மதுவன மாது – 4

3

04. இளவரசன்

“கன்னிகளை வர்ணிக்கும் குணம் மட்டுமா, பல யுகங்கள் மாறினாலும் நம் நாட்டு ஆடவர்களின் வீரம் சிறிதும் குறையாமல் இருப்பதும் நமக்குப் பெருமைக்குரியது தானே” எனக் கூறியபடியே எனக்கு முன் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணிற்கு அருகில் அமர்ந்தான் அவன்.

அவன் அமர்ந்த விதத்திலிருந்தே அவர்களுக்கிடையில் இருந்த காதலையும், நெருக்கத்தையும் என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.

“ஆமாம் அத்தான். சில நூற்றாண்டுகளுக்கு முன் இதே இடத்தில் ஒருவனைச் சந்தித்தோம். நினைவிருக்கிறதா? தங்களைப் பார்த்த பிறகு அவன் தலை தெறிக்க ஓடிவிட்டான். ஆனால், இவர் துணிந்து அமர்ந்திருக்கிறாரே? நம் நாட்டு ஆடவர்களின் வீரம் காலத்தால் அழியக்கூடியதா அது?” எனக் கூறியவள் அவனது முகத்தைப் பார்க்கலானாள். அவனும் சில நிமிடங்கள் அவளது அழகு சிந்தும் வதனத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

திடீரென்று அவளது முகத்திலிருந்து தனது முகத்தைத் திருப்பி எனது முகத்தைப் பார்த்தபடி, “இப்படித்தான், இவளது முகத்தைப் பார்க்கையில் நான் என்னை, எனக்கு முன் இருப்பவர்கள், இந்த உலகத்தை என அனைத்தையும் மறந்துவிடுகிறேன்” என்றான் புன்னகையுடன்.

அவர்கள் மீண்டும் கூறிய நூற்றாண்டுகள் என்ற சொல்லைக் கேட்ட நான், ‘அவளைப் போன்றே இவனும் நிச்சயம் மன நலம் பாதிக்கப்பட்டவனாகத் தான் இருப்பான். இந்த இரவை எப்படி நான் கழிக்கப் போகிறேனோ?’ என எண்ணியபடி அவனது முகத்தையே திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

எனது விழிகளையே உற்றுப் பார்த்தவன், அப்பெண்ணை நோக்கி, “இவரது முகம் வாடியிருக்கிறதே? உணவு அளித்தாயா?” என வினவினான்.

தவறு செய்தவளைப் போன்று தனது உதட்டினைக் கடித்துக் கொண்டவள், “மன்னித்துவிடுங்கள் அத்தான். நீண்ட நாள் கழித்து சோழ நாட்டிலிருந்து ஒருவரைக் கண்ட மகிழ்ச்சியில் உபசரிக்க மறந்துவிட்டேன். சற்றுப் பொறுங்கள்” என்றவள் எழலானாள்.

“பெண்களைப் புகழ்வதில் மட்டும் ஆடவர்கள் இன்னும் மாறவே இல்லை என சற்று முன் ஏளனம் பேசினாயே, எங்கே சென்றது உன் விருந்தோம்பல் பண்பு? இதுதான் உன் கற்பிற்கு அழகா?” எனக் கோபப்பட்டான் அவன்.

“சினம் வேண்டாம் அத்தான். தாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருங்கள். இதோ…” எனச் சிரித்தபடியே செல்லலானாள்.

“எங்களை மன்னித்துவிடுங்கள் தம்பி. இந்த வனத்தில் நாங்கள் இருவரும் மட்டுமே நெடுங்காலமாக உலவிக்கொண்டிருக்கிறோம். எப்போதாவதுதான் யாரையாவது சந்திக்க இயலுகிறது. நினைத்துப் பார்த்தால் கண நேரப் பொழுதினைப் போன்றும் தோன்றுகிறது; யுகங்களைப் போன்றும் தோன்றுகிறது. முன்பு இந்த வனத்தில் ஒருவனைச் சந்தித்தேன். அவனிடம் எங்கள் சோழ நாட்டைப் பற்றி வினவியபோது சோழ நாட்டைக் கள்வர்கள் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்றான். சோழ அரசைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல் சேரர் மற்றும் பாண்டியரையும் தோற்கடித்து ஆட்சி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றான். மூவேந்தரையும் அடக்கி ஆண்டதால் அவர்கள் தங்களை முத்தரையர் என்று குறிப்பிட்டுக் கொள்வதாகக் கூறினான். கவலையாக இருந்தது எங்களுக்கு. பிறகு வெள்ளைத் தோலும், தலையும் பெரிய தலைப்பாகையைப் போன்ற ஒன்றை அணிந்திருந்த ஒருவனைக் கண்டோம் நாங்கள். அவன் பேசியது எங்களுக்குப் புரியவேயில்லை. நாங்கள் என்ன கேட்டாலும் அவன், ‘வாட்’ என்ற ஒரே சொல்லையே திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தான். என்னவள் சற்றுத் தொலைவினில் நடந்து வந்ததைப் பார்த்தவன் என்ன எண்ணினானோ? ஓட்டம் பிடித்தவன்தான்; நிற்கக் கூட இல்லை. மூன்றாவதாக தங்களைத் தான் சந்திக்கிறோம் நாங்கள். அதுவும் எங்கள் சோழ நாட்டைச் சேர்ந்தவரை, மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பி. அந்த மகிழ்ச்சியில் தான் என்னவள் தங்களை உபசரிக்க மறந்துவிட்டாள். கோபம் வேண்டாம்” என்றான் பரிவுடன்.

அவன் கூறியதைக் கேட்கக் கேட்க எனக்கு மனதினுள் அச்சம் சூழ்ந்துகொண்டிருந்தது. ‘இவர்கள் இருவரும் யாராக இருப்பார்கள்?’ என எண்ணிக்கொண்டே பதிலுக்கு என்ன பேசுவதென்றுத் தெரியாமல் அவனது முகத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன் நான். அவனது முகத்தில் காணப்பட்ட கம்பீரம், அழகு, வசீகரம் ஆகியவற்றை யாரிடமும் இதுவரை நான் கண்டதில்லை.

“தம்பி, நீங்கள் கன்னிகளிடம் மட்டும்தான் உரையாடுவீர்களா?” என்றான் புன்சிரிப்புடன்.

எனக்கு அவமானமாகப் போய்விட்டது. “மன்னிக்கவும். உங்களது வாளுரையைப் பார்த்த அதிர்ச்சியில் என் வார்த்தைகள் மௌனமாகிவிட்டன” என்றேன் நான்.

“தற்பொழுதுதான் தங்களைப் பெரும் வீரன் என்று என்னவளிடம் தெரிவித்தேன். தாங்கள் வாளினைக் கண்டு அச்சம் கொள்ளலாமா?”

நான் எந்த பதிலையும் அளிக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது அப்பெண் தனது முந்தானையில் மறைத்து எதையோ கொண்டுவந்தவள், எனக்கு முன் வாழையிலை ஒன்றை விரித்து அதில் பரிமாறலானாள். நான் ஆச்சர்யத்துடன் அவளைப் பார்க்க, “திணை மாவு மற்றும் தேன் இவற்றைக் கலந்துகொண்டு வந்திருக்கிறேன். மூங்கில் அரிசி வறுத்துச் சேர்த்திருக்கிறேன். தயக்கமின்றி உண்ணுங்கள்” என்றாள் அவள்.

“தம்பி, இவள் அளிக்கும் இந்த அமிழ்தை உண்டுதான் யுகம் யுகமாக மரணமின்றி இருக்கின்றேன். மிகவும் சுவையாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த உணவு” என்றான் அவன்.

தயக்கத்துடனே சிறிதளவு சுவைத்துப் பார்த்தேன். என் வாழ்வில் அப்படியொரு சுவையை சுவைத்ததே இல்லை. அப்படியொரு சுவை. பசியில், அனைத்தையும் உண்டு முடித்தேன். தண்ணீர் ஊற்றினாள் கைகழுவிக் கொண்டேன். பிறகு, அவள் தனது முந்தானையில் என் கையைத் துடைத்து விட்டாள்.

நெகிழ்ந்து போனேன் நான்.

எங்கள் மூவருக்குள்ளும் உரையாடல்கள் மீண்டும் ஆரம்பமானது. மீண்டும் அவன், “தாங்கள் சோழ தேசத்திலிருந்தா வருகிறீர்கள்?” என்றான்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here