வானவல்லி முதல் பாகம்: 23 – களவுத் தொழிலும் நாட்டுப்பற்றும்

நேற்றிரவு சம்பாபதி வனத்தினுள் செங்குவீரனிடமிருந்து தப்பிய சில கள்வர்களுள் வில்லவனும் ஒருவன். வாள் வீசுவதில் வல்லவன். தனது நண்பனான காளனுடன் சேர்ந்து பொழுது போக்கிற்காகக் களவாடிக்கொண்டிருப்பவன். ஆனால், சோழ தேசத்தின் மீது பெரும் பற்றுக் கொண்டவன். தனது நண்பன் சோழ தேசத்திற்கு எதிரான செயலைச் செய்துள்ளான் எனப் பத்திரைத் தேவி மற்றும் பரதவன் குமரனின் உரையாடல்களிலிருந்து அறிந்து கொண்டவன் பெரும் கோபத்தோடு காளனின் செயலுக்கு அவனை வெட்டி வீழ்த்திவிட வேண்டும் என்றே புத்த விகாருக்குள் விரைவாக நுழைந்தான். ஆனால், தனது நண்பன் காளனைக் கண்டவுடன் நட்பு மிகுதியால் அவனது ஆத்திரம் சற்றுக் குறைந்து உருவிய வாளை நோங்கியவனை நட்பு தடுத்துவிடவே வாளை இறக்கி உறையில் போட்டுக்கொண்டான்.

மார்போடு தோள் பகுதியிலும் ஏற்பட்ட ஆழமான காயத்தினால் பெருங்கட்டுப் போடப்பட்டு வலி மிகுதியால் தலையைக் கூட அசைக்க இயலாமல் காளனின் கழுத்துப் பகுதியில் நெறி ஏற்பட்டிருந்தது. கழுத்தை அசைக்க இயலாமல் கண்களைச் சுழற்றித் தேடியவனின் பார்வையில் வில்லவன் அகப்படாததால் “வில்லவா, எனது முன்னால் வா!” என ஆணையிட்டான் காளன்.

முதலில் காளனின் ஆணையைச் செவி சாய்க்க மறுத்தவன் அவன் மீண்டும் அழைக்கவே அவன் முன் சென்று நின்றான் வில்லவன்.

காளன் வில்லவனிடம், “வில்லவா! செங்குவீரன் நஞ்சு தடவப்பட்ட அம்பினால் தாக்கப்பட்டதாகக் கூறினாயே! அவனது நிலை இப்போது எப்படியுள்ளது?” என வினவினான்.

காளன் கேட்டதைக் கேட்டு சிரித்த வில்லவன், “கானகத்தில் இறக்கும் தருவாயில் விழுந்து கிடக்கும் பெரும் பலம் கொண்ட யானையைப் பார்த்து நரி பரிதாபப்பட்டதாம். அப்படித்தான் உள்ளது உனது பரிதாபமும். யானை இறந்த பின் அதனை முதலில் உண்ணப் போவது நரி தான். அதே போலச் செங்குவீரன் இறந்துவிட்டால் முதலில் மகிழப் போகிறவன் நீயாகத் தான் இருப்பாய். அப்படியிருக்கச் செங்குவீரன் மீது நீ கொண்டுள்ள அக்கறை என்னை வியப்படையச் செய்கிறது நண்பனே!” என ஏளனத்துடன் பதிலளித்தான் வில்லவன்.

“ஏளனப் பேச்சு இருக்கட்டும் வில்லவா! முதலில் கேட்ட கேள்விக்குப் பதில் கூறு” என ஆணையிட்டான் காளன்.

“யாருக்கும் தெரியாமல் நீ தீட்டிய சதித்திட்டம் வெற்றியடைந்து விட்டதா இல்லை தோல்வியைத் தழுவியதா என அறிந்துகொள்வதில் அவ்வளவு ஆவலா?” எனத் திருப்பிக் கேட்டான் வில்லவன்.

“வில்லவா, உனது நண்பனை நீ புரிந்துகொண்டது அவ்வளவு தானா? ஏற்கெனவே வலியால் துடித்துக்கொண்டிருக்கும் என்னை வார்த்தைகளால் கொல்லாதே!”

“நம்பிக்கையெல்லாம் இருக்கட்டும். அதைப்பற்றி நாம் பிறகு பேசிக்கொள்வோம்.  கணிகையர் விடுதியில் மறைந்திருந்தபடி எய்யப்பட்ட அம்பு செங்குவீரனைத் தாக்கி அவன் இந்நேரம் மடிந்திருக்க வேண்டியவன். ஆனால் எய்யப்பட்டதைக் கண்ட விறலியொருத்தி அம்பு செங்குவீரனைத் தாக்குமுன் தனது உடலில் வாங்கிக் கொண்டாள். அவளது நிலைதான் கவலைக்கிடமாக உள்ளது.”

வில்லவன் கூறியதைக்கேட்ட காளன், “செங்குவீரன் மாபெரும் வீரன். அப்படிப்பட்ட ஒருவனை மறைந்திருந்து அதுவும் நஞ்சு தடவி அம்பினை எய்யும் இழிந்த செயலைச் செய்தவனைக் கண்டால் நானே எனது வாளால் வெட்டி வீழ்த்திவிடுவேன்” எனக் கோபம் கொண்டான் காளன்.

காளன் கூறியதைக் கேட்ட வில்லவன் அவனை நம்பலாமா? அல்லது வேண்டாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவர்களது அறைக்கு அவர்களின் குழுவைச் சேர்ந்த மற்றொரு கள்வன் உள்ளே நுழைந்தான். உள் நுழைந்தவன் காளனிடம் “தலைவரே, தங்களிடம் இரகசியமாக ஒரு முக்கியப் பணி குறித்துப் பேச வேண்டியுள்ளது. அனுமதி கிடைக்குமா?” எனப் பணிந்தான்.

“என்ன இரகசியம்?” என வினவினான் காளன்.

“அது மிகவும் இரகசியமானது. அதைத் தங்களிடம் மட்டும் தான் கூற இயலும்.”

“அவ்வளவு இரகசியமா?”

“ஆமாம் தலைவரே!”

“யாரிடமிருந்து?”

“வைதீகர் பாகவதரிடமிருந்து.”

“எனது அன்பு நண்பன் அக்னிபுத்திரனின் தந்தையிடமிருந்தா?”

“ஆமாம் தலைவரே!”

“அனைவரும் சற்றுநேரம் வெளியேறுங்கள். நான் அழைக்காமல் யாரும் உள் நுழையவும் வேண்டாம். உள்ளே யாரையும் அனுமதிக்கவும் வேண்டாம்” எனக் கட்டளையிட மருத்துவ அறையிலிருந்து வில்லவன் உட்பட அனைவரும் வெளியேறினர்.

வில்லவன் வெளியே செல்வதைக் கண்ட காளன், “வில்லவா நீ இங்கேயே இரு. நீ செல்லத் தேவையில்லை!” என வில்லவனுக்குக் கட்டளையிட அவன் அறையிலேயே நின்றுவிட்டான்.

“ஏதோ இரகசியமாகக் கூற வேண்டும் என்றாயே! விரைந்து கூறு!” எனக் காளன் புதியவனிடம் கட்டளையிட அவன் அறையில் இருந்த வில்லவனை ஏற இறங்கப் பார்த்தபடியே ஏதும் பேசாமல் இருந்ததைக் கண்ட காளன் “அவன் நம்மவன் தான். அவன் இருப்பதைப் பற்றி நீ ஏதும் கவலை கொள்ள வேண்டாம்” என்றான்.

புதியவன் சிறிது நேர யோசனைக்குப் பிறகு காளனிடம், “தங்களது காயம் குணமடைந்த பின் தாங்கள் விரைந்து சோழச் சக்கரவர்த்தியைச் சந்திக்கச் சொல்லி வைதீகர் கூறினார்” என்றான்.

“சோழச் சக்கரவர்த்தி இளஞ்சேட்சென்னி தான் மறைந்துவிட்டாரே! அவரை எப்படிச் சந்திக்க இயலும்?”

“இப்போது தேசத்திற்குச் சக்கரவர்த்தி இளஞ்சேட்சென்னி இல்லை”

“இளவரசன் வளவன் எப்போது மாமன்னனாக முடிசூடிக்கொண்டான்?”

“வைதீகர் பாகவதர் சோழச் சக்கரவர்த்தி எனக் குறிப்பிட்டது இளஞ்சேட்சென்னியையோ அல்லது இளவலையோ அல்ல”

“அப்புறம் யாரை?”

“மலை நாட்டு மன்னரை!”

“மலை நாட்டு மன்னரா?” அதிர்ச்சியுடன் கேட்டான் காளன்.

“ஆமாம் தலைவரே! மலை நாட்டு மன்னர் இருங்கோவேள் தான் தற்பொழுது சோழ தேசத்தின் சக்கரவர்த்தி”

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here