வானவல்லி முதல் பாகம்: 15 – பயங்கர வஞ்சகத் திட்டம்

விடியற்காலையில் சம்பாபதி வனம் வழியாக வைதீக முனிவர்கள் போன்று வேடம் தரித்த சேந்தனும், வேந்தனும் மாளிகைக்குள் முன் வாசல் வழியே செல்லாமல் தோட்டப் புறத்தில் காணப்பட்ட குட்டிச்சுவரைத் தாண்டி குதித்தனர். அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் குட்டிச் சுவற்றைத் தாண்டிக் குதித்ததனால் எழுந்த தொப்’பென்ற சத்தத்தைக் கேட்டு “வீரர்களே மெதுவாகக் குதியுங்கள், தங்களது சத்தத்தைக் கேட்டு மாளிகையில் உறங்குபவர்கள் எழுந்துகொள்ளப் போகிறார்கள்” என்று எச்சரித்த படியே அவர்களை வரவேற்றுச் சத்தமில்லாமல் மாளிகையின் நிலவறைக்கு இருவரையும் அழைத்துச் சென்றார் மாளிகையின் தலைவர். #TamilHistoricalNovel

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

Vaanavalli
வானவல்லி

மூவரும் இரகசிய நிலவறைக்குச் சென்ற பின்பு நிலவறைக்குக் காவலிருந்த ஒரேயொரு காவலாளியும் வெளியேறிவிட அவர்களின் உரையாடல்கள் தொடர்ந்தது.

சிறிது நேரம் இளைப்பாறிய வேந்தனும் சேந்தனும் மாளிகைத் தலைவரிடம் எதையோ எதிர்பார்த்து அவரின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தனர். மாளிகைத் தலைவர் அவர்களது எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு எழுந்து நின்று தலையை மட்டும் தாழ்த்திப் “புஷ்யமித்திரன்” என்ற சங்கேத சொல்லைச் சொல்ல, இதுவரை அமைதியாய் அமர்ந்திருந்த சேந்தனும், வேந்தனும் மகிழ்ந்த படியே எழுந்து மார்புக்கருகில் வலது கையை மடக்கி இடது கையின் உள்ளங்கையில் வைத்து தலையைச் சாய்த்து “புஷ்யமித்திரன்” எனும் இரகிசிய சங்கேத சொல்லைச் சொல்ல மூவர்களுக்கிடையில் அதுவரை நிலைத்திருந்த ஐயம், தயக்கம் எல்லாம் விலகின.

வந்திருக்கும் இருவரும் மலை நாட்டு மன்னனான இருங்கோவேள் அனுப்பிய ஒற்றர்கள் தான் என்பதை அவர்களின் சங்கேத செய்கையிலும், அவர்கள் உச்சரித்த வார்த்தையிலிருந்தும் உறுதி செய்துகொண்டார் மாளிகைத் தலைவர்.

அந்த மாளிகையின் தலைவர் வைதீக பாகவதன் நடந்த படியே அவர்களிடம் தனது வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு உரையாடத் தொடங்கினார். அவரது தலையில் முன்புறம் இருந்த முடிகள் அனைத்தும் மழிக்கப்பட்டு, அவரது நெற்றியிலிருந்து தொடங்கித் தலைமுடி மழிக்கப்பட்ட உச்சிவரை நீண்டு அகன்றிருந்த அவரது நாமமும், அவற்றிற்கிடையில் சிவந்து நீண்டிருந்த சிவப்பு மையிலான கோடும் நாமத்திற்கு மத்தியில் காணப்பட்டது. தலையின் பின்புறம் மட்டும் நீண்டு தொங்கிக் கொண்டிருந்த குடுமியானது அவர் நடக்கும் போது நரியின் வால் ஆடுவதைப் போன்று சேந்தனுக்குத் தோன்றவே அவனுக்குச் சிரிப்பு வந்தது. அவரது வெண்மையான உடல், அகன்று உறுதியாயிருந்த தோள், மேலங்கி அணியாத அவரது உடலில் இடுப்பில் அணிந்திருந்த காவி வஸ்திரத்திலிருந்து வலது இடமாக அணியப்பட்டிருந்த பூணூல், அவரது மிடுக்கான நடை, கூர்மையான பார்வை என அனைத்தும் ஆரிய வைதீகர்களின் தோற்றத்தைப் பிரதிபலித்தது. மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் வரிசையாகத் தீட்டியிருந்த நாமம் அவர் நிச்சயம் நான்கு வேதங்கள் மற்றும் பல நூல்களைப் பிழையின்றி கற்ற ஆரிய வைதீக ஆச்சார்யங்களைக் கடைபிடிக்கும் பண்டிதராகத் தான் இருப்பார் என்று தோன்றவே, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு சேந்தன் அவர் கூறுவதைக் கவனிக்க ஆரம்பித்தான்.

மாளிகைத் தலைவர் பாகவதன், “உறைந்தையிலிருந்து என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறீர்கள்? புகாரில் ஏதேனும் முக்கியப் பணி உள்ளதா?” என்று கேட்டார்.

அவருக்குப் பதிலளித்த சேந்தன் “முக்கியமான செய்தியைத் தான் கொண்டு வந்துள்ளோம்” என்றான்.

பாகவதன் “விரைந்து கூறுங்கள்” எனக் கட்டளையிட்டார்.

“பொழுது விடிந்ததும், நமது தலைவரான இருங்கோவேள் சோழ தேச சக்கரவர்த்தியாக முடி சூட்டிக் கொள்ளப் போகிறார். தங்களிடம் தெரிவிக்கச் சொன்னார். மேலும் உறைந்தை அரண்மனையிலிருந்த இரும்பிடர்த்தலையன்  நேற்றிரவு தப்பிவிட்டார்” என்றான் வேந்தன்.

“என்னே! இரும்பிடர்த்தலையன் அரண்மனையில் நமது காவலிலிருந்து தப்பி விட்டானா? அது நமக்குப் பெரும் ஆபத்து ஆயிற்றே!” என அதிர்ச்சியுடனே வினவினார் மாளிகைத் தலைவர் பாகவதன்.

தொடர்ந்த வேந்தன், இரும்பிடர்த்தலையர் உறைந்தையிலிருந்து இரகசியமாக வெளியேறியதை மன்னர் நல்லது என்றே கருதுகிறார்.” என்றான்.

“இரும்பிடர்த்தலையன் எவ்வளவு ஆபத்தானவர் என்பதை அறிந்துமா, மன்னர் அவன் வெளியேறியதை நன்மை என்று கருதுகிறார்?” எனக் கேள்வி எழுப்பினார் மாளிகைத் தலைவர்.

“அவர் உறைந்தை அரண்மனையில் இருந்தால் மன்னர் முடி சூடும் போது இரும்பிடர்த்தலையரால் ஏதேனும் இடையூறு ஏற்படும் என்று நமது மன்னர் கருதினார். மேலும் அவர் வெளியேறிவிட்டதால் இன்று மன்னர் உறைந்தையில் எவ்வித இடையூறும் இல்லாமல் சோழ சக்ரவர்த்தியாக முடி சூட்டிக்கொள்ளப் போகிறார்” என்றான் வேந்தன்.

“மலை நாட்டு மன்னர் சோழ சக்கரவர்த்தியாக முடி சூட்டிக் கொள்வதில் மகிழ்ச்சியே, ஆனால் இரும்பிடர்த்தலையன் உறைந்தையில் இருந்தால் நமது கண்காணிப்பில் இருப்பான். அவனால் எந்தச் செயல்களையும் துணிந்து சுதந்திரமாகச் செய்ய இயலாது. ஆனால், இப்போது அவன் வெளியேறிவிட்டதால் நமது மன்னருக்கு எதிராகச் சுதந்திரமாகச் செயல்பட ஆரம்பித்து விடுவானல்லவா? இரும்பிடர்த்தலையனைப் போன்ற புத்திக் கூர்மையுள்ளவர்களை அருகில் நமது கண்காணிப்பில் வைத்திருத்தலே நல்லது! தப்பவிட்டபின், இனி அவனைத் தேடி எப்படிக் கைது செய்ய இயலும்?” எனச் சினம் கொண்டார். சிறிது நேர மௌனத்திற்குப் பின்னர் “கடும் கண்காணிப்பிற்கு மத்தியில் சிறைவைக்கப் பட்டிருந்த இரும்பிடர்த்தலையன் எப்படி அத்தனை கடுங்காவல்களை மீறி தப்பினான்?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்த வேந்தன், “அவர் எப்படி உறைந்தை அரண்மனையிலிருந்து தப்பினார் என்பது பெரும் மர்மமாகவே உள்ளது, நேற்று முன் இரவில் அரண்மனையில் காவலாளிகளுக்கு மத்தியில் உலாவியவர் மாயமாக மறைந்து விட்டார். மன்னர், இரும்பிடர்த்தலையர் இரகசிய சுரங்கப் பாதைகளைப் பயன்படுத்தியே தப்பித்திருக்க வேண்டும் என்று கருதுகிறார். நாங்கள் எவ்வளவோ முயன்றும், எங்களால் உறைந்தை அரண்மனையில் உள்ள ஒரு சுரங்கத்தைக் கூடக் கண்டறிய இயலவில்லை!” என்று வருத்தமாகக் கூறினான்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here