பாண்டியர்களுடன் பயணம் – 1

தமிழகத்தில் சோழர்களின் வரலாறு பேசப்பட்ட அளவுக்குப் பாண்டியரின் வரலாறோ அல்லது சேரரின் வரலாறோ பேசப்படவில்லை என்ற ஆதங்கம் எல்லாருக்குமே உண்டு. அதற்குத் தகவல் கிடைக்காமையும் ஒரு காரணம். சோழர்களுக்கு இருக்கும் கவர்ச்சி ஏனோ பாண்டியர்களுக்கும், சேரர்களும் இருப்பதில்லை. சோழர்கள் பற்றிய புதினம் என்று கேள்விப்பட்டால் உள்ளே சரக்கு இருக்கிறதா இல்லையா என்று பார்க்காமல் பலர் வாங்கி விடுகிறார்கள். அந்த அளவுக்கு இருக்கிறது சோழ மோகம். சோழர்களின் வீரமும், நிர்வாகமும் பேசப்பட்ட அளவுக்குப் பாண்டியர்களின் தமிழ் உணர்ச்சியோ அல்லது அவர்களின் கடலோடும் திறமோ பேசப்படவில்லை. பாண்டியனின் நிலைதான் சேர மன்னருக்கும். சேர மன்னர்களின் வில் திறனோ அல்லது அவர்கள் வனமாடும் திறனோ பேசப்படுவதே இல்லை. காவேரி பாய்ந்து வளப்படுத்திய சோழம் பேசுபொருளைப் போன்று பஃறுளி, குமரி, பொருநை நதி, வைகை நதி பாய்ந்து வளப்படுத்திய பாண்டிய நாடு தமிழர்களின் பாராமுகமாகவே இருக்கிறது. நீதி தவறாத மனுநீதி சோழனைப் போன்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும், இளம் வயதில் எதிரிகளை வீழ்த்திய கரிகாலனைப் போன்று தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனும், ராஜராஜன் பேசப்பட்டதைப் போன்று சடையவர்மன் சுந்தரபாண்டியனும் அனைவராலும் பேசப்பட வேண்டும்.

ராஜராஜனுக்கு நிகர் சுந்தர பாண்டியனா என்று உடனே யாரும் சண்டைக்கு வந்துவிட வேண்டாம்….

பாண்டியர்களின் ஆட்சியானது கடல் கொண்ட குமரி நாட்டிலிருந்து தொடங்கியிருக்க வேண்டும். அப்பொழுது இலங்கை, பாம்பன் தீவுகள் தமிழகத்துடன் இணைந்திருக்கலாம். பாண்டிய நாட்டை பஃறுளி, குமரி, பொருநை, வைகை நதி பாய்ந்து வளம்பெறச் செய்திருக்கிறது. சிற்றரசர்களுடன் நடைபெற்ற போரினால் சங்க காலத்தில் எந்தவொரு நாட்டின் எல்லையும் நிலையாக இருந்தது இல்லை. தோராயமாக பாண்டிய நாட்டின் தெற்கெல்லையாக குமரிக் கடலும், கிழக்கெல்லையாக குணக் கடலும் (வங்காள விரிகுடா), மேற்கெல்லையாக கடலோரம் இருந்த தென்திருவாங்கூர், பொதிகை மலை வரை இருந்திருக்கும். வடவெல்லை கொடும்பாளூர் வரை நீண்டிருந்தது.

பாண்டிய நாட்டில் இருக்குன்றம், திருப்பரங்குன்றம், ஆணை மலை, பறம்பு மலை, பொதிகை மலை, கழுகு மலை ஆகியவை முக்கிய மலைகளாகும். கொற்கை, குமரி, விழிஞம் ஆகியவை பாண்டிய நாட்டின் முக்கியத் துறைமுகங்கள். புகழ்பெற்ற பெரிப்ளஸ் ஆஃப் எரித்திரையன் கடல் எனும் யவன கடல் செலவு பற்றிய நூலில் கொற்கை துறைமுகம் கொல்சி என்றும் குமரி துறைமுகம் கொமரி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. கடல் கொண்ட மதுரை, கூடல் மாநகர் மதுரை, கொற்கை, குமரி ஆகியவை பாண்டிய நாட்டின் முக்கிய நகரங்களாகும்.

பாண்டிய நாட்டின் இலச்சினை சின்னம் கயல். கெண்டை மீன். “நெடுநீர் ‘கெண்டை’யோடு பொறித்த; குடுமிய வாக பிறர் குன்றுகெழு நாடே” என்று பாண்டிய மீன் சின்னத்தைப் பற்றிய குறிப்பும் புறநானூற்றில் வருகிறது. கொடியின் சின்னமும் அதுதான். பாண்டியர்கள் கடலோடுவதில் வல்லவர்கள் என்பதை அனைவரும் அறிவோம். கடலில் மூழ்கி முத்தெடுப்பதில் பாண்டியர்கள் கை தேர்ந்தவர்கள். பாண்டிய நாட்டின் கொற்கை முத்து யவனம் வரை ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்தது. பாண்டியர்கள் தரைப் போரை விடவும் கடல் போரில் வல்லவர்கள் என்பதை அவர்களின் மீன் சின்னத்தைக் கொண்டே யூகிக்கலாம். கடலோட்டிய பரதவர்கள் குலம் தான் பாண்டிய குலமாக மேன்மை அடைந்தது என்பது சிலரது கருத்து. ஆய்வுக்குரியது இது.

பாண்டிய நாட்டின் தலை நகரான மதுரையை ஆண்ட பெண் அரசியிலிருந்து நமது பயணத்தைத் தொடருவோம்…

4 COMMENTS

  1. […] மன்னர் இருவரைப் பற்றி பேசுவோம்… பாண்டியர்களுடன் பயணம் முதல் பகுதியை …   சி.வெற்றிவேல். சாலைக்குறிச்சி… […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here