பெரும்பேறு அளிக்கும் பெரும்பேர் கண்டிகை முருகன்!

3

கத்தியர் சிவபெருமானின் திருமணக்கோலத்தை தரிசித்த பல திருத்தலங்கள் நாடெங்கும் இருந்தாலும், அவர் சிவனாரின் திருமணக் கோலத்துடன் முருகப்பெருமானையும் சேர்த்துத் தரிசித்த சிறப்புக்கு உரிய தலம் பெரும்பேர் கண்டிகை. இதுமட்டுமா?

பெரும்பேர் கண்டிகை முருகன்

* பிரம்மதேவர் அனுதினமும் கந்தக்கடவுளை வழிபடும் தலம்.

* வேலாயுதம், அம்பிகையின் சக்தியாக வழிபடப்படும் தலம்.

சத்ரு சம்ஹார யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட அபூர்வ தலம்;

* தரிசிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் அவர்கள் விரும்பும் பேறுகளை குறைவின்றி அருளும் முருகனின் தலம்.

– இப்படி பல மகிமைகளைத் தன்னகத்தே கொண்டது,  பெரும்பேர் கண்டிகை.

பெயருக்கு ஏற்ப பெரும்பேறு பெற்று திகழ்கிறது இவ்வூர். ஏன் தெரியுமா? சின்னஞ்சிறு கிராமம்தான் என்றாலும் சுமார் 33 திருக்கோயில்களைக் கொண்டு திகழ்கிறது பெரும்பேர்கண்டிகை. இவ்வூரை ஒட்டிய சஞ்சீவிமலையில், வள்ளி தேவசேனா சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார்.

உயிர் காக்கும் மூலிகைகள் நிறைந்த மலை என்பதால், இந்த மலை சஞ்சீவிமலை என்றானதாம். இதன் அடிவாரத்தில் கிராம தேவதையாக எல்லையம்மன் கோயில் கொண்டிருக்கிறாள். பல குடும்பங்களின் குலதெய்வம் இவள்.

கோயிலுக்கு அருகிலிருந்த சஞ்சீவி தீர்த்தத்தில் நம்மைத் தூய்மை செய்துகொண்டு, எல்லையம்மனையும், சுயம்புவாக உருவான பாறை விநாயகரையும், நவகிரகங்களையும் வழிபட்டு விட்டு, படியேறுகிறோம். சிறு குன்றுதான். சுமார் 100 படிகளைக் கடந்ததும் ஆலயத்தை அடைந்துவிடலாம்.

பெரும்பேர் கண்டிகை முருகன் தலம்

சிவபெருமானின் திருமணத்தின்போது சமநிலை தவறிய பூமியைச் சமன்படுத்தவேண்டி, சிவனாரின் கட்டளைப்படி தென் திசை நோக்கிப் புறப்பட்டார் அகத்தியர். அப்போது, தாம் விரும்பிய இடங்களிலெல்லாம் சிவபெருமானின் திருமணக் கோலத்தை தரிசிக்கும் வரத்தைப் பெற்றே புறப்பட்டார். அதன்படி பல திருத்தலங்களில் அகத்திய முனிவர் சிவபெருமானின் திருமணக் கோலத்தை தரிசித்தார்.

அவர் இந்தத் தலத்துக்கு வந்தபோது, சிவனாரின் திருமணக் கோலத்துடன்  சுப்ரமணிய சுவாமியையும் சேர்த்துத் தரிசிக்கும் விருப்பம் ஏற்பட்டது. அதை நிறைவேற்றும் பொருட்டு, சிவ சுப்ரமணியராக தாய் தந்தை யரான சிவ பார்வதி தேவியருடன் அகத்திய முனிவருக்குத் திருக்காட்சி தந்தார் முருகக்கடவுள். இங்கே, முருகக் கடவுள் ஞானகுருவாக தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார்.

திருக்கோயில் திருச்சுற்றில் தென் மேற்கில் செல்வ சுந்தர விநாயகரும், வட மேற்கில் சுந்தர விநாயகரும் அருள்புரிகிறார்கள். கருவறைக்குள் செல்லும்போது அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
முருகப்பெருமானின் கருவறைக்கு அருகில் காசி விசுவநாதரும் விசாலாட்சி அம்பிகையும் சந்நிதி கொண்டிருக்கின்றனர்.

கருவறையில், புன்னகை தவழ ஓராறு முகமும் ஈராறு கரமும் கொண்டவராய்,  வள்ளி-தேவசேனாவுடன் அற்புத தரிசனம் காட்டுகிறார் அருள்மிகு சிவசுப்ரமணியர். திருக்கரங்களில்  வஜ்ரம், அம்பு, வாள், கொடி, கதை, வாள், வில், கேடயம், தாமரை மலர், திரிசூலம் ஆகியவற்றுடன்  அபய – வரத அஸ்தம் திகழ, போர்க்கோலத்தில் காட்சியளிக்கிறார். போர்க்கோலம் என்றாலும் முருகனின் திருமுகங்களில் அறக்கருணையே தென்படுகிறது! தேவியர் இருவருடன் தெற்கு நோக்கி கந்தக் கடவுள் காட்சி தருவது மிகவும் விசேஷம் என்று சொல்கிறார்கள் பக்தர்கள்.

முருகப்பெருமானின் திருவுருவத்துக்கு முன்பாக சத்ரு சம்ஹார யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

சக்தி வேலையும் தரிசிக்கலாம். யந்திரத்துக்கும் சக்திவேலுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன. ஒவ்வொரு நாளும் பிரம்மதேவர் முருகப்பெருமானை வழிபடுகிறார் என்பதை உணர்த்துவிதம், சக்தி வேலுக்கு அருகில் ஓர் அன்னப் பறவை காணப்படுகிறது.

கருவறை விமானத்தில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சுதைச் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன. கோயிலுக்கு அருகிலேயே உள்ள வில்வமரத்தின் அடியில் சட்டநாத சித்தரின் ஜீவ சமாதி அமைந் திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சத்ருசம்ஹார யந்திரம் மற்றும் சக்திவேலின் மகிமைகளைப் பற்றிக் கோயில் அர்ச்சகர் ரவிச்சந்திர சிவாசார்யரிடம் கேட்டோம்.

“முருகப் பெருமானின் ஆறு முகத்தைக் குறிப்பதைப் போன்று வசியம், ஆகர்ஷணம், உச்சாடனம், மாரணம், மோகனம், தம்பணம் என்று ஆறு பகுதிகளால் ஆன சக்தி வாய்ந்த யந்திரம் இது. அகத்தியருக்கு முருகப்பெருமான் காட்சியளித்த காலத்திலிருந்தே இந்த யந்திரம் வழிபடப்பட்டு வருகிறது.

முருகனுக்கு முன் இருக்கும் வேலுக்கு ‘சக்தி வேலாயுதம்’ என்று பெயர். வேலாயுதம் அம்பாளின் அம்சமாகவே வழிபடப்படுகிறது. வேறு எங்கும் இல்லாத வகையில், இங்கு மட்டும் வேலாயுதத்துக்குச் சிறப்பு வழிபாடாக ‘25 மூல மந்திர பீஜாக்ஷர அர்ச்சனை’  செய்யப்படுகிறது.

வெற்றி தரும் சக்திவேல்

இங்கு விசேஷமாக சத்ரு சம்ஹார யந்திர ஹோமம், சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம் ஆகியவை செய்யப்படுகின்றன. இவற்றைச் செய்யும்போது யம பயம் நீங்கும், நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும், கல்வி ஞானம் பெருகும், சித்த சுவாதீனம் தெளிவடையும், சத்ருக்களின் தொல்லைகள் விலகும்” என்றார்.

பௌர்ணமி தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவது மிகவும் விசேஷம் என்று சொல்கிறார்கள். இதனால் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறுமாம்.

கோயிலில் நாம் சந்தித்த பக்தர் ரெங்கநாதன், ‘`நான் இந்தக் கோயிலுக்கு வந்து சிவசுப்ரமண்யரை தரிசித்த பிறகுதான் என் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இன்று நான் மகிழ்ச்சியுடன்  இருப்பதற்குக் காரணம் என் அப்பன் சிவசுப்ரமண்யர்தான். ஓவ்வொரு பௌர்ணமியன்றும் நான் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம்’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்தத் தலத்து ஆறுமுகக் கடவுளை அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

மிக ரம்மியமாக இயற்கையெழில் சூழ்ந்த இந்தத் தலத்துக்குச் சென்று முருகப் பெருமானைத் தரிசிப்பதே பெரும்பேறுதான். அத்துடன், இம்மைக்குத் தேவையான பெரும்புகழையும் செல்வ வளத்தையும் அள்ளித் தரும் வள்ளலாய் திகழ்கிறார், இங்கு அருளும் சிவசுப்ரமணியர். நீங்களும் ஒருமுறை பெரும்பேர் கண்டிகைக்குச் சென்று வாருங்கள், முருகனின் திருவருளால் பெறுவதற்கரிய பெரும்பேறுகளை வரமாகப் பெற்று வாருங்கள்!

சி.வெற்றிவேல –

படம்: வள்ளி சௌத்ரி.ஆ.


பெரும்பேர் கண்டிகை தான் தோன்றீஸ்வரர் கோயில் கல்வெட்டு

வீர ராஜேந்திரனின் கல்வெட்டு!

இந்த ஊர் இப்போது ‘பெரும்பேர் கண்டிகை’ என்று அழைக்கப்பட்டாலும் அருகிலிருக்கும் தான்தோன்றீசுவரர் கோயில் கல்வெட்டுகளில் ‘பெரும்பேறூர்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வீர ராஜேந்திர சோழன் காலத்தைய கல்வெட்டில் ‘பெரும்பேறூரான திரிபுவன நல்லூர்’ என்றிருக்கிறது. இந்த ஊர் கயிலாசநாதர் கோயிலில் காணப்படும் 16 – ம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் ‘பெரும்பேறு பாளையம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


அகத்தியருக்கு தரிசனம்!

சித்ரா பௌர்ணமியன்று  பெரும்பேர் கண்டிகையில் இருந்து புறப்படும் முருகப்பெருமான், மகாமேரு மலையும் சஞ்சீவி மலையும் சந்திக்கும் பகுதியான இரட்டை மலைச் சந்திப்புக்கு எழுந்தருளுவார். பின்னர் அங்கே எழுந்தருளும் அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரரை வழிபட்டு, பெரும்பேர் கண்டிகையில் தவமிருக்கும் அகத்தியருக்குத் தரிசனம் கொடுக்க அழைத்து வருவார். காணக் கண்கொள்ளா  காட்சியாக இருக்கும் என்று அந்த வைபவத்தைப் பற்றி பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

திருவிழாக்கள்: வைகாசி விசாகம், கார்த்திகை தீபம், மாசி மகம், கந்த சஷ்டி, தைப் பூசம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

கோயில் பெயர் : அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்ரமண்ய சுவாமி  திருக்கோயில்,

தீர்த்தம் : சஞ்சீவி தீர்த்தம்,

அமைவிடம் : பெரும்பேர் கண்டிகை

எப்படிச் செல்வது :  சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் தொழுப்பேடு என்ற இடத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பெரும்பேர்கண்டிகை. தொழுப்பேடு ரயில் நிலையத்திலிருந்தும், பேருந்து நிலையத்திலிருந்தும் ஆட்டோ வசதி உண்டு.

தொடர்பு எண் :  ரவிச்சந்திர சிவாச்சார்யர் 9952965215


பெரும்பேர் கண்டிகை சக்தி வேலாயுதத்துக்கு மூல மந்திர பீஜாக்ஷர அர்ச்சனை!  வீடியோவில் காண QR Code- ஐ பயன்படுத்தவும்.

3 COMMENTS

  1. I have been surfing on-line more than three hours nowadays, yet I never discovered any fascinating article like yours. It’s lovely price enough for me. Personally, if all webmasters and bloggers made good content as you probably did, the web will probably be much more helpful than ever before. “Truth is not determined by majority vote.” by Doug Gwyn.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here