மதுவன மாது – 3

03. கொல்லியம் பாவை

ஒற்றையடிப் பாதையிலேயே அரைமணி நேரத்திற்கு மேல் தனியாக நடந்துகொண்டிருந்தேன். ‘தனியாகச் சென்ற மிர்துலா பாதுகாப்பாகச் சென்று சேர்ந்திருப்பாளா?’

‘அவளுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால்?’

‘நம்பி அழைத்து வந்த பெண்ணை இப்படித் தனியாக விட்டுவிட்டது சரியா?’  எனப் பலவிதமான கேள்விகள் என்னுள் எழ, திரும்பிச் சென்றுவிடுவதுதான் சரி என முடிவெடுத்து வந்த பாதையிலேயே மீண்டும் நடக்கத் தொடங்கினேன். ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்திருப்பேன். ஆனால், சரியானப் பாதையை என்னால் கண்டறிய இயலவில்லை. அப்போதுதான் உணர்ந்தேன் நான், ‘பாதையைத் தவறவிட்டு விட்டேன்’ என்று.

பார்வையில் தென்பட்ட பாதை முழுவதும் கடந்து வந்த பாதையைப் போன்றே இருக்க நடந்துகொண்டே இருந்தேன். அந்த அடர்ந்த வனத்தில் நான் தொலைந்துவிட்டேன் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு நெடுநேரம் ஆகியிருந்தது.

பையிலிருக்கும் ஸ்மார்ட் போனை எடுத்து மிர்துலாவுக்கு கால் செய்து உதவி கேட்கலாம் அல்லது கூகுள் நேவிகேசன் மேப் மூலம் GPS லோகேசனைப் பயன்படுத்தி இங்கிருந்துத் தப்பிக்கலாம் என எண்ணிக்கொண்டு பேன்ட் பைக்குள் கையை விட்டேன். போன் அங்கு இல்லை. பதறியபடியே மற்ற இரு பைகளிலும் பார்த்தபோதுதான் என் நினைவிற்கு வந்தது, ‘சாப்பிடும்போது மிர்துலாவின் கைப்பையில் போனை வைத்துவிட்டது’

என்னை நானே நொந்துகொண்டேன்.

ஒரே இடத்தில் நின்றுவிட்டால் பயம் என்னை முழுவதும் ஆட்கொண்டுவிடும் என்பதால் வேகமாக நடந்துகொண்டே இருந்தேன். அச்சத்திலா? அல்லது புழுக்கத்திலா? என்று தெரியவில்லை, என் சட்டை முழுவதும் வியர்வையில் நனைந்துவிட்டது.

டிஸ்கவரி சேனலில் ‘பியர் கிரில்ஸ்’ மேன் Vs வைல்டில்’ காடுகளில் தொலைந்துவிட்டால் எப்படித் தப்பிப்பது என வாழ்ந்து காட்டியதைப் பலமுறைப் பார்த்திருக்கிறேன் நான். அவர் கூறிய அறிவுரைகள் அனைத்தையும் நினைவில் கொண்டு வர முயன்றேன். நான் எந்த இடத்தில் தொலைந்திருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் திசைகளை முதலில் நான் அறிந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தவன் ஒரு மரக் குச்சியை ஒடித்துக்கொண்டு வானத்தைப் பார்த்தேன். வானத்தை என்னால் காணவே இயலவில்லை. அடர்ந்த வனமாதலால் என்னால் கதிரவனைக் கூட காண இயலவில்லை. கதிரவனின் ஒளிக் கிரணங்கள் ஊடுருவினால் தானே, நிழலை என்னால் காண இயலும்? நிழல் இருந்தால் தானே வடக்கு எது? தெற்கு எது? என்று என்னால் கண்டறிய இயலும்?

முதல் திட்டம் தோல்வியடைந்து விட்டதால் அடுத்து என்ன செய்தால் இங்கிருந்துத் தப்பிக்க இயலும் எனப் பலவாறு சிந்தித்தேன். பியர் கிரில்ஸ் கூறிய இன்னொன்றும் என் நினைவிற்கு வந்துவிட்டுச் சென்றது. அதாவது, ‘எங்கு தொலைந்தாலும் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை நிச்சயம் அறிந்து வைத்திருந்தால் நாம் உயிர் பிழைக்கும் சாத்தியம் இரு மடங்காக அதிகரிக்கும்’ என்பதுதான். எங்கிருக்கிறோம் என்பதை அறிய ‘என்ன செய்வது? என்ன செய்வது?’ எனப் பதற்றத்துடன் சிந்தித்தபடியே சுற்றும் முற்றும் பார்க்கலானேன்.

இங்கிருக்கும் உயர்ந்த மரத்தின் உச்சிக்கு ஏறிப்பார்த்தால்தான் நான் எங்கிருக்கிறேன், எந்தத் திசையில் சென்றால் நான் காப்பாற்றப்படுவேன் என்பதை அறிய இயலும் என்பதால் உயரமான மரத்தைத் தேடினேன்.

இருப்பதிலேயே உயரமான மரம் ஒன்றை அடையாளம் கண்டு அதில் ஏறத் தீர்மானித்து அம்மரத்தின் அடியைப் பிடித்தேன். அந்த மரத்தின் பெயர் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அதன் தோல் வேப்ப மரத்தின் தோலைப் போன்று சொரசொரவென்று காணப்பட்டது. மரத்தை அணைத்தேன், என்னால் அணைக்கக் கூட இயலவில்லை. அவ்வளவு பெரிய மரம் அது. ஏற முயன்றேன். பற்றுகோடில்லாமல் ஒரு அடி கூட என்னால் மேலே ஏற இயலவில்லை. மேல் சட்டை கிழிந்து, மார்பை சிராய்த்திருந்தது. கைகளில் வலி ஏற்பட்டு பிடி தளர முயற்சியைக் கைவிட்டேன். மரத்தைச் சுற்றிப் பார்த்தேன். அதற்கு அருகில் வேறொரு மரம் தாழ்வாக வளர்ந்திருந்தது. அடியிலிருந்தே கிளைகள் பல கிளைத்து அந்தக் கிளைகள் அந்தப் பெரிய மரத்தின் அடிக் கிளை வரை நீண்டிருந்தது. இந்தச் சிறிய மரத்தின் வழியாக ஏறித்தான் அந்தப் பெரிய மரத்தின் உச்சிக்குச் செல்ல இயலும் என்பதைத் தீர்மானித்துக்கொண்டு ஏற முயன்றேன்.

வீட்டில் இருக்கும் போது தினமும் ஆடுகளுக்கு தழை வெட்ட மரம் ஏறிப் பழகியிருந்ததால் அந்த மரத்தில் ஏறுவது எனக்கு அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. மரக் கிளைகளில் ஆங்காங்கே ஓய்வேடுத்தபடியே அந்த மரத்தின் உச்சியை ஒருவழியாக அடைந்திருந்தேன். மரத்தின் உச்சியிலிருந்து அந்த வனத்தை சுற்றிப் பார்த்தேன். பிரமாண்டம் என்பதன் அர்த்தத்தை அப்போதுதான் உணர்ந்தேன் நான். ஏனெனில் நான் ஏறியதுதான் மிகவும் உயர்ந்த மரம் என நினைத்திருந்தேன்.  ஆனால், அதை விடப் பிரமாண்ட உயரமுடையப் பல மரங்கள் நின்று என் பார்வையை மறைத்துக்கொண்டிருந்தன. பொறுமையாக கீழே இறங்கினேன். உடலின் சக்தி அனைத்தையும் இந்த மரத்தில் ஏறுதலில் செலவிட்டு விட்டதனால் சோர்ந்துபோய் காணப்பட்டேன் நான்.

‘ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்தால் ஆபத்து பல மடங்கு அதிகமாகிவிடும். ஆக, நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும்’ என பியர் கிரில்ஸ் கூறியது மீண்டும் நினைவில் வர உற்சாகத்தைத் திரட்டிக்கொண்டு வேகமாக அங்கிருந்து நடக்கலானேன். எனக்கு முன்னால் காணப்பட்ட பெரிய மரங்களை இலக்காக நிர்ணயித்துக்கொண்டு ஒரே திசையில் நடக்கத் தொடங்கினேன். முடிந்தவரை ஒரே இடத்தை நான் சுற்றிக்கொண்டிருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். நிச்சயம் மிர்துலா என்னைத் தேடி வருவாள். அதுவரை எந்தக் காட்டு விலங்குகளிடமோ அல்லது நஞ்சுப் பூச்சிகளிடமோ அகப்பட்டு உயிரை விட்டுவிடக் கூடாது. பெரிய முயற்சிகள் எடுத்து கை மற்றும் கால்களை முறித்துக்கொள்ளக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தேன்.

நான் நடந்து வந்த நடை பாதையில் காணப்பட்ட விலங்குகளின் கால் தடயங்கள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கின. நரி மற்றும் ஓநாய்களின் கால் தடயங்கள் தான் அது என்பதை என்னால் எளிதில் கண்டறிய முடிந்தது. இந்தப் பாதையில் மேற்கொண்டு பயணிப்பது மரணத்தின் கூடாரத்திற்குச் செல்வதற்குச் சமம் என என் உள்ளுணர்வு என்னைப் பலமாக எச்சரித்தது. இருப்பினும் இந்தப் பாதையை விட்டால் வேறு மார்க்கம் இல்லை. இந்தப் பாதை அருகிலிருக்கு நீர் நிலை அல்லது ஓடைக்குச் சென்றால், பிறகு அதனைப் பின்தொடந்து சென்று காட்டுக் கிராமங்கள் எதையாவது காண நேர்ந்தால் எளிதில் தப்பித்துவிடலாம் என நினைத்துக்கொண்டு மேலும் வேகமாக நடக்கத் தொடங்கினேன்.

வனத்தில் வெளிச்சம் சிறிது சிறிதாகக் குறைந்துகொண்டே வந்தது. எப்படியும் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் பொழுது இருட்டி விடும். அதற்குள் இந்த வனத்திலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் அல்லது இன்றைய இரவைக் கழிக்கவாவது தகுந்த இடத்தை அடைந்துவிட வேண்டும் என எண்ணிக்கொண்டு வேகமாக நடக்கலானேன்.

நேரம் கடக்கக் கடக்க அவ நம்பிக்கை என்னுள் துளிர்விடத் தொடங்கியது. எனக்கு நினைவில் இருந்த அனைத்துக் கடவுள்களையும் உதவிக்கு அழைத்துப் பார்த்தேன். யாரும் வரவில்லை; வெளிச்சம் முற்றிலும் குறைந்துவிட்டது. எப்படியும் இன்னும் அரை மணி நேரத்திற்குள் இருட்டிவிடும் என்பதை உணர்ந்த நான் இன்னும் வேகமாக நடக்கலானேன். மழை நீர் தேங்கிய சிறு குட்டை ஒன்றை வழியில் கண்டேன். முகம் மற்றும் கை கால்களை நன்கு கழுவிய பிறகு வயிறு நிறையும் அளவிற்கு நீரைப் பருகினேன். இதற்கு மேல் நடந்தால் ஆபத்து என நினைத்து அந்தக் குட்டைக்கு அருகில் கிடந்த பெரிய பாறை மீதேறி அமர்ந்துகொண்டேன் நான். அந்தப் பாறைக்கு மேலே பெரிய பாறை ஒன்றின் மூக்கு வெளியே நீட்டிக்கொண்டு குடை போலக் காணப்பட்டது. அதில் ஏறி அமர்ந்து சாய்ந்து கொண்டேன். பாறை இதமான சூட்டை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

மார்கழி மாதமாகையால் பனி பொழியத் தொடங்கியது. அடர்ந்த மரக்கூரையைக் கடந்து பனி இறங்கியிருக்கவில்லை. ஆனால், பனியின் குளிர்ச்சியைக் காற்றில் உணர்ந்தேன் நான். ஆனால், அந்தப் பாறையின் இதமான சூடு சிறிதும் குறையாமல் என்னைச் சூடாகவே வைத்திருந்ததனால் எனக்குக் குளிரவில்லை.

வெளிச்சம் சிறிது சிறிதாகக் குறைந்து ஒரு கணத்தில் காடே இருளுக்குள் மூழ்கிவிட்டது. காடே நிசப்தமாகக் காணப்பட்டது. காற்று கூட சதி செய்து நின்றுவிட மரங்களின் இலைகள் உராயும் சத்தம் கூட எழாமல் இருக்க என் இதயத் துடிப்பின் சத்தம் மட்டும் நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகிக்கொண்டிருந்தது. சூன்யமாகிப் போன காட்டில் நான் மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறேன் எனும் எண்ணமே என்னுள் மரண பீதியை வரவழைத்துக் கொண்டிருந்தது.

திடீரென்று என் மனம், ‘இந்தப் பாறையில் நிச்சயம் எந்த சித்தராவது அமர்ந்து தவம் செய்திருப்பார். அந்த சித்தரின் சக்தி என்னைக் காக்கும்’ என எண்ணியபடியே எனக்கு முன் சூன்யமாகிக் காணப்பட்ட அந்த வனத்தையே பார்த்துக்கொண்டு பாறையில் சாய்ந்திருந்தேன். அந்த வனத்தில் திடீர் திடீரென்று ஆங்காங்கு எழும் சிற்சில விலங்குகளின் சத்தமும், பறவைகளின் கீச்சல் குரலும் சேர்ந்து என்னுள் குடிகொண்டிருந்த கொஞ்ச நஞ்ச தைரியத்தையும் விரட்ட முனைந்துகொண்டிருந்தது. என் பாறைக்குப் பின்னால் சற்றுத் தொலைவில் திடீரென்று ஏற்பட்ட நரியின் ஊளைச் சத்தம் ஒன்று என்னுள் இருந்த கொஞ்ச நஞ்ச தைரியத்தையும் பிடுங்கிக்கொண்டு மரண பயத்தை அளித்துச் சென்றது.

கண்களை இறுக மூடிக்கொண்டேன். சித்தர்களைப் போன்றே வஜ்ராசனத்தில் அமர்ந்து, சித்தர்களின் சக்திகள் அனைத்தும் என்னுள் வருவதைப் போன்று நினைத்துக் கொண்டேன். எனக்கு முன்னால் பெரும் நெருப்புச் சுடர் ஒன்று எரிவதைப் போலவும், அதைப்பார்த்து அனைத்து மிருகங்களும் ஓடுவதைப் போன்றும் நினைத்துக்கொண்டு அமர்ந்திருக்கையில் என்னுள் பலவித சிந்தனைகள் மீண்டும் எழத் துவங்கின.

அச்சம் என்னைப் பைத்தியக்காரனாக மாற்றிக் கொண்டிருந்தது.

அச்சிந்தனைகள் என் மன பலத்தை பரிசோதித்தது. ‘உன்னை உதறித் தள்ளிய பெண்ணிற்காக மோசமான முடிவெடுத்து இப்படிப் பெரும் துயரில் சிக்கிக்கொண்டு உன்னை நம்பி வந்த பெண்ணை தனியாக தவிக்க வைத்து விட்டாயே? உன்னை நம்பி வந்தவளுக்கு நீ செய்திருக்கும் நன்மை இதுதானா?’ என என் மனம் என்னை நோக்கியே கேள்விக் கணையை வீசி எறிந்தது. “நான் செய்திருப்பது தவறுதான், என் வாழ்வில் நான் எடுத்திருக்கும் மோசமான முடிவு இதுதான். என் தவறுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கடவுள் அளிக்கட்டும். ஏற்றுக்கொள்ள சித்தமாக இருக்கிறேன்” என வாய்விட்டே கூறினேன் நான்.

பௌர்ணமிக்கு அடுத்த மூன்றாவது நாள் ஆகையால் எப்படியும் இன்னும் குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துதான் நிலவு உதிக்கும். அதன் பிறகு நிலவு மேலே உயர்ந்த பிறகுதான் இங்கு வெளிச்சம் தோன்றும். அதுவரை இந்தச் இருட்டுச் சூன்யத்தில் பொழுதைக் கழித்தே ஆக வேண்டும். மார்கழி மாதப் பின் பனியை விடியற்காலையில் எப்படி நான் சமாளிக்கப் போகிறேன்? அதுவும் போர்வை, நெருப்பு இல்லாமல்? என எண்ணியபோதே என் உடல் குளிரில் நடுங்கத் தொடங்கியிருந்தது.

இருளில் மரம் மற்றும் பொந்துகளுக்குப் பின்னால் பல விலங்குகள் ஒளிந்துகொண்டு என்னையே பார்ப்பதைப் போன்று தோன்ற மீண்டும் கண்களை மூடிக்கொண்டு அந்த பாறையில் சாய்ந்துகொண்டேன். பாறையின் மித சூடு அந்தக் குளிர் காற்றிற்குக் கதகதப்பாக இருந்தது.

கண்களை மூடிக்கொண்டிருந்த நான் எப்போது உறங்கினேன் என்று எனக்குத் தெரியவில்லை. யாரோ என்னைத் தட்டி எழுப்பிய பிறகுதான் கண்களைத் திறந்த நான் ஆச்சர்யத்தில் அதிர்ச்சியாகிவிட்டேன். நான் உறங்கியபோது சூன்யமாகக் காணப்பட்ட வனத்தில் அப்போது சந்திரன் கிழக்கு வானில் உதித்து உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களின் மீது தவழ்ந்து அந்த வனத்திற்குள் தனது பால் கிரணங்களைப் பரிபூரணமாகப் பாய்ச்சிக் கொண்டிருந்தது. நிலவொளியில் அந்த வனமானது நந்த வனம் போலவே அழகு பெற்று விளங்கியது. எனக்கு முன் காணப்பட்ட மழை நீர் தேங்கிய அந்தக் குட்டையில் விழுந்த நிலவின் பிம்பம், அதற்கு மேல் பறந்துகொண்டிருந்த மின்மினிப்பூச்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. நிலவொளியில் மொத்த வனமுமே மோகன வடிவம் பெற்றுக் காணப்பட்டது.

‘சில மணி நேரங்களுக்கு முன் நான் கண்ட வனமா இது?’ என நினைத்தபடியே பார்த்துக்கொண்டிருக்க திடீரென்று சில்லென்ற குளிர் காற்று வீசி உடலை வருடி சிலிர்க்கச் செய்துவிட்டுச் சென்றது. அந்தத் திடீர் காற்றினைத் தொடர்ந்து தென்றலானது பூந்தென்றலாக மிதமாக வீச, அந்தத் தென்றலில் தாழை, மல்லிகை, செண்பகம் ஆகிய மலர்களின் வாசம் சேர்ந்துவிட்டிருந்தது. ‘பூந்தென்றல்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை முழுமையாக அன்றுதான் அறிந்துகொண்டேன் நான்.

அந்த அதிசயக் காட்சிகளைக் கண்ட என் கண்களை நம்பலாமா? அல்லது வேண்டாமா? என எண்ணி எழுந்து நின்றுகொண்டிருந்த போதுதான் அந்தக் கேள்வி என்னுள் எழுந்தது. ‘யாரோ என்னை எழுப்பினார்களே, அது யார்?’ என்று எண்ணிக்கொண்டு குழப்பத்துடன் பார்வையைத் திருப்பினேன். யாரோ நிற்பதைப் போன்ற நிழலைத்தான் முதலில் கண்டேன். பார்த்த கணத்திலேயே அதிர்ச்சியில் உறைந்தபடியே பார்வையை மேலும் திருப்பினேன். ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். உற்றுப் பார்த்தேன் நான். நிலவொளியில் அவளது முகம் பரிபூரணமாகத் தெரிந்தது எனக்கு. நிலவைப் போன்ற பிரகாசமான முகம் என்பார்களே, அவ்வளவு அழகாக அவளது முகம் காணப்பட்டது. அவளது ஆடை ஒன்றும் இக்காலத்திய ஆடையைப் போன்று காணப்படவில்லை. ஒரேயொரு நீண்ட மெல்லிய துணியைத்தான் இடுப்பில் சில சுற்றுகள் சுற்றி அதைத் தனது வலது தோளில் போட்டுக்கொண்டு அதன் முனையை இடுப்பில் சொருகாமல் தொங்கவிட்டிருந்தாள். இக்காலத்தில் பெண்கள் அணியும் ரவிக்கையோ அல்லது சில நூற்றாண்டுகளுக்கு முன் பெண்கள் அணியும் கச்சை’யையோ அவள் அணியாமல் அந்தத் துணியை மட்டுமே சுற்றிக்கொண்டு அவளது மார்பை மறைத்திருந்தாள். அதற்கு மேல் எனது கண்களை அங்கு நிலை நிறுத்த எனது சுய ஒழுக்கம் இடம் கொடுக்காததால் பார்வையை அங்கிருந்து விலக்கிவிட்டேன்.

இடுப்பைத் தாண்டி முழங்கால் வரை நீண்டு வளர்ந்திருந்த அவளது கருங்கூந்தலானது அந்தத் தென்றலில் அவளது முந்தானையுடன் சேர்ந்து காற்றில் பறந்துகொண்டிருந்தது. அவளது துணியானது கீழே அந்தப் பாறை வரை நீண்டு மறைத்திருந்ததால் அவளது  கால்களை என்னால் காண இயலவில்லை.

அவள் பெண் தானா? அல்லது வனத்தில் உலவும் மோகினியா? என எண்ணியபடியே அவளது கால் தெரிகிறதா என கீழேயே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் நகர்வதாகத் தெரியவில்லை. சாதாரணப் பெண்ணையும், மோகினிப் பிசாசையும் அறிந்துகொள்ள எனக்கிருக்கும் ஒரே தந்திரம் இந்தக் ‘கால்’ தான். சிறு வயதிலிருந்தே என் கிராமத்தில் நான் கேட்டிருக்கும் எந்தப் பேய் கதைகளிலும் பேய்களுக்குக் கால் இருந்ததில்லை. ஆதலால்தான் அவளுக்குக் கால் இருக்கிறதா என ஆராய்ந்துகொண்டு கீழேயே பார்த்துக்கொண்டிருந்தேன். தோல்விதான் எனக்கு.

பார்வையை உயர்த்தி அவளது முகத்தைப் பார்த்தேன். அப்பெண் எனது முகத்தையே பரிவுடன் பார்த்துக்கொண்டு நின்றாள். நான் காண்பது கனவுதானா என்று சந்தேகப்பட்டு நான் படுத்திருந்த இடத்தைப் பார்த்தேன். அவ்விடம் வெறுமையாகவே காணப்பட்டது. எனது காலைக் கிள்ளியும் பார்த்துக்கொண்டேன். வலித்தது எனக்கு. இது கனவு இல்லை என உறுதி செய்துகொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தபடியே நின்றுகொண்டிருந்தேன்.

நான் கிள்ளியதைக் கவனித்துவிட்ட அப்பெண் சிரிக்கவே செய்தாள். அந்தச் சிரிப்பும், அவளது மந்தகாச புன்னகையும் அவளது முகத்திற்கு மேலும் அழகு சேர்த்தது. மேலும் சில கண நேரங்கள் எனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள், “வணக்கம்” என்றாள். அவளது வார்த்தை உச்சரிப்பு சற்று வித்தியாசமாக இருந்தது. ஆனால், அந்தக் குரலும் இனிமையாகத்தான் இருந்தது. அவள் பேசினால் இரவு முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றியது எனக்கு.

நான் அமைதியாக நிற்பதைக் கண்டவள், “எனது உரை தங்களுக்கு விளங்குகிறதா?” என வினவினாள்.

அதிர்ச்சியிலிருந்து விடுபட்டவனாய் நானும் பதிலுக்கு, “வணக்கம்” என்றேன்.

சிரித்தபடியே, “அதிர்ச்சியிலிருந்து தாங்கள் விடுபட்டு விட்டீர்களா?” என்றாள் மரியாதையுடன்.

“ம்ம்ம்” என்றேன் நான். அவளது அழகையும், குரலையும் கேட்டபோது, ‘கொல்லியம் பாவை என்பவள் இவள் தானா? கொல்லியம் பாவை என்பவள் அழகின் சொரூபமாக இருப்பாள் என்று மிர்துலா கூறினாளே? கரிகாலனைக் கொலை செய்ய வந்த ஒற்றர்களைக் கொன்ற பாவை இவளாக இருந்தால் என் கதி என்னாவது? வழி தவறி வந்துவிட்டவன் நான் என்பதை இவளுக்கு எப்படி என்னால் நிரூபிக்க இயலும்? இந்த மோகினிப் பிசாசிடமிருந்து என்னால் தப்பிக்க இயலாதா?’ மனம் பலவாறு குழம்பவே செய்தது.

“நீண்ட நேரமாக நிற்கிறீர்கள், அமருங்கள்” எனக் கூறியவாறே அவளது நீண்ட அடர்ந்த கூந்தலைக் கையில் எடுத்து உதறியபடியே கீழே அமர்ந்தாள். அவள் தனது கூந்தலை உதறிய போதுதான் உணர்ந்தேன் நான், சற்று முன் வெளிப்பட்ட தாழை, செண்பகம், மல்லிகை, பன்னீர் போன்ற மலர்கள் கலந்த சுகந்த நறுமணம் அவளது கூந்தலிலிருந்துதான் வெளிப்படுகிறது என்பதை.

தனது காதலியின் கூந்தலைப் பற்றி, ‘நறியவும் உளவோ நீ அறியும் பூவே?’ என்று பாடி பாண்டிய மன்னனிடமும், நக்கீரனிடமும் கலகம் செய்த புலவன் இறையனார் இந்தப் பெண்ணின் கூந்தலைப் பற்றிப் பாட இங்கு இல்லையே?’ என்ற எண்ணம் எனக்கு அப்பொழுது தேவையில்லாமல் வந்து தொலைத்தது. அவளது அழகு எனக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும் பயத்துடன் அவளுக்குச் சற்றுத் தொலைவில் அதே பாறையில் அமர்ந்தேன் நான்.

‘எழுந்து ஓடி விடலாமா?’ என்று கூட அச்சத்தில் சிந்தித்தேன் நான். ‘எழுந்து ஓடினால் இப்பாவை அருகில் புதர்களில் மறைத்து வைத்திருக்கும் விசை’க் கருவிகளைக் கொண்டு என்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வேன்?’ என்ற சிந்தனை எழ அந்த முயற்சியைக் கைவிட்டேன் நான்.

மீண்டும் அப்பெண் எனது கண்களில் அவளது விழிகளை நிலைக்க வைத்தபடியே, “தங்களுக்குப் பேச வரும் தானே? இல்லை நான் பேசுவது தங்களுக்குப் புரியவில்லையா?” என வினவினாள் மீண்டும்.

“எனக்குப் பேச்சு வரும்” என்றேன் நான்.

“தாங்கள் பேசுவது தமிழ் என்று என்னால் அடையாளம் அறிந்துகொள்ள இயலுகிறது. அதுவும் தங்களது உச்சரிப்பு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. ஆனால், எனக்குப் புரியவில்லையே?” என்றாள் குழப்பத்துடன்.

“தங்களது பேச்சும்தான் விசித்திரமாக இருக்கிறது. நான் பெரும் சிரமப்பட்டு புரிந்துகொள்ள வில்லையா? அப்படியே, தாங்களும் நான் பேசுவதை புரிந்துகொள்ளுங்களேன்” என்றேன் நான்.

“பேச்சு என்றால்?” எனக் கூறியவள் வியப்புடன் எனது முகத்தையே பார்த்தாள்.

“பேச்சு என்றால்…” என சிறிது நேரம் சிந்தித்தவன், “உரை” என்றேன்.

“ஓ… உரையா…” பலமாகச் சிரித்தாள். அவளது சிரிப்பிற்குப் பாண்டிய நாட்டில் விளைந்ததாகக் கூறப்படும் முத்துகள் அனைத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது. அவ்வளவு அழகான சிரிப்பினை உதிர்த்தாள் அவள்.

நானும் சிரித்தபடியே, “ம்ம்ம்” என்றேன்.

“தாங்கள் உரைக்கும் தமிழ் புதுவிதமாக அல்லவா இருக்கிறது?”

“தங்களது உரை தான் எனக்குப் பெரும் விசித்திரமாக இருக்கிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன் பேசும் தமிழைப் போன்றே இருக்கிறது. நான் பேசுவது பேச்சு வழக்கு. தாங்கள் இலக்கிய நடையில் உரையாடுகிறீர்கள்.”

“ஓ… கொடுந்தமிழோ?”

சற்று சிந்தித்த நான், “ஆமாம். கொடுந்தமிழ் தான். நீங்கள் பேசுவது செந்தமிழ் தானே” என்றேன் நான்.

“ஆமாம். ஆமாம். தாங்கள் எந்த ஊர் கூடலா?” என என்னை நோக்கி வினவினாள்.

கூடல் என்ற பெயரைக் கேட்டதும் குழப்பமடைந்தவன், பிறகு கூடல் என்றால் மதுரையைத் தானே குறிக்கும் என்பது நினைவிற்கு வர, “இல்லையே, எதற்குக் கூடலா என்று வினவுகிறீர்கள்?” என்றேன் நான்.

“இல்லை. தாங்களும் இப்போது என்னுடன் சரளமாக இலக்கியத் தமிழில் உரையாடுகிறீர்களே, ஆதலால்தான் கூடலா என வினவினேன் நான்.”

“கூடலில் செந்தமிழில் தான் எப்போதும் பேசுவார்களா?”

“எங்கள் காலத்தில் கூடல் ஒன்றையே செந்தமிழ் நாடு என்பார்கள். மற்ற பன்னிரண்டு நாடுகளையும் கொடுந்தமிழ் நாடு என்றே அழைப்பார்கள். ஆதலால் தான் தங்களை கூடலா என்று வினவினேன்.”

“உங்கள் காலம் என்றால் எந்தக் காலத்தைக் குறிப்பிடுகிறீர்கள்?”

“அது பல யுகங்களுக்கு முன்.  மறந்தே போய்விட்டது எனக்கு” என்றாள் சற்று சலிப்புடன்.

அவள் கூறிய பதிலைக் கேட்ட நான், ‘இவள் நிச்சயம் சித்தர்கள் உருவாக்கிய கொல்லியம் பாவையாக இருக்க வேண்டும்’ அல்லது மன நலம் பாதிக்கப்பட்டவளாக இருக்க வேண்டும்’ என நினைத்துக்கொண்டேன்.

“என் வினாவுக்கு நீர் எந்த விடையையும் இதுவரை மறுக்க வில்லையே?”

“என்ன வினா? என்ன விடை?”

“தாங்கள் எந்த ஊர் என வினவினேன் நான்.”

“என் கிராமத்தின் பெயர் சாளையக்குறிச்சி. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. செயங்கொண்ட சோழபுரத்தின் அருகில் இருக்கிறது.”

“சோழபுரம்?” ஆச்சர்யத்துடன் வினவினாள் அவள்.

“ஆமாம். பிற்காலச் சோழ மன்னர்கள் பெற்ற பெரும் வெற்றியின் நினைவாக உருவாக்கப்பட்ட பெரும்பட்டினம்.”

“மன்னியுங்கள், இந்தப் பெயரையும் நான் கேள்விப்பட்டதில்லையே.”

சிறிது சிந்தித்த நான், “கங்கை கொண்ட சோழபுரம் தங்களுக்கு தெரியுமா?”

“தெரியாது. கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயர் எப்படி வந்தது?” ஆர்வத்துடன் வினவினாள் அவள்.

“கிட்டத்தட்ட 950 வருடங்களுக்கு முன்பு ராசேந்திரச் சோழன் வடக்கே படையெடுத்து கங்கை வரை வென்றான். பிறகு, அவன் கடல் கடந்து கடாரத்தையும் வென்றான். அந்த வெற்றியின் நினைவாக அவன் தனி பட்டினத்தையே அமைத்து கங்கை கொண்ட சோழபுரம் எனப் பெயர் வைத்தான். அருகில் பெரும் ஏரி ஒன்றை வெட்டி அதற்கு சோழ கங்கம் என்றும் பெயர் வைத்தான்.”

“சோழ கங்கம்?”

“ஆம். சோழ கங்கம் தான். தோற்ற வடநாட்டு மன்னர்களின் தலையில் தங்கக் குடங்களில் கங்கை நீரைக் கொண்டுவரச் செய்து சிவ லிங்கத்தை நீராட்டச் செய்து சோழ கங்கத்தில் கங்கை நீரைக் கொட்டி சிறப்பு செய்தான். சோழ கங்கத்திற்கு கால்வாயை எங்கிருந்து வெட்டினான் எனத் தெரியுமா உங்களுக்கு?”

“தெரியாதே?”

“கொள்ளிடத்திலிருந்து.”

“கொள்ளிடம்?”

“ஆம்.”

“என்ன பெயர் அது? இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லையே?”

“உறையூருக்கு அருகில்தானே காவிரி நதி இரண்டாகப் பிரிந்து காவிரி, கொள்ளிடம் எனப் பாய்ந்து சோழ நாட்டை வளப்படுத்திக் கடலில் கலக்கிறது.”

“உறையூருக்கு அருகிலா? அது எங்கு இருக்கிறது?” என்றாள்.

அவள் பேசியதைக் கேட்ட நான் இவளுக்கு நிச்சயம் பைத்தியம் தான் பிடித்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்துகொண்டேன் நான். இருந்தாலும், இவளை விட்டால் இந்த அடர்ந்த வனத்தில் யாரும் துணைக்கு ஆள் இல்லை. இவளுடன் பேசியே பொழுதைக் கழிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். “உறையூர் என்றால் உறைந்தை.” என்றேன் நான். பிறகு, “கோழியூர்” என்றேன்.

“ஓ… உறைந்தைக்கு அருகிலா காவிரி இரண்டாகப் பிரிகிறாள்?”

“ஆம் அங்குதான்.”

“எங்கள் காலத்தில் காவிரி ஒரே ஆறாகத்தான் புகாருக்கு அருகில் சென்று கடலில் கலந்தாள். உறைந்தையிலிருந்து புகாருக்கு மரக்கலத்தில் பயணிப்போம் நாங்கள்” என்றாள் சிரித்தபடியே.

“உங்கள் காலத்திலா?” என வினவினேன் நான்.

அவள், “ஆமாம்” என்றாள். எனக்கு உள்ளூர நடுக்கமெடுக்கத் தொடங்கியது. இவள் நிச்சயமாக மோகினியாகத் தான் இருப்பாள் என்பதை உறுதி செய்துகொன்டேன் நான்.

அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நான், “உறைந்தையும் தற்பொழுது இல்லை. புகாரும் தற்பொழுது இல்லை. இரண்டும் அழிந்து அடையாளம் தெரியாத அளவிற்கு உருமாறிக் கிடக்கிறது” என்று பதிலளித்துக்கொண்டே கால்களை மடக்கி அமர்ந்திருந்தவளின் கால்கள் வெளியே தெரிகிறதா என்று தலையை சாய்த்து உற்றுப் பார்த்தேன் நான். இவள் மோகினி இல்லை என்றால் சற்று சாவகாசமாக உரையாடலாம் அல்லவா?

ஆனால், அவள் எனது செயலை கவனித்துவிட்டாள். “நீண்ட நேரமாக தலையை சாய்த்துச் சாய்த்து எதையோ தேடுகிறீர்களே? எதைத் தேடுகிறீர்கள், தெரிவித்தால் நானும் தங்களுக்கு உதவுவேன் அல்லவா?” என்றாள் புன்னகையுடன்.

அவளுடன் பேசத் தொடங்கியிருந்ததால் எனக்குள் தைரியம் வந்தவனாய் நான், “உங்கள் கால்களைக்  காணத்தான் இவ்வளவு சிரமப்படுகிறேன் நான்” என்றேன்.

“எனது கால்களையா?”

“ஆம்.”

“எதற்கு நீங்கள் எனது கால்களைப் பார்க்க முயல்கிறீர்கள்?”

“சித்தர்கள் இந்த மலையில் கொல்லியம் பாவையை உருவாக்கினார்கள் என்ற வதந்தி இருக்கிறது?”

“அது வதந்தி இல்லை. நானே அந்தப் பாவையை ஒருமுறை சந்தித்திருக்கிறேன்.”

“தாங்களா?”

“ஆம்.”

“அந்தக் கொல்லியம் பாவை தாங்களாக இருப்பீர்களோ என்று அஞ்சுகிறேன் நான்.” என்றேன் சற்று பயத்துடன்.

நான் கூறியதைக் கேட்டு அந்தப் பாவை என்னைக் கொன்றுவிடுவாள் என்றே அஞ்சினேன் நான். ஆனால், அவள் சிரித்தபடியே எழுந்தவள், தனது துணியை உயர்த்தி, “எனக்குக் கால்கள் இருக்கிறது. அந்தக் கொல்லியம் பாவை நான் அன்று” எனக் கூறியவள் மீண்டும் கீழே அமர்ந்துகொண்டாள்.

அவளது முகத்தைப் பார்க்க இயலாமல் கீழே தலையைத் தொங்க போட்டுக்கொண்டு சிறு நாணத்துடன் அமர்ந்திருந்தேன் நான். என் தலையை உயர்த்தி அவளது முகத்தைப் பார்த்தேன். அதில் வருத்தம் குடிகொண்டிருந்தது. களை இழந்துக் காணப்பட்ட அவளது முகத்தைக் காணவே எனது மனதிற்குப் பொறுக்கவில்லை. “என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் கொல்லியம் பாவையாக இருப்பீர்கள் என்று ஐயப்பட்டது என் பிசகு தான். அதற்குத் தாங்கள் எதற்கு வருந்துகிறீர்கள்?” என வினவினேன் நான்.

அவள் எந்தப் பதிலையும் கூறாமல் தலையைத் தொங்கபோட்டுக்கொண்டு கீழே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். சற்று நேரம் கழித்து, “உயிர்களைப் பறிக்கும் மாய மோகினியான கொல்லியம் பாவையைப் போன்றா நான் இருக்கிறேன்?” என வினவினாள் எனது முகத்தைப் பார்த்தபடியே.

அப்போது மட்டும் எனக்கு அவ்வளவு மன பலம் எங்கிருந்து வந்ததென்றுத் தெரியவில்லை. “நிலவின் குளிர்ந்த கதிர்களை விட இதம் தரும் அழகிய விழிகள். கலை மிகுந்த முகம். மலருக்கு மலர் பூந்தாதுவை சேகரித்து மலரை ஆராய்ச்சி செய்யும் தும்பியே வியக்கும்படியான அழகிய நீண்ட வாசனையுடைய கருங்கூந்தல். செந்தாமரை மலரின் மொட்டுகளை விட சிவந்த வனப்பு மிகுந்த உடல். கொல்லியம் பாவை பல உயிர்களை வதைத்திருக்கும். ஆனால், உங்கள் விழிப் பார்வை பட்டு ஆடவர்களின் தோள்கள் தான் காயப்படும். உங்களை நான் கொல்லியம் பாவை என்று சந்தேகப்பட்டது பெரும் பிசகு தான். மன்னித்துவிடுங்கள்” என்றேன் நான்.

நான் கூறியதைக் கேட்டதும் அவளது முகத்தில் மாற்றங்கள் ஏதாவது தெரிகிறதா என்று அவளது முகத்தையே பார்க்கலானேன். எந்த மாற்றமும் இல்லை. அவள் கோபப்படவும் இல்லை. எனது முகத்தையே பார்க்கலானாள். அந்தப் பார்வையில் முன்பை விட அன்பும், பரிவும் நிறைந்திருந்தது. என் பார்வையை மீண்டும் விலக்கிக்கொண்டேன். மீண்டும் அவளது முகத்தைப் பார்த்தேன். அவளது பார்வையில் காதல் நிறைந்திருந்தது. ஒருவேளை, அவள் என்னைத்தான் காதலுடன் பார்க்கிறாளா என்ற எண்ணமும் எனக்குள் தோன்றி மறைந்தது. கண நேரம் உற்சாகம் எனக்குள் பெருக்கெடுக்கத்  தொடங்கியது.

அவளது விழிகளைக் கூர்ந்து கவனித்தேன். அவளது பார்வை என்னையும் கடந்து எனக்குப் பின்னால் செல்வதை உணர்ந்தேன்.

“அத்தான். நான் தங்களிடம் கூறியிருக்கிறேன் அல்லவா? நம் மொழி பல யுகங்களைக் கடந்தாலும் எழுத்து வடிவம் தான் மாறுமே ஒழிய அதன் பேச்சு வடிவம் ஒரு நாளும் மாறாது என்று. அதற்கு சாட்சிதான் இவர்” என்றுக் கூற திடுக்கிட்டேன் நான்.

எனக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தேன். அங்கு கம்பீரமான தோற்றமும், எழில் கொஞ்சும் முகமும் உடைய சுந்தரனைப் போன்ற அழகிய தோற்றமுடைய இளைஞன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் மீண்டும் என் மனதில் அச்சம் ஏற்பட்டு மரண பயம் சூழ்ந்துகொண்டது.

“அத்தான்… யுகங்கள் மாறினாலும் நம் நாட்டு ஆடவர்களின் கன்னிகளைப் புகழும் குணம் மட்டும் ஒரு நாளும் மாறாது போலும். அதுவும் தங்களைப் போன்றே” என்றவள் கொல்லென்று சிரிக்கவும் செய்தாள்.

அந்த ஆடவன் நடந்து வந்து எனக்கு முன்பு நின்றான். அவனைப் பார்க்கவே மனம் அச்சப்பட்டது. அப்போதுதான் அவனது இடையில் தொங்கிய வாளினைக் கவனித்தேன். நீண்டு பாதம் வரைத் தொங்கிக்கொண்டிருந்தது.

மனதில் நினைத்துக்கொண்டேன். ‘இவனது வாளினால் என் தலை உடலிலிருந்து பிரியப்போவது நிச்சயம்’ என்று.

தொடரும்…

 

Leave a Comment