வானவல்லி முதல் பாகம்: 23 – களவுத் தொழிலும் நாட்டுப்பற்றும்

வந்திருப்பவன் இருங்கோவேளின் கைப்பாவை தான் என்பதைப் புரிந்துகொண்ட வில்லவன் தான் புனிதமான புத்த விகாரில் நிற்கிறோம் என்பதையும் மறந்து தனது கையை வாளருகே கொண்டு சென்றான்.

வில்லவனின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட காளன் வந்திருப்பவனிடமிருந்து முழுமையான தகவலைப் பெற்றுக்கொள்ள விரும்பி பார்வையாலே வில்லவனது செயலைத் தடுத்துவிட்டான்.

புதியவன் காளனிடம், “மலை நாட்டு மன்னர் இருங்கோவேள் இன்று காலை தான் சோழச் சக்கரவர்த்தியாக முடி சூட்டிக் கொண்டார்” என்றான்.

தனது குல எதிரி இருங்கோவேள் சோழச் சக்கரவர்த்தியாக முடி சூட்டிக் கொண்டான் என்பதையறிந்து வந்த கோபம் அனைத்தையும் அடக்கிக்கொண்டு “சரி இருக்கட்டும். அவரை ஏன் நான் சந்திக்க வேண்டுமாம்?” என வினவினான்.

“அது பற்றி எனக்குத் தெரியாது தலைவரே. வைதீகர் உங்களைச் சோழச் சக்கரவர்த்தியைச் சந்திக்கச் சொல்லச் சொல்லி என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார்”

“சரி. உடல் குணமடைந்ததும் உறைந்தை சென்று சந்திக்கிறேன் என வைதீகரிடம் கூறு!”

“உறைந்தையில் தாங்கள் எங்குத் தடுக்கப்பட்டாலும் இந்தக் முத்திரை மோதிரத்தைக் காட்டுங்கள். பிறகு உங்களுக்குத் தடை இருக்காது” எனக் கூறியபடியே இடுப்பில் மறைத்து பாதுகாப்பாக வைத்திருந்த முத்திரை மோதிரத்தை எடுத்துக் காளனிடம் வழங்கினான்.

முத்திரை மோதிரத்தை வாங்கி ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்த காளனிடம் “மேலும் தாங்கள் சக்கரவர்த்தியை சந்திக்கும் போது உங்களது வலது கையை மடக்கி மார்பில் வைத்து தலையை முன்புறமாகப் பணிந்து ‘புஷ்யமுத்திரன்’ எனக் கூறுங்கள். சோழச் சக்கரவர்த்தித் தங்களை அடையாளம் கண்டு கொள்வார். பிறகு வேண்டிய கட்டளைகளை அவர் உங்களுக்குப் பிறப்பிப்பார்” எனக் கூறிவிட்டு விடைபெற்றுக் கிளம்பினான் வந்திருந்த புதியவன்.

“சோழ உப படைத்தலைவர் செங்குவீரன் கணிகையர் விடுதியில் நஞ்சு தடவப்பட்ட அம்பினால் தாக்கப்பட்டு இறந்துவிட்டதாகக் கூறுகிறார்களே! உண்மைதானா?” எனச் சென்றவனை நிறுத்தி மகிழ்வது போலச் சிரிப்பை முகத்தில் வரவழைத்துக் கொண்டு கேட்டான் வில்லவன்.

வில்லவன் கூறியதைக் கேட்டவன், “என்னே! செங்குவீரன் மடிந்துவிட்டானா? இதைக்கேட்டால் வைதீகர் பெருமகிழ்ச்சி அடைவார். நான் விரைந்து சென்று இந்நற்செய்தியை அவரிடம் தெரிவிக்க வேண்டும்.”

குழப்பத்துடன் காளன் “அப்படியானால்…..” என இழுத்தான்.

“ஆமாம் தலைவரே. தங்களது அனுமானம் சரியானது தான். வைதீகர் பாகவதர் தான் செங்குவீரனைக் கொல்ல ஏற்பாடு செய்திருந்தார்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அவன் வெளியேறியபின் வெளியே நின்ற தனது நண்பர்களை அழைத்த வில்லவன் “வந்துவிட்டுச் செல்லும் துரோகியை பௌத்த விகார் தாண்டியதும் தீர்த்துக்கட்டி விடுங்கள்” என ஆணையிட்டான்.

“ஆனால் நமது கள்வர் குழுவினுள் அவனும் ஒருவனாயிற்றே!” என்றான் ஒருவன்.

“ஆனால் அவன் நம்பிக்கைத் துரோகி அவனை உயிரோடு இனியும் விட்டுவைக்கக் கூடாது. விட்டு வைத்தால் ஆபத்துதான். அவனது கதையை முடித்துவிடுங்கள்” எனக் கட்டளையிட அவர்கள் விரைந்து சென்றனர்.

படுக்கையிலிருந்தபடியே காளன், “நண்பா வீணாக என் மீது சந்தேகம் கொண்டாயே! இப்போது சதி செய்தவர்கள் யார் என்று அறிந்துகொண்டாயா?” எனக் கேட்டான்.

“எங்களுக்குத் தெரியாமல் சதி செய்தவர் வைதீகர் என்று அறிந்துகொண்டோம். ஆனால் உமக்கும் வைதீகருக்கும் இரகசிய உடன்பாடு இருக்காது என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது?” எனப் பதிலுக்குக் கேட்டான் வில்லவன்.

“நண்பா வில்லவா! என்னை நம்பு. நானும் உன்னைப் போலத் தான் ஏமாற்றப் பட்டுள்ளேன் என்பதைப் புரிந்து கொள்.”

“என்னைப் போல ஏமாற்றப் பட்டுள்ளாயா?”

“ஆமா      ம்”

“அப்படியானால் இதற்கெல்லாம் யார் காரணமெனச் சிந்தித்தாயா?”

“அக்னிபுத்திரன்” என அருவருப்போடும் கோபத்தோடும் அந்தப் பெயரையே உச்சரிக்க விருப்பமில்லாதவனாய்க் கூறினான் காளன்.

“இப்பொழுதாவது உண்மையைப் புரிந்துகொண்டாயே நண்பா. மகிழ்ச்சி! கூடா நட்பு கேடாய் முடியும் என்று எத்தனை முறை நான் சொல்லியிருப்பேன். ஒருமுறையேனும் நீ செவி மடுத்துக் கேட்டதுண்டா? அதன் விளைவை இனி நாம் அனுபவிக்கப் போகிறோம்!”

“வில்லவா, உன்னைப் போலத்தான் அக்னிபுத்திரனையும் உயிருக்கு உயிரான நண்பனாகப் பழகினேன். அவன் இப்படி முதுகில் குத்துவான் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை!” எனக் கலங்கினான் காளன்.

“இப்பொழுது, மனம் வருந்தி எந்தப் பயனும் ஏற்படுவதற்கில்லை.”

“நமக்குத் தெரியாமல் அவர்கள் செய்தது இது மட்டும் தானா அல்லது இன்னும் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் வில்லவா?”

“எதிர்காலத்தில் நிச்சயம் அனைத்தையும் அறிந்துவிடுவோம்” என்றான் வில்லவன்.

தனது நண்பன் அக்னிபுத்திரனால் ஏமாற்றப்பட்டு வசமாகச் சிக்கிக்கொண்டதை எண்ணிய காளன் பெரும் ஆத்திரத்தோடு பற்களைக் கடித்தபடி, “அவன் மட்டும் எனது கண்களில் தற்போது அகப்பட்டால், அவனை…..!”

“கைகளில் கிடைத்தால் என்ன செய்வதாய் உத்தேசம்!”

“எனது வாளாலேயே அவனை வெட்டி வீழ்த்திவிடுவேன்.”

“அதற்கு அவசியமில்லை”

“அவசியமில்லையா!”

“ஆம்!”

“ஏன்?”

“நேற்றே செங்குவீரன் அந்தச் செயலை செய்துவிட்டான். அக்னிபுத்திரன் நேற்றே சம்பாபதி வனத்தினுள் மடிந்துவிட்டான்”

“நீ யாரிடமிருந்து அறிந்துகொண்டாய் வில்லவா? இதுவும் பொய்யாகப் பரப்பப்பட்டதாக இருக்கப்போகிறது.”

“நேற்று சண்டை நடந்த இடத்தைக் காலையில் காவல் வீரர்கள் செல்லுமுன் நான் சென்று பார்த்து விட்டேன், அங்கே அக்னிபுத்திரனின் உடலை நான் எனது கண்களால் கண்டேன்.”

“நல்ல செய்தியைக் கூறியுள்ளாய் வில்லவா! நம்மை வஞ்சித்து ஏமாற்றியதற்கான தண்டனையைச் செங்குவீரனே அளித்துவிட்டான்” எனச் சற்று நிம்மதியடைந்தவன் மீண்டும் ஆத்திரத்துடன் “அக்னிபுத்திரனுடன் சேர்ந்து நம்மை ஏமாற்றிய வைதீகருக்கும் தகுந்த தண்டனையை நாம் நிச்சயம் அளிக்க வேண்டும்” எனக் கூற வில்லவனும் அதை ஆமோதிக்கும் வகையில் “நிச்சயமாக நண்பா. நீ விரைந்து குணமடை. மற்றதை நேரம் கிடைக்கும் போது பார்த்துக்கொள்வோம்.” என அவனது தலையைக் கோதி ஆறுதல் கூறினான்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here