வானவல்லி முதல் பாகம் : 25 – அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

வானவல்லி

ள்வனான காளன் தனது பெயர் ‘இளந்திரையன்’ என்றும் தான்தான் இரும்பிடர்த்தலையரின் தம்பி எனக் கூறியதும் காளனிடம், “இளந்திரையனா?” என ஆச்சர்யத்தோடு வினவினான் டாள்தொபியாஸ்.

“ஆமாம். எமது தமையன் எனக்கு சூட்டிய பெயர் அதுதான்!”

“அப்படியெனில் காளன் என்பது?”

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

இளந்திரையன்

“எனது செயல் மற்றும் தொழில்களினால் ஏற்பட்ட காரணப்பெயர். களவுத் தொழில் புரியும்போது என்னை யார் எதிர்த்து நின்றாலும் அவர்களுக்குக் காலன் நான்தான். ஆதலினால் ‘இளந்திரையன்’ என்ற இயற்பெயர் மறைந்து காளன் என்ற காரணப் பெயரே நிலைத்துவிட்டது.”

“ஓ! உன்னை எதிர்ப்பவர்களுக்கு நீ எமனாகிவிடுவாயா?”

“ஆமாம்”

“சரி! ஆனால் நேற்றிரவு எமது தலைவர் செங்குவீரன் உங்களை விரட்டி இன்று கைதியாகவும் அடைத்துவிட்டாரே! உங்கள் புராணங்களில் கூறும் மார்க்கண்டேயனைக் காக்க எமதர்மனை பாதாள உலகத்தில் தள்ளி சிறைவைத்த சிவபெருமானைப் போன்று எமது தலைவரையும் நான் கருதலாம் அல்லவா!” எனப் பெருமையுடன் கேட்டான் டாள்தொபியாஸ்.

டாள்தொபியாஸ் தன்னை எமனுடன் ஒப்பிட்டுச் சிவபெருமானால் அடைக்கப்பட்ட எமனைப் போன்று தான் கைதியாக்கப்பட்டதைத் தான் அவன் இகழ்ந்து பேசுகிறான் என்பதைப் புரிந்துகொண்ட காளன் கடுங்கோபத்துடன், “உப தளபதியாரே! உமது தலைவனை எண்ணி நீ கர்வம் கொள்ளத்தேவையில்லை. ஒரு நாள் நிச்சயம் நான் செங்குவீரனைத் தோற்கடிப்பேன். அப்போது உனது கர்வம் எங்கே போகிறதென்று பார்க்கலாம்” எனச் சூளுரைத்த படியே தனது வலது கையை உயர்த்தினான் காளன். அவனது வலது தோள் பட்டையின் காயம் சுரீரென்று வலிக்கவே வலியைத் தாங்கியபடி “நேற்றிரவே உனது தலைவனின் கதை சம்பாபதி வனத்திலேயே முடிந்திருக்க வேண்டியது. அந்தப் பெண் எறிந்த குறுவாளினால் செங்குவீரன் பிழைத்துவிட்டான்!” எனக் கூறியபடியே அமைதியானான்.

செங்குவீரனை நேற்றே கொன்றிருப்பேன் எனக் காளன் கூறியதைக் கேட்ட டாள்தொபியாசிற்கு கோபம் தலைக்கேறினாலும் செங்குவீரன் வானவல்லியால் காப்பாற்றப்பட்டதை எண்ணியவன் ஏதும் பேசாமல், அமைதியாய் இருந்தக் காளனை “இளந்திரையா!” என அழைத்தான்.

இளந்திரையா என டாள்தொபியாஸ் அழைத்ததும் மகிழ்ச்சியடைந்த காளன், “இன்னொருமுறை அழைக்க முடியுமா!” என வினவினான்.

மீண்டும் டாள்தொபியாஸ் “இளந்திரையா!” என அழைத்தான்.

கொற்றவை கோயிலில் பூசாரி போர்க் குறி சொல்லும்போது பயபக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கேட்கும் அரசனைப் போல ‘இளந்திரையன்’ என்ற சொல்லைக் கேட்டான் காளன்.

இளந்திரையன் என்ற சொல்லைக் கேட்டதும் காளனின் முகத்தில் தோன்றிய பரவசத்தைக் கண்ட டாள்தொபியாஸ் “இளந்திரையா! உன் பெயரை நான் அழைத்ததும் உன் முகத்தில் பெரும் மகிழ்ச்சி தோன்றுகிறதே!” என  வியந்தான்.

“பத்து வருடங்களுக்கு முன் எனது தமையன் தான் என்னைக் கடைசியாக ‘இளந்திரையா’ எனப் பாசமுடன் அழைத்திருந்தார். அதன் பிறகு தாங்கள் தான் என்னை இளந்திரையன் என்று அழைத்திருக்கிறீர்கள்” என்றான் மகிழ்ச்சியுடன்.

“பத்து வருடங்களா? அப்படியானால்…..”

குறுக்கிட்ட காளன், “ஆமாம் உபதளபதியாரே! உமது கணிப்புச் சரிதான். சரியாக எனது பதினான்காவது வயதில் பெரும் கருத்து வேறுபாடு காரணமாக என் தமையனைவிட்டுப் பிரிந்துவிட்டேன். பத்து வருடங்களைக் கடந்த பின்னரும் தம்பி மீது அவருக்கு எந்தவிதப் பாசமும் பரிவும் ஏற்படாத மனிதருக்கு இப்போது தான் என் நினைவு தோன்றி மரணத் தண்டனைப் பரிசோடு உன்னை அனுப்பியுள்ளார்” என விரக்தி கலந்த சிரிப்போடு வார்த்தைகள் ஒவ்வொன்றாக உதிர்த்தான்.

மெளனமாகச் சிந்தித்த டாள்தொபியாஸ், “இரும்பிடர்த்தலையருக்கு ஒரே ஒரு சகோதரி மட்டும் என்றுதானே நான் கேள்விப்பட்டுள்ளேன். சோழப் பேரரசர் இளஞ்சேட்சென்னியின் பட்டத்தரசிதான் அவரது சகோதரி என அறிவேன். ஆனால், அவருக்குத் தம்பி இருந்ததாக நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே! அதிலும் உங்கள் சகோதரருக்கும் உங்களுக்கும் உள்ள வயது வித்தியாசம் அதிகமாக அல்லவா உள்ளது!”

ஏமாற்றத்துடன் காளன், “இப்படியொரு கள்வனை யார்தான் உடன் பிறந்தவர் என சொல்லிக்கொள்வார்கள். இரும்பிடர்த்தலையரின் மாற்றாந்தாயின் மகன் நான்.”

“அப்படியானால்….!”

“இருவருக்கும் தகப்பன் ஒருவர். ஆனால் தாய் வேறு!”

“உங்கள் இருவருக்கும் பிரச்சனையின் மூலகாரணம் இதுதானா?”

“இதுதான் பிரச்சனை எனக் கூற இயலாது உபதளபதியாரே! அண்ணன் என் மீது எந்த வித பாகுபாடும் இதுவரை காட்டியதில்லை. அவரது அதீத பாசம் என்னை எப்போதும் கட்டிப் போட்டுவிடும். எப்போது இளஞ்சேட்சென்னியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அண்ணன் உறைந்தை வந்தாரோ அப்போது எங்களுக்குள் இடைவெளி விழ ஆரம்பித்தது. அப்போது அங்கிருந்து வெளியேறிய சில தீய மக்களின் நட்பினால் எனது பாதை மாறிவிட்டது” என வருத்தத்துடன் கூறினான் காளன்.

“இனி வருந்தி என்ன பயன் ஆகப்போகிறது இளந்திரையா! காலம் கடந்துவிட்டது. உனது முடிவும் நெருங்கிவிட்டது” எனக் கூறியபடியே அந்த அறையை விட்டு வெளியேறினான் டாள்தொபியாஸ்.

டாள்தொபியாஸ் செல்வதைக் கண்ட காளன், “உபதளபதியாரே! சற்றுப் பொறுங்கள்” என அழைத்தான்.

காளன் அழைப்பதைக் கேட்டுத் திரும்பிய டாள்தொபியாசிடம், “எனக்கு நீங்கள் ஒரு வாக்குக் கொடுக்க வேண்டும்” என்றான்.

“என்ன வாக்கு!” எனச் சாதாரணமாகக் கேட்டான் டாள்தொபியாஸ்.

“நான் இரும்பிடர்த்தலையரின் தமையன் எனத் தாங்கள் யாருக்கும் கூறக் கூடாது. நான் கள்வர்களின் தலைவன் காளனாகவே மடிந்து போகிறேன். ஏதோ உணர்ச்சி வேகத்தில் மனதில் அடைத்து வைத்திருந்த ரணங்களை உங்களிடம் என்னையறியாமல் உளறிவிட்டேன்.”

“சரி, உனது கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்கிறேன். நீதான் இரும்பிடர்த்தலையரின் தம்பி இளந்திரையன் என்று யாரிடமும் நான் கூற மாட்டேன். அதைப்பற்றி நீ கவலை கொள்ளத்தேவையில்லை. வேறு ஏதேனும்…?”

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here