வானவல்லி முதல் பாகம்: 17- இரும்பிடர்த்தலையர் சந்திப்பு #சோழன்

சுடப்பட் டுயியர்ந்த சோழன் மகனும்

பிடர்த்தலைப் பேராணைப் பெற்று – கடைக்கால்

செயிரறு செங்கோல் செவிஇயினா ளில்லை

யுயிருடையா ரெய்தா வினை –         பழமொழி நானூறு 239

பெருமாளிகையில் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட சோழன் மகன், உயிர் தப்பிக் கால் கருகி, இரும்பிடர்த்தலைப் பேராண் உதவியுடன் தனக்குரிய அரச முடியையும், செங்கோலையும் பெற்றான் என்று சங்க இலக்கியங்கள் மட்டுமின்றிச் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பழமொழியும் பிடர்த்தலையரின் புகழ் பாடுகின்றது.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

Vaanavalli
வானவல்லி

சபையில் புதிதாகத் தோன்றிய அந்த மனிதர் யாரென்று சிலரைத் தவிரப் பலருக்குத் தெரியாது. அவரது திடகார்த்தமான, இராட்சச உடலும், அதற்கேற்ற அவரின் உயரமும், அவரின் உடலின் தசைகளும் நன்றாகக் கெட்டிப்பட்டு இறுகி உறுதியோடு கம்பீரமாகக் காட்சியளித்தார் அவர். அவர் அணிந்திருந்த மேலங்கியும், அவரது இடுப்பில் கட்டியிருந்த சில முழ துணியும் பூ மற்றும் சரிகை வேலைப்பாடுகள் ஏதும் இன்றி, வெறுமையான கழுத்தோடு எந்தவித படாடோபமும் இன்றி எளிமையான மனிதராகத் தோன்றினார். அவரது முகத்தில் அகன்றும், கூர்மையாகவும் இருந்த கண்களின் கம்பீரத்தையும், அவரது கருத்த தடித்த உதடுகளில் இருந்த புன்னகையையும், பெருத்துக் கன்னம் வரை நீண்டு முறுக்கேறியிருந்த மீசையும், அவரது இரும்பு போன்ற தலையிலிருந்து நீண்டும், சுருண்டும் சுருள் சுருளாக இரும்புக் கம்பிகளைப் போன்று தடிமனாகத் தொங்கிய அவரது கேசரங்களையும் கண்டவர்கள் அவர்தான் அரசன் இறந்தபிறகு சோழ தேசத்தையும், சோழ இளவலையும் எதிரிகளிடமிருந்து  பல வருடங்களாகக் காப்பாற்றி வரும் பெரும் புலவர் இரும்பிடர்த்தலையராக இருப்பார் என்று கனவிலும் கூட எண்ணிப் பார்த்திருக்கமாட்டார்கள். அவ்வளவு எளிமையாகத் துறவியைப் போன்றே காட்சியளித்தார்.

இத்தகைய எளிமையான மனிதர் தான் சோழ தேசத்தின் பெரும் செல்வாக்கு மிகுந்த பெரும் புலவரான இரும்பிடர்த்தலையர் என்ற உண்மை சபையில் இருந்த விறலி மற்றும் பலருக்குத் தெரியாது. சோழ தேசத்தில் வசித்த பல வீரர்களும், புலவர்களும் இத்தகைய பெரும் மனிதரை காண்பதே பெரும் பாக்கியம் என்று நினைத்தனர். வளவனார் பிடர்த்தலையரே என்று அழைத்ததிலிருந்து அவர்தான் இரும்பிடர்த்தலையர் எனச் சபையில் வீற்றிருந்த வீரர்களும், புலவர்களும் சான்றோர்களும் அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். விறலியும், வேலனும் தாம் சோழ தேசத்தின் மாபெரும் அறிஞரும், வீரருமான இரும்பிடர்த்தலையரிடமிருந்து தான் பாராட்டையும் பரிசையும் பெற்றோம் என அறிந்ததும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

சபைத் தலைவராக வீற்றிருந்தவர் இரும்பிடர்த்தலையர் என்று மகேந்திர வளவனாரின் மூலம் அறிந்ததன் மூலம் இருக்கையிலிருந்து அனைவரும் எழுந்துவிட்டனர்.

ஆனால் வளவனார் அவரைப் பிடர்த்தலையரே என்று ஒருமையில் அழைத்தது அனைவருக்கும் ஆச்சர்யமாக அமைந்தது. அவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்குள் வளவனார், இரும்பிடர்த்தலையரை நோக்கி அடுத்தடுத்து வீசிய கேள்விகளும் அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

பத்திரை மற்றும் வானவல்லி காளனால் தாக்கப்பட்டதைப் பற்றிப் புகார் நகரத் தலைவரிடம் முறையிடவே மகேந்திர வளவனார் கோட்டைக்கு வந்தார். அவர் யாருடையை அனுமதியையும் எதிர்பார்க்காமல் கோட்டைக்குள் நேராகப் பிரவேசித்தமையால், ஏற்கெனவே காவல் வீரர்களுக்குக் கோட்டைக்குள் அனுமதியின்றி யாரையும் பிரவேசிக்க அனுமதிக்கக் கூடாது என்று பிரத்யேகமான கட்டளை இடப்பட்டிருந்ததனால் வளவனாரை அனுமதிக்கவும் இயலாமல் அவரைத் தடுக்கவும் துணிவில்லாமல் அவரைப் பின் தொடர்ந்த படியே யவன மற்றும் புகார் நகரக் காவல் வீரர்கள் காவல் தலைவரின் கட்டளையை எதிர்பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தனர்.

கோட்டைக்குள் இரும்பிடர்த்தலையரின் வரவேற்பை ஏற்காமல் மகேந்திர வளவனார் கொண்ட கோபம் இரும்பிடர்த்தலையருக்கு எந்தவொரு ஆச்சர்யத்தையும் அளிக்கவில்லை.

சோழ தேச நிலையைப் பற்றியோ, காளனைப் பற்றியோ எழுப்பிய கேள்விகளை விடச் சோழ இளவல் காணாமல் போனது பற்றி  வளவனார் எழுப்பிய கேள்வி அவருக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இதுவரை யாருக்கும் தெரியாத பெரும் இரகசியம் என்று எதனைக் கருதிக்கொண்டிருந்தாரோ, அதுபற்றி வளவனார் இரும்பிடர்த்தலையரிடம் எழுப்பிய கேள்வி அவருக்குப் பேரதிர்ச்சியாக அமைந்தது. வளவனாரின் கோபத்தைக் கண்ட இரும்பிடர்த்தலையர் தனது முகத்தில் எந்தவித மாற்றத்தையும் காட்டிக் கொள்ளாமல் சிரித்தபடியே “சபை கலையட்டும்!“ என்று உத்தரவிட்டார்.

சபையில் அமர்ந்திருந்த புகார் நகரத் தலைவர், கோட்டைத் தலைவர், சான்றோர்கள், பெரியோர்கள் அவர்களுடன் பரிசு பெற்ற விறலி, அவளது கணவன் வேலன் என அனைவரும் சபையை விட்டுக் களைந்தனர். ஈழவாவிரையரும் எழுந்து நடக்கவே இரும்பிடர்த்தலையர் அதிகாரத்துடன் “அடிகளே தாங்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை!“ என்று கட்டளையிட்டார்.

சபையிலிருந்து இருவரையும் கோட்டையின் மேல் தளத்திலிருந்த இரகசிய அறைக்கு அழைத்துச் சென்றார் இரும்பிடர்த்தலையர். மூவரும் அமர்ந்த பிறகு காலியாக இருந்த மற்றொரு இருக்கையைப் பார்த்து வளவனார் மற்றும் ஈழவாவிரையர் என இருவரும் ‘இந்த இருக்கை யாருக்காக வெறுமையுடன் இருக்கிறது?’ என்பதைக் கேட்பது போல இரும்பிடர்த்தலையரின் முகத்தை நோக்கினார்கள்.

இருவரது பார்வையில் உள்ள கேள்வியைப் புரிந்து கொண்ட இரும்பிடர்த்தலையர் ‘உங்கள் கேள்விகளுக்குச் சரியான பதில் வாயிலைப் பாருங்கள் தெரியவரும்’ என்பது போல வாசலை நோக்கினார்.

இதுவரை விறலியின் நடனம், வளவனாரின் வருகை, அதன் பின் நடந்த நிகழ்வுகள் என அனைத்தையும் யாரும் கவனிக்காத வண்ணம் கோட்டையின் மேல் தளத்திலிருந்த உப்பரிகையிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த செங்குவீரன் மூவரும் இரகசிய  அறைக்குச் செல்வதைப் பார்த்தபின் அவர்களைப் பின் தொடர்ந்து அவனும் அந்த இரகசிய அறைக்குள் பிரவேசித்தான்.

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here