வானவல்லி முதல் பாகம்: 20 – எதிர்பாராத கலகம் #நாளங்காடி

புகாரின் இரு பிரிவுகள் மருவூர்ப்பாக்கமும் பட்டினப்பாக்கமும் ஆகும். இவற்றின் மத்தியில் இரண்டையும் பிரிப்பது போன்று அமைந்த பண்டகசாலைப் பகுதிக்கு நாளங்காடி என்று பெயர். இந்த நாளங்காடியில் பல நாட்டு உணவுப் பொருள்களும், பெண்கள் அணியும் அனைத்து விதமான ஆபரணங்களும் இவற்றோடு ஆபரணங்கள் செய்யும் மரகதக் கற்கள், பவளம், முத்து, வைரம், வைடூரியம் போன்ற மதிப்புமிக்கக் கற்களும் இவற்றை மிஞ்சும் வகையில் பல வண்ணங்களில் வாசனைகள் நிரம்பிய மலர் மாலைகள் விற்கும் கடைகளும் நிரம்பியிருந்தது. இத்தகைய நாளங்காடிக்கு அருகில் தான் புகாருக்குப் புதிதாக வருகை தரும் விறலியர்களும், காலம் காலமாகப் புகாரையே உறைவிடமாகக் கொண்டு கோட்டையிலும், கோயில்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் நடனத்தை அரங்கேற்றி வரும் புகார் நகரப் பூர்வீக விறலியர்களும், பாணர்களும், கூத்தர்களும் வசிக்கும் பெரும் மாளிகை காணப்பட்டது.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

நாளங்காடி

‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்ற குறுந்தொகைப் பாடல் மூலம் மூதாதையர் தேடி வைத்த செல்வங்களில் வாழ்தலை அக்காலத் தமிழ் மக்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது. சொந்த முயற்சியில் பொருள் தேட வேண்டும். அவ்வாறு தேடிய பொருளில்தான் தானும் வாழ வேண்டும், பிறரையும் வாழ வைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆடவர்கள் எப்போதும் போர்களுக்கும், கல்வி கற்கவும், பொருளீட்ட வாணிபத்திற்கும் தூர தேசங்களுக்குச் செல்வதுண்டு. தலைவனில்லாமல் தனியாக வீடுகளில் வசிக்கும் தலைவிதான் இல்லறத்தின் கண். குழந்தைகளுக்குக் கல்வி, நல்லொழுக்கங்களைக் கற்பித்தல் எனக் கற்பு நெறித் தவறாமல் இல்லறப் பண்பாட்டினை வளர்த்து கண்ணும் கருத்துமாயிருந்தனர் குலப் பெண்கள்.

பொருளீட்ட தூர தேசம் செல்லும் ஆடவர்கள் காமம் காரணமாக நாடிச் செல்லும் பொது மகளிருக்குக் கணிகையர் என்று பெயர். குலப் பெண்களுக்கு இல்லறப் பண்பாட்டைக் பேணிக்காத்தலில் பெரும் பங்கு இருந்தால், கணிகையர்களுக்குச் சமுதாயப் பண்பாட்டினையும், சமுதாயக் கட்டமைப்பையும் பேணிக்காத்தலில் பெரும் பங்கு இருந்தது. இப்படிப் பொது மகளிர் கணிகையராக வாழ்ந்த காலத்திலும் ஆடவர்கள் காமம் மற்றும் காதல் காரணமாக இரண்டாம் முறையாக மணந்து கொண்ட முறையும் உண்டு. அவர்களுக்குக் காமக் கிழத்தியர் என்று பெயர். தன் குலத்தைச் சார்ந்து மணந்த மற்றொரு பெண்ணிற்கு ஒத்தகிழத்தி என்றும், அரசர்களால் முனிவர்களுக்குப் பணிவிடை செய்யக் கொடுக்கப்பட்ட அரச, வணிக, வேளாண் குலப் பெண்களுக்கு இழிந்த கிழத்தி என்றும் ஆடல் பாடல்களில் வள்ளவராகத் திகழும் கணிகையர் மற்றும் விறலிகளைத் தலைவன் தனக்கென வரைந்து கொள்ளும் பெண்ணிற்கு வரையப்பட்டோர் என்றும் பெயர். இந்த வரையப்போட்டோர் கன்னிகளாகவும், அதன் பிறகும் வரையப்படும் பழக்கமிருந்தது. இவர்களுக்குப் பொதுப்பெயர் காமக்கிழத்திகள்.

இந்த வகையில் கண்ணகி பரம்பரையான குல மகளிர். கணிகையர் பரம்பரையான பொது மகளிர். மாதவி கணிகையர் குலத்தில் பிறந்திருந்தாலும் அவளது அழகு, ஆடல் திறமை ஆகியவற்றைக் கொண்டு கோவலனால் வரையப்பட்டுக் கொண்ட கணிகையர் குலத்தில் பிறந்த கற்புக்கரசி. கண்ணகி குலமகளிரான கற்புக்கரசி. மாதவி பொது மகளிருள் கற்புக்கரசி. ஆகப் பொருளீட்ட தூர தேசங்களில் இருந்து வரும் தலைவர்களை ஆதரித்து அவர்கள் மற்ற இல்லறத் தலைவிகளை நாடாமல் பண்பாட்டினைக் கட்டிக் காக்கும் வல்லமை பொது மகளிரான கணிகையர்களுக்கே உண்டு. நமது கதைக்களம் கோவலன், கண்ணகி, மாதவி, இவர்களின் காலத்திற்கு முற்பட்டது என்றாலும் குலமகளிர், பொதுமகளிர் இவற்றின் வேறுபாடுகளை இவர்களை வைத்தே அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இப்படி இல்லறப் பண்பாட்டினை பேணுதலில் குலமகளிரின் பங்கு முக்கியமானது என்றாலும் சமுதாயப் பண்பாடு மற்றும் ஆடல், பாடல் போன்ற கலைகளைப் பேணி வளர்த்தலில் விறலியர் மற்றும் கணிகையரின் பங்கு முக்கியமானது. சங்க காலங்களில் எழுதப் படிக்கத் தெரிந்த மகளிர் என்றால் பெரும்பாலும் அவர்கள் கணிகையராக அல்லது விறலியாகவே இருப்பர். கணிகையர் என்றால் பொது மகளிர். விறலியர் என்றால் ஆடல் பாடல் போன்ற கலைகளுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.

விறலியர்களுள் சிலர் பொருள், ஆடம்பரம், சுகபோக வாழ்க்கை இவற்றிற்கு ஆசைப்பட்டுக் கணிகையராகவும், சில விறலியர்கள் கற்பு நெறி தவறாத இல்லத்தரசிகளாகவும், சிலர் காலம் முழுக்கத் தன்னைக் கலைக்கே அர்பணித்துக்கொண்டு கன்னிகளாகவே வாழ்பவர்களும் உண்டு.

இப்படிப்பட்ட கணிகையர் குலத்தில் பிறந்து கலைக்கு மட்டுமே தன்னை அர்ப்பணித்த விறலிதான் பூங்கோதை. அவளது அழகும், நடையும், ஆடல் திறனும் யாவரும் வியக்கும்படியாய் வனப்பு மிகுந்தது. பல சிற்றரசர்களும், செல்வந்தர்களும், வைதீகர்களும் அவளைக் காமக்கிழத்தியாக வரைந்துகொள்ள முயன்றாலும் அவள் எந்தவொரு ஆடம்பரத்திற்கும் ஆசைப்படாமல் கன்னியாகவே நாட்டியக் கலையை நேசித்துத் திறம்படச் செய்து வந்தாள். ஆனால் அவளது மனமும் யாவரும் அறியாத வண்ணம் ஒரு வீரன் மீது மையல் கொண்டிருந்தது.

விறல்வேலும், பரதவன் குமரனும் விறலியர் மாளிகைக்குள் நுழைந்த போது அங்கே காலையில் புகார்க் கோட்டையில் தெய்வீக நடனமாடிய இல்லத்தரசியான கற்பு நெறி தவறாத விறலியும் அவளது கணவன் வேலனும் எதிர்ப்பட்டனர்.

எதிர்பட்ட வேலன் மற்றும் விறலியிடம் செங்குவீரன் தனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு அவர்களிடம் காலையில் புகார்க் கோட்டையில் அரங்கேறிய அவர்களின் நடனம் பற்றிப் பெரிதும் புகழ்ந்து பேசினான்.  எதிர்ப்பட்டுப் பாராட்டுபவன் யார் என்று அறியாததால் பதிலுக்கு வேலனும் தனது வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு தொடர்ந்தவன் “தம்பி, தங்களை இன்று புகார்க் கோட்டையில் கண்டதாக எனக்கு ஞாபகம் இல்லையே! தாங்கள் காலையில் புகார்க் கோட்டைக்கு வருகை புரிந்தீர்களா?” என்றார்.

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here