வானவல்லி முதல் பாகம்: 24 – அண்ணனின் ஆணை

“இரண்டு சொற்களுக்கும் வேறுபாடு குறைவு தான். ஆனால் இரண்டிற்குமான பொருள் வேறு”

“அப்படியா?”

“ஆமாம். வழிப்பறி என்பது பெரும் குற்றம். ஆனால் களவு செய்வது தமிழத்தில் குற்றம் கிடையாது. களவும், காத்தலும் இங்கு முக்கியத் தொழில். ஆறலை மற்றும் எயினர் பிரிவு மக்களின் குலத் தொழிலே களவு தான் என்பதைத் தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். களவு செய்பவர்களுக்கெனத் தனிச் சட்டமே உள்ளது. அதனைப் பேரரசும் ஏற்றுக்கொண்டது. அதன்படி  களவு மேற்கொள்ளும்போது கையும் களவுமாகப் பிடித்தால் மட்டுமே எங்களைத் தண்டிக்க இயலும். இப்போது கைது செய்ய உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை” எனச் சாதுர்யத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் பேசினான் வில்லவன்.

பெரும் அறிவுக் கூர்மையுடனும், அதே சமயம் சாதுர்யத்துடன் பேசும் வில்லவனைக் கண்ட டாள்தொபியாஸ், இந்தமுறை இவர்களைத் தப்பிக்க விட்டால் இனி கைது செய்யவே இயலாது என்பதைப் புரிந்துகொண்டவன் “உங்களது வாதத்தையும் நியாயத்தையும் கூறும் இடம் இதுவல்ல. அதற்கென்று வாய்ப்பு நிச்சயம் உங்களுக்கு வழங்கப்படும். அப்போது நீங்கள் கூறலாம்!” என்றவன் தனது வீரர்களை நோக்கி “இவர்கள் மூவரையும் கைது செய்து சிறையில் அடையுங்கள்!” என உத்தரவிட்டான்.

டாள்தொபியாசின் இந்த உத்தரவினைக் கேட்ட வில்லவன் தனது வாளினை உருவி மீண்டும் உயர்த்த இதுவரை பொறுமைகாத்த டாள்தொபியாசும் தனது வாளினை உருவ அவ்விடத்தில் பெரும் பிரளயமே ஏற்படும் நிலையில் ஒரு முதிர்ந்த பவுத்த தேரர் குறுக்கிட்டு இருவரையும் அமைதிபெறச் செய்தார்.

பவுத்த தேரரைக் கண்டவுடன் அவரைப் பணிவுடன் வழங்கிய டாள்தொபியாஸ், “தேரரே! இங்குச் சண்டையிடுவது எமது நோக்கம் அல்ல. இவர்களைக் கைது செய்யச் சொல்லி எமது தலைவர் கட்டளையிட்டுள்ளார். அவரது கட்டளையை நிறைவேற்றவே இங்கு வந்திருக்கிறேன். ஒத்துழைக்க மறுக்கிறார்கள். இவர்களுக்குத் தகுந்த அறிவுரையைத் தாங்கள் தான் வழங்க வேண்டும். நான் ஏதேனும் தவறு இழைத்திருந்தால் தயைகூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள்” என்றான்.

பணிந்த டாள்தொபியாசிடம் பவுத்த தேரர், “உபதளபதியாரே! எம்மிடம் மருத்துவ உதவி பெறுபவரை நாங்கள் குணமடையுமுன் இடையில் அனுப்புவதில்லை. மேலும் எங்கள் விகாருக்கு இவர்கள் பல உதவிகளைச் செய்பவர்கள். இப்படிப்பட்டவர்களை மருத்துவம் பார்க்காமல் உங்களோடு அனுப்பினால் எங்களை நாடி வந்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்யாத பெரும் பழி எங்களைச் சேரும்!” என அவர் கூறிக்கொண்டிருந்த போதே இடைமறித்த டாள்தொபியாஸ் “தேரரே! தாங்கள் கூறுவதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். மருத்துவ உதவி தேவைப்படும் காளன் மட்டுமே இங்கேயே எமது வீரர்களின் காவலில் தொடர்ந்து மருத்துவம் பெறட்டும். பிறகு இவனைச் சிறையில் அடைத்துக்கொள்ளலாம். மற்ற இருவரையும் கைது செய்து சிறைக்குக் கொண்டு செல்லுங்கள்” என வில்லவனை நோக்கி கைகாட்டி தனது வீரர்களுக்கு ஆணையிட்டான்.

டாள்தொபியாசின் சாதுர்யமான கட்டளையைக் கேட்ட பவுத்த தேரரும் “அப்படியே ஆகட்டும் தளபதியாரே!” எனக் கூற வீரர்கள் வில்லவன் மற்றும் இன்னொருவனையும் கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

வீரர்கள் அறைக்கு வெளியே காவலில் நிற்க அறையில் காளனும் டாள்தொபியாசும் தனித்துவிடப்பட்டனர்.

டாள்தொபியாஸ் காளனிடம், “நீ செய்த அனைத்து குற்றங்களையும் நான் மன்னித்துவிடுவேன் கள்வனே. ஆனால் நேற்று எமது தலைவியைத் தாக்கிக் கவர முற்பட்டாயே அதனை மட்டும் மன்னிக்க இயலாது!” என்றான்.

“உங்கள் தலைவியா?”

“ஆமாம்”

“அப்படியானால் தலைவிக்கு உரிய தலைவர் யாரென்று அறிந்துகொள்ளலாமா?”

“நிச்சயமாக! உபதலைவர் விறல்வேல்.”

“ஆதலால் தான் உமது தலைவர் என்னைக் கைது செய்ய ஆணையிட்டுள்ளாரா?”

“இல்லை”

“அப்புறம்?”

“நீ பெருங்குற்றம் புரிந்திருந்தாலும் தலைவருக்கு உன் மேல் கருணை நிறைந்திருக்கிறது. அதற்கான காரணம் தான் எனக்குப் புரியவில்லை.”

“வைதீகர் இருங்கோவேளை சந்திக்கச் சொன்னதிலிருந்து உறைந்தையிலிருந்து கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்காது என்பதை உணர்ந்த காளன் “அப்புறம் யார் என்னைக் கைது செய்யச் சொல்லி ஆணையிட்டதாம்?” என வினவினான்.

“இரும்பிடர்த்தலையர்!”

இரும்பிடர்த்தலையர் என்ற சொல்லைக்கேட்டதும் பெரும் அதிர்ச்சியடைந்த காளன் “இரும்பிடர்த்தலையரா?” என ஆச்சர்யத்துடன் வினவினான்.

“ஆமாம் அவரே தான். உன்னைக் கைது செய்வது மட்டும் அவரது நோக்கம் அல்ல. உமது இறுதி நாளும் அவரால் தீர்மானிக்கப்பட்டு விட்டது.”

“என்ன உளறுகிறீர் உப தளபதியாரே!”

“உளறவில்லை கள்வனே! சித்திரைத் திங்கள் இந்திரத் திருவிழா முடிந்த அடுத்த நாளில் உமது குற்றத்திற்கு மரணத் தண்டனையை நிறைவேற்ற ஆணை பிறப்பித்துள்ளார்” என டாள்தொபியாஸ் கூற இந்தச் செய்தியைக் கேட்டதும் திடமான கருணையே இல்லாத காளனது கண்களில் கண்ணீர் சிந்தியது.

இவனது கண்ணீருக்கான காரணத்தை அறியாது டாள்தொபியாஸ் திகைக்கையில் அவன் மேலும் அதிர்ச்சியடையுமளவிற்குக் காளன் அவனையறியாமல் சில வார்த்தைகளை உதிர்த்தான்.

காளன் கண்ணீர் விட்டபடியே “அண்ணா! இந்தக் கட்டளையை எப்படி உங்களால் கூற முடிந்தது. உங்கள் மனதை அந்த அளவிற்கா நான்  நோகடித்துவிட்டேன்” எனப் புலம்பினான்.

டாள்தொபியாஸ் திகைத்தபடி, “என்ன! இரும்பிடர்த்தலையரின் தம்பியா நீ?” என வினவ காளன் துக்கத்தில் பேச இயலாமல் தலையை மட்டும் ஆட்டினான்.

“அப்படியானால் உமது பெயர்?”

“இளந்திரையன்.“

இந்தப் பெயரைக் கேட்டதும் எந்தச் சூழ்நிலையிலும் கலங்காத டாள்தொபியாஸ் கூட அந்நேரம் அதிர்ச்சியடைந்தான். “அப்பேற்பட்ட பெரும் பண்பு நிறைந்த தமிழகத்தின் பெரும் புலவரும், சான்றோருமான இரும்பிடர்த்தலையருக்கு இப்படிப்பட்ட தம்பியா?” எனத் தனக்குள் எண்ணிக்கொண்டான்.

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here