வானவல்லி முதல் பாகம்: 16 – ‘விறலி’ கூத்து

விறலி

ங்குனி மாதக் காலைப் பொழுது, வெகுநேரம் பரிதி மேகங்களுக்கிடையில் மறைந்து கிடந்தான். காலையில் வெயில் காய்வதற்காகக் கடற்கரையில் அமர்ந்து வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன இரு அன்றில் பறவைகள். திடீரென மேகங்களிலிருந்து விடுபட்ட பரிதி சுள்ளென்ற தனது கதிர்களை வீசியபடியே மெல்ல மேலெழ ஆரம்பித்தான். இப்படிப் பங்குனி மாத வழக்கத்திற்கு மாறாகப் பரிதி தனது சுடுகரங்களைக் காலையிலேயே நீட்டிவிட்டதைக் கண்ட இரு அன்றில் பறவைகளும் அங்குத் தகிக்கும் வெயிலில் அமர்ந்திருக்க இயலாததால், இதற்குக் காரணம் யாதோ? என்று கருதியபடியே புகார் நகர அரண்மனைக் கோட்டைக்கருகில் வளர்ந்திருந்த நாவல் மரத்தில் அமர்ந்தன.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

Vaanavalli
வானவல்லி

பிறகு தான் இரண்டிற்கும் காரணம் புரிந்தது, பாண்டிய நாட்டுத் துறைமுகமான கொற்கைக்கருகில் பவளப் பாறைகள் மிகுந்து காணப்படும். அந்தப் பவளப்பாறைகளில் விளைந்துள்ள பவளங்களையும், முத்துக்களையும் தான் பாண்டிய நாட்டவர்கள் கடலில் மூழ்கி முத்துக்குளித்துக் கொண்டு வருவர். அப்படிப்பட்ட பல்வேறு வளங்களையும், வனப்புகளையும் கொண்ட நீண்ட பவளப்பாறையைத் தேர்ந்த சிற்பியொருவன் வடித்த ஆறடிச் சிற்பம் உயிர்பெற்று இறங்குவதுபோல மூடிய மாட்டு வண்டியிலிருந்து இறங்கினாள் விறலியொருத்தி.

காலைப் பரிதியின் முரண்பாடான செயல்களின் காரணத்தைக் கண்ட இரு அன்றில்களும் பரிதியைக் கண்டு சத்தமெழுப்பி நகைக்கச் செய்தன. மூடிய மாட்டு வண்டியிலிருந்து இறங்கி வந்த விறலியின் அழகினைக் காணவே மேகங்களின் மறைவிலிருந்து விடுபட்டு தனது கதிர் கரங்களை நீட்டியதைக் கண்ட இரு அன்றில்களும் நகைப்பதைக் கண்ட பரிதி, அவமானத்தில் முகங்காட்டத் துணியாமல் மீண்டும் கீழை மேகங்களுக்கிடையில் மறைந்தான்.

மாட்டு வண்டியிலிருந்து இறங்கிய அழகுச் சிற்பமான விறலி பூமிக்கும் நோகாமல் தன் பாதங்களுக்கும் நோகாமல் மெல்ல அன்னத்தையும் மிஞ்சும் விதமாக நடந்தாள். அப்போது, பரிதியும் மேகத்திற்குள் மறைந்துவிட்டதைக் கண்ட இரண்டு அன்றில்களும், இவ்வளவு நேரம் நம்மைத் தமது வெயில் கரங்களால் வருத்தியவன், அழகு விறலியை வருத்துவதைத் தவிர்க்கவே அவன் இப்படி மேகத்திற்குள் மறைந்து விட்டான் என்று மீண்டும் கதிரவனைப் பார்த்துப் பரிகசித்தன.

சோழ தேசத்தின் தலைநகராக உறைந்தை வழங்கப்பெற்றமையால் அங்குதான் அரசர், உயர் அமைச்சர்கள், புலவர்கள் வாழும் அரண்மனையோடமைந்த பெரும் கோட்டை காணப்பட்டது. ஆனால், புகார் நகரம் இளஞ்சேட்சென்னி காலத்திலேயே பெரும் வணிகத் தளமாக விளங்கிக் கொண்டிருந்தது. உறைந்தையில் காணப்பட்டது போன்று பெரும் அரண்மனையாக இல்லாவிட்டாலும் பெரும் பாதுகாப்புடன் அமைக்கப்பெற்ற அரண்மனை போன்ற பெரும் கோட்டை அமைந்திருந்தது.

எனவே கூத்துக் குழுவினர், விறலியின் நாட்டியத் திறமையைப் புகார் நகர தலைவரிடம் காட்டிப் பரிசு பெரும் வண்ணம் பாண்டிய தேசத்தை ஒட்டிய சோழ தேசத்தின் எல்லையிலிருந்து நீண்ட பயணத்திற்குப் பின்னர்ப் புகார் வந்து அனுமதி கேட்டிருந்தனர். அவரும் பல அரசியல் குழப்பங்கள் நிறைந்த சூழ்நிலையிலும் புகாரை நாடி வந்த புலவர்கள், பாணர்கள், கூத்தர்கள், வெறும் கையுடன் திரும்பக் கூடாது என்பதற்காக அவர்களை அரச அலுவல்கள் ஆரம்பிக்கும் முன்னதாகவே சந்தித்து அவர்களின் திறமைக்கு ஏற்ப பரிசளித்து அனுப்பிவிடலாம் என்று முடிவு செய்திருந்தார்.

ஆதலால் தான் விறலியும் தமது திறமைக்கு ஏற்ற பரிசு, பல குழப்பங்கள் நிறைந்த உறைந்தையை விட இங்குக் கிடைக்கும் என்று நம்பி காலையிலேயே புகார் நகர அரண்மனைக்கு வந்திருந்தாள்.

விறலியானவள், தனது சிவந்த நிறத்திற்கு எடுப்பாகக் கருப்பு வண்ண உடையணிந்திருந்தாள். ஒன்பது முழ சேலையை அழகாக எடுப்புடன் கட்டி, கால் முழுவதும் மூடியிருந்த பஞ்ச கச்சை, அந்தச் சேலையும் சரிகை பல அமைந்தது. அவள் அந்தச் சேலையை கொசுவம் வைத்து உடுத்தி ஒய்யாரமாக நடந்து சென்ற விதம் அவள் புராணங்களில் கூறப்படும் தேவலோக மங்கைகளும் இப்படித்தான் இருப்பார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படி அழகும், வனப்பும் மிகுந்து காணப்பட்டாள் விறலி.

பண்டைய சங்க காலங்களில் நாட்டியமாடும் மங்கைகள் ஆகர்ய அபிநயம் எனப்படும் முக ஒப்பனை, உடை, அணி எனப்படுபவைகளுக்குக் கூடுதல் கவனத்தைச் செலுத்துவார்கள். அவர்கள் பொன், முத்து, சிவப்பு மரகதங்கள் பொதிக்கப் பெற்ற ஒற்றைச் சர மாலை, மணிமேகலை, காறை, கச்சோலம், கலாவம், பஞ்ச சாரி எனப்படும் பதக்கம் ஆகியவற்றை இடையிலும், விரல்களில் இரத்தினம் பதித்த முத்து மோதிரம், முத்து மாத்திரை, கடகம், கொப்பு, மகுடம் ஆகியவற்றையும் குதும்பை எனப்படும் காதணி, சப்த சரி எனப்படும் ஏழு சங்கிலிகளைக் கழுத்திலும் சிடுக்கு, சூடகம் எனப்படும் வளையல், சூரிசட்டி எனப்படும் நெற்றிச் சுட்டி, வீரப்பட்டம் எனப்படும் தலையணி, நயணம் எனப்படும் கண் மூடி, கால் வடம், கால் மோதிரம், சன்ன வடம், திருகு, கால் காறை, கைக்காறை மாலை, திழல் வளி மடம், வளையம், பாத சாயலம் எனப்படும் கால் அணி, தண்டை சிலம்பு எனப்படும் கொலுசு எனப் பலவைகையான அணிகலன்களையும் அணிந்து அழகாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் நடனமாடி தங்கள் திறமையைக் காட்டுவர்.

ஆனால் நெடுந்தொலைவிலிருந்து வந்த விறலி, மேற்கூறிய அணிகலன்கள் ஏதும் காணப்படாதவளாய் தலையில் தாழை மடல், சொருகுப் பூ, சாமந்திப் பூ, அவளது நீண்ட பின்னிய கூந்தலில் தொடுத்த அடுக்கு மல்லிப் பூவைச் சுற்றி பதுமம், சரம், பூரிப்பாளை, வலம்புரி போன்ற மலர்களையும் அணிந்து நீண்ட பின்னலின் இறுதியில் மூன்று குஞ்சலத்தைக் கட்டித் தொங்க விட்டிருந்தாள். அவள் நடந்தபோது ஆடிய அவளது நீண்ட பின்னிய கூந்தல் அந்தக் குஞ்சலத்துடன் இடதும் வலதுமாக ஆடி பெரும் அழகு சேர்த்திருந்தது அவளது பின்னழகுக்கு. காதணியில் தோட்டிற்குப் பதில், செவிப்பூ, சின்னப் பூ ஆகியவற்றை அணிந்து காது மடலைச் சுற்றி கொத்திள வேளை, கன்னப் பூ, விசிறி முருகு ஆகிய மலர்களையும் கழுத்தில் பட்டக் காறி எனப்படும் தாலிக்கொடி, கொத்தமல்லி மாலை, மிளகு மாலை, மலர்ச்சரம், கண்ட சரம் ஆகியவற்றையும் புயத்தில் கொந்திக் காயையும் கைகளில் காப் பூ, கொந்திக்காய்ப் பூ ஆகியவற்றையும் கைவிரல்களில் சிவந்திப்பூ, அரும்பு, வட்டப் பூ ஆகியவற்றையும் கால்களில் மாம்பிஞ்சிக் கொலுசு, அத்திக் காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு, கால் விரல்களில் கான் மோதிரம், காலாழி, தாழ், செறி, பீலி, மெட்டி ஆகியவற்றையும் அணிந்து பெரும் வனப்பும் அழகும் வாய்ந்த மலர்ச் சோலையாக ஒய்யாரமாக நடந்து கோட்டைக்குள் சென்றாள் விறலி.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here