வானவல்லி முதல் பாகம்: 24 – அண்ணனின் ஆணை

“தலைவரே சம்பாபதி வனம், பொன்னி நதி, துறைமுகம் என எந்தவழிகளிலும் நீங்கள் தப்பிக்காமல் இருக்கப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எப்படியாவது தப்பிவிடுங்கள்!”

காளனும், வில்லவனும் அமைதியாக ஏதும் பேசாமல் இருந்ததைக் கண்டவன், “தலைவரே! மற்றொரு செய்தி” என ஏதோ கூற அடிபோட்டான்.

“கூறு!”

“கேட்டால் பெரிதும் கோபப்படுவீர்கள். ஆதலால் தான் அச்சப்படுகிறேன்!”

“உன் மீது கோபப்பட்டு என்ன செய்யப் போகிறேன். சொல்ல வந்ததைத் தயங்காமல் கூறு” எனக் கட்டளையிட்டான்.

“செங்குவீரனைக் கணிகையர் மாளிகையில் கொல்ல முயன்று இறந்தவர்கள் இருவரும் நமது குழுவைச் சேர்ந்தவர்கள். அக்னிபுத்திரனின் தந்தையின் உத்தரவின்பேரில் தான் அவர்கள் செங்குவீரனைக் கொலை செய்ய முயன்று மாண்டுவிட்டார்கள். தங்களது நலனில் அக்கறை கொண்டதனால் கூறுகிறேன் தலைவரே. விரைந்து தப்பித்துவிடுங்கள். உங்களை ஆபத்து சூழ்ந்துவிட்டது. உங்களது உடல் ஆரோக்கியமாக இருந்திருந்தால் உங்களைப் பற்றிய கவலை இருக்காது. ஆனால் தற்போதைய சூழலில் தாங்கள் பெரும் கவனமாக இருக்க வேண்டும்! யாரையும் நம்பாதீர்கள்” என அடக்கமாகக் கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்றுக் கிளம்பினான்.

அவன் செல்லும் வரை அமைதியாக இருந்த வில்லவன், பிறகு பெரும் கோபத்துடன் “நம்பிக்கைத் துரோகம்! ஏமாற்றம்! வஞ்சகம்!” என்றான்.

“ஆமாம் வில்லவா. நம்பிக்கைத் துரோகம் தான். மன்னிக்க முடியாதது. நினைத்தாலே என் உடலெல்லாம் துடிக்கிறது” என இருவரும் பேசிக்கொண்டிருந்த போது வெளியே சென்றவன் மீண்டும் “ஆபத்து நெருங்கிவிட்டது தலைவரே! வெளியே பல வீரர்கள் சூழ்ந்துவிட்டார்கள். அவர்கள் உங்களைக் கண்டறிந்துவிட்டார்கள் போலிருக்கிறது. விரைந்து வெளியேறிவிடுங்கள்” என அவசரமாகக் கூறினான்.

பொறுமையுடன் “நீ ஓடி வந்ததை யாராவது கவனித்தார்களா!” எனக் கேட்டான் வில்லவன்.

சிறிது யோசித்தவன் “நான் வெளியே சென்றதை ஒரு வீரன் கவனித்துவிட்டான். அதன் பிறகே நான் உங்களை எச்சரிக்க ஓடிவந்தேன்” எனப் புத்திசாலித்தனமாகப் பேசினான்.

அவன் பேசியதைக்கேட்ட வில்லவன், “அடே முட்டாள்! நீயே அனைத்தையும் காட்டிக்கொடுத்து விட்டாயே! இங்கே நாங்களிருப்பது யாருக்கும் தெரியாது. வெளியே வீரர்கள் குழுமியிருப்பது அவர்களது தலைவர் செங்குவீரனைக் காண வந்தவர்கள். நன்மை புரிவதாய் எண்ணி நீயே காட்டிக்கொடுத்து விட்டாயே! முட்டாள்” என ஏகமாகத் திட்டினான்.

வில்லவன் தன்னை ஏன் இப்படிப் பேசுகிறான் என்பதன் காரணத்தை அறியாமல் குழம்பியவனுக்குப் பின்னரே காரணம் தெரிந்தது.

திடீரென்று புகார் காவல் வீரர்கள் சிலர் அறையினுள் நுழைந்த பின்னரே தனது முட்டாள் தனமான காரியத்தின் விளைவை உணர்ந்தான். வீரர்களைக் கண்ட பின் அவசரப்பட்டு ஓடி வந்தது எவ்வளவு பெரும் பிழை என்பதை அப்போது தான் அறிந்தான். அச்சத்தில் ஓடி வந்ததைக் கண்டவர்கள் தன்னைப் பின் தொடர்ந்து தலைவர் இருப்பிடத்தைக் கண்டறிந்துவிட்டார்கள் என்பதையும் வில்லவன் தன்னைத் திட்டியதன் காரணத்தையும் வீரர்கள் உள்ளே நுழைந்த பிறகே உணர்ந்தான் அவன்.

அறையின் வெளியே நின்றிருந்த கள்வர்கள் வீரர்கள் வந்ததைக் கண்டவுடன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டனர்.

உள்ளே நுழைந்த காவல் வீரர்கள் வாள்களை உருவியபடியே “யாரும் தப்பிக்க முயலாதீர்கள்!” என்றபடியே அறையிலிருந்த மூவரையும் சூழ்ந்துவிட்டனர்.

வில்லவன் தப்பிக்க ஏதேனும் உபாயம் கிடைக்குமா எனச் சிந்தித்தபடி அவர்களை எதிர்த்து நின்றான். காவல் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாயிருப்பதால் எதிர்த்துத் தாக்குவதில் எந்தப் பயனும் இல்லை. காலம் கடந்துவிட்டதை உணர்ந்தவன் எதிர்த்துச் சண்டையிடாமல் வாளை உருவியபடி முன் எச்சரிக்கையுடன் நின்றுகொண்டிருந்தான்.

வலியின் தாக்கம் அதிகமாக இருந்ததனால் எதுவும் செய்ய இயலாமல் படுக்கையில் படுத்திருந்தபடியே காளனால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. காளன் மட்டும் ஆரோக்கியமாக இருந்திருந்தால் வந்திருந்தவர்களின் வாள்கள் இந்நேரம் காற்றில் பறந்திருக்கும்.

திடமான சரீரத்தைக் கொண்ட டாள்தொபியாஸ் கம்பீரமான நடையுடன் அறையினுள் நுழைந்தான். டாள்தொபியாஸ் வில்லவனிடம், “உங்களது வாள்களை உறையினுள் போடுங்கள். இல்லையேல் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடுவீர்கள்” என வாளுடன் நின்ற வில்லவனை அதிகாரத்துடன் எச்சரித்தான்.

தான் எச்சரித்தும் வாளை உறையில் போடாமல் கையிலேயே வைத்திருந்த வில்லவனிடம் டாள்தொபியாஸ், “எமது தலைவர் காளனை கைது மட்டுமே செய்யச் சொல்லி கட்டளையிட்டிருக்கிறார். காளனது உயிருக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாதெனவும் ஆணையிட்டுள்ளார். அவருக்கு நானும் காளனது உயிருக்கோ அல்லது உடலுக்கோ எந்தப் பாதிப்பும் நேராமல் கைது செய்கிறேன் என வாக்களித்துள்ளேன். ஆதலால் தலைவருக்கு நான் கொடுத்துள்ள வாக்கினைக் காப்பாற்ற எமக்கு ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என நம்புகிறேன்!” என்றபடியே வில்லவனது கண்களைத் தனது கண்களால் அதிகாரத்துடன் ஊடுருவி நோக்கினான்.

டாள்தொபியாஸ் கூறியதைக் கேட்டபின் தனது வாளை கீழிறக்கிய வில்லவன், “எங்களைத் தாங்கள் கைது செய்ய வந்துள்ளமைக்கான காரணத்தை நான் அறிந்துகொள்ளலாமா?” என வினவினான்.

“அதற்கான காரணத்தை நீங்கள் இருவரும் நான் கூறித்தான் அறிய வேண்டுமா? நீங்கள் அறிந்தது தானே!”

“கைது செய்வதற்கு முன் அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டியது உமது கடமை தளபதியாரே!”

“ஆமாம். ஆமாம். நிச்சயமாகத் தெரிவிக்கிறேன்”

“கூறுங்கள்”

“முக்கியக் குற்றம் வழிப்பறி!”

“வழிப்பறியா?”

“ஆமாம். வழிப்பறி மட்டுமல்ல. நேற்று சில வீரர்களைக் கொன்றுள்ள கொலைக் குற்றம்.”

“தளபதியாரே! வழிப்பறி எனக் கூறாதீர்கள்!”

“வேறு எப்படிக் குறிப்பிடுவதாம்?” இகழ்ச்சியுடன் கேட்டான் டாள்தொபியாஸ்.

“களவு எனக் குறிப்பிடுங்கள்!”

“களவா?”

“ஆமாம் தளபதியாரே!”

“களவு, வழிப்பறி  இரண்டிற்கும் இடையில் பெரிய வேற்றுமை இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே!”

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here