வானவல்லி முதல் பாகம்: 18 – அவைக்களம் ரணகளம்

திடீரெனக் கீழே அவையினில் ஏற்பட்ட சலசப்பைக் கவனிக்க வந்த வளவனார் மற்றும் விறல்வேலுக்கு அவர்கள் எதிர்பாராத அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

அதிகாரத் தொனியோடு ஒருவன் அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தான். அவனையும், அவனது உடையையும் கண்ட செங்குவீரன், இவன் நிச்சயம் உறைந்தையிலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்றும் அவனது கையில் வைத்திருந்த அரச முத்திரையையும், அதில் பொறிக்கப்பட்டிருந்த புலிச் சின்னத்தையும் கண்டவன் அவன் பெரும் அதிகாரமிக்கக் கோட்டைத் தலைவனாகவோ அல்லது ஏதேனும் பெரும் படைப் பிரிவின் தளபதியாகவோ புதிதாகப் பதவி ஏற்றவனாகத்தான் இருப்பான் என்பதையும் ஊகித்துக் கொண்டே ஒவ்வொரு படியாக மெல்ல அடியெடுத்து வைத்து பெரும் கம்பீரத்துடன் கீழே இறங்கினான் செங்குவீரன் எனும் விறல்வேல்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

Vaanavalli

வந்திருந்த புதியவனைச் சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட வீரர்களைப் பாதுகாப்பிற்கு அழைத்து வந்திருப்பதையும் அவன் கவனிக்கத் தவறவில்லை.

புதியவன் இடையில் சொருகியிருந்த பத்திரச் சீலையை வெளியே எடுத்து உரக்க வாசிக்க ஆரம்பித்தான். பத்திரச் சீலையை அவன் பிரித்த வேளையில் அதன் இரு புறங்களிலும் இருந்த தங்கக் கைப்பிடி சீலையில் ஓரங்களில் தங்கம் மற்றும் வெள்ளிக் குழம்புகளால் பூசப்பட்டு அழகுபடித்தி கம்பீரத்தோடு இருந்ததிலிருந்து அது நிச்சயம் சோழ மன்னன் வழங்கிய பிரமாணப் பத்திரச் சீலையாகத்தான் இருக்கும் என அனைவரும் ஊகித்துக் கொண்டனர். அந்தப் பிரமாணப் பத்திரத்தை அவன் உரக்க வாசிக்க ஆரம்பித்தான்.

“இந்தப் பிரமாணப் பத்திரத்திலிருந்து அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் மலை நாட்டு மன்னனான இருங்கோவேள் சோழ நாட்டின் நலன் கருதி அமைச்சர்களின் ஆலோசனையின் படி சோழ வேந்தனாக முடிசூட்டிக் கொண்டார் என்பதை அனைவருக்கும் முறைப்படி அறிவிக்கப்படுகிறது. மேலும் இந்தப் பிரமாணப் பத்திரத்தையும் சோழ அரச முத்திரையையும் எவர் கொண்டுவருகிறாரோ அவர் தான் இனி புகார் நகருக்கும் கோட்டைக்கும் தலைவராகச் செயல்படுவார். அவரது கட்டளைக்கு யார் யாரெல்லாம் கீழ்படிய மறுக்கிறார்களோ அவர்களெல்லாம் ராஜதுரோகம் இழைத்ததாகக் கருதப்பட்டுக் கைது செய்யப்படுவார்கள்!“ என்று உரக்க வாசித்து முடித்தான்.

மேலும், “இன்றிலிருந்து இப்போதிலிருந்து இந்தக் கோட்டைக்கும், நகருக்கும் நான் தான் தலைவன். ஆக இங்கிருக்கும் அனைவரும் இனி என் சொல்லிற்கே கட்டுப்பட்டவர்கள் ஆவீர்கள்!“ என்று கூறிக்கொண்ட புலிச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்த பிரமாணப் பத்திரச் சீலையை எதிரே வந்த செங்குவீரனிடம் நீட்டினான்.

அதை வாங்கிப் படித்ததிலிருந்து சோழ மன்னனாக முடிசூட்டிக் கொண்ட இருங்கோவேளின் உத்தரவுப் படி சோழ தேச முதன்மை அமைச்சர் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றும், புதியவனைப் புகார் நகரத் தலைவராகவும் நியமித்துள்ளவர் அவர் தான் என்றும் அறிந்து கொண்ட செங்குவீரனுக்கு முதன்மை அமைச்சர் மீது பெரும் வெறுப்பு தோன்றியது அவனது மாறிய முகபாவத்திலிருந்தே அறிந்துகொள்ள முடிந்தது. சோழ வேந்தனான இளஞ்சேட்சென்னிக்கு அவையில் முக்கிய ஆலோசகராகவும், அந்தரங்க உதவியாளராகவும் இருந்த முதன்மை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு என்பதனை அவனால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை! அவரும் இப்படி இருங்கோவேளின் கைப்பாவையாக மாறிவிட்டாரே என்று அதிர்ச்சியடைந்தான். முதன்மை அமைச்சர் வெளியிட்டுள்ள இந்தப் பிரமாணப் பத்திரத்திலிருந்தே உறைந்தை முழுவதும் இருங்கோவேளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதையும், அவனை அங்கு எதிர்க்கும் துணிவுள்ளவர்கள் எவரும் இல்லை என்பதையும் உணர்ந்துகொள்ள அவனுக்குக் கூடுதல் நேரம் தேவைப்படவில்லை.

புகார்த் தலைவராக நியமிக்கப்பட்டவன் அதிகாரத்தோடு அங்கிருந்த அனைவரிடமும் “இதற்கு முன் அரச அதிகாரிகள் எந்தப் பணியைச் சோழ அரசருக்கு விசுவாசமாகச் செய்துகொண்டு இருந்தீர்களோ அந்தப் பணியிலேயே தொடரலாம். ஆனால் சோழ தேச மன்னரின் கட்டளைப் படி புகாரின் காவல் தலைவர், புகார் படைப் பிரிவுகளின் தளபதிகள், உப தலைவர்கள் என அனைவரும் இந்தக் கணத்திலிருந்து அவர்கள் வகித்துக்கொண்டிருக்கும் பொறுப்புகளிலிருந்தும் கடமைகளிலிருந்தும் கட்டாயமாக விடுவிக்கப் படுகிறார்கள். இனி அனைத்துப் பிரிவுகளுக்கும் நான் ஒருவனே தலைவன். எனது கட்டளையின் படியே இனி அனைத்தும் புகாரில் நடைபெற வேண்டும்!“ என்று அதிகாரத்தோடு ஆணையிட்டான்.

எதிரில் நின்ற செங்குவீரனிடம், “நீயும் மாண்புமிக்கச் சோழச் சக்கரவர்த்தி இருங்கோவேளின் உத்தரவுப் படி உனது பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறாய். உனது கட்டுப்பாட்டின் கீழிருக்கும் சோழப் படை அனைத்திற்கும் இனி நான் தலைவன். ஆக, பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட நீ, உப தலைவனுக்குரிய மார்பில் அணிந்துள்ள பதக்கங்களையும், புலி இலச்சினையையும் இப்போதே ஒப்படைத்துவிட்டு உடனடியாகப் புகார்க் கோட்டையை விட்டு வெளியேறி விடு!“ என்று கட்டளையிட்டான் கோட்டைத் தலைவன்.

“புலி இலச்சினையை ஒப்படைக்க மறுத்து கோட்டையை விட்டு வெளியேற மறுத்தால் என்ன செய்வதாய் உத்தேசம் கோட்டைத் தலைவர் அவர்களே?” என வினவினான் செங்குவீரன்.

“மாண்பு மிக்கச் சோழச் சக்கரவர்த்தியால் கோட்டைத் தளபதியாக நியமிக்கப்பட்ட எனது உத்தரவுக்குக் கட்டுப்பட மறுத்தால் உன்னைச் சோழ மன்னன் உத்தரவுக்கு அடிபணிய மறுக்கும் ராஜ துரோகியாக அறிவிக்க நேரிடும் செங்குவீரா. பிறகு நடைபெறும் விசாரணையில் நீ குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டால் நீ விடுதலை செய்யப்படலாம். இல்லையேல் உமக்குச் சிரச்சேதம் தான்!“ என்று கூறியதோடு மட்டுமல்லாமல் சுற்றி நின்ற புகார் நகரக் காவல் வீரர்களிடம், “அரச உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுக்கும் இவனை அரச துரோகம் இழைத்தவனாக அறிவிக்கிறேன். இவனையும், அரசருக்கு எதிராகச் சதிகளையும், சூழ்ச்சிகளையும் செய்துகொண்டிருக்கும் ராஜ துரோகி இரும்பிடர்த்தலையனையும் உடனே கைது செய்யுங்கள்!“ என்று கட்டளையிட்டான்.