சாகா வரம் பெற்றது `திருக்குறள்’… இறவாப்புகழ் பெற்றவர் கருணாநிதி!

`தெய்வப்புலவர்’, `பெருநாவலர்’, `பொய்யில் புலவர்’, `செந்நாப்போதார்’ எனப் புகழப்படும் வள்ளுவப் பெருந்தகையின் வாழும் நெறியைப் பரப்புவதற்கு வரலாறு முழுக்கவே முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், கடந்த 2049 (திருவள்ளுவர் ஆண்டு கி.மு 31 ) ஆண்டுக் கால வரலாற்றில் திருக்குறளை எட்டுத்திக்கிலும் பரப்பியவர்களில் முதன்மையானவர் மு.கருணாநிதி. திருக்குறளுக்கு எளிமையான உரை, திருக்குறள் காட்டும் நிகழ்வுகளைக் கண் முன் நிறுத்தும் `குறளோவியம்‘, காலத்துக்கும் திருவள்ளுவர் புகழ் பாடும்படி உயர்ந்து நிற்கும் கன்னியாகுமரி 133 அடி `திருவள்ளுவர் சிலை‘, திருவள்ளுவர் நினைவாக `வள்ளுவர் கோட்டம்‘, `மயிலைத் திருவள்ளுவர் கோயில் புனரமைப்புஎன்று அவர் வள்ளுவத்துக்குச் செய்திருக்கும் பணிகள் ஏராளம்

திருவள்ளுவர்
திருவள்ளுவர்

கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்என்று இடைக்காடரும்,அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் என்று ஔவையாரும் பாடிய `உலகப் பொதுமறை திருக்குறளுக்குச் சிறப்பு செய்ய வேண்டும்என்ற தமிழர்களின் நீண்டகால கனவை நிறைவேற்றியவர்.

வேலூரில் `திருவள்ளுவர் பல்கலைக் கழகம்அமைத்தவர். தமிழக அரசின் போக்குவரத்துக் கழகத்துக்கு `திருவள்ளுவர்எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தவர். அரசுப் பேருந்துகளில் திருக்குறளை எழுத ஆணைப்பிறத்தவரும் கலைஞர் தான்!

சென்னை, கோடம்பாக்கத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தில் வள்ளுவர் கோட்டம்எனும் கலைநுட்பம் வாய்ந்த நினைவிடம் எழுப்ப, 1973-ம் ஆண்டு உத்தரவிட்டார். 99 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 1976-ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. காந்தாரக் கலைவடிவில் அமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தின் நுழைவாயிலில், ‘அகர முதல எழுத்தெல்லாம்…’ எனும் குறள் நம்மை வரவேற்கும். 220 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டது பிரம்மாண்ட அரங்கம். அரங்கத்துக்கு மேலே, மைய மண்டபத்தில் உள்ள மாடத்துக்கு `குறள் மாடம்என்று பெயர். இங்குப் பளிங்குக் கற்களில் 1,330 திருக்குறளும், திருக்குறளின் புகழ் கூறும் `திருவள்ளுவ மாலைபாடல்களும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் கோட்டத்துக்குள் 7 அடி உயர பளிங்குக் கல்லில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. முப்பால்களைக் குறிக்கும் வகையில் மூன்று விரல்களை காட்டிக் கொண்டிருப்பார் திருவள்ளுவர்.

`திருவாரூர் தேர் அழகுஎன்பார்கள். அந்தத் தேரையே இழுத்து வந்து நிறுத்தியிருப்பதைப் போன்றே கருங்கல்லால் உருவாக்கப்பட்ட 101 அடி உயரத் தேரையும் அமைத்திருக்கிறார். கருணாநிதி தமிழ் மீதும், திருக்குறள் மீதும் கொண்ட பற்றின் அடையாளமாக எழுப்பப்பட்டிருக்கிறது வள்ளுவர் கோட்டம். போகிறபோக்கில் பார்த்துவிட்டுச் செல்லும் கூடம் அல்ல; நின்று நிதானித்து ரசிக்கும் கலைக் கூடம் இது!

திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலை

தமிழறிஞர்களின் கோரிக்கையை ஏற்றுத் திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்ற வேண்டும் என்று 1971-ம் ஆண்டு அரசிதழில் வெளியிட்டு 1972-ம் ஆண்டில் அதை நடைமுறைப்படுத்தியவர் மு.கருணாநிதி.

திருவள்ளுவரின் அவதாரத் தலமாகக் கருதப்படும் மயிலைத் திருவள்ளுவர் கோயிலைத் திருப்பணி செய்தவர். 1973-ல் தொடங்கிய கோயில் திருப்பணிக்குப் புரவலராகப் பொறுப்பேற்று, திருப்பணியைச் சிறப்பாக செய்து முடித்தவர். இது, தற்போது மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கன்னியம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

திருக்குறளைப் படித்து அது போதிக்கும் நெறியைப் பின்பற்றுபவர்கள், வாழ்வில் தலை நிமிர்ந்து வாழ்வார்கள். திருக்குறளை எழுதிய வள்ளுவரைப் பார்ப்பவர்களும் தலை நிமிர்ந்து பார்க்க வேண்டும் எனும் உயர்ந்த நோக்கில் கன்னியாகுமரியில் 133 அடி திருவள்ளுவர் சிலையை அமைத்தவர் மு.கருணாநிதி. 2000-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி 133 அடி உயரப் பிரம்மாண்ட சிலை திறக்கப்பட்ட பிறகு, இது குமரி முக்கடல் சங்கமத்தின் அடையாளமாகிப்போனது. இந்தச் சிலை சுமார், 7,000 டன் கிரானைட் கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. பீடத்தின் 37 அடி உயரம் `அறத்துப்பால்அதிகாரங்களின் எண்ணிக்கை 38-ஐயும், சிலையின் 95 அடி உயரம் `பொருட்பால்மற்றும் `காமத்துப் பால்ஆகிய அதிகாரங்களின் கூடுதல் தொகை 95 ஐயும் உணர்த்தும்படி நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் தென் கோடியில் திருவள்ளுவர் சிலை அமைத்து, அவரின் புகழ் பரப்பியவர் மு.கருணாநிதி.

அழியாப் புகழ்கொண்ட குறளுக்குப் பதிவுரை, விளக்கவுரை, விரிவுரையைப் பலர் எழுதியிருந்தாலும், குறளுக்குத் தமது சொற்களால் குறளோவியம்வரைந்தவர். சொற்சித்திரம் தீட்டிப் படிப்போரை மகிழச் செய்தவர். இலக்கியவாதியாக மட்டுமல்லாமல், பகுத்தறிவுச் சிந்தனையுடன் குறளோவியத்தைத் தீட்டியவர்.

குறளோவியத்தில் வரும் ஒருகாட்சி

தலைமகள் ஒருத்தி, தலைமகனுக்கு, சோறு, கிழங்கு வறுவல் ஆகியவற்றோடு பாகற்காயையும் இலையில் படைக்கிறாள். அப்போது, ‘கசக்குமெனினும் பகுத்தறிவுக் கொள்கை போலப் பாகற்காய் நல்ல பயன்தரும்என்பீர்களேஅதற்காகத்தான், இன்று அதைச் சமைத்தேன்என்று கூறுகிறாள்.

இவ்வாறு, மு.கருணாநிதி எழுதிய பகுத்தறிவு உரைகள் காலத்துக்கும் அழியாத தன்மையுடையவை.

`தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

எனும் திருக்குறளுக்கு, `ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்என்று, மு.வரதராசனார் உரை எழுதினார். இதற்கு, `கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காதக் காரியம், ஒருவர் முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக்கேற்ற வெற்றியைத் தரும்என்று மு.கருணாநிதி பகுத்தறிவுச் சிந்தனையுடன் விளக்கம் எழுதியிருக்கிறார்.

3 COMMENTS

  1. படித்தேன், வியந்தேன். குறளோவியம் படிக்க வேண்டும் என்று ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது தங்கள் பதிவு. கலைஞர் இலக்கியத் துறையில் புரிந்த சாதனைகள் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியவை. நாமும் பகுத்தறிவுச் சிந்தனையுடன் செயல்பட வேண்டிய காலம் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here