வானவல்லி முதல் பாகம்: 22 – ஆத்திரத்தில் தவறான முடிவு

‘விதி’ என்பதில் பெருமறவர் மகேந்திர வளவனாருக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. ‘விதி’ என்பதை முயற்சியாலும், மதியாலும் வென்றுவிடலாம் என நினைப்பவர். ஆனால், அவர் வாழ்வில் சமீப காலமாக நடக்கும் நிகழ்வுகளைக் காண்கையில் ‘விதி’ என்ற ஒன்றினால் தான் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்படுகிறது என நம்பத் தொடங்கியிருந்தார். அவர் சோழப் படையின் சேனாதிபதியாக இருந்தவரை அவரது வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தையும் அவர்தான் தீர்மானித்துக் கொண்டிருந்தார். ‘விதி’ என்ற ஒன்று இருப்பதையே அவர் நம்பியதில்லை. ஆனால் அவர் எப்பொழுது மகனை இழந்து அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி சாதாரண மனிதராக வலம் வரத் தொடங்கினாரோ? அப்போதிலிருந்து ‘விதி’ என்ற ஒற்றைச் சொல்லை அவர் நம்பத் தொடங்கியிருந்தார். வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது, அதன் படிதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனித முயற்சியால் விதியை மதியால் வென்றுவிட இயலாது என எண்ணிக்கொண்டு விதியின் வழியில் நடப்பது நடக்கட்டும் என வாழ்வின் போக்கில் உழன்று கொண்டிருந்தவர்க்குப் புகார் நகரத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் என இரும்பிடர்த்தலையார் அறிவுறுத்தியதை எண்ணி இது விதியா அல்லது மனிதச் செயல்பாடா? எனக் குழப்பத்தில் இருந்தார். அச்சூழ்நிலையில் தான் புகார் நகரத் தலைவனாகத் தன்னை அறிவித்துக்கொண்டு வந்தவன் மாமன்னர் இருங்கோவேள் தங்களிடம் சேர்ப்பிக்கச் சொல்லி தந்தனுப்பிய ஓலையை அவர் வாசித்ததும் ‘விதி’ என்ற ஒற்றை வார்த்தையினால் தான் இப்படி நடைபெறுகிறது என முழுவதும் நம்பிவிட்டார். அவரது மனக் குழப்பமும் அதிகமாகிவிட்டது.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

விதி

பெருமறவர் மகேந்திர வளவனாருக்கு,

சோழ மன்னர் இளஞ்சேட்சென்னி மறைந்துவிட்டதனாலும், சோழ இளவல் அரசை சுமக்க இயலாது அடையாளம் தெரியாதபடி ஓடி மறைந்துவிட்டதனாலும் சோழப் பேரரசின் நிலைத்தன்மை மற்றும் குடிகளின் பாதுக்காப்பினைக் கருதி அமைச்சர்கள் மற்றும் மக்கள் மன்றத்தின் ஆலோசனைப்படி நான் சோழ மன்னனாக முடிசூட்டிக் கொண்டேன் என்பதைச் சோழப் படையின் சேனாதிபதியாகப் பதவி வகித்த தங்களிடம் முறைப்படி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தாங்கள் மீண்டும் சோழப் படையின் தளபதியாகப் பதவியேற்றுக் கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன். தங்களுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். தாங்கள் விரும்பினால் தங்களது மகளுக்கும் எனது மகனுக்கும் மணமுடித்து நமது உறவை நாம் வலுப்படுத்திக் கொள்வோம். துவண்டு போயிருக்கும் சோழப் படைக்கு மீண்டும் தங்களைப் போன்ற துடிப்பு மிக்கச் சேனாதிபதியே தற்போதைய தேவையாக உள்ளது. ஆகவே விரைந்து தாங்கள் ஒரு முடிவெடுத்துவிட்டு சித்திரைப் பெருவிழாத் தொடங்குமுன் சேனாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

—  இருங்கோ வேள், சோழப் பேரரசன்.

ஓலையின் கடைசியில் சோழப் பேரரசின் இராஜ முத்திரை பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்ட வளவனாருக்குக் குழப்பம் தலைக்கு ஏறிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

இருங்கோ வேளின் பார்வை தனது மகள் வானவல்லியின் மீது விழுந்த காரணம் என்னவாக இருக்கும்? ஒரு வேளை விறல்வேலின் உப தளபதியான திருக்கண்ணன் கூறியது போல இரும்பிடர்த்தலையரைக் கைது செய்ய வைக்கும் சூழ்ச்சியாக இருக்குமோ? இளவரசன் வளவனின் கதி என்னவென்று அறியாதவரை இருங்கோவேளின் மகன் தான் சோழ இளவரசன். சோழ மன்னன் இளவரசனுக்குப் பெண் கேட்கும்போது அதனை எப்படி மறுக்க இயலும்? இந்த ஓலையை மட்டும் விறல்வேல் பார்த்துவிட்டால் இருங்கோ வேளின் கதி என்னவாகும்? எனப் பல கேள்விகளைத் தனக்குத்தானே கேட்டுக் கொண்டவர் கடைசியில் விதி காட்டும் வழி எதுவானாலும் அதன்படியே எல்லாம் நடக்கட்டும். என்ன நடந்தாலும் ஏற்றுக்கொண்டு வாழ்வினைக் கடப்பதைத் தவிர வேறு வழியில்லை என எண்ணியவர் மன பாரம் நீங்க ஆலமரத்து முற்றத்து கோயிலுக்குச் சென்று சிவ லிங்கத்தை வழிபட்டுவிட்டுத் தனது வீட்டிற்குள் நுழைந்தவரை அங்கே உணவருந்திய படியே இரும்பிடர்த்தலையர் வரவேற்றார்.

வீட்டிற்குள் நுழைந்த வளவனார் இரும்பிடர்த்தலையரிடம் “தாங்கள் எப்போது வந்தீர்கள்? உங்களை நான் இங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. அடிகளார் எங்கே?” என வினவினார்.

அதற்குப் பதிலளித்த இரும்பிடர்த்தலையர், “அடிகளாரை உறைந்தை வரை ஓர் முக்கியப் பணிக்காக அனுப்பி வைத்துள்ளேன் வளவனாரே.” எனக் கூறி சிறிது மௌனத்திற்குப் பின் “புகார்க் கோட்டையில் செங்குவீரனின் உப தளபதிகளால் கோட்டைத் தலைவனாகப் பொறுப்பேற்று வந்தவன் நையப் புடைக்கப்பெற்று அனுப்பப்பட்டதைக் கண்டேன். பிறகு கோட்டை மற்றும் வேறு இடங்களில் இருப்பது ஆபத்து எனத் தோன்றவே நேராக இங்கு வந்துவிட்டேன்.” என்றார்.

“அவையில் நடந்த நிகழ்வுகளைக் கண்டீர்களா, இரும்பிடர்த்தலையரே?”

“கண்டேன் வளவனாரே! விறல்வேல் தனது கண்களை மட்டும் தான் உயர்த்தினான். அவ்வளவுதான். எதிரிகள் அனைவரும் நொடிப் பொழுதில் சாய்ந்துவிட்டார்கள். நீண்ட காலத்திற்குப் பின் ஒரு துடிப்பு மிக்க வீரனை சோழ தேசத்தில் கண்டிருக்கிறேன். இளஞ்சேட்சென்னியின் கட்டளைப் படி நீங்கள் உங்களது இளம் பருவத்தில் மலை நாட்டில் இருங்கோவின் படைகளைச் சின்னாபின்னப் படுத்தினீர்களே! அதை விட வீரமும், விவேகமும், துடிப்பும் மிக்க இளைஞனை இன்று நான் கண்டுவிட்டேன். இனி சோழ தேசத்திற்கு உரிமையானவனான இளவரசன் வளவனுக்கு எதிராக இருங்கோவேள் மட்டுமல்ல சேரன், பாண்டியன் மற்ற வேளிர்கள் என அனைவரும் ஓரணியில் சோழ தேசத்திற்கு எதிராக வந்தாலும் அவர்களை எதிர்த்து முறியடித்துவிடும் வல்லமையுடைய தலைவன் ஒருவன் கிடைத்துவிட்டான் வளவனாரே. இனி காணாமல் போன இளவலைப் பற்றி நான் கவலை கொள்ளப் போவதில்லை. விரைவில் விறல்வேலால் கண்டுபிடிக்கப்பட்டுக் காப்பாற்றப் படுவான்” என இரும்பிடர்த்தலையர் கூறிக்கொண்டு வந்த போது வளவனாரின் முகத்தில் பெருங்குழப்பத்தைக் கண்டவர் “வளவனாரே, முகத்தில் ஏன் கவலையின் சாயல் படர்ந்திருக்கிறது?” காரணம் யாதென வினவினார்.

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here