வானவல்லி முதல் பாகம்: 19 – பயங்கர வஞ்சகத் திட்டம் #புகார்

Vaanavalli
Vaanavalli

புகார் கோட்டையிலிருந்து தனது உறைவிடமான குன்றுத் துறைக்கு வந்த உபதலைவன் செங்குவீரன், தனது உபதளபதிகளான திருக்கண்ணன், பரதவன் குமரன் மற்றும் டாள்தொபியாஸ் இவர்களுடன் தீவிரமாகச் சோழ தேசத்தின் மாறிவிட்ட அரசியல் நிலை பற்றி விவாதிக்கத் தொடங்கினான்.

ஆலோசனையைத் தொடங்குமுன், புகார் கோட்டையில் புதிதாக நியமிக்கப்பட்ட கோட்டைத் தலைவன் நடுங்கும்படி வீரமாகச் சண்டையிட்ட தனது உபதளபதிகளை அவன் வெகுவாக ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அவர்களின் வீரச் செயல்களைக் குறிப்பிட்டுப் புகழ்ந்து பாராட்டினான்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

புகார்
புகார்

“இன்று ஆரவாரத்தோடு வந்த புகாரின் கோட்டைத் தலைவன் புகாரில் நடந்த நிகழ்வுகளுக்குப் பின் திரும்பி செல்கையில் தனது தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு உறைந்தைக்குத் திரும்பியதிலிருந்து புகாருக்கு ஆபத்து எந்த வழியில் வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதை உணர்ந்துகொள்ளலாம். உறைந்தையிலிருந்து இருங்கோவேள் புகாரில் இருக்கும் நம் மீது முறைப்படி போர் தொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எதிர்காலத்தில் எது நடந்தாலும் நீங்கள் அனைவரும் எனக்கும், இரும்பிடர்த்தலையருக்கும் பக்கபலமாக துணை இருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறி அமைதியானான்.

இருக்கையிலிருந்த எழுந்த உபதளபதி திருக்கண்ணன், “உறைந்தையிலிருந்து இருங்கோவேளின் சோழப் பெரும்படையே நம்மைத் தாக்க வந்தாலும், வீரத்தோடு எதிர்த்து நின்று உங்களுக்கு இறுதி மூச்சு உள்ளவரை துணையிருப்போம் தலைவரே!” என்றான்.

உபதளபதி திருக்கண்ணனின் கூற்றை ஆதரிப்பது போல உடனே எழுந்த உபதளபதிகள் பரதவன் மற்றும் டாள்தொபியாஸ் “எங்கள் இறுதி மூச்சு உள்ளவரை சோழ இளவலை அரியாசனத்தில் அமர்த்தும் தங்களது மற்றும் இரும்பிடர்த்தலைவரின் முயற்சிக்குத் துணை நிற்போம் தலைவரே. இந்த முயற்சியில் காலையில் வந்த உறைந்தை வீரர்களைப் போன்று எத்தனை மடங்கு பெரும்படை வந்தாலும், அவற்றை எதிர்த்து முறியடிப்போம்!” என்று முழங்கினர்.

தனது உபதளபதிகளின் பேச்சிலும், அவர்களின் வலிமையிலும் பெரும் நம்பிக்கை கொண்ட செங்குவீரன் ”உங்களது பேச்சும், துணையும் எனக்கு முழு மகிழ்ச்சியளிக்கிறது நண்பர்களே. நாம் நினைப்பது போன்று இருங்கோவேள் புகார் மீது அவ்வளவு எளிதில் போர் தொடுக்கத் துணியமாட்டான். ஏனெனில் சோழ மன்னனாக முடி சூடியிருக்கும் இருங்கோவேள் முதலில் அவனது அரியாசனத்தைத் தக்கவைத்து நிலைப்படுத்திக் கொள்ளவே முயற்சிப்பான். உடனே அவனை எதிர்ப்பவர்கள் மீது அவன் போர்தொடுக்கத் துணிய மாட்டான். ஆனால் அவர்களை ஆதாரமில்லாமல், சத்தமில்லாமல் தீர்த்துக் கட்ட அனைத்து முயற்சிகளையும் செய்வான். காலையில் புகார் கோட்டையில் நடந்த சண்டையில் உங்களை அவர்கள் நேருக்கு நேர் எதிர்கொண்டார்கள். ஆதலால் உங்களது வெற்றி எளிதாகிவிட்டது. உங்களது வாள்வீச்சின் வேகம், விவேகம், பலம் இவற்றினால் நீங்கள் மூவரும் வந்திருந்த அனைவரையும் எளிதில் எந்தவித கடினமும் இன்றி வீழ்த்திவிட்டீர்கள்” என்று செங்குவீரன் கூறிக்கொண்டிருந்த போதே, இடைமறித்த உபதளபதியும், நண்பனுமான டாள்தொபியாஸ் “தலைவரே இடைமறிப்பதற்கு மன்னிக்கவும். புகார் கோட்டையில் அடைந்த வெற்றி உங்களுக்குரியது. தாங்கள் மனதில் என்ன நினைத்தீர்களோ அதனை நாங்கள் மூவரும் செயல்படுத்தினோம். வாள்வீச்சு முறை, போர்க் கலைகள் என அனைத்தும் தாங்கள் கற்றுக் கொடுத்ததே! ஆதலால் வெற்றி அனைத்தும் உங்களுக்கே உரிமை. எங்களிடம் தாங்கள் ‘உங்களது வெற்றி எளிதாகிவிட்டது’ என்று பிரித்துப் பேசுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது” என்றான்.

தனது உபதளபதி டாள்தொபியாஸ் கூறுவதைக் கேட்டு மகிழ்ந்தபடியே தொடர்ந்த செங்குவீரன், “நேருக்கு நேர் எதிர்க்கும் வீரம் வாய்ந்த பகைவர்களை நாம் எளிதில் வீழ்த்திவிடலாம் நண்பர்களே. ஆனால் நாம் எதிர்பாராத நேரத்தில் வஞ்சகத்தால் முதுகில் தாக்கி நம்மை வீழ்த்த நினைக்கும் கயவர்களை எதிர்த்தல் அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. ஆதலால் இனி அப்படிப்பட்ட தாக்குதலின் மூலமே நம்மை வீழ்த்த நிச்சயம் இருங்கோவேள் திட்டமிடுவான். ஏனெனில் சோழ மாமன்னன் இளஞ்சேட்சென்னியை அவன் அப்படித்தான் வஞ்சகத்தால் கொன்றுள்ளான். மேலும் அவனை எதிர்க்கத் துணியும் அனைவரையும் அவன் அந்த உபாயத்திலே தீர்த்துக்கட்ட முயலுவான். ஆதலால் இனி உறங்கும் போதும் ஒருகண்ணைத் திறந்து வைத்துக்கொண்டே எச்சரிக்கையாக உறங்குவது நல்லது நண்பர்களே!” என்று எச்சரித்தான்.

அமைதியடைந்த செங்குவீரனிடம் திருக்கண்ணன், “தலைவரே அடுத்து என்ன செய்ய வேண்டும்? கட்டளையிடுங்கள்!” என்றான்.

கூறுகிறேன் திருக்கண்ணா, “சோழ மன்னனாக முடி சூட்டிக் கொண்ட இருங்கோவேள் அனைத்தையும் திட்டமிட்டே, தெளிவாய்க் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறான். தான் சோழ மன்னனாக முடிசூட்டிக் கொண்டது தவிர்க்க இயலாதது என்றும், சோழ தேசத்தின் நன்மைக்காகத்தான் என்றும், இளவலுக்குப் போதிய வயதில்லாத காரணத்தினால் சோழ அரசின் நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு உறைந்தை அமைச்சர்கள் மற்றும் வேளிர்களின் ஆலோசனையின் படிதான் சோழ சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டுள்ளதாக அறிவிப்பான்.

சோழ மன்னன் இளஞ்சேட்சென்னிக்குப் படைகளில் உறுதியாக இருந்த பெருமறவர் மகேந்திர வளவனாரை தளபதி பொறுப்பில் இருந்து விலக வைத்தான். இரும்பிடர்த்தலையருக்குப் பாதுகாப்பாக உறைந்தையிலிருந்த என்னையும் புகாரில் காளனின் இடையூறு அதிகமாகிவிட்டது என்று உறைந்தை அமைச்சர்கள் அனுப்பினார்கள். நான் புகாருக்கு வந்த பிறகே உறைந்தையில் இருங்கோவேளின் செல்வாக்கு அதிகமாகி அவர்களிடம் வீழ்ந்தது. ஆதலால் இருபிடர்த்தலையர் மற்றும் நம்மைப் போன்ற சோழ தேச உண்மை விசுவாசிகளுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை இளவரசன் வளவன் மட்டுமே. ஆனால் துரதிஷ்டவசமாக இளவலின் இருப்பிடத்தையும் கண்டறிய இயலவில்லை. ஆனால் இளவல் இருங்கோவேளின் கடும் காவல்களுக்கிடையில் தான் சிறை வைக்கப்பட்டு இருக்கவேண்டும். அதுவும் உறைந்தையில் தான் எங்கோ யாவரும் அறியாத வண்ணம் சிறை வைத்திருக்கிறான் என எண்ணுகிறேன்!” என்றான்.

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here