வானவல்லி முதல் பாகம்: 10 – தனிமையில் வெளிப்பட்ட காதல்

திக்கலாமா? அல்லது வேண்டாமா? என யோசனை செய்வது போலக் குணக்கடலின் தொடு வானத்திலே வெகு நேரம் கட்டுண்டு கிடந்தது பரிதி. பரிதியின் செந்நிறக் கதிர்களைப் பிரதிபலித்த அலைகள் பொன்னிறமாக மின்னிக் கொண்டிருந்தது. குணக்கடலின் தொடுவானத்தில் மெல்ல எழுந்த பரிதி மேகங்களுக்கிடையில் தன் கதிர்களைச் செலுத்தியதால், செங்கதிர்கள் பல வண்ண நிறங்களில் பிரிகையடைந்து கிழக்கு வானத்திற்கே பெரும் அழகைச் சேர்ப்பித்திருந்தது. புகாரின் குணக் கடலில் நிகழும் இந்த மாயக் காட்சிகளில் தனது கவனத்தைச் செலுத்தாத மக்கள் கூட்டமும் அந்தக் கடற்கரையில் இருக்கத்தான் செய்தனர். கடற்கரையில் நிகழ்ந்த வாள் சமரையே அனைவரும் கண்ணிமைக்காமல் கண்டுகளித்துக் கொண்டிருந்தனர்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

Vaanavalli
வானவல்லி

கடற்கரையில் வாள்கள் ஒன்றோடொன்று மோதும்  போதும், உராயும் போதும் எழுந்த சத்தம் சுற்றியிருந்த வீரர்களின் வெற்றிக் கூச்சலையும் கடந்து குணக்கடலின் அலைகளில் எதிரொலித்தது. வாற்சமர் அவ்வளவு உக்கிரமாக அரங்கேறிக் கொண்டிருந்தது. இந்த வாள்கள் உராயும் சத்தத்தையும், சுற்றியிருந்த வீரர்களின் வெற்றிக் கூச்சலையும் கண்ட குணக்கடலின் கடலலை கூட மேகத்தில் பரிதி நிகழ்த்தும் மாயக் கோலங்களைக் காண விருப்பப்படாமல், கடலிலிருந்து சிற்றலைகளாக எழுந்து பேரலைகளாக வலிமை பெற்று நுரையும், மணலுமாக மக்கள் கூட்டத்தின் கால்களை நனைத்த படியே வாள் சமரைக் காணத் தரையோடு தழுவி முன்னேறத்தான் பார்த்தது.

தான் மேகக் கூட்டங்களில் அவளுக்காக நிகழ்த்தும் மாய வித்தைக் காட்சிகளைக் காணாமல் குணக் கடலரசி, அப்படி எந்தச் சமரைக் காண கரையையும் தாண்ட விழைகிறாள்? என்று வியந்த படியே நாமும் அதனைப் பார்ப்போமே என எண்ணிய பரிதி மேகத்திரையிலிருந்து விலகி மெல்ல மேலெழும்பினான்.

வாள் சமர் நடைபெறும் பகுதியைச் சுற்றி நின்ற கூட்டத்தில் பலரும் வீரர்களாகத் தான் இருந்தனர். மேலும் அங்குப் புகார் நகர மக்களும் இந்திரத் திருவிழாவிற்கு வருகை தந்த சேர, சோழ, பாண்டிய மற்றும் மேலை நாட்டு அழகிகளும் ஆவலோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆஜானுபாகுவான, தோள் தினவெடுத்த பல நாட்டு வீரர்களும் வாள் சமரில் தன்னைத் தோற்கடிக்க எவருமில்லை என்ற பெருங்கர்வத்தோடு வந்தவர்களில் பலரும் கூட்டத்தில் வாளேந்திச் சமர் புரிந்த இளைஞனிடம் தோற்றுத் திரும்பிக்கொண்டிருந்தனர்.

தோற்றுத் திரும்பிய பல வீரர்களும், “அந்த இளைஞன் பார்ப்பதற்கு எளிமையாகத்தான் தோன்றுகிறான். ஆனால் அவனது கைகள் அப்படியென்ன மாய வித்தையைப் பயின்றிருக்கிறதோ? தெரியவில்லையே!” எனப் புலம்பியபடியே தங்கள் தலையைத் தொங்கபோட்டுக் கொண்டு கர்வம் அடங்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.

சமரில் நின்று பலரின் வாள்களையும் பறக்கவிட்டுக் கொண்டிருப்பவனின் பெயர் கூட்டத்தினர் எழுப்பும் வெற்றிக் கூச்சலிலிருந்து “விறல்வேல்” என்று புதிதாக வந்தவர்கள் அறிந்துகொண்டார்கள்.

விறல்வேல் அப்பொழுது புகார்ப்படையின் உப தலைவனாக இருக்கவில்லை. அவனது நண்பனும், சேனாதிபதி பெருமறவர் மகேந்திர வளவனாரின் மகனுமான திவ்யன் தான் அந்தப் பொறுப்பில் படைகளைச் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருந்தான். வானவல்லியின் அண்ணன்.

சித்திரைத் திங்கள் முடிந்து வைகாசித் திங்களின் முதல் நாள் அது. புகாரில் ஒரு மாதம் கோலாகலமாக நடைபெற்ற சித்திரைப் பெருவிழாவான இந்திரத் திருவிழா முடிந்துவிட்டது. ஆனால் வீரர்களுக்கான இந்த வாற்சமர் திருவிழா இன்னும் முடிந்தபாடில்லை என்பதற்கு அடையாளமாகத்தான் இரவு கடந்து பொழுது விடிய விடிய அந்தக் கடற்கரை மணற்பரப்பில் வாள் சமர் நடந்துகொண்டிருந்தது.

திவ்யனின் உபதளபதி தான் விறல்வேல். திவ்யனும் விறல்வேலும் இணையற்ற நண்பர்கள். இருவருள் யாருக்கேனும் ஒருவருக்கு ஆபத்தென்றால் உயிரை விடக்கூடத் தயங்கமாட்டார்கள். தனது உபதளபதியும், நண்பனுமான விறல்வேலின் வாள்வீச்சில் பல வீரர்கள் தோற்று அவர்களின் வாள்கள் அந்தரத்தில் காற்றில் பறப்பதைக் கண்டு இரசித்துக் கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான் உபதலைவன் திவ்யன்.

பாண்டிய நாட்டிலிருந்து வந்திருந்த வீரனொருவன் தனது வாள் திறனைச் சோதனைச் செய்ய இவன் தான் தகுதியானவன் என எண்ணியபடியே தனது நீண்ட மெல்லிய கணம் மிகுந்த வாளை உருவிய படியே “வீரனே, திறமையிருந்தால் எனது வாளைத் தடுத்துப் பார்” என்று கர்ஜித்துக் கொண்டு விறல்வேலுக்கு எந்தவொரு கால அவகாசத்தையும் வழங்காமல் அவனது கழுத்தை நோக்கி கண நேரப் பொழுதில் சூறாவளியாய் வீசினான்.

“சுதாரிக்க எந்தச் சந்தர்பத்தையும் வழங்காமல் இப்படி அதிரடியாகத் தாக்குகிறானே! இவனது உடலோ பருத்து, வைரமேறி கெட்டிப்பட்டு ராட்சதனாகக் காணப்படுகிறான். இந்த இளவயது பயிரான விறல்வேல் இவனது தாக்குதலை எப்படிச் சமாளிக்கப்போகிறான்?” என்று கூட்டத்திலிருந்த பலரது மனங்களிலும் பலவாறு ஓடியது.

ஆனால் பாண்டிய தேசத்து வீரனும் எதிர்பாராதபடி கண நேரப் பொழுதை விடக் குறைவான நேரத்தில் அவனது வாளை அந்தரத்திலேயே தடுத்து நிறுத்தினான் விறல்வேல். தனது பலம் முழுவதையும் கொண்டு விறல்வேலின் வாளை அழுத்தித் தட்டிவிட முயன்றான். ஆனால், அவன் அந்த முயற்சியில் தோற்றுவிடவே, விறல்வேலின் பிடியிலிருந்த தனது வாளை தனது பலம் முழுவதும் பிரயோகித்து விடுவித்தான். விறல்வேலை அவனது கருத்த கருவிழிகளால் அளந்த படியே மீண்டும் தனது வாளை பின்னோக்கி செலுத்தி இந்த முறை வாளை வெட்டுவது போன்று வீசாமல் குத்துவது போன்று விறல்வேலின் வலது விலாப்புறத்தை நோக்கி “ஊ” என்று கத்தியபடியே வாளைச் செலுத்தினான்.

விறல்வேலின் வலது கையில் போர் வாள்  இருந்ததனால், அவனைச் சுற்றி அவனது வலது விலாப் புறத்தில் தாக்கினால் நிலைகுலையச் செய்து அவனை வீழ்த்திவிடலாம். தனது வாளையும் தடுப்பது சிரமம் என்று திட்டமிட்டுத் தாக்கினான் பாண்டிய நாட்டு வீரன்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here