வானவல்லி முதல் பாகம்: 14 – வனத்தில் புதிர் #TamilNovels

Vaanavalli

கிழக்கில் பரிதி உதிப்பதற்கு ஒரு சாமப் பொழுதிற்கு மேல் இருந்த சமயம், செங்குவீரன் தன் இருப்பிடமான படகுத்துறைக் குன்றிலிருந்து கிளம்பி சம்பாபதி வனத்தினுள், நேற்றிரவு கள்வர்களுடன் நடைபெற்ற சண்டைக்களத்தைப் பார்வையிட சென்று கொண்டிருந்த போது திடீரென்று, வனத்தையொட்டிய மாளிகையின் சாளரத்தில் விளக்கு மெல்ல அசைந்து சஞ்சரிப்பதைக் கண்டான். மேலும் இப்புறமும் அப்புறமுமாக இருமுறை ஆரத்தி எடுப்பது போல அவ்விளக்கு அசைந்தது. முதலில் விளக்கொளி எதேச்சையாக நகர்வதாக நினைத்த செங்குவீரன் விளக்கொளி மூன்று முறை அப்படியும் இப்படியுமாக ஆரத்தி எடுப்பது போல நகர்வதில் எச்சரிக்கையடைந்தான். #TamilNovels

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

Vaanavalli
வானவல்லி

பொழுது புலர இன்னும் ஒரு சாமப் பொழுதிற்கு மேல் மிச்சமிருக்கும் நிலையில், மாளிகையில் யாருக்கு ஆரத்தி எடுக்கிறார்கள்? அந்தத் தனி மாளிகை வைதீகர்களுக்கு உரியதாக இருந்தாலும், இந்த அதிகாலைப் பொழுதில் ஆரத்தி எடுப்பார்களா? என்றும் அவனது மனதில் ஓடியது. அருகிலிருந்த பெரிய அரச மரத்தின் உச்சி மீது ஏறி அமர்ந்து மாளிகையின் எதிர்திசையைக் கவனமாகப் பார்வையால் ஆராய்ந்தான்.

திடீரென, மாளிகையின் விளக்கொளி மறைந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் சில முறை அப்புறமும் இப்புறமும் ஆடியது. எதிர்த்திசையில் தூரத்தில் புதருக்கடியில் ஒரு தீப்பந்த ஒளியும் மறைந்து மறைந்து முன்னும் பின்னும் ஆடுவதைக் கவனித்து விட்டான்.

திடீரென்று புதரிலிருந்து  இரண்டு பருத்த உருவங்கள் வெளிப்பட்டன. விளக்கு அசைந்த மாளிகையை நோக்கி தீப்பந்த ஒளியின் உதவியுடன் விரைவாக நடந்து வந்த அவர்கள், செங்குவீரன் அமர்ந்திருந்த மரத்திற்கடியில் சற்று இளைப்பாற அமர்ந்தனர்.

அந்த அதிகாலை இரவில் பௌர்ணமி நிலவும் மேற்கில் மரங்களுக்கிடையில் சாய்ந்து விட்டதால் அவர்கள் அசைத்த சிறு பந்தத்தில் இருந்து வெளிப்பட்ட வெளிச்சம் மட்டுமே செங்குவீரனுக்கு அவர்களைப் பார்க்க உதவியது. அந்தச் சிறு வெளிச்சமும் பிரகாசமாக இல்லாமல் வீசும் கீழைக் காற்றில் எப்போது வேண்டுமானாலும் அணைந்து விடுவேன் என்பதுபோலச் சிணுங்கி கொண்டிருந்தது.

சிணுங்கிய பந்தத்திலிருந்து வெளிப்பட்ட சிறு வெளிச்சத்திலிருந்து அவர்கள் இருவரும் வைதீக முனிவர்கள் போன்று இருப்பதைக் கண்டான். அந்த இருளின் சிறு வெளிச்சத்தில் அவர்களின் நீண்ட தாடி மற்றும் தொந்தி விழுந்த வயிற்றை மட்டுமே அவனால் காண முடிந்தது.

வந்தவர்களில் ஒருவன் “யாரேனும் விளக்கு வெளிச்சத்தைப் பார்த்துவிடப் போகிறார்கள் உடனே அணைத்துவிடு!” என்று கூற, மற்றவனும் சிணுங்கிக் கொண்டிருந்த தீப் பந்தத்தை மண்ணில் போட்டு காலால் மிதித்து அணைத்தான்.

‘அக்னிமீளே புரோஹிதம் யக்ஞஸ்ய தேவமிருத்விஜம் ஹோதரம் சதன தாதமம்’ என அக்னியை வணங்கும் வைதீக முனிவர்களுக்கு நெருப்பு கடவுள் போன்றது. அவர்களின் அனைத்து யாகங்களுக்கும் தீயே முதல் வழிபடு பொருள். அவர்களின் முதல் கடவுளே அக்னிதான். அந்த அக்னிதான் யாகத்தில் சேர்க்கும் அனைத்து பொருள்களையும் தேவலோகத்தில் இருக்கும் கடவுள்களுக்குக் கொண்டு சென்று சேர்ப்பதாக எண்ணி வணங்குகிறார்கள். யாகத்தின் தேவனே அக்னிதான் என்பது அவர்களின் நம்பிக்கை.  ஆனால் இவர்கள் நெருப்பைக் காலில் போட்டல்லவா மண்ணில் அணைக்கிறார்கள். வைதீகர்கள் நெருப்பை ஏற்றிய பின் பல வேத மந்திரங்களை ஓதிய பிறகல்லவா அணைக்கத் துணிவார்கள். இவர்கள் உண்மையான முனிவர்கள் தானா என்று குழப்பத்துடனே, அவர்களது உரையாடல்களைக் கேட்க அரச மரத்தின் உச்சியில் இருந்து, அதிகாலை இருளைப் பயன்படுத்தி எந்தவொரு சத்தமும் ஏற்படுத்தாமல் மெல்ல இறங்கி அடிக்கட்டையில் அமர்ந்தான் செங்குவீரன்.

பெரும் அரச மரத்தின் அடியில் அமர்ந்திருந்த முனிகளுள் ஒருவன் “மலை நாட்டிலிருந்து புகாருக்கு ஒரே இரவில் பயணப்பட்டு வருவது எளிதென்று தான் நினைத்தேன். ஆனால் இந்தப் பயணம் இவ்வளவு கடினமாக அமையுமென்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை சேந்தா” என்றான்.

அதை ஆமோதிக்கும் வகையில் இளைப்பாறிக் கொண்டிருந்த மற்றவனும் தலையாட்டிக்கொண்டே “ஆமாம், ஆமாம் நீ கூறுவது முற்றிலும் உண்மைதான் வேந்தா” என்றான்.

வேந்தன், சேந்தனிடம் “ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சோழ ஒற்றர்களைக் கடந்து புகார் நகருக்குள் ஊடுருவது என்பது எவ்வளவு கடினம் என்பதை இன்று தான் கண்டுகொண்டேன். யார் குடிமக்கள், யார் வியாபாரிகள், யார் ஒற்றர்கள் என்ற வேறுபாடே காண இயலவில்லை. யாரைக் கண்டாலும் ஒற்றர்கள் மாதிரியே எனக்குத் தோன்றியது” என்றான்.

சேந்தன் உடனே வேந்தனிடம், “பயந்தவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே, அப்படித்தான். நமக்கும் ஒவ்வொரு மனிதரும், புதரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாம் இங்குச் சோழத் தேசத்திற்கு எதிராக ஒற்றர்களாக வந்துள்ளமையால் நாம் கண்ட அனைவரும் நமக்குப் பகைவர்களாகவே காட்சியளிக்கிறார்கள். நான் இதற்கு முன் பலமுறை இங்கு வந்திருக்கிறேன் வேந்தா. அப்பொழுதெல்லாம் எனக்கு இந்தச் சம்பாபதி வனக் கடவுளான சம்பாபதி தெய்வமே என்னுடன் துணைக்கு வருவதாக உணர்வேன். ஆனால் இந்த முறைதான் பயணத்தில் நான் கடும் சிரமத்தை உணர்ந்திருக்கிறேன்!” என்று மறுமொழி கூறினான்.

பதிலுக்கு வேந்தன், “சோழ தேசத்தின் மீது பற்று திடீரென உமக்குள் கிளர்ந்தெழுகிறது, இது மிகவும் ஆபத்தாயிற்றே சேந்தா” என்றான்.

சேந்தன், “அப்படியெல்லாம் எனக்கு எந்தப் பற்றும் தோன்றவில்லை வேந்தா. நான் உள்ளதைத்தான் சொன்னேன். உமக்கு மட்டும் தான் நமது மலை நாட்டுக் கோட்டையைத் தகர்த்து, நமது அரசர் இருங்கோவேளை கைது செய்தவர்கள் மீது கோபம் இருக்குமா? வேந்தா, எனக்குள்ளும் அப்படியே தான் அந்தப் பழி உணர்வு இருக்கிறது. இந்தத் தருணம் தான் அவர்களைப் பழி வாங்க ஏற்ற சமயம். இனி சோழ அரச வம்சமே தலையெடுக்க இயலாமல் அழியப் போகிறது. நமது தலைவர் அதற்கான பணிகள் அனைத்தையும் திறம்படச் செய்துவிட்டார்!” என்று கூறியபடியே பலமாகச் சிரித்தான் சேந்தன். அப்போது மட்டும் வெளிச்சம் இருந்திருந்தால் அவனது அந்தப் பேய் சிரிப்பில் வெளிப்பட்ட அவனது கறை படிந்த பெரிய பற்கள் வேந்தனுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும். இருளில் அமர்ந்திருந்த வேந்தனுக்கு அவனது அந்தப் பெரும் சிரிப்பே சற்று அச்சத்தை உருவாக்கியது.

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here