மதுவன மாது – 5

05. நாங்கூர் இளவரசி

நிலவு உச்சிக்கு வந்திருந்தது. பூந்தென்றல் சீராக வீசிக்கொண்டிருக்க குளிரத் தொடங்கியது. அருகில் சேர்த்து வைத்திருந்த சுள்ளிகளைக் கொண்டு வந்து அடுக்கினான் அவன். எங்கோ நடந்து சென்றவள் சில நிமிடங்களுக்குப் பிறகு நெருப்பினை ஒரு கமண்டலத்தில் கொண்டு வந்தாள். கமண்டலத்திலிருந்து சில நெருப்புத் துண்டுகளைக் கையால் அந்த சுள்ளிகளின் மீது போட்டவள் ஊதினாள். அடுத்த கணம் சுள்ளி எரியத் தொடங்கியது. அதன் மீது விறகுகளை எடுத்து அடுக்கினான் அவன். நெருப்பு, அந்தக் குளிர் காற்றிற்கு மிகவும் இதமாக இருந்தது. அந்த நெருப்பையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். அவர்களும் எதுவும் பேசவில்லை.

நான்தான் தொடர்ந்தேன், “நீங்கள் யார்?” என்று.

“இந்த மதுவனத்தில் வாழ்பவர்கள்” என்றான் அவன்.

“மதுவனமா?” ஆச்சர்யத்தில் வினவினேன் நான்.

“ஆம். இதற்குப் பெயர் மதுவனம் தானே.”

“இல்லை.”

“அப்படியெனில்?”

“கொல்லிமலை.”

“கொல்லைமலையா?” ஒரே நேரத்தில் அவ்விருவரும் ஆச்சர்யத்துடன் வினவினார்கள்.

“ஆம். இதற்குப் பெயர் கொல்லி மலை” என்றேன் நான்.

அவர்கள் இருவரும் அமைதியாகவே அமர்ந்திருந்தார்கள்.

“நீங்கள் இதனை மதுவனம் என்றா அழைப்பீர்கள்?” ஆர்வத்துடன் வினவினேன் நான்.

“ஆம் தம்பி. இதற்குப் பெயர் மதுவனம்தான்.”

“புதிதாகக் கேள்விப்படுகிறேன்.”

“இல்லை தம்பி. மதுவனம் என்பது பழங்காலப் பெயர். புராதானக் கதாநாயகர்கள் வாலி, சுக்கிரீவன், அனுமன் ஆகியவர்களைப் பற்றித் தாங்கள் கேள்விப்பட்டதுண்டா?”

“ஆம், அவர்களைப் பற்றிய பல கதைகளை நான் கேட்டிருக்கிறேன். வாலி என்பவன் பெரும் பலசாலி. எதிரில் நின்று அவனை யார் எதிர்த்தாலும் எதிர்ப்பவர்களின் பலத்தில் பாதி அவனுக்குக் கிடைத்துவிடும். ஆயிரம் யானைகளின் பலத்தை உடையவன். வாலி ஒருமுறை அவனது எதிரியை விரட்டிக்கொண்டு குகைக்குள் சென்றுவிட்டான். குகைக்குள் சென்ற வாலி இறந்திருப்பான் என்று அவனது தம்பி சுக்கிரீவன் குகையைக் கல்லால் அடைத்து வாலியின் அரியணையில் அமர்ந்துகொண்டான். எதிர்த்தவர்களைக் கொன்றுவிட்டுத் திரும்பியவன், தனது ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தனது தம்பியைக் கண்டு ஆத்திரப்பட்டான். சுக்கிரீவன் துரோகம் இழைத்து விட்டதாகவே வாலி நினைத்தான். அவனது துரோகத்தை வாலியால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. சுக்கிரீவனை நாட்டை விட்டே விரட்டியவன் அவனது மனைவியையும் அபகரித்துக் கொண்டான். அதன் பிறகு, சுக்கிரீவன் தனது அண்ணனைக் கொல்ல ராமன் என்பவனின் உதவியை நாடினான். ஆனால், ராமனோ மரத்தின் பின்னால் மறைந்திருந்து வில்லினை எய்து வாலியைக் கொன்றான். இதுதானே அவர்களின் கதை?”

“ஆமாம்… ஆமாம்…  இதுதான் அவர்களின் கதை” என்றான் அவன்.

“வாலியும் சுக்கிரீவனும் வசித்த வனம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?” எங்களின் உரையாடலில் குறுக்கிட்டு வினவினாள் அவள்.

“தெரியாது” என்றேன் நான்.

“மதுவனம்.”

“மதுவனமா?”

“ஆம்.”

“அப்படியெனில்…”

“நீங்கள் கொல்லி மலை எனக் குறிப்பிடும் இந்த வனம் தான் மதுவனம்.”

அதிர்ச்சியில் அவர்கள் இருவரின் வதனத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தேன்.

“கோழைத் தனத்துடன்  மரத்திற்குப் பின்னால் மறைந்திருந்து ராமன் வில்லினை எய்த போது வாலியும் சுக்கிரீவனும் எந்தப் பாறையின் மீது சண்டையிட்டார்கள் தெரியுமா?”

“எனக்கு எப்படித் தெரியும்?”

“நாம் அமர்ந்திருக்கும் இதே பாறையின் மீதுதான்.”

“இந்தப் பாறையா?” எனக் கேட்டுக்கொண்டே அதிர்ச்சியில் எழுந்துவிட்டேன் நான்.

“அச்சம் வேண்டாம், அவர்கள் சண்டையிட்டது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால். நீர் அமரலாம்” எனக் குறுக்கிட்டுப் புன்னகையுடன் கூறினான் அவன்.

“குகைக்குள் வாலி சென்றுவிட்டபோது சுக்கிரீவன் அடைத்துவிட்டான் என்றீர்களே, அது எந்தக் குகை என்றுத் தங்களுக்குத் தெரியுமா?”

“தெரியாது…”

“அதோ…” என்றபடியே கை நீட்டினாள் அவள். அவள் கை காட்டிய திசையைக் கவனித்தேன் நான். அங்குப் பெரிய பாறைகளும், புதர்களும் மண்டிக் கிடந்தன.

“நாங்கள் அங்குதான் வசிக்கிறோம்” என்றாள் அவள்.

எனக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. மனதில் அச்சமும் சூழ்ந்துகொண்டது. அது எச்சரிக்கை உணர்வினால் வந்த அச்சமா? அல்லது திகிலினால் வந்த அச்சமா? என்பதை என்னால் இணங்கான முடியவில்லை. இருவரது முகத்தையும் பதற்றத்துடன் மாறி மாறிப் பார்த்தேன். அவர்களின் முகம் அமைதியுடன் விளங்கியது.

மீண்டும் அவர்களிடம் நான், “நீங்கள் இருவரும் யார்?” என்று வினவினேன் நான்.

“அதுதான் கூறினோமே, இந்த மதுவனத்தில் வசிப்பவர்கள் என்று.”

“இல்லை. நூற்றாண்டுகள் என்கிறீர்கள்? யுகங்கள் என்கிறீர்கள்? உண்மையில் நீங்கள் யார்? இங்கு என்ன செய்கிறீர்கள்? சிரஞ்சீவிகளாக வாழ்பவர்களா நீங்கள்? அதற்கான சாத்தியங்கள் உண்டா?” அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டேன் நான்.

நான் கேட்டதற்கு எந்தப் பதிலையும் கூறாமல் மீண்டும் ஒருவரை ஒருவர் அன்புடன் பார்த்துக் கொண்டார்கள். ஏதோ கூற வாயெடுத்தான். அதற்குள் முந்திக்கொண்ட நான், “பிசிராந்தையாரைப் போன்று கவலைகள் இல்லாமல் இருப்பதனால்தான் நாங்கள் இன்னும் சிரஞ்சீவியாக இளமையுடன் வாழ்கிறோம் என்று மட்டும் கூறிவிடாதீர்கள்” என்றேன்.

சிரித்தபடியே அவன், “உன்னை மட்டுமே நேசிக்கும் ஒருத்தியை அருகில் வைத்துக் கொள். யுகங்கள் பல கடந்தாலும் நீ சிரஞ்சீவியாக வாழ்வாய்” என்றான்.

அப்பெண்ணின் முகத்தைப் பார்க்கும்போது அவளுக்கு அருகில் இருப்பவன் எப்படிப்பட்ட பாக்கியம் செய்தவனாக இருப்பான்? என்று எண்ணிக்கொண்டு வியப்பில் அமர்ந்திருந்தேன். என்னை அறியாமல் அப்பெண்ணின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளது முகத்தில் அன்பும், கருணையும், பரிவும், அழகும் சேர்ந்து குடிகொண்டிருந்தது.

அவளது முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டவன், “இளவரசியின் முகத்தை முதலில் காணும்போது நானும் தங்களைப் போன்றுதான் இவ்வுலகத்தை மறந்துவிட்டேன்” என்றான்.

அவன் கூறியபோதுதான் எனது பிழையை உணர்ந்து, பார்வையை அவளது முகத்திலிருந்து விலக்கிக்கொண்டேன். குற்ற உணர்வுடன் அமர்ந்திருந்தேன். அப்போது அவன், “தம்பி, குற்றம் செய்துவிட்டதாக எண்ண வேண்டாம். என் இளவரசியின் வசீகரம் அப்படி, அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? இது உங்களது  குற்றம் அல்லவே. இது படைத்தவனின் குற்றம் அல்லவா?” என்றான்.

“இவர் இப்படித்தான் என்னை பரிகசிக்காவிட்டால் இவருக்கு உறக்கமே வராது” எனப் போலியாக கோபம் கொண்டாள் அவள்.

பதிலுக்கு நான், “இவர் கூறுவதில் எந்தத் தவறும் இல்லையே, உண்மையைத் தானே கூறுகிறார்” என்றேன்.

“நீங்களும் இவருடன் சேர்ந்துவிட்டீர்களா? தொலைந்தேன் நான்” என்றாள் போலிக் கோபத்துடன்.

“இளவரசி என்றீர்களே? எந்த நாட்டு இளவரசி என்று கூறவே இல்லையே?” குறுக்கிட்டேன் நான்.

“இரு நாட்டுக்கு இவள் இளவரசி. எதனை முதலில் கூறுவேன் நான்” என்றான் அவன்.

”இரு நாட்டுக்கா?”

“ஆம்.”

“எந்தெந்த தேசங்களுக்கு?”

“ஒன்று நாங்கூர்.”

“மற்றொன்று?”

“மற்றொன்று எனக்கு.”

“உங்களுக்கா?”

“ஆம் தம்பி, எனக்கும் இவள் தான் இளவரசி. காயம்பட்டு குருதி வழியும் போர் வீரனாக இப்பெண்ணை சந்தித்தேன் நான். எனக்கு இவள் மருத்துவம் அளித்தாள். அப்போது இவளது மையலில் சிறைபட்டவன்தான், இன்னும் விடுதலையடைந்த பாடில்லை. இவளது கடைக்கண் பார்வை என் மீது எப்போது விழுந்ததோ அப்போதே மரணத்தை எதிர்க்கும் துணிச்சல் வந்துவிட்டது எனக்கு” என்றவாறே அப்பெண்ணை நோக்கினான் அவன். அவளும் அவனை நோக்க இருவரும் பார்வையை விலக்க விரும்பாதவராய் நெடு நேரம் அமர்ந்திருந்தார்கள்.

திடீரென்று பார்வையை விளக்கிக் கொண்டு என்னைப் பார்த்தவள், “தாங்கள் இந்த வனத்தில் எப்படி அகப்பட்டீர்கள்? அதுவும் இந்த மார்கழி மாதக் குளிரில்? நான் மட்டும் உங்களைக் கண்டு இங்கு வரவில்லை எனில் ஒன்று இந்த வன விலங்குகளிடம் அகப்பட்டு மடிந்திருப்பீர்கள்? அல்லது குளிரில் விறைத்துப் போய் மடிந்திருப்பீர்கள். எதற்கு இங்கு வந்தீர்கள்?” சற்றுக் குரலை உயர்த்தி அதிகாரத்துடன் வினவினாள் அவள்.

“தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுதான் இங்கு வந்தேன். ஆனால், அந்த முடிவை பிற்பாடு மாற்றிக்கொண்டேன். இங்கிருந்து வெளியேற வழி தெரியவில்லை எனக்கு” வருத்தத்துடன் கூறினேன் நான்.

“உங்களைப் பார்த்ததும் தைரியமான மனிதர் என்றல்லவா நினைத்தேன் நான். இப்படிக் கோழைத் தனமாக முடிவெடுத்திருக்கிறீர்கள்? எதனால் இந்த முடிவு?”

பதில் கூறத் தயங்கினேன் நான். அவமானமாகவும் இருந்தது. பிறகு அனைத்தையும் கூறி விட்டேன். கண்களில் கசிந்த கண்ணீரை அவர்கள் கண்டுவிடக் கூடாது என்பதற்காகத் தரையைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.

“உனக்கு மிகவும் பிடித்த மன்னர் கரிகாலர் என்று தானே கூறினாய்?” என வினவினாள் அவள்.

எதற்கு இப்போது சம்பந்தமில்லாமல் கரிகாலரைப் பற்றி கேட்கிறாள் என்று சிந்தித்தபடியே, குழப்பத்துடன் “ஆமாம்” என்றேன்.

“அவர் அரியணையை அடையுமுன் அவர் அடைந்த இன்னல்கள் உனக்குத் தெரியுமா?”

“ஓரளவிற்கு தெரியும்.”

“நீ கேள்விப்பட்டது மிகவும் குறைவுதான். தாயின் கருவில் உதித்து மண்ணில் பிறப்பதற்கு முன்னரே தந்தையை இழந்தவர். மண்ணில் பிறந்தபிறகு தாயையும் இழந்தவர். அவரது தந்தை வடக்கிலிருந்து படையெடுத்து வந்த மௌரியரைத் தடுத்து நிறுத்தியவர். மாபெரும் மன்னனது மகனான கரிகாலன் வளரும் காலத்தில் அவரை அவரது எதிரிகள் எப்படியெல்லாம் துன்புறுத்தினார்கள் என்று உனக்குத் தெரியுமா? பாலகனாக அவர் இருந்த போதே சிறை பிடித்து மாளிகையில் அடைத்துவிட்டார்கள். அவர் தனது இளம் பருவத்தைக் கழித்ததே எதிரிகளின் சிறைச் சாலையில் தான். மாளிகையில் தீ வைத்து அவரை முழுவதுமாக எரிக்கவும் எத்தனித்தார்கள். அவரைக் கொல்லவும் வீரர்களை அனுப்பியிருந்தார்கள். மார்பில் பாய்ந்த வேலுடன், எரியும் மாளிகையிலிருந்து தப்பிக்க நேரிட்டது. அவரது வலது கால் முழுவதும் வெந்துபோய் விட்டிருந்தது. ஆனால், அவருக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை. தென்னகத்தில் காணப்பட்ட குறுநில மன்னர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு அவரை எதிர்த்தார்கள். அந்தக் குறுநில மன்னர்களுக்கு சேரனும், பாண்டியனும் தலைமை வகித்தார்கள். அனைவரையும் வெண்ணியில் எதிர்த்து சுவடே தெரியாமல் அழித்தார் கரிகாலர். அதன் பிறகே ஈழத்தின் மீது படையெடுத்து சிங்கள மன்னனைக் கொன்று அங்கிருந்து பன்னிரெண்டாயிரம் போர் வீரர்களைக் கொண்டு வந்து காவிரிக்கு அணை எழுப்பினார். வடக்கே படையெடுத்து இமயத்தில் புலிச் சின்னத்தைப் பொறித்தார். அன்று மட்டும் கரிகாலர் தங்களைப் போன்று விரக்தியில் சோர்ந்திருந்தாலோ அல்லது தோல்வியினால் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தவறான முடிவெடுத்திருந்தாலோ காலம் வியக்கும் சாதனைகளை செய்திருக்க இயலுமா? சிந்தித்துப் பாருங்கள்! கரிகாலனைப் பார்த்து சமணத் திகம்பர முனிவர்கள் ‘வாழ இயலாத கடினமான காலத்தில் ஏற்படும் இன்னல்களைக் கரிகாலனைப் போன்று பொறுத்திருந்தால் பிறகு, தனக்கு உகந்த காலம் வரும்போது இழந்த பெருமைகள் அனைத்தையும் மீண்டும் பெற்று நிலை நிறுத்திக் கொள்ளலாம்’ என்றார்களே. கடினமான காலத்தில் உயிரை இழக்காமல் இருப்பதைப் போன்ற நற்பயன் வேறு எதுவும் இல்லை. அதனைத் தாங்கள் நினைவில் கொள்ளுங்கள்.”

அப்போது குறுக்கிட்டவன், “வாழ்வு வெற்றியோ? அல்லது தோல்வியோ? இன்பமோ? அல்லது துன்பமோ? ஆனால், போராட்டத்தை மட்டும் நாம் எச்சூழலிலும் கைவிட்டுவிடக் கூடாது” என்றான்.

கடந்த இரண்டு வருடங்களாக கரிகாலனைப் பற்றித்தான் தேடித் தேடிப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், அவனது வாழ்க்கை உரைக்கும் தத்துவத்தை உணராமல் இருந்து விட்டதனால் எப்பேற்பட்ட கோழைத் தனமான முடிவினை மேற்கொண்டுவிட்டேன் என நினைக்கையில் அவமானமாகப் போய்விட்டது. அப்பெண்ணின் முகத்தைப் பார்க்கவே எனக்குத் தைரியம் இருக்கவில்லை.

“உனக்கும் கரிகாலனுக்கும் என்ன வேறுபாடு தெரியுமா?”

“என்ன?”

“அவர் வாழ வேண்டும் என்று இந்த மதுவனத்தில் தஞ்சம் புகுந்தார். நீங்கள் சாக வேண்டும் என்று தஞ்சம் புகுந்திருக்கிறீகள்” என என்னிடம் தெரிவித்தவள், மீண்டும் அவளுக்கு அருகில் அமர்ந்திருந்தவனது முகத்தைப் புன்னகையுடன் பார்க்கலானாள்.

அவர்கள் இருவரையும் பார்த்தபடியே அமைதியாகச் சிந்தித்தபடியே அமர்ந்திருந்தேன்.

“அத்தான், பொழுது விடிய இன்னும் ஒரு சாமப் பொழுது மட்டுமே எஞ்சியுள்ளது. நாம் சென்று உறங்கலாம் அல்லவா?” என அவனது விழிகளைப் பார்த்தபடியே வினவினாள் அவள்.

“இவரைத் தனியாக விட்டு நாம் எப்படிச் செல்வது? நம்மை நாடி வந்திருக்கும் விருந்தினர் அல்லவா இவர். இவரை உபசரித்ததைப் போன்று இவரைப் பாதுகாக்க வேண்டியதும் நம் கடமையல்லவா?”

“சரி, பொழுது புலரும் வரை நாம் இவருக்குத் துணையாகவே இருப்போம்” எனக் கூறியவள் அமைதியானாள்.

மூவரும் எரிந்துகொண்டிருந்த நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தோம். பொழுது கடந்துகொண்டே இருந்தது. அதற்கு மேல் அவர்களிடம் பேசும் தைரியம் எனக்கு வரவில்லை. எரியும் நெருப்பில் சுள்ளிகளைப் போட்டுவிட்டு அமர்ந்தான் அவன். இவனுக்கும் கால் இருக்கிறதா என்று அவனது கால்களைக் கவனித்தேன். அவனது வலது கால் தீயில் வெந்து கருத்துப் போய் காணப்பட்டது. மேல் அங்கி அணியாத அவனது மார்பினைக் கவனித்தேன். மார்பில் தழும்புகள் பல காணப்பட்டது. அப்பெண் அவனது தோளில் சாய்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டிருந்தாள்.

அப்போதுதான் அவள் நாங்கூர் இளவரசி என்பது நினைவிற்கு வர, ‘நாங்கூர் இளவரசியைத் தானே கரிகாற் பெருவளத்தானும் மணந்துகொண்டான்’ எனும் தகவலும் மனதில் கண நேரத்தில் தோன்றிவிட்டுச் சென்றது.

இவள் நாங்கூர் இளவரசி எனில், “இவன்???” என முணுமுணுத்துக் கொண்டேன் நான்.

அவனது முகத்தை மீண்டும் நோக்கினேன். ராஜ கம்பீரம் முழுவதும் குடிகொண்டிருந்தது. என் மனம் சொல்லொணாத வியப்பில் ஆழ்ந்தது. ஒரு பேரரசனின் முன் அமர்ந்திருக்கிறேன் எனும் நினைப்பே என்னுள் பிரமிப்பை வரவழைத்தது. உடல் சிலிர்த்துவிட்டது எனக்கு. மயிர் கால்கள் அனைத்தும் குத்திட்டு எழுந்து நின்றது. உடலில் புதுக் குருதி பாய்வதைப் போன்று உணர்ந்தேன். காண்பது கனவா? அல்லது நினைவா? என மீண்டும் என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். வலித்தது எனக்கு.

கனவு இல்லை என்பதை மீண்டும் உறுதி செய்துகொண்டேன்.

பேரரசனுக்கு முன் அமர்ந்திருந்த நான் எழுந்து நின்று, “சோழம்… சோழம்… என்று உரக்க அந்த வனமே அதிரும்படி கத்த வேண்டும் போல இருந்தது எனக்கு. உறங்கிக் கொண்டிருக்கும் இளவரசியை எழுப்ப வேண்டாம் என்று அமைதி காத்துக்கொண்டேன் நான்.

“கரிகாலரே” என மெதுவாக அழைத்தேன் நான்.

நான் அவரை அடையாளம் கண்டுவிட்டதை அறிந்துகொண்ட கரிகாலர், தன் தோளில் சாய்ந்து கொண்டிருக்கும் நாங்கூர் இளவரசியைச் சுட்டிக் காட்டி  உதட்டில் கைவைத்தார். அவரது கட்டளையின் பொருளைப் புரிந்துகொண்ட நான் மேற்கொண்டு பேச முயற்சிக்கவில்லை.

பாறையில் சாய்ந்தபடி அவர்கள் இருவரின் முகத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. உறங்கிவிட்டிருந்தேன். யாரோ என்னைத் தட்டி எழுப்பவே கண் விழித்தேன் நான். எனக்கு முன் நான்கைந்து காவலர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

“ராத்திரி முழுக்க எங்கல்லாம் தேடுறது? உசுரோட தான இருக்க?” என வினவினார் ஒருவர்.

நேற்றிரவு நான் கண்ட கரிகாலரையும், நாங்கூர் இளவரசியையும் என் கண்கள் தேடின.

“யாரத் தேடுற?” வினவினார் மற்றொருவர்.

“நேத்து ரெண்டு பேரு இங்க வந்தாங்க. அவுங்களதான் தேடுறேன்” என்றேன் நான்.

“கனவு கினவு ஏதாவது கண்டுருப்ப. நீ உசுரோட இருக்கறதே தெய்வாதீன செயல். இந்த காட்டுல யாரும் இருக்கல. காட்டு ஜந்து இருக்கற இடம்” என்றார் இன்னொருவர்.

சுற்றிலும் கண்களைச் சுழற்றினேன். என் பார்வையில் அவர்கள் அகப்படவில்லை. என் தொடையைத் தொட்டுப் பார்த்தேன். நேற்று இருமுறை நான் கிள்ளியதனால் அந்த இடத்தில் சிறு எரிச்சல் காணப்பட்டது. கனவு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.

கண்களைச் சுழற்றிய போதுதான் கவனித்தேன். சற்றுத் தொலைவில் மிர்துலா சோர்ந்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தாள். அவளருகில் சென்றேன். அவளது கண்கள் சிவந்துபோய் காணப்பட்டது.

அவளது முகத்தையே பார்த்துக்கொண்டு நிற்க இரு அடி முன்னால் வந்தவள், என் கன்னத்தில் ‘பளார்’ என்று ஒன்று வைத்தாள். அதிர்ச்சியில் அவளையே பார்க்க, “என் பின்னால்தானே வந்து கொண்டிருந்தாய். எதற்கு விலகிச் சென்றாய். பயந்துவிட்டேன் நான்” எனக் கூறியவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக அந்த வனத்திலிருந்து வெளியேறி கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தோம்.

“இங்கேயே நில். எங்கும் ஓடிவிடாதே நான் காரினை எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்றவள் சற்றுத் தொலைவில் நின்றுகொண்டிருந்த காரை நோக்கிச் சென்றாள்.

அவள் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்றேன். வயதானவர் ஒருவர் என்னை நோக்கி வந்தார். “தம்பி, உங்களுக்கு அந்தப் பொண்ணு என்ன வேணும்?” என வினவினார்.

“தெரிஞ்ச பொண்ணு” என்றேன் நான்.

“பாவம் தம்பி அந்த பொண்ணு. ராத்திரி முழுக்க தூங்கவே இல்ல. உங்கள தேடி அலையா அலஞ்சிது. கண்ணுல்லாம் தூங்காம செவந்து போச்சு. பத்தரமா பாத்துக்கோ” எனக் கூறியவாறே அங்கிருந்து அவர் நகரவும் மிர்துலா காரில் வரவும் சரியாக இருந்தது.

காரில் ஏறிக்கொண்டேன் நான். ‘கரிகாலனின் துயரத்தை விரட்டிய கொல்லியம் பாவை உனது துயரத்தையும் நிச்சயம் போக்குவாள்’ எனக் கூறித்தான் என்னை இங்கு அழைத்து வந்தாள் மிர்துலா. அவள் கூறியது எப்பேர்பட்ட உண்மை. வனத்திலிருந்து திரும்பிய பிறகு என் மன நிலை முற்றிலும் மாறியிருந்தது. ‘நான் கண்ட அந்த இருவரைப் பற்றி இவளிடம் கூறலாமா? கூறினால் நம்புவாளா?’ அது வெறும் கனவாக மட்டும் இருக்க வாய்ப்பே இல்லை. குழப்பத்துடனே அமர்ந்திருந்தேன்.

அப்போது மிர்துலா, “வெற்றி உனக்கு தம் அடிக்கற பழக்கம் உண்டா?” எனத்தான் வினவினாள்.

அதிர்ச்சியுடன், “இல்லையே. ஏன் கேட்கற” என்றேன் நான்.

“தம் அடிக்கறவங்கதான் எப்போதும் பைல லைட்டர் இல்லேன்னா தீப்பெட்டி வச்சிருப்பாங்க. அதான் கேட்டேன்”

“இத எதுக்கு எண்ட கேட்கற?”

“லைட்டர் இல்லாமதான் நெருப்பு பத்தவச்சி நைட் குளிர் காய்ஞ்சியா?”

“நானா?”

“ஆம், அந்தப் புகைய வச்சிதான் உன்னைக் கண்டுபுடிச்சோம்.”

நான் இரவில் நெருப்புக் கொளுத்தவில்லையே என்று சிந்தித்தபோதுதான் எனக்கு நினைவில் வந்தது , ‘நெருப்பினைக் கொளுத்தியது கரிகாலரும், நாங்கூர் இளவரசியும்’ என்று. அப்படியெனில் நேற்று நான் கண்டது கனவு இல்லை. உண்மைதான். அவர்கள் இன்னும் வாழ்வதும் உண்மைதான்.

அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த போதே, காரை ஒட்டிக்கொண்டிருந்த மிர்துலா, என் கையைப் பற்றி, “வெற்றி, நேத்து நான் பயந்துட்டேன்.  உனக்கு மட்டும் ஏதாவது ஆகிருந்தா….நெனச்சிப் பார்க்கவே பயமா இருக்கு. கடவுள் தான் உன்னைய காப்பாத்திருக்கணும். இனி நீ எழுதப்போற எல்லா நாவலையும் நான் தான் முத ஆளா படிக்கணும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். அதுக்கு இனி வாய்ப்பே இருக்காதோன்னு யோசிச்சி பயந்துட்டேன். தாங்க்ஸ் வெற்றி. திரும்பி வந்துட்ட” என்றாள் மகிழ்ச்சியுடன்.

என் செல்போனை எடுத்து என்னிடம் நீட்டியபடி, “நெறைய மிஸ்டு கால்” என்றாள்.

“பேச வேண்டியது தானே.”

“உன்ன காணும்ங்கற டென்சன். நான் எப்டி பேசுவேன்…?”

“சாரி… சாரி…” என்றபடியே போனை வாங்கிப் பார்த்தேன். இரட்டை இலக்கங்களில் மிஸ்டு கால். அதுவும் ஒரே எண்ணிலிருந்து.

இரண்டு குறுஞ்செய்திகள் வந்திருந்தன. திறந்து பார்த்தேன். என் மிர்துலாவிடமிருந்து தான்.

வெற்றி நான் உன்ன காயப்படுத்திட்டேன். என்ன மன்னிச்சுடு. நேத்து வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் யோசிச்சி பார்த்தேன். நான் தப்பு பண்ணிட்டேன். நேத்து அப்டி நடந்துருக்க கூடாது. எனக்கு கூப்டு. உன்கிட்ட நெறைய பேசணும்.”

மற்றொன்றை வாசிக்கவில்லை நான். ஒன்றை மட்டும்தான் வாசித்தேன். அதைப் படித்த போது எனக்கு எந்தவித உணர்ச்சியும் ஏற்படவில்லை. என் அருகில் அமர்ந்திருந்த மிர்துலாவைப் பார்த்தேன். புன்னகையுடன் என்னை நோக்கினாள். கரிகாலன் கூறிய வார்த்தைகள் நினைவில் வந்துவிட்டுச் சென்றது.

உன்னை மட்டுமே நேசிக்கும் ஒருத்தியை அருகில் வைத்துக் கொள். யுகங்கள் பல கடந்தாலும் நீ சிரஞ்சீவியாக வாழ்வாய்.

(முற்றும்)

https://www.amazon.in/dp/B073GP3YH7

மதுவன மாது – 4

04. இளவரசன்

“கன்னிகளை வர்ணிக்கும் குணம் மட்டுமா, பல யுகங்கள் மாறினாலும் நம் நாட்டு ஆடவர்களின் வீரம் சிறிதும் குறையாமல் இருப்பதும் நமக்குப் பெருமைக்குரியது தானே” எனக் கூறியபடியே எனக்கு முன் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணிற்கு அருகில் அமர்ந்தான் அவன்.

அவன் அமர்ந்த விதத்திலிருந்தே அவர்களுக்கிடையில் இருந்த காதலையும், நெருக்கத்தையும் என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.

“ஆமாம் அத்தான். சில நூற்றாண்டுகளுக்கு முன் இதே இடத்தில் ஒருவனைச் சந்தித்தோம். நினைவிருக்கிறதா? தங்களைப் பார்த்த பிறகு அவன் தலை தெறிக்க ஓடிவிட்டான். ஆனால், இவர் துணிந்து அமர்ந்திருக்கிறாரே? நம் நாட்டு ஆடவர்களின் வீரம் காலத்தால் அழியக்கூடியதா அது?” எனக் கூறியவள் அவனது முகத்தைப் பார்க்கலானாள். அவனும் சில நிமிடங்கள் அவளது அழகு சிந்தும் வதனத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

திடீரென்று அவளது முகத்திலிருந்து தனது முகத்தைத் திருப்பி எனது முகத்தைப் பார்த்தபடி, “இப்படித்தான், இவளது முகத்தைப் பார்க்கையில் நான் என்னை, எனக்கு முன் இருப்பவர்கள், இந்த உலகத்தை என அனைத்தையும் மறந்துவிடுகிறேன்” என்றான் புன்னகையுடன்.

அவர்கள் மீண்டும் கூறிய நூற்றாண்டுகள் என்ற சொல்லைக் கேட்ட நான், ‘அவளைப் போன்றே இவனும் நிச்சயம் மன நலம் பாதிக்கப்பட்டவனாகத் தான் இருப்பான். இந்த இரவை எப்படி நான் கழிக்கப் போகிறேனோ?’ என எண்ணியபடி அவனது முகத்தையே திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

எனது விழிகளையே உற்றுப் பார்த்தவன், அப்பெண்ணை நோக்கி, “இவரது முகம் வாடியிருக்கிறதே? உணவு அளித்தாயா?” என வினவினான்.

தவறு செய்தவளைப் போன்று தனது உதட்டினைக் கடித்துக் கொண்டவள், “மன்னித்துவிடுங்கள் அத்தான். நீண்ட நாள் கழித்து சோழ நாட்டிலிருந்து ஒருவரைக் கண்ட மகிழ்ச்சியில் உபசரிக்க மறந்துவிட்டேன். சற்றுப் பொறுங்கள்” என்றவள் எழலானாள்.

“பெண்களைப் புகழ்வதில் மட்டும் ஆடவர்கள் இன்னும் மாறவே இல்லை என சற்று முன் ஏளனம் பேசினாயே, எங்கே சென்றது உன் விருந்தோம்பல் பண்பு? இதுதான் உன் கற்பிற்கு அழகா?” எனக் கோபப்பட்டான் அவன்.

“சினம் வேண்டாம் அத்தான். தாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருங்கள். இதோ…” எனச் சிரித்தபடியே செல்லலானாள்.

“எங்களை மன்னித்துவிடுங்கள் தம்பி. இந்த வனத்தில் நாங்கள் இருவரும் மட்டுமே நெடுங்காலமாக உலவிக்கொண்டிருக்கிறோம். எப்போதாவதுதான் யாரையாவது சந்திக்க இயலுகிறது. நினைத்துப் பார்த்தால் கண நேரப் பொழுதினைப் போன்றும் தோன்றுகிறது; யுகங்களைப் போன்றும் தோன்றுகிறது. முன்பு இந்த வனத்தில் ஒருவனைச் சந்தித்தேன். அவனிடம் எங்கள் சோழ நாட்டைப் பற்றி வினவியபோது சோழ நாட்டைக் கள்வர்கள் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்றான். சோழ அரசைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல் சேரர் மற்றும் பாண்டியரையும் தோற்கடித்து ஆட்சி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றான். மூவேந்தரையும் அடக்கி ஆண்டதால் அவர்கள் தங்களை முத்தரையர் என்று குறிப்பிட்டுக் கொள்வதாகக் கூறினான். கவலையாக இருந்தது எங்களுக்கு. பிறகு வெள்ளைத் தோலும், தலையும் பெரிய தலைப்பாகையைப் போன்ற ஒன்றை அணிந்திருந்த ஒருவனைக் கண்டோம் நாங்கள். அவன் பேசியது எங்களுக்குப் புரியவேயில்லை. நாங்கள் என்ன கேட்டாலும் அவன், ‘வாட்’ என்ற ஒரே சொல்லையே திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தான். என்னவள் சற்றுத் தொலைவினில் நடந்து வந்ததைப் பார்த்தவன் என்ன எண்ணினானோ? ஓட்டம் பிடித்தவன்தான்; நிற்கக் கூட இல்லை. மூன்றாவதாக தங்களைத் தான் சந்திக்கிறோம் நாங்கள். அதுவும் எங்கள் சோழ நாட்டைச் சேர்ந்தவரை, மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பி. அந்த மகிழ்ச்சியில் தான் என்னவள் தங்களை உபசரிக்க மறந்துவிட்டாள். கோபம் வேண்டாம்” என்றான் பரிவுடன்.

அவன் கூறியதைக் கேட்கக் கேட்க எனக்கு மனதினுள் அச்சம் சூழ்ந்துகொண்டிருந்தது. ‘இவர்கள் இருவரும் யாராக இருப்பார்கள்?’ என எண்ணிக்கொண்டே பதிலுக்கு என்ன பேசுவதென்றுத் தெரியாமல் அவனது முகத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன் நான். அவனது முகத்தில் காணப்பட்ட கம்பீரம், அழகு, வசீகரம் ஆகியவற்றை யாரிடமும் இதுவரை நான் கண்டதில்லை.

“தம்பி, நீங்கள் கன்னிகளிடம் மட்டும்தான் உரையாடுவீர்களா?” என்றான் புன்சிரிப்புடன்.

எனக்கு அவமானமாகப் போய்விட்டது. “மன்னிக்கவும். உங்களது வாளுரையைப் பார்த்த அதிர்ச்சியில் என் வார்த்தைகள் மௌனமாகிவிட்டன” என்றேன் நான்.

“தற்பொழுதுதான் தங்களைப் பெரும் வீரன் என்று என்னவளிடம் தெரிவித்தேன். தாங்கள் வாளினைக் கண்டு அச்சம் கொள்ளலாமா?”

நான் எந்த பதிலையும் அளிக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது அப்பெண் தனது முந்தானையில் மறைத்து எதையோ கொண்டுவந்தவள், எனக்கு முன் வாழையிலை ஒன்றை விரித்து அதில் பரிமாறலானாள். நான் ஆச்சர்யத்துடன் அவளைப் பார்க்க, “திணை மாவு மற்றும் தேன் இவற்றைக் கலந்துகொண்டு வந்திருக்கிறேன். மூங்கில் அரிசி வறுத்துச் சேர்த்திருக்கிறேன். தயக்கமின்றி உண்ணுங்கள்” என்றாள் அவள்.

“தம்பி, இவள் அளிக்கும் இந்த அமிழ்தை உண்டுதான் யுகம் யுகமாக மரணமின்றி இருக்கின்றேன். மிகவும் சுவையாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த உணவு” என்றான் அவன்.

தயக்கத்துடனே சிறிதளவு சுவைத்துப் பார்த்தேன். என் வாழ்வில் அப்படியொரு சுவையை சுவைத்ததே இல்லை. அப்படியொரு சுவை. பசியில், அனைத்தையும் உண்டு முடித்தேன். தண்ணீர் ஊற்றினாள் கைகழுவிக் கொண்டேன். பிறகு, அவள் தனது முந்தானையில் என் கையைத் துடைத்து விட்டாள்.

நெகிழ்ந்து போனேன் நான்.

எங்கள் மூவருக்குள்ளும் உரையாடல்கள் மீண்டும் ஆரம்பமானது. மீண்டும் அவன், “தாங்கள் சோழ தேசத்திலிருந்தா வருகிறீர்கள்?” என்றான்.

“ஆமாம். சோழர்கள் ஆண்ட பகுதி.”

“சோழர்கள் ஆண்ட பகுதியா?”

“ஆம்.”

“அப்படியெனில் இப்போது யார் ஆள்வது?”

“எங்களை நாங்களே ஆண்டுகொள்கிறோம்.”

“புரியவில்லையே?” இடைமறித்தாள் அப்பெண்.

“இப்போது மக்களாட்சி நடக்கிறது. ஓட்டுப் போட்டு நாங்கள்தான் யார் எங்களை ஆளவேண்டும் என்பதை முடிவு செய்கிறோம்” என்றேன் நான். ஆனால் நான் எனக்குள், ‘ஓட்டு போட்டு எங்களை யார் ஏமாற்ற வேண்டும், எங்கள் வளங்களை யார் கொள்ளையிட வேண்டும் என்பதை நாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம். இதற்குப் பெயர்தான் மக்களாட்சி’ எனக் கூறிக்கொண்டேன். அதை அவனிடம் உரக்க கூற வேண்டும் போலிருந்தது.

“காலம் மாறிவிட்டது” என்றான் அவன்.

“ஆமாம்.”

“உனது உடை, உனது தோற்றம் ஆகியவற்றைக் கண்டாலே நாகரிகம் எந்த அளவிற்கு மாறியிருக்கிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள இயலுகிறது.”

“மாறிக்கொண்டே இருப்பதுதானே உலகம்.”

“தம்பி, உனக்குப் புண்ணியமாகப் போகும் சோழர்களைப் பற்றி உனக்குத் தெரிந்ததைக் கூறுகிறாயா? கேட்க ஆவலாக இருக்கிறோம்.”

“நிச்சயமாக. எனக்கும் சோழர்களை மிகவும் பிடிக்கும். அவர்களை, அவர்களின் வீரத்தை நினைத்தாலே எனது உடலின் மயிர்கள் சிலிர்க்கத் தொடங்கிவிடும்” எனக் கூறிக்கொண்டே சிலிர்த்திருந்த எனது கையை அவனிடம் காட்டினேன் நான்.

“சோழர்கள் மீது அவ்வளவு பற்றா உனக்கு?”

“ஆம்”

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு, “மேலே கூறுங்கள்” என்றான் அவன்.

“சற்று முன் தாங்கள் மூன்று வேந்தர்களையும் அடக்கி கள்வர்கள் ஆண்டதாக ஒருவன் குறிப்பிட்டான் என்றீர்களே, அவர்கள் களப்பிரர்கள். தொண்டை நாட்டுக் காடுகளில் வாழ்ந்த கள்வர் கூட்டத்தினர். கிட்டத்தட்ட ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன், அதாவது மௌரியரைத் தடுத்து நிறுத்திய சென்னியின் மைந்தன் கரிகாலன் ஆண்டபிறகு ஐநூறு வருடங்கள் கழித்து கள்வர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்துக் கைப்பற்றிக் கொண்டார்கள். கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் ஆண்டிருக்கிறார்கள்.”

“முன்னூறு ஆண்டுகளா?”

“ஆம்.”

“அதன் பிறகு சோழர்கள் எழவே இல்லையா?”

“கூறுகிறேன். பொறுமையாகக் கேளுங்கள். களப்பிரர்கள் தமிழத்தைக் கைப்பற்றியபோது குறுநில மன்னர்களாக தஞ்சைக்கு அருகில் ஒடுங்கிய சோழ மன்னர்கள் தங்கள் வம்சத்தின் சிறப்பினை மட்டும் மறக்காமல் சமயம் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் சோழர்கள் குறு நில மன்னர்களாகவே ஒடுங்கியிருந்தார்கள். பிறகு விஜயலாயச் சோழன் தான் பல்லவர்களின் சிற்றரசரான முத்தரையரைத் தோற்கடித்து தஞ்சையை மீட்டான். அவனது புதல்வன் ஆதித்ய கரிகாலன் சுதந்திர மன்னனாகி சோழ அரியணையை மீட்டான். அதன் பிறகு கரிகாலன் என்னென்ன சாதனைகள் செய்தான் என்று கூறினார்களோ அதையெல்லாம் மீண்டும் செய்து காட்டினார்கள்.”

“கரிகாலன் செய்ததைச் செய்தார்களா?”

“ஆம். கரிகாலச் சோழன் செய்ததை மட்டும் அவர்கள் செய்யவில்லை. அதையும் கடந்து மாபெரும் சாதனைகளை செய்யலானார்கள்.”

“என்னென்ன?” ஆர்வத்துடன் ஒரே நேரத்தில் வினவினார்கள் அவர்கள் இருவரும்.

“கரிகாலன் ஈழத்தை வென்றான். பிற்கால சோழர்களும் வென்றார்கள். வடக்கே படையெடுத்து புலிக் கொடியைக் கரிகாலன் இமயத்தில் பொறித்தான். தோற்ற சிங்கள வீரர்களைக் கொண்டு காவிரிக்கு அணை எடுத்தான். பிற்கால சோழர்கள் வடக்கே படையெடுத்ததோடு மட்டுமல்லாமல், தோற்ற மன்னர்களின் தலையில் கங்கை நதியின் நீரைச் சுமந்துவரச் செய்து சிவ லிங்கத்தை நீராட்டினார்கள். பெரும் பட்டினத்தையே நிர்மாணித்தார்கள். அந்தப் பட்டினத்திற்கு கங்கை கொண்ட சோழபுரம் என்றுப் பெயரும் வைத்தார்கள். கரிகாலன் செய்யாத சாதனைகளென வங்கக் கடலையும் கடந்து சென்று வெற்றி பெற்று புலிக்கொடியைப் பறக்கவிட்டார்கள்” என நான் கூறிக்கொண்டிருந்த போதே அப்பெண், “வங்கக் கடல் என்பது எது?” என ஆச்சர்யத்துடன் வினவினாள்.

சிறிது சிந்தித்த நான் “குணக் கடல்” என்றேன்.

“குணக் கடலுக்கு அப்பாலுமா?”

“ஆம்.”

“மண்ணாசையின் காரணமாகவா சோழர்கள் படையெடுத்தார்கள்?” திடீரென்று அவனது முகத்தில் இகழ்ச்சி தோன்றிவிட்டுச் சென்றது.

“இல்லை… இல்லை… மண்ணாசையினால் அல்ல. உரிமையை நிலைநாட்டுவதற்காக.”

“என்ன உரிமை?”

“கரிகாலன் காலத்தில் மேற்கே யவனத்திலிருந்து தமிழத்திற்கு வாணிபம் மேற்கொண்டார்கள் அல்லவா?”

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். “உங்கள் இருவருக்கும் கரிகாலன் என்றால் யார் என்று தெரியும் தானே?” என வினவினேன் நான்.

அவர்கள் எந்தப் பதலையும் கூறாமல் சிரித்துக்கொண்டார்கள்.

“அதே போன்று பிற்காலத்தில் கிழக்கிலிருந்து சீனர்கள் தமிழத்திற்கு வாணிபம் மேற்கொண்டார்கள். சீன தேசத்திற்கும் சோழ தேசத்திற்கும் இடையில் ஸ்ரீ விஜய தேசம் இருந்தது. சோழ நாட்டிற்கும் சீன நாட்டிற்கும் இடையில் நடைபெற்ற வாணிபத்தில் ஸ்ரீ விஜய தேசம் குறுக்கிட்டது. குணக் கடலிலும் அதற்கு அப்பாலும் தனது உரிமையை நிலைநாட்ட வேண்டி சோழப் பேரரசர் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி பெற்றார். இந்திய மன்னர்களிலேயே கடல் கடந்து வெற்றி பெற்றிருப்பது நம் சோழர்கள் தான் கடாரம் கொண்டான் என்ற சிறப்புப் பெயரும் அவருக்கு உண்டு.”

“இந்தியா????” எனக் கூறியபடி வியப்புடன் பார்த்தார் அவர்.

“ஒட்டு மொத்த நாவலந்தீவுக்கு தற்போதைய பெயர் இந்தியா. தமிழகம் மற்றும் மற்ற அனைத்து தேசங்களும் இப்போதும் ஒன்றுபட்டு ஒரே நாடாகத்தான் இருக்கிறது.”

“”ஓ… காலத்திற்கு ஏற்றவாறு மாறுவது தானே அறிவுடைமை. ஒற்றுமையின் பலம் எப்போதும் அதிகம் தானே.”

“ஆமாம். ஒற்றுமையைப் பற்றி கரிகாலன் அறிந்த அளவிற்கு மற்ற சோழ மன்னர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை. கரிகாலனுக்குப் பிறகு சோழர்களுக்கிடையில் பிளவு ஏற்பட்டது. ஒரு பிரிவினர் உறைந்தையிலும், இன்னொரு பிரிவினர் புகாரிலும் அமர்ந்து ஆட்சி செலுத்தியதோடு மட்டுமல்லாமல் தங்களுக்குள் போர் தொடுத்தும் கொண்டார்கள். அதனைக் களப்பிரர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். அதன் பிறகு ஐநூறு வருடங்கள் எழ இயலாமல் தாழ்ந்தே கிடந்தனர். ஆனால், இந்த காலத்திற்கு ஒன்று பட்ட நாவலந்தீவே சரியானது.”

“கரிகாலச் சோழனின் வெற்றிகளை விட அதிக வெற்றிகளைப் பெற்ற அந்த மன்னனின் பெயரை நீ இன்னும் கூறவே இல்லையே?” என ஆர்வத்துடன் வினவினார் அவர்.

“அவர் பட்டமேற்கொண்ட போது அவர் சூடிக்கொண்ட பெயர் பரகேசரி  ராசேந்திரச் சோழன். அவரது இயற்பெயர் மதுராந்தகத் தேவர்.”

“கரிகாலனைப் பற்றித் தெரியும் என்றாயே எங்களுக்கும் கூறேன்” என ஆர்வத்துடன் இடைமறித்தாள் அவள்.

“கரிகாற் பெருவளத்தான். எனக்குப் பிடித்த மன்னர்களுள் தலைச் சிறந்தவர் அவர். ஈழத்தை முதன் முதலில் வென்றவர் அவர்தான். காவிரியின் இரு பக்க கரைகளையும் உயர்த்தியதோடு அல்லாமல் அதன் குறுக்கே அணை ஒன்றையும் கட்டி சோழ நாட்டை சோறுடைத்த நாடாக்கியவர். அவர்தான் காவிரியின் இரு பக்கங்களிலும் காணப்பட்ட பெரும் வனங்களை அழித்து வயல்வெளிகளை அமைத்தவர். கால்வாய்களையும், வாய்க்கால்களையும் வெட்டி சோழ நாட்டின் வளத்தைப் பெருக்கியவர். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியவர். இமயம் வரைப் படையெடுத்து இமயத்தில் புலிச் சின்னத்தைப் பொறித்தவர். பெரும் வீரர். வெண்ணியில் அவரை எதிர்த்த இரு பெரும் வேந்தர்கள், மற்றும் பதினொரு வேளிர்களைத் தனியாக எதிர்த்து வெற்றிபெற்ற மாவீரன். அவன் எறிந்த வேலானது சேரன் பெருஞ்சேரலாதனின் மார்பைப் பிளந்துகொண்டு முதுகு வழியாக வெளிவந்ததாகக் கூறுவார்கள். நேர்மை தவறாத புத்திமான். ஆனால், அவரது வெற்றிகள் அனைத்தும் சிற்சில புறநானூற்று, சிலப்பதிகாரப் பாடல் வரிகளின் மூலமே அறிந்துகொள்ள இயலுகிறது. கல்வெட்டுகளை அவர் பொறிக்கவில்லை. பட்டினப்பாலை மற்றும் பொருநராற்றுப் படை மட்டும் கிடைக்காவிடில் கரிகாலனைப் பற்றி அறிந்திருக்கவே இயலாது. ஆதலால், அவரது வடநாட்டு வெற்றி என்பது வெறும் கட்டுக்கதை என்று சிலர் ஒதுக்கிவிடுகிறார்கள்” என்றேன் சற்று வருத்தத்துடன்.

“அவர் எழுதி வைத்தவை அனைத்தும் பிற்காலத்தில் நேர்ந்த படையெடுப்புகளால் அழிக்கப்பட்டிருக்கலாம். வரலாறு என்பது வலிமையுடையவர்களால் எழுதப்படுவது தானே. நீ கவலை கொள்ள வேண்டாம். கரிகாலனின் வெற்றியால் அன்றைய தமிழகம் பயன்பட்டது உண்மை. அந்த மனநிறைவு அவனுக்குப் போதாதா.”

“நிச்சயமாக, கரிகாலன் கட்டிய அணையால் இன்றளவும் தமிழகம் பயன் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.”

“சரி, பிற்காலச் சோழர்கள் எத்தனை வருடங்கள் செங்கோல் செலுத்தினார்கள்?” இடைமறித்து வினவினாள் அப்பெண்.

“எழுச்சியும், வீழ்ச்சியும் சேர்ந்தது தானே வரலாறு. பிற்கால சோழர்கள் கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகள் சிறப்புடன் செங்கோல் செலுத்தினார்கள். ராசேந்திரச் சோழரின் மகன்களுள் பலர் போரில் வீர மரணம் அடைந்துவிட ஒரு கட்டத்தில் பரந்து விரிந்த சோழ நாட்டை ஆளுவதற்கு கரிகாலனின் நேரடி வாரிசு இல்லாமல் ராசேந்திரனின் மகள் வயிற்றுப் பேரன் அரசுப் பொறுப்பேற்கும் நிலையும் வந்தது. அவரும் சிறப்புடன் அரசாண்டு மக்களுக்குப் பல நன்மைகளை செய்தார். எதிர்த்த கலிங்கத்தை அடியோடு அழித்தவர். வீரம் ஒன்றையே முதன்மையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் சோழர்கள். ஒரு கட்டத்தில் சோழ இளவரசர்கள் அனைவரும் போரில் வீர மரணம் அடைந்துவிட வாரிசு இல்லாத நிலை சோழ அரசுக்கு மீண்டும் ஏற்பட்டது. அதைப் பயன்படுத்திக்கொண்ட பாண்டியர்கள் போர் தொடுத்து சோழத் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள். சோழ வம்சம் அத்தோடு வரலாற்றில் இருந்து மறைந்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் சோழர்களைப் போன்று வீர வெற்றிகளைக் குவித்தவர்கள் யாரும் கிடையாது. கடைசித் தமிழன் உயிருடன் இருக்கும்வரை சோழர்களின் வீர வாழ்வும் நிச்சயம் உயிர் பெற்றிருக்கும்.”

“தம்பி, அதன் பிறகு புலிக்கொடி வானில் உயரவே இல்லையா?”

“அதன் பிறகு கரிகாலச் சோழன், ராச ராசன், ராசேந்திரச் சோழன் ஆகியவர்களைப் பின்பற்றி ஈழ தேசத்தில் புலிக்கொடியை மீண்டும் உயர்த்தினார்கள் நம் தமிழர்கள். முப்பது ஆண்டுகள் ஈழத்தில் புலிக்கொடி கம்பீரமாகப் பறந்துகொண்டிருந்தது. புறநானூற்றுப் பாடல்களில் கூறப்படும் வீரத்தின் இலக்கணமாகப் போரிட்டார்கள். தரை, கப்பல், விமானப் படை ஆகிவற்றை உருவாக்கி நெறியுடன் போரிட்டார்கள். உலகமே அவர்களைக் கண்டு வியந்தது. ஆனால், பல வல்லரசுகளின் கூட்டுச் சதி, துரோகம் ஆகியவற்றால் கடைசியில் வீழ்த்தப்பட்டு விட்டார்கள். நான்கு வருடத்திற்கு முன்பு தான் இறுதிப் போரில் சிங்களர்கள் வெற்றி பெற்று தலைவர், அவரது மகன்கள், பல தளபதிகள் வீர மரணம் அடைந்தார்கள்.”

“புலிக்கொடி இனி உயரவே உயராதா?”

“நிச்சயம் ஈழத்தில் ஒருநாள் புலிக்கொடி மீண்டும் உயரும். அந்த நம்பிக்கையில் தான் பலர் வாழ்கிறார்கள்.”

“குறுகிய காலத்தில் ஏன் இந்தத் தோல்வி?” மீண்டும் இடை மறித்தாள் அப்பெண்.

“தமிழர்களின் துரோகம், ஒற்றுமையின்மை. ஒரு காலத்தில் காதலுக்கும் வீரத்துக்கும் உயிரை விட்ட நம் மக்கள் இன்று இலவசத்துக்கும், மதுவுக்கும் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். இனி தமிழர்கள் இழந்த பெருமையை மீட்பது சந்தேகம் தான். அனைத்திற்கும் வீழ்ச்சி என்ற ஒன்று உண்டல்லவா? ஒரு காலத்தில் நாகரிகத்தில் உயர்ந்து விளங்கியது நம் தமிழகம். யவனதேசங்களில் மனிதர்களே மனிதர்களை அடிமையாக்கி வாழ்ந்த காலங்களில் நாம் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கற்பித்து அனைத்து உயிர்களையும் மதித்துக் கொண்டிருந்தோம். காட்டு வாசிகளாக மற்ற நாட்டவர்கள் திரிந்த போது நாம் நாகரிகத்துடன் ஒன்றுகூடி வாழ்ந்தோம். மற்றவர்கள் பேச ஆரம்பித்த போது நாம் மொழிக்கு இலக்கணம் கற்பித்து இலக்கியங்கள் இயற்றத் தொடங்கிவிட்டோம். பெரும் சிறப்பு வாய்ந்த நம் இனத்தின் வீழ்ச்சியும் இனிதே தொடங்கியிருக்கிறது. தமிழுக்கும் தான்.”

“தலைவர்கள் நிச்சயம் தோன்றுவார்கள்? கவலை வேண்டாம்.”

“தலைவர்களா?”

“ஆம்”

“தலைவர் என்ற சொல்லை மீண்டும் கூறாதீர்கள். அந்தப் பெயரே எரிச்சலூட்டுகிறது. எங்களது தலைவர் ஈழத்துப் போரிலே, மடிந்துவிட்டார். தலைவன் என்று நினைத்தவர் தனது குடும்பத்தைக் காக்க ஈழத்தையே சுடுகாடாக்கிவிட்டார். தலைவன் என்ற சொல்லே கசக்க ஆரம்பித்துவிட்டது. ஏமாற்றுபவர்களும், ஊழல்வாதிக்களுமே தங்களைத் தலைவர்கள் என்கின்றனர்.”

“கவலை வேண்டாம். தமிழகத்தில் பல மாமனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள். நிச்சயம் தகுந்த நேரத்தில் தகுந்த தலைவர்கள் தோன்றுவார்கள், கவலை வேண்டாம் தம்பி.”

அவநம்பிக்கையில் எந்தப் பதிலையும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தேன் நான்.

“சரி, அதை விடுங்கள் தம்பி. அரசியல் என்பது மாறிக்கொண்டே இருக்கும். மக்களும் அப்படித்தான். காவிரி எப்படி இருக்கிறாள்? அவள் ஓடும்போது ஏற்படும் சலசலப்பு சத்தம் இன்னும் எங்கள் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.”

“காவிரி நதியைப் பற்றியா குறிப்பிடுகிறீர்கள்?”

“ஆம்.”

“மழையில்லாமல், காவிரி நதி இப்போதெல்லாம் வறண்டே காணப்படுகிறது. காவிரியின் வனப்பைப் பட்டினப்பாலை’யில் மட்டும் படித்து இன்பம் பெறலாம். காவிரியின் வழித் தடத்தில் கன்னடர்கள் அணைகளைக் கட்டி நீரைத் தேக்கிக்கொண்டார்கள். இது போதாது என்று இன்னும் அணைகளைக் கட்டப் போகிறோம் என்கிறார்கள். காவிரி வற்றியதுகூட பெரிய செய்தி அல்ல. மழைக் காலங்களில் நீர் பெருகும். ஆனால்…”

“என்ன ஆனால்? தொடர்ந்து கூறு?”

“இன்னும் சில வருடங்களில் காவிரி மட்டுமல்லாமல் அதனைச் சார்ந்த வயல் வெளிகள் அனைத்தும் பாலைவனமாக மாறப்போகிறது. அதற்கான செயல் திட்டம் தயாராகிவிட்டது. ‘எரிவாயு’ என்ற பெயரில் காவிரிப் பாசனப் பகுதியே அழியப் போகிறது.”

“இதற்கு அனுமதி அளித்தவர்கள் யார்?”

“நாங்கள் தலைவர்கள் என்று நம்பியவர்கள்தான். பன்னாட்டு நிறுவனம் ஒன்றிற்கு மொத்தமாக விற்று விவசாயிகளின் வயிற்றில் அடித்துவிட்டார்கள்.”

“மக்கள் எதிர்க்கவில்லையா?”

“மக்களது எதிர்ப்பை யார் காதில் வாங்கிக்கொள்கிறார்கள்?”

“மக்கள் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே பொறுத்துக்கொள்வார்கள். அதன் பிறகு, அதன் போக்கு மாறிவிடும். நீ கவலைப்படாதே, இந்த நிலை நிச்சயம் மாறும்” என எனக்கு ஆறுதல் கூறினார்கள் இருவரும்.

ஆனால், அவர்களின் முகத்தில் சற்று முன்பு காணப்பட்ட உற்சாகம் இப்போது துளியும் இல்லாதிருப்பதைக் கவனித்தேன் நான். கவலை சூழ்ந்திருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

தொடரும்…

மதுவன மாது – 3

03. கொல்லியம் பாவை

ஒற்றையடிப் பாதையிலேயே அரைமணி நேரத்திற்கு மேல் தனியாக நடந்துகொண்டிருந்தேன். ‘தனியாகச் சென்ற மிர்துலா பாதுகாப்பாகச் சென்று சேர்ந்திருப்பாளா?’

‘அவளுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால்?’

‘நம்பி அழைத்து வந்த பெண்ணை இப்படித் தனியாக விட்டுவிட்டது சரியா?’  எனப் பலவிதமான கேள்விகள் என்னுள் எழ, திரும்பிச் சென்றுவிடுவதுதான் சரி என முடிவெடுத்து வந்த பாதையிலேயே மீண்டும் நடக்கத் தொடங்கினேன். ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்திருப்பேன். ஆனால், சரியானப் பாதையை என்னால் கண்டறிய இயலவில்லை. அப்போதுதான் உணர்ந்தேன் நான், ‘பாதையைத் தவறவிட்டு விட்டேன்’ என்று.

மேலும் படிக்க…

மதுவன மாது – 2

02. மீண்டும் மிர்துலா

த நா 45 தேசிய நெடுஞ்சாலையில் முன்பின் அறியாத பெண்ணுடன் காரில் மதுராந்தகத்தைக் கடந்து எண்பத்தைந்து கி.மீ வேகத்தில் விரைவாகப் பயணித்துக் கொண்டிருந்தேன். ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. அவள் என்னை அழைக்க வந்தபோது ‘டிரைவர் எங்க?’ என்று நான் கேட்டதற்கு ‘நான் எங்கு சென்றாலும் தனியாகத்தான் செல்வேன். என் காரிற்கு தனியாக டிரைவர் கிடையாது’ எனக் கூறிவிட்டாள். அவளது தைரியம் எனக்குப் பிடித்திருந்தது.

மேலும் படிக்க…

மதுவன மாது – 1

01. மிர்துலா

‘மிர்துலா’

இந்தப் பெயரைத்தான் எனது மனம் சமீப காலங்களாக ஓயாமல் உச்சரித்துக்கொண்டிருக்கிறது. இருவரும் பல வருட நண்பர்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் பிரிந்து விட்டோம். எப்போது பிரிந்தோமோ அப்போதிலிருந்து என் மனம் மிர்துலா’வை நினைத்தே ஏங்கிக்கொண்டிருக்கிறது. இருவரும் பேசி சிரித்து மகிழ்ந்த அக்காலம் மீண்டும் துளிர்க்காதா என நினைக்காத நாளில்லை. கடந்த இரண்டு வருடத்தில் பல பெண்களைக் கடந்து வந்திருக்கிறேன். ஆனால், என் ‘மிர்துலா’வைப் போன்று என்னை யாரும் இதுவரை வசீகரித்ததில்லை. கடந்த வருடம் இருவரும் எதிர்பாராமல் போரூர் நான்கு சாலைகளின் சந்திப்பில் சந்திக்க நேர்ந்தும் அவள் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. முகத்தை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டாள். அப்போதுதான் எனக்குப் புரிந்தது அவளுக்கு என் மீது எவ்வளவு கோபம் என்று. எத்தனையோ முறை பேச முயற்சித்துவிட்டேன். பலன் இல்லை. நேரடியாகவும் கூறி விட்டாள். ‘இனி என்னை தொந்தரவு செய்யாதே’ என்று. நானும் ‘சரி’ என்று கூறிவிட்டேன்.

மேலும் படிக்க…