வானவல்லி முதல் பாகம்: 11 – காதலும் கண்ணீரும் #Vaanaavalli

வானவல்லி
வானவல்லி

ண்பன் திவ்யனின் உத்தரவுப் படி, வளவனாரிடம் தகவலைத் தெரிவிக்க மாளிகைக் கதவைத் தட்டினான் விறல்வேல். கதவு திறக்கப்பட்டவுடன் விறல்வேலுக்கு அவன் எதிர்பாராத பெரும் இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. காரணம், கதவைத் திறந்தது வானவல்லி. #Vaanavalli

பாதிக் கதவினை மட்டும் திறந்து நின்ற அந்தப் பைங்கிளியைக் கண்ட விறல்வேலின் நா பேச எழாமல் பிரமை பிடித்தே நின்றுவிட்டான். திறக்கப்பட்ட கதவிற்குப் பின்புறம் நின்ற பைங்கிளி மரகதப் பட்டுடுத்தி, தலை குளித்ததன் விளைவாக அவளது நீண்ட, அடர்ந்த கூந்தலை உலர்த்துவதற்காகப் பின்னாமல் முன்னும் பின்னும் அப்படியே நீளமாகத் தொங்க போட்டுக்கொண்டு, காது மடல்களின் இருபுறத்திலிருந்தும் எடுத்த சில கற்றைக் கேசரங்களால் இரண்டையும் பின்னி, அவற்றிற்கு இடையில் தொடுத்த மல்லிகையையும், தாழை மலரின் மடலையும் வைத்து அவளது பிறை நுதலில் குங்குமப் பொட்டு வைத்து இடுப்பில் ஒரு கையை மடக்கி, வலது காலை பின்புறமாகச் சற்றே மடக்கி ஒய்யாரமாகக் கதவில் சாய்ந்தபடியே ஓர விழியால் பார்த்த படி விறல்வேலின் பிரமை நீங்கும் படி “ஏது காலையிலேயே தலைவர் இன்று இந்தப்பக்கம் வருகைத் தந்துள்ளார்? ஆச்சர்யமாக உள்ளதே!” என வரவேற்றாள்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

Vaanavalli
வானவல்லி

பதிலுக்கு விறல்வேல், “அவசரப் பணியாக நாகத்தீவுக்குச் செல்கிறோம். ஆதலால் தகவல் சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று வந்தேன்” என்றான்.

“செல்கிறோம் என்றால்…?”

“நானும், உப தலைவன் திவ்யனும் என்று அர்த்தம்.”

“நாகத்தீவுக்கா? கடல் கடந்த பயணம் ஆயிற்றே!” எனப் பதறினாள்.

“ஆமாம் வானவல்லி. முதன்மை அமைச்சரின் உத்தரவு. மீற இயலுமா?” என்று பதிலளித்தவன் மீண்டும் தொடர்ந்து “வளவனார் மற்றும் அம்மா எங்கே? அவர்களிடம் கூறிவிட்டு விரைவில் கிளம்ப வேண்டும்!” என்றான்.

“அவர்கள் இருவரும் உறைந்தையில் அல்லவா இருக்கிறார்கள்” என்றாள். ஆனால் இந்த வாக்கியத்தில் அவளது கம்பீரமான குரல் காணாமல் போய்ச் சற்று குழைந்து வந்ததைக் கவனிக்கவே செய்தான் விறல்வேல்.

“உறைந்தையிலா?”

“ஆமாம்”

“அப்புறம் ஏன் உமது தமையன் வீட்டிற்குச் சென்று, தந்தையாரிடம் தகவல் தெரிவித்துவிட்டு, உடனே வா? எனக் கட்டளையிட்டான்”

“தந்தையார் மற்றும் தாயார் இருவரும் உறைந்தையில் இருப்பதும், அவர்கள் நாளை தான் புகாருக்குத் திரும்புவார்கள் என்பதையும் அண்ணன்தான் ஏற்கெனவே அறிவாரே!”

விறல்வேல் குழப்பத்துடன், “அப்புறம் ஏன், எதற்கென்னை அனுப்பி வைத்தான்?”

“உங்களுக்குத் தெரியாதா?”

“தெரியவில்லையே!”

குரலை மேலும் தாழ்த்தி கொஞ்சலுடன் “ஆமாம்! ஆமாம்! உங்களுக்குக் காரணம் தெரியாது தான்! விறலியர் மகன் விறல்வேலுக்குப் புதிதாக நடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?”

“அப்படியானால் வீட்டில் யாரும் இல்லையா?” இவனது குரலும் தாழ்ந்து கொஞ்ச ஆரம்பித்தது.

“யாரும் இல்லை.”

“உமது பணிப்பெண்கள்?”

“அவர்கள் காலையிலேயே சென்றுவிட்டார்கள்.”

“சென்றுவிட்டார்களா அல்லது அனுப்பிவிட்டாயா?”

“அனுப்பிவிட்டேன் எனத்தான் வைத்துக் கொள்ளுங்களேன்!”

“உறக்கத்திலும் உனைப் பிரியாத உமது தோழிகளான பத்திரைத் தேவி மற்றும் மரகதவல்லி.”

“சற்று முன்தான் கிளம்பினார்கள்.”

“சற்று முன்பா? அவர்கள் இங்கேயே இருக்க வேண்டியது தானே! உன்னைத் தனியே விட்டுவிட்டு அவர்கள் ஏன் சென்றார்கள்?” என அவர்களைக் கடிந்துகொண்டு வினவினான்.

“மேல் மாட உப்பரிகைச் சாரத்திலிருந்து நீங்கள் வருவதை இருவரும் கண்டார்கள்.”

“கண்ட பின்பு.”

“நீ தனிமையில் இருப்பதே நல்லதென்று, சென்றுவிட்டார்கள்”

முன்பு அவர்களைக் கடிந்தவன் “புத்திசாலித் தோழிகள் தான்” என்று பாராட்டிக்கொண்டே வானவல்லியின் அருகில் வந்தவன் “வீட்டில் நீ மட்டும் தான் இருக்கிறாய்? அப்படித்தானே!” என்றான்.

பதிலுக்கு வானவல்லி பேச முற்பட்டாலும் விறல்வேலின் அருகாமை அவளது பேச்சுகளை முடக்கிவிடவே அவள் “உம்” என்று மட்டும் பதிலளித்தாள்.

“என் நண்பனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்”

“அண்ணாவுக்கா”

“ம்ம்ம்ம்”

பொய்க் கோபத்தோடு “உங்கள் நண்பரை நீங்கள் நிச்சயம் மெச்சிக் கொண்டுதான் ஆகவேண்டும்” என்றாள், முகத்தைத் திருப்பிக்கொண்டே.

அருகில் சென்ற விறல்வேல், அவளை இழுத்து மெல்ல அணைத்தான். இருவரது உடலும் ஒன்றோடொன்று உரசின. இருவரது மூச்சுக்காற்றுகளும் சூடாகச் சந்தித்துக்கொள்ள அவளது காதில் மெல்ல கொஞ்சினான் “வானவல்லி, நீ இன்று இந்த மரகதப் பட்டில் அற்புதமாய் மின்னுகிறாய்” என்றவன் அவளது காது மடலோரமும் பிறை நுதலிலும் பிரிந்திருந்த அவளது ஈரக் கேசரங்களை மெல்ல வருடிக்கொண்டே இருக்கும் போது வானவல்லி அவனிடம் “நான் கதவைத் திறந்த போது, நீங்கள் பார்த்த பார்வையிலிருந்தே அதனை நான் தெரிந்துகொண்டேன்” என்றாள்.

“நான், காலையிலேயே இங்கு வருவேனென்று உனக்கெப்படித் தெரியும்?”

அதற்கு வானவல்லி அவளது சிவந்த இதழ்களினிடையில் தோன்றிய சிரிப்பினை அடக்கிக்கொண்டு, புன்னகையுடன் “நேற்றே சுவற்றில் இருக்கும் பல்லி கூறியது!” என்றாள்.

அவள் காலையிலிருந்தே தன் வருகைக்காகத்தான் காத்திருக்கிறாள் என்பதையும் அவள் அதற்கொரு பொய்யான காரணத்தையும் சொல்வதைக் கண்ட விறல்வேல், அவள் சொன்னதை அப்படியே நம்பியது போன்றே “நிச்சயம் சொல்லியிருக்கும்!” என்ற படியே அவளை இன்னும் சற்று இறுக அணைத்தான். அவனது அணைப்பை முதலில் பலமாக எதிர்த்தவள், பின் எதிர்த்தாலும் அவன் விடுவிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தவளாய் எதிர்ப்பதைக் கைவிட்டு அவனை அணைத்தபடியே தனக்குள் கூறிக்கொண்டாள் “இந்தப் பேதை மனதைப் புரிந்துகொள்ளவே இயலவில்லையே! தலைவன் அருகில் இல்லாதபோது அவனது அருகாமையையும், அணைப்பையும் எதிர்பார்த்தே ஏங்குகிறது. ஆனால், அவரோ அருகில் இருக்கும்போது அவரைத் தவிக்கவிட்டு தூர நின்று வேடிக்கை பார்ப்பதையே விரும்புகிறதே!!” என மனதில் எண்ணியவள் வாய்விட்டு “இதற்குத் தான் இங்குக் காலையிலேயே வந்தீர்களா?” என்றாள்.

4 COMMENTS

  1. அடுத்த அத்தியாத்துக்காகக் காத்திருக்கிறோம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here