வானவல்லி முதல் பாகம் : 12 – விதி செய்த சதி #Vaanavalli

Vaanavalli
வானவல்லி

வைதீகர் பாகவதன், உபதலைவன் திவ்யன் மற்றும் அவனது நண்பன் விறல்வேல் புறப்பட்ட பாய்மரக்கலம் மாலை நேரம் ஒரு சாமத்திற்கு முன்பே நாகத்தீவை அடைந்திருந்தது. மரக்கலத்திலிருந்து இறங்கிய வைதீகர் பௌத்தர்களை அழைத்து மத வாதம் புரிய அனுராதபுரம் கிளம்பினார். அதுவரை பாதுகாப்பாக அழைத்து வந்த உப தலைவனுக்கும், உப தளபதிக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு புறப்பட்டுவிட ஆர்வமடைந்த திவ்யன் தனது நண்பனிடம் “வா விறல்வேல், நீ ஆசைப்பட்டது போன்று இன்றும் நாளையும் இந்த அழகுத் தீவுகளைச் சுற்றிப்பார்த்து விட்டு பிறகே கிளம்பலாம்” என்று கூறிக்கொண்டே அவனை அழைத்துப் பயணிகள் தங்குமிடத்திற்கு மரக்கலத் தலைவனிடம் வழி கேட்டான்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

Vaanavalli
வானவல்லி

திவ்யன் ஏதேதோ கூற அவை எவற்றிலும் ஆர்வமின்மையையும், விறல்வேலின் முகத்தில் காணப்பட்ட கவலை சாயலையும் கண்டவன், “விறல்வேல், நாகத்தீவுகளைக் காண என்னைவிட நீதான் பெரும் ஆர்வத்தில் கிளம்பினாய். ஆனால் இப்போது உனது முகத்தில் மகிழ்ச்சியின் சாயல் சிறிது கூடக் காணவில்லையே?” என வினவினான்.

தனது கேள்விகளுக்கு எந்தவொரு மறுமொழியையும் கூறாமல் அவனது மனம் எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருப்பதைக் கண்ட திவ்யன், “விறல்வேல், கவனத்தை எங்கே செலுத்திக் கொண்டிருக்கிறாய். நான் மட்டுமே பேசிக்கொண்டு வருகிறேன். நீ எதுவும் பேசாமல் மௌனமாகவே வருகிறாய், உனக்கு என்ன ஆயிற்று நண்பா? உடல்நிலையில் ஏதேனும் கோளாறா?” என வினவினான்.

“உடலுக்கெல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்லை” என்றான் விறல்வேல்.

“அப்போது மனதிற்கு என்ன பிரச்சனை என்று கூறு?” இந்த முறை அதிகாரத்துடன் திவ்யனின் சொற்கள் வெளிப்பட்டன.

“அங்கொருத்தி நம்மை எண்ணியே கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள். பிறகெப்படி என்னால் இங்கு மகிழ்ச்சியாய் இருக்க இயலும்!” என்றான் வருத்தத்தோடு.

“சகோதரி வானவல்லியைப் பற்றியா குறிப்பிடுகிறாய்?”

“ஆமாம் திவ்யா. வானவல்லியே தான்! நாம் கடற்பயணம் மேற்கொள்வதில் அவளுக்கு எந்த உடன்பாடும் இல்லை”

“அதை அவள் கூறினாளா?”

“இல்லை. அவள் எந்த மறுப்பும் கூறாமல் திலகமிட்டு புன்சிரிப்போடு தான் அனுப்பிவைத்தாள். ஆனால் அவளது கவலையை நான் அறிந்துகொண்டேன்”

“பெண்கள் என்றாலே பிரிவைப் பற்றிய கவலை அவர்களுக்கு மிகுந்தே காணப்படும். இது இயற்கை. நீ இது பற்றி அதிகம் கவலை கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை!”

“ஆனால், மற்றப் பெண்களைப் போன்று பிரிவைப் பற்றி வானவல்லி பெரிதும் கவலை கொண்டதில்லை. தெளிவான அறிவுடன், தீர்க்கமான முடிவெடுக்கும் திறன் உள்ளவள் தான் வானவல்லி. அவள் எதைப்பற்றியாவது கவலை கொள்கிறாள் எனில் அதில் நிச்சயம் அர்த்தமிருக்கும்” எனக் கூறிக்கொண்டே வந்த விறல்வேல் மரக்கலத் தலைவனை அழைத்து விரைவில் மரக்கலம் புகாரை நோக்கிச் செல்ல ஆயத்தமாகட்டும். அதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்” எனக் கட்டளையிட்டான்.

விறல்வேலின் திடீர் உத்தரவைக் கேட்டுத் திகைத்த திவ்யனிடம் “நாம் இருவரும் உடனே புகாரை நோக்கிக் கிளம்புகிறோம்!” என்றான்.

அதைக்கேட்ட திவ்யன், “நாம் ஏன் உடனே புறப்பட வேண்டும்? அதற்கான அவசியம் இப்போது  என்ன நேர்ந்துவிட்டது?” என வினவினான்.

பதிலுக்கு விறல்வேல், “வானவல்லி நம் இருவரின் வருகையை எதிர்பார்த்தே அங்குத் தவித்துக்கொண்டிருப்பாள். அவளைத் தவிக்க வைத்துவிட்டு நாம் இருவரும் மகிழ்ச்சியுடன் இங்கே ஊர் சுற்றுவது எனக்குச் சரியென்றுப் படவில்லை. ஆகவே நாம் விரைவில் புறப்படுகிறோம்” என்று மௌனமானவன் சிறுது நேரம் கழித்து “திவ்யா, வானவல்லிக்கு ஏற்பட்டிருக்கும் கவலை என்னைப் பற்றியது இல்லை. உன்னைப்பற்றியது தான்!” என்றான்.

திவ்யனின் பார்வையிலிருந்தே அவனது கேள்வியைப் புரிந்து கொண்ட விறல்வேல், “நான் செல்வதில் அவளுக்கு உடன்பாடு இல்லாதிருந்தால் என்னைப் பயணிக்கவே அனுமதித்திருக்க மாட்டாள். தடுத்திருப்பாள்! அண்ணனுடன் சென்று அவரைப் பத்திரமாக அழைத்து வா என்ற பொருளில் தான் அவள் எனக்குத் திலகமிட்டு அனுப்பிவைத்தாள்” என்றான்.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு பேசிய திவ்யன், “விறல்வேல், நீ கூறுவதை நான் ஒப்புக்கொள்கிறேன். உடனே நாம் கிளம்புவோமாக!” என்று புறப்பட ஆயத்தமானான்.

உடனே நாகத் தீவிலிருந்து புகாரை நோக்கி புறப்பட்டுவிட்ட திவ்யன் மற்றும் விறல்வேலுக்கு வரும்போது அமைதியாக இருந்த குணக்கடல் இப்போது சீறிக்கொண்டு, கொந்தளிப்புடன் நிலையில்லாமல் ‘ஊ’ என்ற பேய்க்காற்றுடன் இருந்தது ஆச்சர்யத்தை அளிக்கவே இது பற்றிக் கப்பல் தலைவனிடம் விசாரிக்கலாம் என்று மரக்கலத்தின் உள் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு வந்த இருவருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மேல் தளத்தின் ஒருபுறம் நிரப்பட்டிருந்த வாசனைப் பொருளான கற்பூரத்தைக் கண்டவன் மரக்கலத்தலைவனிடம் விசாரிக்க “முதன்மை அமைச்சர் கொண்டு வரச்சொல்லி உத்தரவிட்டிருந்தார்!” எனக் கூற திவ்யன் ஏதும் கேட்காமல் மாறிவிட்ட குணக்கடலின் சூழ்நிலை பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.

அதற்கு அவன் “தென் மேற்குப் பருவக்காற்று வீசத்தொடங்கி விட்டது தலைவரே. ஆதலால் தான் கப்பலும் துடுப்புப் போடாமலே காற்றின் விசையில் புகாரை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. இந்த வேகத்திலே காற்று வீசினால் நாம் இன்னும் ஒரு சாமப் பொழுதிற்குள் புகாரை அடைந்து விடுவோம்” என்றான் மகிழ்ச்சியோடு.

குணக்கடலின் கீழ்த்திசையில் தொடுவானத்தில் மேகம் இருட்டிக் கொண்டு வந்ததைக் கவனித்த விறல்வேலிடம், “புயல் ஒன்று உருவாகிக் கொண்டு இருக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் வலு பெற்றுக் கரையை நோக்கி நகரத் தொடங்கிவிடும். அதன் வெளிப்பாடு தான் கடலில் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது” என்றான். மூவரும் தொடுவான கீழ்த்திசையில் புயல் உருவாகிக்கொண்டிருந்ததைக் கவனித்துக் கொண்டிருந்த போது மரக்கலத்தில் இடி விழுவது போன்று தொப்பென்ற சத்தம் கேட்டது. கப்பலில் திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியால் மூவரும் கீழே விழுந்துவிட்டனர்.

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here