வானவல்லி முதல் பாகம்: 24 – அண்ணனின் ஆணை

Tamil fantasy historical fiction

பத்து! ஆபத்து! என்றபடியே அறையினுள் வேகமாக நுழைந்த தன் நண்பனைக் கண்ட வில்லவன், “என்ன ஆபத்து? ஏன் இப்படி அரண்டவன் போல ஓடி வருகிறாய்?” என வினவினான்.

அவனது வியர்த்த பதற்றமடைந்த முகத்தினைக் கண்ட காளன், “இவனது முகத்தைக் கண்டால் அப்படித்தான் இருக்கிறது வில்லவா!” என்றான்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

வில்லவன்

வந்தவன் மூச்சு வாங்கியபடியே, “தலைவரே! யவன உப தளபதியான டாள்தொபியாஸ் தங்களது உருவப் படத்தைத் திரைச்சீலையில் ஓவியமாகத் தீட்டி புகார் முழுக்கச் சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருக்கிறான். தாங்கள் இனியும் புகாரில் இருப்பது பெரும் ஆபத்து. விரைவில் தலைமறைவு ஆகிவிடுங்கள்!” என எச்சரித்தான்.

ஆச்சர்யமடைந்த காளன், “யவனத் தளபதியின் கைகளில் எனது உருவப்படம் எப்படிக் கிடைத்திருக்கும்! யார் வரைந்திருப்பார்கள்?” என வினவினான்.

“யார் வரைந்தார்கள்! எப்படிக் கிடைத்தது என எந்தத் தகவலும் கிடைக்கவில்லை தலைவரே. வில்லவனின் கட்டளைப்படி தங்களுக்கு மருந்து, உணவுப் பொருள்கள் மற்றும் யவன மது வாங்க நாளங்காடியில் உள்ள பண்டக சாலைக்குச் சென்று வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு திரும்பிய சமயத்தில் பூத சதுக்கத்தில் யவனத் தளபதியைச் சுற்றி சிலர் கூட்டமாக நிற்கவே நானும் அங்குச் சென்று பார்த்தேன். அப்போது யவனத் தளபதி தங்களது ஓவியம் தீட்டப்பட்ட திரைச்சீலையை மற்றவர்களிடம் காண்பித்து உங்களை யாரேனும் எங்காவது கண்டதுண்டா? என உங்களைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான். அந்த ஓவியத்தைக் கண்ட போது நானே அதிர்ந்துவிட்டேன். உங்களது தோள் பகுதியில் குறுவாள் தைக்கப்பட்டதைப் போன்று தத்ரூபமாக உங்களைத் திரைச்சீலையில் ஓவியமாகத் தீட்டியுள்ளனர். ஆதலால் இங்கிருந்து எவ்வளவு விரைவாகத் தப்பிக்கிறீர்களோ அவ்வளவு விரைவில் உங்களுக்குப் பாதுகாப்பு!” எனப் பதறினான்.

வில்லவன், “நேற்றிரவு நாம் எதிர்கொண்ட பெண்மணிகளுள் யாரோ ஒருவர் தான் அதனை வரைந்திருப்பார்கள் என எண்ணுகிறேன் நண்பா” என்றான்.

வில்லவனிடம் காளன், “வில்லவா! நேற்று நாம் தாக்கிய இருவருள் ஒருத்தி பெருவணிகன் வேளாதனின் மகள். மற்றொருத்தி யார் என விசாரித்தீர்களா? அவளைப் போன்ற வீரமும், திமிரும் கொண்ட பெண்ணை நான் இதுவரை கண்டதே இல்லை!” எனத் தனது காயத்தைத் தடவி பார்த்துக்கொண்டே வினவினான்.

“இல்லை நண்பா. அந்தப் பெண் யாரென்று என்னால் கண்டறிய இயலவில்லை” என்றான் வில்லவன்.

குறுக்கிட்ட வில்லவனின் நண்பன், “தலைவரே அவளது பெயர் வானவல்லி” என்றான்.

“நேற்றிரவு நான் கேட்ட போதே திமிருடன் ‘வானவல்லி’ என்று பதிலளித்தாள்! பெயரைத் தவிர வேறு தகவல் ஏதேனும் தெரிந்தால் கூறு!” எனக் கட்டளையிட்டான் காளன்.

“தலைவரே! அவளது தந்தை……..” என்றவாறு தயங்கினான்.

அவனது தயக்கத்தைக் கண்ட வில்லவன், “தயங்காமல் கூறு!” எனக் கட்டளையிட அவன் “முன்னாள் சோழச் சேனாதிபதி வளவனாரின் மகள்!” என்றான்.

பெரும் அதிர்ச்சியுடன் படுக்கையிலிருந்து எழுந்துவிட்ட காளன், “பெருமறவர் மகேந்திர வளவனாரின் மகளா!” என்றான்.

“ஆமாம் தலைவரே! மறைந்துபோன உப தலைவர் திவ்யனின் சகோதரியும், வளவனாரின் மகளும் தான் வானவல்லி” எனப் பதிலளித்தான்.

அதிர்ச்சியடைந்த வில்லவன் தனது நண்பன் காளனிடன், “நண்பா, பெரும் பிழை செய்துவிட்டோம். நேற்றைய தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியது நீதானே?” என வினவ காளன், “நானில்லை வில்லவா. நேற்று களவு செல்ல எனக்கு விருப்பமே இல்லை. நமது முயற்சி இந்திரத் திருவிழாவை பாழாக்கும் என்பதால் கடைசி வரை நான் ஒப்புக் கொள்ளவே இல்லை” என்றான்.

“நீயில்லை என்றால் பின் வேறு யார் திட்டம் தீட்டியது?”

“நேற்றைய தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியது அக்னிபுத்திரன். அவன் தான் என்னை இந்திரத் திருவிழாவிற்கு முன் கடைசிக் களவாக இருக்கட்டும் எனக் கூறி வற்புறுத்த நான் தொடர்ந்து மறுத்து வந்தேன். பின்னர் அவனது தந்தையும் வற்புறுத்த வேறு வழியின்றி ஒப்புக்கொண்டேன் வில்லவா. பின் நேற்று காலையில் உன்னிடம் கூற நீயும் ஒப்புக்கொண்டாய். பின்னர் தான் மாலையில் அனைவருக்கும் தெரிவித்துப் புறப்பட்டோம்!”

“நண்பா, வளவனாரின் மகள் நேற்று வரும் நேரத்தை எப்படியோ அறிந்துகொண்ட அக்னிபுத்திரன் தான் நம்மை வைத்து அவர்களைத் தாக்க வைத்துள்ளான். நேற்றிரவு முதல் சாமத்தில் கடந்த பல புரவித் தேர்களையும் வழிப்போக்கர்களையும் மறிக்க வேண்டாம். இவர்களை விட்டுவிடுவோம். நமது இலக்கு இதுவல்ல என்று கூறி கடும் பாதுகாப்புடன் வந்த புரவித்தேரை அவன் தாக்கலாம் எனக் கூறியபோதே நாம் சிந்தித்திருக்க வேண்டும் நண்பனே”

“ஆமாம் வில்லவா. அவர்கள் தீட்டிய திட்டத்தில் நாம் வசமாகச் சிக்கிக் கொண்டோம். வைதீகர் பாகவதன் இருங்கோவேளை சந்திக்கச் சொல்வதிலிருந்து இருங்கோவேளுக்கும் அவருக்கும் நிச்சயம் அந்தரங்கத் தொடர்பும், இரகசியக் கூட்டும் இருக்க வேண்டும். பெரும் பிழை செய்துவிட்டோம். அவர்களது சதிக்கு ஆதரவாக நம்மை நன்கு பயன்படுத்திக் கொண்டனர் வில்லவா!”

தனது நண்பர்களுள் ஒருவனான அக்னிபுத்திரனால் இருவரும் வசமாக வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டதை ஏற்றுக்கொள்ள இயலாததால் இருவருக்கும் ஆத்திரமும், கோபமும் பெருகிக் கொண்டிருந்தது. மாறிவிட்ட அவர்களது முகப் பாவனைகளால் புதிதாக வந்தவன் அறிந்துகொண்டதால்  சிறிது நேரம் ஏதும் பேசாமல் அமைதியாகவே நின்றான். பின் கோபத்தில் உள்ள காளன் முன் பேச தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “தலைவரே!” எனப் பணிய “என்ன?” என வினவினான் காளன்.

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here