வானவல்லி முதல் பாகம்: 23 – களவுத் தொழிலும் நாட்டுப்பற்றும்

வானவல்லி

புத்த விகாரில் பரதவன் குமரன் சம்பாபதி வனத்திலிருந்து கணிகையர் மாளிகை வரை நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் பத்திரைத் தேவியிடம் கூறிக்கொண்டிருந்த போது அவர்கள் மட்டுமல்லாது அருகில் இருந்த புத்தர் சிலைக்குப் பின்னால் மறைந்திருந்தபடி மற்றொரு உருவமும் இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தது.

பரதவன் குமரன் நடந்த நிகழ்வுகளைக் கூறக் கூற மறைந்து கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு ஆத்திரமும், கோபமும் தலைக்கேறிக் கொண்டிருந்தது. செங்குவீரனும், அவனது உப தளபதி பரதவன் குமரனும் அவ்விடத்திலிருந்து கிளம்பும் வரை அவனது கோபத்தினை அடக்க இயலாதவனாய் தவித்தவன் அவர்கள் கிளம்பிய பின் புத்தர் சிலையிலிருந்து வெளிப்பட்டுப் புத்த விகாருக்குள் கோபத்தோடு நுழைந்தான்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

பரதவன் குமரன்

புத்த விகாருக்குள் யாரும் எளிதில் நுழையாத படி சற்றுப் பாதுகாப்பு நிறைந்த அறையின் கட்டிலில் வானவல்லியின் குறுவாளால் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவம் பெற்றுக்கொண்டிருந்தான் காளன்.

பெருங்கோபத்தொடு உள் நுழைந்தவன் காளனின் காயத்திற்கு மருந்து போட்டுக்கொண்டிருந்த காளனது நண்பனைப் பிடித்துத் தூரத் தள்ளி “இவன் செய்த காரியத்திற்கு மருந்தும் மருத்துவமும் தான் கேடு. இதோடு மருந்து போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இவனது காயம் புரையோடியே இவன் மடியட்டும். அப்படி மடிந்தால் கூட இவன் மீதிருக்கும் கோபம் எனக்குத் தணியாது” என்றான்.

தன் மீது பெரும் பற்றும், பாசமும் நிறைந்த தனது நண்பனின் வினோத செயலின் காரணத்தை அறியாத காளன் தலையைக் கூடத் தூக்க இயலாமல் “நண்பா, நான் என்ன பிழை செய்து விட்டேனென்று என் மீது கோபம் கொள்கிறாய்?” என வினவினான்.

“என்ன பிழை செய்தேன் என்று கேள்வியா கேட்கிறாய்! நீ செய்த குற்றத்திற்கு உன்னை வெட்டாமல் நின்று பேசிக்கொண்டிருக்கிறேனே!” எனக் கூறியபடி தனது வாளை உருவினான்.

வாளை உருவிய தனது நண்பனின் செயலைக் கண்ட காளன் காயம்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடந்ததால் ஏதும் செய்ய இயலாமல் திகைத்தபடி “நண்பா வில்லவா?” என அழைத்தான்.

உருவிய வாளை நோங்கியபடியே “எனது பெயரை இனியொரு முறை உரைக்காதே! காயம்பட்டுப் பிணமாகக் கிடக்கும் நீ செத்த பாம்பிற்கு ஒத்தவன். உன்னைத் தீண்டினால் எனது வாளிற்கும், வீரத்திற்கும் தான் இழுக்கு” என்றவன் சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு “உனது இரத்தக் கரையைப் புத்த விகாரில் படிய வைத்து அதன் புனிதத்தைக் கெடுக்க விரும்பவில்லை” எனக் கூறியபடியே தனது வாளினை வாளுறையில் நுழைத்தான் வில்லவன்.

வில்லவன் கோபம் கொண்டாலும் தனது நிதானத்தை இழக்காத காளன் அவனது கண்களில் தனது பார்வையை நிலைநாட்டியபடியே ,”வில்லவா, நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்! எதற்காக என் மீது நீ இவ்வளவு கோபம் கொள்கிறாய்?” என மீண்டும் வினவினான்.

“இருங்கோவேளிடம் எப்போது விலை போனாய்?” என அந்த அறையே அதிரும்படி பேரிடியாய் முழங்கினான் வில்லவன்.

“வில்லவா நண்பன் என்பதற்காக எதை வேண்டுமானாலும் கூறாதே! இருங்கோவேள் எனது குல எதிரி. அவனிடம் நான் விலைபோனேன் என்று இனியொரு முறை கூறாதே!” எனக் கோபத்தோடு எச்சரித்தான் காளன்.

நேற்று சம்பாபதி வனத்திற்குக் களவு செய்ய நானும் உன்னோடு வந்திருந்தேன். நமது நோக்கம் களவு செய்வது மட்டுமே. ஆனால் உமது நோக்கம் செங்குவீரன் அங்கு வருவான் என முன்பே தெரிந்திருந்து அவனைக் கொல்வதில் இருந்திருக்கிறது”

“நேற்று நாம் செங்குவீரனை எதிர்பார்த்திருக்கவே இல்லை. அப்படியிருக்க உப தலைவனைக் கொல்ல நான் திட்டம் தீட்டியிருந்தேன் எனக் கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு நண்பனே!” எனக் கோபத்தோடு பதிலளித்தான் காளன்.

“சரி, நீ எந்தத் திட்டமும் தீட்டவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நேற்று இறந்துவிட்ட நமது நண்பர்களில் ஒருவன் அணிந்திருந்த முத்து மாலையைக் கொண்டு அடையாளம் காண வந்த செங்குவீரன் கணிகையர் மாளிகையில் நஞ்சு தடவப்பட்ட அம்பினால் தாக்கப்பட்டிருக்கிறான்” எனக் கூறிக்கொண்டிருந்த போதே குறுக்கிட்ட காளன், “செங்குவீரனைத் தாக்கினார்களா? அவனுக்கு என்ன நேர்ந்தது?” என அக்கறையோடு வினவினான்.

“அக்கறையோடு விசாரிப்பதெல்லாம் இருக்கட்டும்! விறலி மாலையை வைத்து கணிகையர் விடுதியில் செங்குவீரனை நஞ்சினால் கொல்ல ஏற்பாடு செய்தது யார்? பதில் கூறு!” என வினவினான் வில்லவன்.

“நீ கூறுவது அனைத்தும் பெரும் புதிராக அல்லவா இருக்கிறது. எனக்கும் இந்த நிகழ்வுகளுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது” என்றான் காளன்.

“சம்பாபதி வனத்தினுள் நாம் களவு செய்யப் போகிறோம் என்பது நேற்று மாலைக்குப் பிறகு தான் நாம் இருவரும் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினோம். அப்படியிருக்கத் திட்டமிட்டுச் செங்குவீரனைக் கொல்ல முயற்சி நடந்திருக்கிறது. உனக்கும் அதற்கும் தொடர்பில்லை என நீ மறுப்பதை எப்படி நான் நம்புவேன் நண்பா?” என வினவினான் வில்லவன்.

“அதைப்பற்றித் தான் நானும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் வில்லவா!” என அமைதியுடன் பதிலளித்தான் காளன்.

“எனக்கு உன் மீதுதான் பெரும் சந்தேகம் நிலவுகிறது நண்பா. ஒன்றை மட்டும் நினைவில் கொள். ஒருவன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் செய்வான். ஏன்! நண்பனோடு சேர்ந்து தன் குலப் பெருமை அனைத்தும் கெடும்படி களவுத் தொழிலைக் கூடச் செய்வான். ஆனால் அவனது சொந்த நாட்டிற்கு எதிராக எதையும் செய்யத் துணிய மாட்டான் என்பதைப் புரிந்து கொள். உயிருக்கு உயிராகப் பழகியவன் விலை போய் நாட்டிற்கு எதிரான துரோகச் செயல்களைச் செய்தால் அவனது உயிரையும் கொய்யத் தயங்கமாட்டேன். எனக்கு நட்பு முக்கியம் தான். ஆனால் அதைவிடச் சோழ தேசத்தின் நலன் முக்கியம். சோழ தேசம் எனது தாய் நாடு. அதற்கு ஆபத்தை விளைவிக்கும் கயவர்களோடு சேர்ந்து கொண்டால் உயிர்த்தோழனான எனது கைகளால் தான் உனது உயிர் போகும் என்பதை மட்டும் உறக்கத்திலும் மறந்துவிடாதே” என ஆவேசமாகக் கூறிவிட்டு தனது நண்பனான காளனின் முகத்தைப் பார்க்கவே அவமானமாக எண்ணி சற்றுத் தள்ளி இருந்த மரப் பலகையில் அமர்ந்துவிட்டான் வில்லவன்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here