும் நின்றுவிட்டது.

தற்கொலை முடிவுதான் எனத் தெரிந்தும் விலங்குகள் பயன்படுத்தும் அந்த ஒற்றையடிப் பாதையில் கால் போன போக்கில் நடக்கலானேன் நான்.

தொடரும்…

Leave a Comment