பாண்டியர்களுடன் பயணம் – 2

இப்பொழுது சோழர்கள் மீது எப்படிப்பட்ட கவர்ச்சி இருக்கிறதோ, அதைப் போன்ற கவர்ச்சி அக்காலத்தில் பாண்டியர்கள் மீது இருந்தது. ஒவ்வொருவரும் பாண்டியர்களைத் தம் வம்சத்தின் வழி வந்தவர்கள் என்று கூறிக்கொண்டார்கள். வட இந்தியர்கள், கிரேக்கர்கள் போதாதென்று மீனாட்சியும் பாண்டிய குலத்தில் பிறந்திருக்கிறாள் என்பதை பற்றி நினைக்கும்போது தான் பாண்டியர்களின் புகழ் எந்த அளவுக்குப் பரவியிருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். உலகை ஆளும் சொக்கனே பாண்டிய இளவரசியைக் கண்டு அவள் பின்னாலேயே ஓடி வந்தான் என்று பலர் கதை கூறுவதால் மீனாட்சியின் புகழும், பாண்டிய நாட்டின் புகழும் எந்த அளவுக்குப் பரவியிருந்தது என்பதைப் புரிந்துகொள்வோம்…

 மதுரையை ஆண்ட பெண் இளவரசியைப் பற்றி எழுதப் போகிறேன் என்றதும் மீனாட்சியைப் பற்றித் தான் கூறப்போகிறேன் என்று நினைத்துவிட வேண்டாம். நாம் இந்தப் பதிவில் மீனாட்சியைப் பற்றி பேசப் போவதில்லை. பாண்டிய நாட்டின் தொன்மையைப் பற்றி நினைக்கும் போது புராணக் கதையான ராமாயணத்தில் ஒரு குறிப்பு வருகிறது. ராமாயணம், மகாபாரதம் என்பவை வரலாற்று ஆதாரங்களாக ஒரு நாளும் ஆகிவிடாது. ஆனாலும், பாண்டிய நாட்டைப் பற்றிய அனைத்து தகவல்களையும் கூற வேண்டும் என்பதால் தான் இந்தத் தகவல்களையும் சேர்த்துக் கூறுகிறேன்.
 
தடோ ஹேமாயம் திவ்யம் முக்த மனி விபுசிடம்
யுக்தம் கவாடம் பாண்டியானாம் கடா த்ரக்சுயத வானராம்
 
இது வால்மீகி ராமாயணத்தில் வரும் வரி. இதில் தான் பாண்டியனைப் பற்றிய குறிப்பு வருகிறது. சுக்ரீவன் தனது வானரப்படையிடம், “தென்திசையை நோக்கி நெடுந்தூரம் சென்றால் தங்கம், முத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்களைக் கொண்ட ஒரு நகரத்தைக் காண்பீர்கள். அதன் பெயர் கபாடபுரம். அதனை ஆள்பவர்கள் பாண்டியர்கள். அங்கே சீதையைத் தேடிப்பாருங்கள். அவள் கிடைத்தாலும் கிடைக்கலாம்” என்று கபாடபுரத்தை ‘கவாடம்’ என்ற சொல்லின் மூலம் குறிப்பிட்டிருக்கிறான். நகரத்தோட மதிலைக் கூட தங்கம் வைத்து அலங்கரித்தார்கள் என்றால் எவ்வளவு செலவச் செழிப்பாக இருந்திருக்கும் என்று சிந்திக்கவும்.
 
இறையனார் அகப்பொருள் எனும் தமிழ் இலக்கண நூலில் கபாடபுரம் எனும் பாண்டியரின் முற்காலத் தலைநகரைப் பற்றிய குறிப்பு வருகிறது. அதில் கபாடபுரம் இடைச் சங்ககால பாண்டிய நாட்டின் தலைநகர் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.
 
கபாடபுரத்தை அடுத்து மகாபாரதத்தில் பாண்டியர்களைப் பற்றியும், சோழர்களைப் பற்றியும் குறிப்பு வருகிறது. உதாரணத்துக்கு சபாபர்வம் பகுதி 51 ல் வருகிறது.
 
‘யுதிட்டிரனுக்காகப் பாரதத்தின் பல மன்னர்கள் எடுத்து வந்த பரிசுப் பொருள்களை துரியோதனன் திருதராஷ்டனிடம் கூறுகிறான். “சோழனும், பாண்டியனும் தங்கப்பாத்திரங்களில் நிரப்பப்பட்ட மலைய {Malaya} மலைகளில் மட்டுமே விளையும் சந்தனச் சாற்றையும், பெரும் அளவிலான சந்தனத்தையும், தர்துரா {Dardduras hills} மலைகளிலிருந்து கற்றாழைக் கட்டைகளையும், அதிக பிரகாசமுடைய ரத்தினங்களையும், தங்கத்தால் பின்னப்பட்ட அற்புதமான ஆடைகளையும் கொண்டு வந்தும், சோழ மற்றும் பாண்டிய மன்னர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை.’
 
சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் அவ்வளவு மரியாதை!!!
 
துரோண பருவத்திலும், கர்ண பருவத்திலும் பாண்டிய மன்னன் மலையத்வஜன் மற்றும் சாரங்கத்வஜன் எனும் இரண்டு பாண்டிய மன்னர்களின் வீரத்தைப் பற்றி விரிவாக வருகிறது. இதில் பாண்டிய மன்னனான மலையத்வஜன் கர்ணனின் படையையே கலங்கடித்தவன். கடைசியாக அஸ்வத்தாமனின் மூன்று கணைகளால் நான்கு துண்டுகளாக உடல், கைகள், தலை ஆகியவை வெட்டப்பட்டு வீர மரணமடைந்தான்.
 
மலையத்வஜன் எனும் பெயரைக் கேட்டதுமே அனைவருக்கும் மதுரை மீனாட்சி அம்மனின் தலவரலாறு நினைவுக்கு வருகிறதல்லவா? எனக்கும் அப்படித்தான் வந்தது. அந்த மலையத்வஜன் தான் இந்த மலையத்வஜனா என்ற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன். மீனாட்சியைப் பற்றியும், அவளது வீர தீர பராக்கிரமத்தைப் பற்றியும், சொக்கனையே சொக்கவைத்த பேரழகைப் பற்றியும் மதுரை மீனாட்சியம்மனின் தல புராணத்தில் படித்துக் கொள்ளுங்கள்.
 
பாண்டியர்கள் எனும் பெயர் எப்படி வந்தது என்பது புரியாத புதிர். சில அதிமேதாவிகள் ஒரு கதையைக் கூறுகிறார்கள். அதாவது பாண்டியர்கள் வனவாசத்தின் போது தமிழகத்துக்கு வந்தார்களாம். அப்பொழுது அர்ச்சுனனின் அழகில் மயங்கிய இளவரசி ஒருத்தி அவனை மணந்துகொண்டாளாம். பாண்டுவின் மகனான அர்ச்சுனனின் வாரிசாகப் பிறந்து ஆட்சி செய்தவர்கள் தான் பாண்டியர்கள் என்று புது விளக்கம் கூறுகிறார்கள். இராமாயண காலத்துக்கும் பிற்பட்ட காலம் மகாபாரத காலம். ராமாயணத்திலேயே பாண்டவர்களைப் பற்றி வரும் குறிப்புகளை அவர்கள் மறந்திருப்பார்கள் போலும். இதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். இன்னொரு கதையையும் கூறுகிறார்கள்.
 
அதாவது பாண்டவ இளவரசனான அருச்சுனனுக்குப் பிறந்தவர்களிடம் பாண்டவர்கள், “பாண்டவர்கள் ஐவரைப் போன்றே பாண்டியர்களின் வாரிசுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்படி ஒற்றுமை குலையும் போது மொத்த பாண்டிய வம்சமும் அழிந்து போகும்” என்று எச்சரித்து சாபமிட்டுச் சென்றார்களாம்.
 
பிற்காலத்தில் குலசேகர பாண்டியனின் வாரிசுகளான சுந்தர பாண்டியன், வீர பாண்டியனுக்கு இடையில் அரசுரிமைப் போட்டி ஏற்பட்டது. பாண்டியர்களின் சாபத்தினால் தான் பாண்டிய வம்சமே அழிந்ததாகக் கூறுகிறார்கள்.
 
பாண்டியர்கள் மீது பாண்டவர்களுக்கு தான் ஆசை என்று போய் கிரேக்கர்களும் சொந்தம் கொண்டாடிய ஒரு கதையும் இருக்கிறது. அந்தக் கதை தான் பாண்டிய நாட்டை அரசாண்ட பெண் அரசியைப் பற்றிய கதை.
 
கி.மு 305 ம் ஆண்டு இந்தியாவில் கிரேக்க ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கில் செல்யூகஸ் நிக்கோடர் என்பவன் படையெடுத்தான். போர் நடந்ததா இல்லையா என்பது பற்றிய குறிப்பு இல்லை. ஆனால், இறுதியில் இருவருக்குமிடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்படுகிறது. அதன் முடிவில் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளை வெறும் 500 யானைகளுக்குச் சந்திரகுப்த மோரியனிடம் விட்டுக்கொடுத்துவிட்டுச் செல்கிறான் செல்யூகஸ் நிக்கோடர். அத்தோடு அல்லாமல் தனது மகளையும் கொடுத்து, மெகஸ்தனீசு எனும் தூதுவனையும் பாடலுக்கு அனுப்பி வைக்கிறான். 500 யானைகளுக்காக செல்யூகஸ் நோக்கோடர் விட்டுக்கொடுத்த நாடு இன்றைய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை விடவும் பெரிய நிலப்பரப்பு ஆகும். அடேங்கப்பா…
 
அப்படிப் பாடலிக்கு வந்த தூதுவன் தான் ‘பாண்டியா’ எனும் இளவரசியைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். இந்தப் பாண்டியா இளவரசி யார் என்று அவன் கூறும் காரணத்தைக் கேட்டால் படிப்பவர்கள் மயக்கம் போட்டு விழுந்துவிடுவார்கள். கிரேக்கத்தில் ஹெர்குலீஸ் எனும் புராணக் கதாப்பாத்திரம் உண்டு. ஹெர்குலீஸ் மிகப் பெரிய வீரன். நம்ம ராக் கூட ‘ஹெர்குலீஸ்’ எனும் படத்தில் ஹெர்குலீஸாக நடித்திருப்பார். இவர் கடவுளே மனிதனாகப் பிறந்த மாவீரன் என்று கிரேக்கப் புராணங்கள் கூறுகின்றன. நம் ஊர் கதையில் வரும் ராமன், அர்ச்சுனன் மாதிரி ஹெர்குலீசும் கிரேக்க நாட்டுக் கடவுள். மிகப்பெரிய வீரர்.
 
(கிரேக்க நாட்டில் பெரிய அப்பாடாக்கர் அவர்.)
 
அந்த ஹெர்குலீஸ் ஊர் சுற்றுவதற்கு இந்தியா வந்தானாம். அப்போது அவனைக் கண்டு பாண்டிய இளவரசி ஒருத்தி மயங்கினாளாம். அவளது பெயரும் பாண்டியா தான். அந்தக் காதலி தான் இந்த ‘பாண்டியா’ இளவரசி என்று குறிப்பு எழுதி வைத்திருக்கிறான் மெகஸ்தனிசு. ஹெர்குலீசின் வாரிசுகள் தான் பாண்டியர்கள் என்று மறைமுகமாகக் கூறியிருக்கிறான் மெகஸ்தனிஸ்.
 
இப்போது முதல் பத்தியைப் படிக்கவும். நான் எதற்காக அந்த வரியை எழுதினேன் என்ற காரணத்தைப் புரிந்துகொள்வீர்கள்.
 
நாளை நீதி காத்த பாண்டிய மன்னர் இருவரைப் பற்றி பேசுவோம்…
 
சி.வெற்றிவேல்.
சாலைக்குறிச்சி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here